Wednesday, May 12, 2010

பீர் குடிச்ச பெருச்சாளி


காத்திருத்தல் சுகம்தான். ஆனால் எங்கே என்பதை பொறுத்துதான் அது சுகமா, சோகமா என்ற முடிவுக்கு வர முடியும். அதுவும் எங்களை மாதிரி நிருபனுங்களுக்கு கடிகார முள்ளுல காரப் பொடிய தடவுன மாதிரி ஒரு கோவமும், அலட்டலும் இருந்துகிட்டே இருக்கும். "ஏங்க... எவ்வளவு நேரம்ங்க இவய்ங்களுக்காக காத்துகிட்டு கிடக்குறது?" என்று கோவப்படும் நிருபருங்க. கோவிச்சுட்டு போனதா மட்டும் பொரணியும் இல்ல. பரணியும் இல்ல.

ஆறிப்போன அப்பளத்தை மளுக்குன்னு முறிச்சிர முடியுமா? கடிகாரத்தை பார்த்து பார்த்து கர்புர்ருன்னு கோவப்பட்டாலும், நமத்துப்போன அப்பளம் மாதிரியேதான் போவுது எல்லாருடைய பொழப்பும். நான் கடவுள் பிரஸ்மீட்டுக்கு மூணு மணி நேரம் லேட்டா வந்தாரு பாலா. படமெடுக்கிற விஷயத்துலயும் அப்படிதான் என்றாலும், இந்த லேட் கோட் போடாத வக்கீல் மாதிரி கோவப்படுத்துச்சு ஒரு நிருபரை. "பாலா... உங்களுக்காக நாங்க காத்திருக்கலாம். உங்க படத்தோட ஹீரோயினுக்காக காத்திருக்கணுமா?" என்றார் கீழே விழுந்தாலும், முட்டியில சிராய்ப்பு இல்லங்கிற மாதிரியே. பாலா வரலாமாம். பாவம், அந்த பொண்ணு வரக்கூடாதாம். (பார்றா)

நண்டுக்கு எட்டுக்காலு. நத்தைக்கோ வயிறுதான் நடமாட்டம்! இந்த பெரிசு சிறுசு வித்தியாசம் பத்திரிகைகாரங்களுக்கும் உண்டு. சரக்கடிக்கிறதுல துவங்கி, சைட் டிஷ் கடிக்கிற வரைக்கும் ஒரு தாய் மக்களா இருப்பாங்க சில நடிகருங்க. யாருகிட்ட தெரியுமா? முன்னணி நாளிதழ், வார இதழ் நிருபர்களிடம் மட்டும். "...தோ அண்ணனே வந்திட்டாரே"ன்னு ஆறடி உடம்பும் வளைஞ்சு நெளிஞ்சு வரவேற்கிற நாடகமெல்லாம் நடக்கும். அப்படி முக்கியத்துவம் வாய்ந்த நிருபர் ஒருவருக்கு நேர்ந்த 'லேட்' மேட்டர்தான் இது.

ரஞ்சித் என்றொரு நடிகர் இருந்தார். பிரசன்ட் டென்ஸ்சை கொஞ்சம் எரிச்சலில் ஊறப்போட்டு சொன்னால் இருக்...கி....றார் இப்போதும்! இவர் வீட்டுக்கு திடீரென்று போய்விட்டார் நம்ம நிருபர். வாசலில் வண்டியை நிறுத்தும்போதே வீட்டுக்குள் இருக்கும் ரஞ்சித்தை ஓரக்கண்ணால் கவனித்துவிட்டார் நிருபர். ஸ்டாண்ட் போட்டுவிட்டு உள்ளே போனால் ஷாக். வரவேற்றது ரஞ்சித் அல்ல. அவரது அம்மா. "தம்பி குளிக்குது. கொஞ்ச நேரம் ஆவும். உட்கார்றதுன்னா இருங்க. இல்லேன்னா அப்புறம் வாங்களேன்"னாங்க. அதனால என்ன? பரவாயில்ல. நான் இருக்கேன்னு சொல்லிட்டு வாசலில் கிடந்த சேரில் நிரம்பினார் நிருபர்.

கடிகாரம் அது வேலையை பார்த்துக் கொண்டிருக்க, பொழுது போகாமல் மோட்டு வளையை பார்த்துக் கொண்டிருந்தார் நிருபர். நேரம் ஓடியதே தவிர குளிக்கப் போன ரஞ்சித் வருவதாக காணோம். இந்த நேரத்தில் நிருபரின் பெருமையையும் நாம் சொல்லியாக வேண்டும். இவர் வந்தால்தான் ப்ரிவியூ தியேட்டரில் படமே போடுவார்கள். மற்ற நிருபர்கள் "அதான் நாங்கள்ளாம் வந்திட்டமே, படத்தை படத்தை போடக் கூடாதா" என்றால், "அண்ணன் இன்னும் வரலீங்களே" என்பார்கள். அந்தளவுக்கு முக்கியஸ்தர்.

எங்காவது ஏதாவது வேலையாக இவர் நடந்து போய் கொண்டிருந்தால் கூட, அண்ணன் நடந்து போறாரே என்று பதறும் விவிஐபி கள் வலுக்கட்டாயமாக தங்கள் காரில் ஏற்றிக் கொள்கிற அளவுக்கு முன்னணி இடத்திலிருப்பவர். இப்படிப்பட்டவர்தான் ரஞ்சித் வீட்டு வாசலில் கிஞ்சித்தும் கோபம் காட்டாமல் உட்கார்ந்திருந்தார். கிட்டதட்ட முக்கால் மணி நேரம் ஓடிப்போனது இப்படியே. திடீரென்று வீட்டிலிருந்து வெளியே வந்த ரஞ்சித்தின் அம்மா, "தம்பி பாத்ரூம்ல இருக்கும்னு நினைச்சேன். ஆனா அதுக்கு முன்னாடியே வெளியே போயிருச்சு போல. எப்ப வரும்னு தெரியல" என்று ஒரு குண்டை போட்டார்.

வேணாம்னு நினைச்சா உலகத்துக்கே கலகத்தை மூட்டுற ஆளு நாம. நமக்கேவா? என்று சிரித்துக் கொண்ட நிருபர், அம்மா வீசிய அணு குண்டை கோலி குண்டு மாதிரி கையில் பிடித்து திரும்பி அதே வேகத்தில் அடித்தார். "அதனால என்னம்மா? தம்பி வர்ற வரைக்கும் நான் இங்கேயே இருந்து பார்த்திட்டு போறனே..."

உள்ளேயிருந்து இந்த பதிலை கேட்ட ரஞ்சித் பீர் குடிச்ச பெருச்சாளி மாதிரியானார். ஐயய்யோ, வசமா மாட்டிக்கிட்டமோ என்று நகத்தை கடித்து துப்பினாலும், அண்ணனின் பொறுமை அரை மணி நேரத்திற்கு மேல் நீடிக்காது என்ற நம்பிக்கையும் அவருக்கு. ஒரு பந்தாவுக்காக யாரையும் காத்திருக்க வைப்பதுதான் இவரது வாடிக்கை. ஆனால் அதுவே கொஞ்சம் எல்லை மீறி விட்டதுதான் இந்த சம்பவத்தில் வேடிக்கை.

அதுவரை அசால்டாக உட்கார்ந்திருந்த நிருபர், சந்து வழியாக கூட ரஞ்சித் வெளியே போய், மீண்டும் வீட்டுக்குள் வந்துவிடக் கூடாது என்று பார்வையை சுழல விட்டபடி அமர்ந்துவிட்டார். போன் வந்தால் கூட அதில் பேசுகிற பொறுமையையும் இழந்து கண்காணிக்க ஆரம்பித்தார். அவரது கண்களே ஒரு லைட் ஹவுஸ் போல நாலாபுறமும் சுழல, சுழல, மிரள ஆரம்பித்தார் ரஞ்சித். இப்படியே போனது முக்கால் மணி நேரம்.

ரஞ்சித் புத்தியில வத்திய கொளுத்தி வச்சா கூட இப்படி ஒரு புகை வராது காது வழியே. அப்படி ஒரு புகையை கக்குறாரு மனுஷன் உள்ளேயிருந்து. இருமினால் கூட எங்கேன்னு கேட்பாரோ என்ற பயத்திலேயே கழிந்தது இன்னும் முக்கால் மணி நேரம். இரண்டு பேரும் இப்படி விடாக் கண்டன் கொடாக் கண்டன்களாக நேரத்தை விழுங்கிக் கொண்டிருக்க, உள்ளே என்ன நடந்ததோ? பொசுக்கென்று வெளியே வந்தார் அம்மா.

"தம்பி வெளியில போயிருச்சுன்னு நினைச்சேன். ஆனா தம்பி உள்ளதான் பெட்ரூம்ல து£ங்கிட்டு இருக்கு. நாந்தான் கவனிக்கல. வாங்க தம்பிய எழுப்பலாம்"னு நிருபரை கூப்பிட, சைலண்டாக சிரித்துக் கொண்டே உள்ளே போனார் நிருபர். நிஜமா து£ங்குனா எழுப்பலாம். இது வேறு து£க்கமாச்சே. ரொம்ப சீரியஸ் ஆக குறட்டையெல்லாம் விட்டு சூழ்நிலைக்கு யதார்த்த வண்ணமடித்தார் ரஞ்சித். ஒருவழியாக எழுந்து "அண்ணே... எப்பண்ணே வந்தீங்க. சொல்லியிருந்தா நானே உங்களை பார்க்க வந்திருப்பேனே" என்றார் து£க்கமும், கொட்டாவியுமாக!

"தம்பி உங்க பர்ஃபார்மென்ஸ் பிரமாதம். அத நேர்ல சொல்லலைன்னா எனக்கு து£க்கம் வராது(?) போலிருந்துச்சு. அதான் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன். பெரிய ஆளா வருவ தம்பி"ன்னு நக்கலாக ஆசிர்வாதம் பண்ணிட்டு விறுவிறுவென்று வெளியே நடந்தார். பின்னாடியே "அண்ணே, இருங்க. ஒரு வாய் காபி" என்று ரஞ்சித் ஓடிவர அந்த காபியை மட்டுமல்ல, ரஞ்சித் நடித்த காப்பியங்களை கூட அதன்பின் சீண்டுவதில்லை நிருபர்.

பெரிய மனுசங்க வீட்டு உரலுக்கே இடிபடாத நம்மாளு, ஒரு சின்ன பாக்கு வெட்டிகிட்ட, மாட்டிகிட்ட இந்த சம்பவம் உங்களுக்கு எதை உணர்த்துது?

9 comments:

Anonymous said...

u should direct a film

King Viswa said...

மீ தி பர்ஸ்ட் இல்லாததால், மீ தி செகண்டு.

Anonymous said...

What happened sir, your original powerful bold style is missing. By the way I think Junior vikatan is trying to copy you by using cinevicithiran article (which is really boring)

Sridhar said...

தலைப்பு பிரமாதம்

Anonymous said...

Thalai,

As usual, perfect, humorous writing is piece of cake for you, well done.
krk

சேலம் தேவா said...

பசுபதி மே/பா ராசாக்க பாளையம் படம் பாத்து பீல் பண்ணி இருப்பார் .அம்மா சென்டிமென்ட் போல?

vishnu said...

tamilcinema.com enna achu anthanan?open agala website.ippadi oru perla website illanu error kaatuthe!

Anonymous said...

இவர் நடிகை பிரியராமனின் (வள்ளி) கணவர் தானே ..... நடிகையை பற்றி ஒன்றும் எழுதவில்லையே !

Ashok D said...

ரஞ்சித்துக்கெல்லாம் வெயிட் பண்றீங்க.. பாலாவுக்கு வெயிட் பண்ணமாட்டீங்களா???