Saturday, April 25, 2009

டெலிபோனில் சீறிய கமல்ஹாசன்!

எப்போதாவது ஜெயலலிதா பிரஸ் மீட்டை டிவியிலே பார்த்தவங்களுக்கு, அட... இந்தாளு இங்கேயும் இருக்காரேன்னு தோணும். ஏன்னா, இவரு இரண்டு நாளைக்கு முன்னாடி விஜயகாந்த் பிரஸ்மீட்ல இருந்திருப்பாரு. அப்படியே நாலு நாளைக்கு முன்னாடி ரிவர்சிலே போய் வைகோ பிரஸ் மீட்ட மனசில ஓடவிட்டா, முன் வரிசையிலே உட்கார்ந்து முணுமுணுன் னு பார்த்திட்டு இருந்திருப்பாரு.

அரசியல் களத்திலே தம்பி ஒரு போர்வாள்னு நினைச்சு புல்லரிச்சா, திடீர்னு நமீதா பிரஸ்மீட்லே முன்னாடி உட்கார்ந்து "நீங்க யாரை லவ் பண்றீங்க?"ன்னு ஒரு குறுவாளை வீசி கொலையா கொல்லுவாரு. எதுக்கும் அசராத அந்த ஆறடி தாஜ்மஹாலே அலேக்கா குலுங்கும்!

எல்லாத்தையும் 'நாளிதழ்'னு அழைச்சா, இவருக்கு வேலை கொடுத்த நாளிதழை மட்டும் 'ஒரே ஒரு ஆளிதழ்'னு அழைப்பது பொருத்தம்! ஏன்னா அந்த நாளிதழை பொருத்தவரை இவருதான் ஆல் இன் ஆல் 'பழகு' ராஜா. அப்படி பழகுவாரு எல்லாருகிட்டேயும். அந்த பேப்பரா? நம்ம தம்பி கமல வரச்சொல்லுங்கன்னு தலைவர்களும் சரி, சினிமாக்காரர்களும் சரி, வரச்சொல்லுவாங்க. ஏன்னா இவரு கேட்கிற அத்தனை கேள்வியும் மொன மழுங்கிப் போன மொக்க கேள்விகள்தான். உலக விஷயங்களை கிளறி கேட்கிற அளவுக்கு நாலெட்ஜ் இருந்தாலும், யாரு மனசுக்கும் பேண்டேஜ் போடனும்னு நினைக்காத மனுஷன்!

அதனால வலிய கேட்டாலும் வலிகாம கேட்பாருங்கிற நம்பிக்கையை இவரு மேல வச்சிருந்தாங்க எல்லாரும். அப்படிப்பட்ட அப்பாவிதான் ஆணானப்பட்ட கமல்ஹாசனுக்கே 'அல்சர்' வரவழைச்சுட்டாரு ஒரு தடவை.

இப்போது கமல்ஹாசனின் பிஆர்ஓ நிகில் முருகன். ஆனால் சில வருஷங்களுக்கு முன்னே கிளாமர் கிருஷ்ணமூர்த்தி இருந்தார். திரையுலகத்தின் மிக மூத்த மக்கள் தொடர்பாளர் இவர். இவரோடு பேசணும்னா கமல்ஹாசனே நேரடியாக இவரு லைனுக்கு வந்திருவாரு. என்ன தேவையோ, அதை நேரடியாக சொல்கிற அளவுக்கு இவரும் அவரும் 'இப்பிடி' (இந்த இடத்தில் விஷ§வலாக இரண்டு கை விரல்களையும் இறுக கோர்க்கவும். எல்லாம் ஒரு ஃபீலிங்குக்காகதான்)

அப்போது கமல்ஹாசன் பட ஸ்டில்களை வாங்கவும், அவரு தொடர்பான செய்திகளுக்காகவும், கிளாமரைதான் காண்டாக்ட் பண்ணனும். திடீர்னு கிளாமரோட லைனுக்கு வரும் ரிப்போர்ட்டர் கமல், "கிளாமர்... நான் கமல் பேசுறேன்"னு ஆரம்பிப்பார். அவரும் ஏதோ கமல்ஹாசன்தான் பேசுறதா நினைச்சுக்கிட்டு, "ஸார்... சொல்லுங்க ஸார். ஆபிசுக்கு நேரடியா வந்திரட்டுங்களா"ன்னு பவ்யமா கேட்பாரு. ஆனா எதிர்முனையிலே இருக்கிற நம்ம ரிப்போர்ட்டர் கமல், "பதறாதீங்க கிளாமர். நான் உங்க கமல் இல்லே. ரிப்போர்ட்டர்" என்பார் சாவகாசமாக!

"ஏய்... ஒங்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன் உன் முழு பேரான கமலநாதன்னு சொல்லு. இப்படி ஒவ்வொரு தடவையும் போன் பண்ணி கமல் கமல்னு சொல்லி என்னை பதற வைக்காதேன்னு. இன்னியோட இந்த வேலையை நிறுத்திக்கோ" என்று பொருமி தள்ளிட்டாரு. ஆனாலும், அம்பி அடங்கறதா இல்லை. கிளாமரோட பதட்டத்தை ரசிக்க ஆரம்பிச்சிட்டாரு கமல். அட நீங்களுமாங்காதீங்க, முழு பேரையும் சொல்லிடுறேன். கமலநாதன்!

ஒருநாள் அதிகாலை ஆறு மணி. ட்ரிங்...ட்ரிங்... ரிசீவரை எடுத்து காதில் வைத்தார் கிளாமர். "நான் கமல் பேசுறேன்..." எதிர்முனையிலிருந்து நிதானமாக உரையாடல் ஆரம்பித்தது. அவ்வளவுதான். கடும் கோபத்தோடு சீற ஆரம்பித்தார் கிளாமர். "ஏண்டா, ஒனக்கு எத்தனை தடவ சொன்னாலும் புரியாதா? இப்படி டென்ஷன் ஏத்துறியே?" என்று தாட் பூட்டென்று குதிக்க, எதிர்முனை டொக்! அடுத்த வினாடியே இன்னொருவர் பேசினார். "என்ன கிளாமர். போன்லே கமல் சாரு பேசினாராம். கண்டபடி ஏசுறீங்களாமே? சாரு ரொம்ப கோவத்திலே இருக்காரு. உடனே ஆபிசுக்கு வாங்க!" இது கமல்ஹாசனின் மேனேஜரோட குரல்.

இப்போது கிளாமரின் நெஞ்சுக்குள் ரயில்வே டிராக் சவுண்டு! போன் லயனில் கால் வரலாம். இப்படி தலையை சிலுப்பிகிட்டு 'லயன்' வரலாமா? அட, ரிப்போர்ட்டர் கமல்னு நினைச்சு கத்தினா, நிஜ கமலே வந்திட்டாரே. இப்போ என்ன பண்ணுறது? ஆபிசுக்கு ஓடினார். கடந்த பல மாதங்களாக போன் லைனில் ஒரு பாவி தன்னை வறு கடலையாக்குவதை விவரித்தார்.

கமல் அறிவாளியாச்சே? நடந்ததை கிரகித்துக் கொண்டவர், "உங்க மேல தப்பு இல்லே கிளாமர். உங்க மேல எனக்கு கோவமும் இல்லை"ன்னு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்து ஆறுதல் படுத்திட்டு, "அப்படியே போனை போட்டு அந்த கமலை வரச்சொல்லுங்களேன்"னாரு. அங்கிருந்தபடியே "கமல் சாரு உன்னை பார்க்கணுமாம். உடனே வா"ன்னாரு கிளாமர்.

அடுத்த சில நிமிஷங்களில் ஸ்பாட்டில் ஆஜர் ஆனார் கமலநாதன். அவரிடம், கமல்ஹாசன் ஒரு யோசனை சொன்னார். "இனிமே நீங்க கிளாமருக்கு போன் பண்ணும்போது மட்டுமாவது கமலநாதன்னு உங்க முழு பேரை சொல்லுங்க. ஆனா எப்பவுமே உங்க முழு பேரை சொன்னா எல்லாரையும் விட நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்"னாரு. அதுக்கு பிறகு நம்மாளு அப்படியே செய்யுறாருன்னு பொய் சொல்ல நான் தயாரா இல்லைப்பா!

12 comments:

butterfly Surya said...

ஆறடி தாஜ்மஹாலே அலேக்கா குலுங்கும்!
=================

மனசுக்கும் பேண்டேஜ் போடனும்னு நினைக்காத மனுஷன்!
===================

தலையை சிலுப்பிகிட்டு 'லயன்' வரலாமா?
-------------------

super...

அன்புச்செல்வன் said...

Very interesting boss, சம்பவங்களை விவரிக்கிர உங்க ஸ்டைலே தனி.Good Luck

Thiva said...

கிளாமர் அண்ணன் கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம், விதி யார விட்டது

Sridhar said...

அருமை அந்தணன். வண்ணத்துபூச்சியார் எல்லாத்தயும் சொல்லிட்டார். நான் வழிமொழிகிறேன்.

கண்ணா.. said...

// இவரும் அவரும் 'இப்பிடி' (இந்த இடத்தில் விஷ§வலாக இரண்டு கை விரல்களையும் இறுக கோர்க்கவும். எல்லாம் ஒரு ஃபீலிங்குக்காகதான்)
//

கலக்கல்.. நடை....

கார்த்திக் பற்றிய பதிவிலும் அங்கங்க ஹே ... போட்டு நேர்ல பேசுர எபெக்ட் குடுத்தீங்க...


அருமை.

ரொம்ப நல்லவன் said...

நல்லாவே ஞாபகம் வைத்து
சூப்பராவே எழுதியிருக்கீங்க.

முரளிகண்ணன் said...

அருமையான நடை, சுவையான சம்பவங்கள். நான் சொல்ல வந்ததை வண்ணத்துப்பூச்சியும், கண்ணா வும் சொல்லிவிட்டார்கள்

இன்னும் நிறைய எதிர்பார்த்து

தீப்பெட்டி said...

நல்லாயிருக்கு

பாலா said...

அப்ப நான் சினிமா ஃபீல்டுக்கு வந்தா.. “நான் பாலா பேசறேன்”னு சொல்ல முடியாதா? :( :(

Joe said...

கலக்குறீங்க அந்தணன்!

Suresh said...

ஹா ஹா ரொம்ப அருமையா எழுதுறிங்க இனி நாங்க உங்க பின்னாடி அதாங்க பாலோவர்

c3 said...

yaar manathaiyum punpaduthaamal ezhuthum nagaichuvai ellarukkum varuvathillai, ungalukku varugirathu, vazhga.... valarga