Friday, April 30, 2010

நயன்தாராவும் நள்ளிரவு புரோட்டாவும்....


மாயாண்டி குடும்பத்தார் படத்தோட இன்விடேஷனை பார்த்தவங்க அதை அப்படியே மடிச்சு எரவாணத்தில சொருகி வச்சிருந்தா ஒரு விஷயத்துக்கு பயன்பட்டிருக்கும். எப்பல்லாம் பசி எடுக்குதோ, அப்படியே விரிச்சு வச்சு பார்த்தா ஒரு முனியாண்டி விலாசுக்குள்ளே போயிட்டு வந்த திருப்தி இருக்கும். வேறொன்னுமில்ல. ஒரு பெரிய வாழை இலைய கொஞ்சம் கூட கட் பண்ணாம விரிச்சு வச்சு, அது கொள்ளாம கறி சோறு நிரப்பி தின்னுட்டு இருப்பாய்ங்க அண்ணன் தம்பிங்க நாலைஞ்சு பேரு. எனக்கு தெரிஞ்சு நாக்குல எச்சில் ஊற வச்ச இன்விடேஷன் அது ஒன்ணுதான்.

தமிழ்சினிமாவும், நான் வெஜ்ஜும்னு ஒரு கட்டுரை எழுதினா வள்ளலாரே வந்து, "போதும் நிறுத்துய்யா"ன்னு சொல்ற அளவுக்கு இருக்கும். அந்தளவுக்கு நாக்குக்கு 'இடைத்தேர்தல்' அந்தஸ்து கொடுக்கிறவங்க ரொம்ப பேரு இருக்காங்க சினிமாவுல.

ராமசாமி, சுப்பையா, கண்ணன்னு ஏராளமான நளபாக மன்னனுங்க வாழுற பூமிதான் நம்ம கோடம்பாக்கம். அவுட்டோர் போனா கூட, ஆடு கோழி புறா சகிதம் நமக்கு முன்னாடி அங்க போயி டேரா போட்டு நாக்குக்கு டேஸ்ட்டா ஆக்கி போடுறதுல இவங்களுக்கு இருக்கிற சந்தோஷம் இருக்கே, அதை நினைச்சாலே தனி ருசி. இதுல ராமசாமிங்கிறவரு சென்னையில் தனியா ஒரு மெஸ்சே நடத்தினார். மதியம் 12 லேர்ந்து 3 மணி வரைக்கும் இந்த ஓட்டல் இருக்கிற பக்கம் பெரிய டிராபிக் ஜாமே ஏற்படுகிற அளவுக்கு இருக்கும் இந்த ஜம் ஜம் விருந்து.

சரி மேட்டருக்கு வருவோம். இந்த தேவாமிர்த சாப்பாடே ஒரு கட்டத்துல போரடிக்குற அநியாயமும் நடக்கும். அப்படிதான் ஒரு அவுட்டோர்ல நடந்திச்சு. தென்காசி பக்கத்தில சத்யம் பட ஷ§ட்டிங். விஷாலும் நயன்தாராவும் நடிக்கிற காட்சிகளை ஷ§ட் பண்ணிட்டு இருந்தாங்க. பேக்கப்பும் சொல்லியாச்சு. மாலை நேரத்துல சூரியனே மயங்குது. மனுஷன் மயங்காம இருப்பானா?

"என் செலவுல எல்லாருக்கும் பார்ட்டி. வரச்சொல்லுங்கப்பா"ன்னுட்டாரு விஷால். அசிஸ்டென்ட் டைரக்டர்களுக்குதான் இந்த அன்பழைப்பு. தொழிலாளர்கள் அவங்கவங்க சவுகர்யத்துக்கு ஃபுல்லோ, ஆஃபோ அடிச்சுட்டு கவுந்திட்டாய்ங்க. ஏழு மணிக்கு சியர்ஸ் சொல்ல ஆரம்பிச்சவய்ங்க ராத்திரி பணிரெண்டு மணிக்கு பாட்டிலை கவுத்திட்டாய்ங்க. எல்லாரும் பேச பேச வேடிக்கை பார்த்திட்டு இருந்த முக்கியமான விவிவிவிவிஐபி நம்ம நயன்தாரா.

அந்த நேரத்தில அசிஸ்டென்ட் டைரக்டர் ஒருத்தர் சொன்னாரு "இங்ழ்ங்க பாழ்ர்டர் கழைல டிபழன் பிழமாதமா இழக்குழாம்..." (அதாவது இங்க பார்டர் கடையில டிபன் பிரமாதமா இருக்குமாம்!)அவ்வளவுதான். "எடுறா வண்டிய"ன்னுட்டாரு விஷால். அத்தனை பேரும் சுமோவில் ஏறிக்கொள்ள புள்ளத்தாய்ச்சி பொண்ணை சைக்கிள்ள கூட்டிட்டு போன மாதிரி அதிர அதிர கிளம்புச்சு வண்டி. உள்ளே ஒரு இருபது பேரு இடிச்சு புடிச்சு உட்கார்ந்திட்டாங்க. ஒரு ஓரமா நம்ம நயன்தாராவும்.

அதற்குமுன் பார்டர் கடையை பற்றி ஒரு சிறு குறிப்பு வரைந்தால் உங்களுக்கு சுலபமாக இருக்கும். தென்காசிக்கும், குற்றாலத்திற்கும் நடுவில் எல்லையை ஒட்டி இருக்கிற கடைதான் இந்த பார்டர் கடை. லாரி டிரைவர்களுக்கு மட்டுமல்ல, குற்றாலம் போகிற குளுகுளுவாசிகளுக்கும் இந்த ஓட்டல் சொர்க்கம். புரோட்டாவை இலையில் போட்டு, அது நீச்சலடிக்கிற மாதிரி கோழி குருமாவை ஊற்றுவது இங்கு ஸ்பெஷல். ருசி? நாக்குல தெர்மா மீட்டரை வச்சா வெடிச்சுரும். அப்படி ஒரு டேஸ்ட்!

அவ்வளவு கிறக்கத்திலும், "மேடமும் நீங்களும் சேர்ந்து வர்றீங்க. அங்க கலவரமாயிரப்போவுது"ன்னாரு ஒரு அசிஸ்டென்ட். "யோவ்... அவ்வளவு பேரையும் ஒத்த கையில சமாளிப்பேன்"னாரு விஷால். போயிட்டே இருந்தாங்க எல்லாரும். எல்லைய தாண்டிய பிறகும் பார்டர் கடை மட்டும் வரவேயில்லை. குற்றாலம் பக்கம் போக வேண்டிய டிரைவர், அரை மப்புல திருநெல்வேலி பக்கம் வண்டிய விட்டுட்டாரு. நட்ட நடு ராத்திரியில வண்டி திருநெல்வேலி டவுன்லே போயி நிக்க, திசை மாறி வந்திட்டோம்னாய்ங்க அத்தனை பேரும்.

"பசி புடுங்கி எடுக்குது. இங்கேயே ஏதாவது...." இப்படி ஒருவர் ஆரம்பிக்க, அவர் வாயை பொத்தியது சாட்சாத் நயன்தாராவேதான். "எனக்கு பார்டர் கடை புரோட்டாதான் வேணும்" என்றார் கொஞ்சலும், கெஞ்சலுமாக! அவ்வளவுதான். "வண்டிய ரிவர்ஸ்ல விடு. பார்த்திருவோம்" என்றார் விஷால். மறுபடியும் குலுங்கலும், சிணுங்கலுமாக 100 கிலோ மீட்டர் பின்னால் பயணிக்க ஆரம்பித்தது வண்டி.

உபரி தகவல் ஒன்று. இந்த பார்டர் கடையில் 24 மணி நேரமும் அடுப்பு எரிந்து கொண்டிருக்கும். கோழி வெந்து கொண்டிருக்கும். விருந்தாளிகள் மென்று கொண்டிருப்பார்கள். இப்படி ஒரு சிறப்பு வாய்ந்த இடத்துக்குதான் விடியற்காலை 2 மணிக்கு போய் சேர்ந்தது இந்த டீம்.

கடையை பார்த்ததும் ஹோவென்ற சந்தோஷ கூச்சலோடு இறங்கினாங்க ஒவ்வொருத்தரும். முதல்ல இறங்கிய மெட்ராசு ஆளுங்களை அலட்சியமாக கவனிச்சுட்டு கோழிக் காலை வெடுக்கென்று கடிச்சு துப்பிக் கொண்டிருந்த லாரி டிரைவருங்களுக்கு கடைசியா இறங்கிய இரண்டு பேரை பார்த்ததும், விலுக்கென்று மனசுக்குள் சந்தோஷம். இங்க பாருங்கடோய்...னு எழுந்து ஓடினாய்ங்க. அவ்வளவு பசியிலும் நல்லாயிருக்கீங்களாண்ணே என்று நலம் விசாரிச்சாரு நயன்தாரா.

அரக்க பறக்க பறக்க இலையை போட்டு ஆவி பறக்க கோழி குழம்பை ஊற்றினாரு சர்வர். அதில் புரோட்டாவை மிதக்க விட்ட சர்வர் அண்ணாச்சிங்க அடுத்தடுத்து கொண்டு வந்து அடுக்கிக் கொண்டேயிருக்க, கோழி குருமா முழங்கை வரைக்கும் வழிந்தது நயன்தாராவுக்கு. ஆத்தா... எப்பூடி சாப்புடுறாங்கன்னு அத்தனை கூட்டமும் இவங்களை வேடிக்கை பார்த்தது.

இந்தியா-பாகிஸ்தான் பார்டரில் கூட இத்தனை பரபரப்பு இருந்திருக்காது. ஆனால் இந்த பார்டர் கடையில் நயன்தாரா உட்கார்ந்த ஏரியாவில் அத்தனை பரபரப்பு. இந்த இடத்துக்கு இப்பவும் நயன்தாரா நாற்காலின்னு பேரே வச்சுருக்காங்கன்னா பாருங்களேன்.... அதில உட்கார இப்பவும் ஒரே அடிபுடிதானாம்!