Thursday, August 6, 2009

குப்புற போட்டு கொள்ளி கட்டையால சொறிஞ்சிருந்தா...


"எந்த நடிகன் கட்சி ஆரம்புச்சாலும் நான் எதிர்த்து எழுதுவேன்"னாரு விக்கி. ஜக்கி வாசுதேவ் குரல் கொடுத்தாலே, சாப்ட்டுட்டு வந்து கேக்கிறேன்னு எந்திருச்சு போறவனுங்க மத்தியிலே, விக்கியோட பேச்சு எவன கொக்கி போட்டு இழுக்கப் போவுது? "வுடுங்க சார். நம்ம அடிக்கிற நானு£று காப்பியிலே இருநு£று காப்பி ஓசியிலே பூடும். மிச்ச காப்பிய எரிய விட்டு, அந்த நெருப்பிலே ஒரு வாய் காப்பி கூட போட முடியாது. போவீங்களா"ன்னு சொல்லிட்டு எந்திரிச்சேன். "ஏங்க.. அவனுங்களுக்கெல்லாம் அறிவே கிடையாதுங்க. யாரோ எழுதிக் கொடுக்கற டயலாக்கை இவய்ங்க படிக்கிறாங்க. அப்புடி படிக்கறதை வச்சு புத்திசாலின்னு ஊரு நினைக்குது. ஆனா நான் அப்பிடி நினைக்க மாட்டேன்னு அவரு ஆவேசப்பட, "சரி, விடுங்க. கரையான் அரிக்குதுன்னு வீட்டையா சொறிஞ்சூட முடியும்"னேன் இன்னும் எடக்காக. "இப்படியெல்லாம் அவனுங்களுக்கு சாதகமா பேசுறதுக்கு எங்காவது நாண்டுக்கிட்டு சாகிற மாதிரி ஆவப்போவுது பாருங்க"ன்னு சாபம் கொடுத்தாரு விக்கி.

கண்ணகியே குரூப் டான்ஸ் ஆட வந்திருச்சு. இதில சாபத்தை கொண்டு போய் சட்டம் போட்டு மாட்ட வேண்டியதுதான்னு நான் மேலும் எடக்காக பேச, அடுத்தடுத்த வாரத்திலேயே விக்கியோட சாபம் சங்கு ஊதிட்டு வந்ததுதான் வேதனை!

எனக்கு ரொம்ப நெருக்கமான ஹீரோ அவரு. நடையா நடந்து அவர சந்திச்ச ஒரு விழா குழுவினர், சார்... நாங்க ஒரு ஃபங்ஷன் நடத்துறோம். அதிலே கண் பார்வை இல்லாதவங்களுக்கு உதவி செய்யுறோம். நீங்க அவசியம் வரணும். இன்விடேஷன்லே பேரை போட்டுர்றோம். காரு வேணும்னா வீட்டுக்கு அனுப்புறோம். ஒரு மணி நேரம். வந்திட்டு போனா போதும்னு சொல்ல, எப்போ? என்னிக்கு?ன்னு ஏராளமான கேள்வி கேட்ட ஹீரோ, "அன்னிக்கு எனக்கு ஃபேசியல் பண்ணிக்கிற வேல இருக்கு. இருந்தாலும், உங்க சோசியல் சர்வீசுக்கு முன்னாடி ஃபேசியல் மேட்டரு பெரிசு இல்லே"ன்னு சம்மதிச்சாரு.

ஃபங்ஷன் நடக்கிற நாளும் வந்திச்சு. "சார், வந்திருங்களேன் போயிட்டு உடனே வந்திரலாம். நீங்களும் வந்தா ஏதாவது சாக்கு போக்கு சொல்லிட்டு சட்டுனு கிளம்பிரலாம்"னு என்னையும் கூப்பிட்டாரு ஹீரோ. இதுவரைக்கும் போன அரசியல் மீட்டிங்குக்கெல்லாம் சும்மா போனதில்லே. கைநிறைய கடலை. காது நெறய ருசின்னு ரசிக்கிறவன் நான். கலைஞரு, வைகோன்னு நான் போன மீட்டிங்கிலேயெல்லாம் கைத்தட்டலுக்கொரு கடலை. கர்ஜனைக்கு ஒரு பொட்டலம்னு ஒரே நேரத்திலே ரெண்டு ருசிய அனுபவிச்சிருக்கேன். ஹீரோவோட போன இந்த விழாவுல இவிய்ங்க பேசுன சொற்பொழிவ கேட்டுட்டு, கற்பிழந்த தெருநாயி மாதிரி ஓ...ன்ன்னு கதறிட்டேன்னா பாருங்க.

விக்கி... உங்களோட பேனா புத்தி, சாணை புடிச்ச கத்தின்னு சத்தம் போட்டு பாராட்ட தோணுச்சு. அப்படி என்னதான் நடந்திச்சு அங்கே?

காமராஜர் ஹால். அந்த விழா ரொம்ப நெகிழ்ச்சியா இருந்திச்சு. கண் பார்வையில்லாத சில இளைஞர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைச்சிருந்தாங்க. அவங்களை பெற்றெடுத்த அப்பா அம்மாவும் அந்த விழாவுக்கு வந்திருந்தாங்க. தங்கள் பிள்ளைகள் இறைவனோட சாபத்தையும் மீறி ஜெயித்ததை அவங்க அழுத கண்ணீரோடு பார்க்க, பார்வையாளர்களையும் கண் கலங்க வைத்த விழா அது. இந்த பார்வைற்றவங்களை பாராட்டவும், அவங்களுக்கு உதவி தொகை வழங்கி இரண்டொரு வார்த்தைகள் பேசவும்தான் இந்த மாதிரி நடிகருங்களையும் அழைச்சிருந்தாங்க. டைரக்டர் சேரன் போன்ற அறிவுலக மேதைகளும் அங்கே வந்திருந்ததால், விழா நன்றாக நடக்கும்ங்கிற நம்பிக்கை எனக்கு நெறய இருந்திச்சு. ஆனா எல்லாத்தையும் கெடுத்தது, நான் போனேனே ஒரு ஹீரோவுடன். அவரேதான்.

இப்போ இவரு பேசுவாருன்னு ஸ்டேஜ்ல அறிவிக்க, பலத்த கைத்தட்டலுடன் மைக்கை பிடிச்சாரு நம்மாளு. வேதனை என்னான்னா இவரு என்ன பேச போறாரு என்றே தெரியாம, அந்த பார்வையில்லாதவங்களும் கைதட்டியதுதான்.

"இங்க இவங்களையெல்லாம் பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு. நீங்கள்ளாம் இந்த வியாதி (?) வந்ததுக்காக பெருமைப் படணும். ஏன்னா, சில பேருக்கு மெட்ராஸ் ஐ வரும். அதை பார்த்தா நமக்கும் அது தொத்திக்கும். உங்களுக்கு வந்திருக்கிற வியாதி அப்படிப்பட்டது இல்ல. அதனால் நீங்க பெருமைப்படணும்"னு ஹீரோ பேசிக்கொண்டே போக, எனக்கு நாக்க பிடுங்கிகிட்டு சாகலாமான்னு ஆயிருச்சு. இவரு கூட வந்தவன் நான்தாங்கிறதால, மேடையிலே உட்கார்ந்துகிட்டு என்னைய கேவலமா பார்க்கிறாரு சேரன்.

அந்த விழாவை ஏற்பாடு செஞ்சவங்க எறும்புக்கு கூட தீங்கிழைக்கணும்னு நினைக்காதவங்க போலிருக்கு. மைக்க பாதியிலே பிடுங்காம இவரு பேச்சை தொடர்ந்து அனுமதிச்சாங்க.

நீரோ மன்னனை குப்புற போட்டு கொள்ளி கட்டையால சொறிஞ்சிருந்தா, அடுத்த தீ விபத்துக்கு வயலின் வாசிச்சிருப்பானா? ஆனால், விழா குழுவினர் பெருந்தன்மையா நம்மாளுக்கு மாலையெல்லாம் போட்டாங்க.

இவரு கார்லே ஏறி போறதுக்கு பதிலா, நம்ம செருப்பை எடுத்து மேல் பாக்கெட்ல சொருகிகிட்டு வெறுங்காலோட நடக்கலாம்னு மனசுக்கு தோணுச்சு. விருட்டுன்னு கிளம்பி வெளியே வந்தேன்.

அப்போ பார்த்து விக்கியோட குரல் காதுல கேட்டுச்சு. "இப்படியெல்லாம் பேசுறதுக்கு எங்காவது நாண்டுக்கிட்டு சாகிற மாதிரி ஆவப்போவுது பாருங்க"

ஐயா விக்கி, இனிமே நீங்க வெறும் விக்கி இல்லே. முக்காலும் உணர்ந்த ஜக்கி வாசுதேவ் மாதிரி, முட்டாளுகளை உணர்ந்த விக்கி வாசுதேவ்!

(பின் குறிப்பு- விக்கியோ நானோ எல்லா நடிகர்களையும் குறை சொல்லவில்லை. கலைஞானி கமல், சத்யராஜ், சரத் போன்ற அறிவுஜீவிகளும் இங்கே இருக்கிறார்கள்)

Tuesday, July 21, 2009

நமீதா எடுத்த வாந்தி...


"இந்திரவிழா பார்த்ததிலேர்ந்து கண்ணுக்கு வெளியே பன்னு வச்சு கட்ன மாதிரியே இருக்கு"ன்னாரு செந்திலு. (பன்னுன்னா என்னன்னு தெரியாத ஃபாரின் தோழருங்களுக்கு ஒரு விளக்கம். இது பர்கரோட பெரியப்பா) "இருட்டு கடை அல்வாவிலே திரட்டு பாலை கலந்த மாதிரி செக்க செவேர்னு நமீதாவை காட்னாய்ங்க. ஆனா எல்லாமே வொய்டு ஆங்கிளா போச்சுரா"ன்னாரு அவரே! "ப்ளே கிரவுண்டு மாதிரி இருக்கிற பேக் ரவுண்டை, குளோஸ் அப்புல காட்டனும்னா ஸ்கிரீன் முழுக்க 'ஸ்கின்' தானேய்யா தெரிஞ்சிருக்கும்? அதனால இருக்குமோ?"ன்னு அவரே சமாதானமாகி விட, "நமீதாவை பற்றி உனக்கென்ன தெரியும்? பாக்கறதுக்கு பால்கோவா டின்னா இருந்தாலும், பழகறதுக்கு பச்ச மண்ணு தெரியுமா?"ன்னேன்.

"அதனாலதான் நம்ம பயபுள்ளங்களுக்கு மண்ண கவ்வுறதுல அவ்வளவு ஆச போலருக்கு"ன்னு செந்திலு சொன்னதை நான் ரசிக்கலே. ஏன்னா, நமீதாவோட இளகிய மனசை எதிர்லே நின்னு ரசிச்சவன் நானு. போன வாரம் கூட அவங்ககிட்டே போன்லே பேசினப்போ, "வீட்ல சிஸ்டர கேட்டதா சொல்லுங்கன்னு சொன்னுச்சே, அந்த பாசத்திலே பல்சரை விட்டா ஏத்துற?"ன்னு செந்திலு மேல கோவமே வந்திருச்சு.

பொய்ய நிஜம் மாதிரியும், நிஜத்தை பொய் மாதிரியும் எடுக்கிற ஏரியாவுல, தத்ரூபமா எடுக்கிறேன்னு ஒருத்தனோட தாவாங்க ட்டைய பொளந்திட்டாரு ஒரு அறிமுக இயக்குனர். பீரோவுல ஒளிஞ்சிகிட்ட திருடனை அப்படியே பீரோவோட நாலைஞ்சு பேரு து£க்கிட்டு போற மாதிரி ஷாட். திருடனா நடிக்கிறவரு, ஒரமா பீடிய ருசிச்சிட்டு இருந்தாரு. புகைக்கு நடுவிலே தன்னோட பந்தாவை நுழைச்சு அந்த இன்பத்தை துண்டிச்ச இயக்குனரு, "யோவ். அந்த பூரோவுக்குள்ளே போய் பூந்துக்கோ"ன்னாரு. டைரக்டரு சொன்னா சரிதான்னு பணியுற நல்லவங்கதானே ஜூனியர் ஆர்ட்டிஸ்டுங்க. அவரு சொன்ன மாதிரியே உள்ளே பூந்துட்டாரு நடிகரு. ஸ்டார்ட், கேமிரா, ஆக்ஷன்னு குரல் கொடுத்துகிட்டே, "யோவ் து£க்குங்கய்யா பீரோவ"ன்னாரு டைரக்டரு. உள்ளே மாட்டிகிட்ட துணை நடிகரு ஓன்ன்னு அலற, மற்றவங்க து£க்க முடியாம திணற, ஷாட் ஓக்கே ஆகி கதவை திறக்கும்போது, மவுத்தை பொளந்திட்டாரு துணை நடிகரு. அப்புறம் அந்தாளை து£க்கிட்டு ஐயோ குய்யோன்னு அலறிகிட்டே ஓடினாய்ங்க ஆஸ்பத்திரிக்கு.

"அந்தாளு பீரோவுக்குள்ளே போற மாதிரி ஒரு ஷாட்டு. பிறகு அவன வெளியிலே அனுப்பிட்டு நாலு பேரு அந்த பூரோவ கஷ்டப்பட்டு து£க்குற மாதிரி ஒரு ஷாட். இப்பிடி எடுக்கறதை விட்டுட்டு இந்த கஸ்மாலம் இன்னா பண்ணுச்சு பாரு"ன்னு ஓரமா நின்ன ஸ்டுடியோ வாட்ச்மேன் வெறிபிடிச்ச மாதிரி விமர்சனம் பண்ண, அதானே?ன்னாங்க சுத்தி நின்ன அத்தனை பேரும். அந்த டைரக்டரு இப்போ என்னா பண்றாரு? ம், எங்காவது மிலிட்டிரி ஹோட்டல்ல கோழிக்கு இறக்கை புடிங்கிட்டு இருப்பாரு! அந்த படமும் வரவேயில்லை. டைரக்டரும் வெளங்கவே இல்லை.

ஆன்மாவுல ராகத்தை கலந்தா இனிக்கும். டிராமாவுல நிஜத்தை கலந்தா? உரைக்கும்! இதுக்கு நான் சொல்லப் போற உதாரணம்தான் இந்த சம்பவம்.

பம்பரக் கண்ணாலே படப்பிடிப்பு. பிரசாத் ஸ்டுடியோவுல ஒரு பாடல் காட்சிக்காக செட்டு போட்டிருந்தாங்க. பொணமா நடிச்சா கூட மூக்குல பஞ்ச சொருவிட்டு, "இப்பவே மூச்ச பிடிச்சிராதய்யா. ஷாட்ல மட்டும் இழுத்துப்பிடி"ன்னு சொல்ற கேமிராமேனுங்க வாழுற பூமி இது. ஆனா, கேமிராமேன் சரவணனுக்கு நமீதா மேல கோவமோ? அல்லது ஆட்டத் தோழிங்க மேலே ஆத்திரமோ தெரியலே. செட்டுல மூட்டை மூட்டையா கொண்டாந்து மிளகாயை கொட்ட வச்சிட்டாரு. சின்ன சின்னதா வட்ட வட்டமா கூரை செட் போட்டுருந்தாங்க. அது மேலே மிளகாயை சொட்டிட்டாய்ங்க. காரமான செவப்பு மிளகா, கண்ணை கசக்க வைக்கும் பச்ச மிளகான்னு இதுல கலர் மிக்சிங் வேற.

லட்ஸ் ஆன் ன்னு சொல்லி நாலாவது நொடி... நாகராவுல பாட்டு ஒலிக்குது. பம்பரக்கண்ணாலேன்னு பாடி ஆட வேண்டிய அத்தன பேரும், "பம்பர கண்ணாலே... பஞ்சராச்சு உன்னாலே"ன்னு பாட வேண்டிய நெலமைக்கு ஆளாயிட்டாங்க. அச்சோ குச்சோன்னு ஒரே தும்மல். கண் எரிச்சல். செட்டுக்கு வெளியே ஓடி வந்து ஆசுவாசப்படுத்திகிட்டாங்க. சாராய கடையிலே சைட் டிஷ்ஷா வைக்க வேண்டியதை, சந்தடி சாக்குல மெயின் டிஷ்ஷா ஆக்கி, அதை மூக்கு மேலேயே படைச்சிட்டாய்ங்களேன்னு புலம்பி திரியுது ஆட்ட கோஷ்டி. "எவ்வளவு கஷ்டமா இருந்தாலும், இங்கதான் ஷ§ட்டிங். ரிகர்சலை வேணா செட்டுக்கு வெளியே வச்சுக்கோங்க"ன்னு சொல்லிட்டாரு சரவணன்.

அப்பப்போ வெளியிலே வந்து எல்லாரும் வாந்தியெடுக்கிறாங்க. கூட்டத்தோடு கூட்டமா நமீதாவும் உவ்வேவ்... இவரோட முல்லைப்பூ மூக்கு மேலே சுள்ளிப்பூ பூத்த மாதிரி ஒரே எரிச்சல். கையோட பத்து பதினைஞ்சு கர்சீப்பை வச்சு துடைச்சுகிட்டே இருந்திச்சே தவிர, நான் வீட்டுக்கு போறேன்னோ, முடியாதுன்னோ ஒரு வார்த்தை சொல்லணுமே?

"குடிச்சிட்டு கொழுப்புக்கு வாந்தியெடுக்கிறவங்களுக்கு மத்தியிலே, பொழப்புக்கு வாந்தியெடுக்கிற எங்கள் குல தெய்வமே"ன்னு எவனாவது போஸ்டர் ஒட்டிட போறானோங்கிற பயமே வந்திருச்சு எனக்கு. ஏன்னா காலையிலேர்ந்து சாயுங்காலம் வரைக்கும் நமீதா எடுத்த வாந்திய பார்த்திருந்தா கார்ப்பரேஷன் காரங்க வாய்க்கால் வெட்டுறத்துக்கு ஒரு டென்ட்டரே விட்ருப்பாய்ங்க. ஒரு 'சாந்தி நிலையம்' மாதிரி சுத்தமா இருந்த பிரசாத் ஸ்டியோ, அன்னைக்கு மட்டும் 'வாந்தி நிலையம்' ஆயிருச்சு.

ஒருவழியா சாயங்காலம் பேக்கப். சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட அத்தனை நடன கலைஞர்களையும் கூப்பிட்ட நமீதா, எல்லார் கையிலேயும் ரெண்டு ஆயிரம் ரூவா தாளை நீட்டினார். "போய் டாக்டரை பார்த்திட்டு போங்க"ன்னு நமீதா சொல்ல, அத்தனை பேரு கண்ணிலேயும் அருவி மாதிரி கண்ணீர். "இன்னைக்கு வரைக்கும் அந்த படம் சம்பந்தப்பட்ட யாரையும் குறையே சொல்லலே நமீ. இப்போ சொல்லு செந்திலு"ன்னேன்.

அவரு வள்ளுவர் கோட்டம் பக்கம் திரும்பி 'மன்னிச்சுரும்மா'ன்னு மானசீகமா கும்பிட்டாரு. ஏன்னா அங்கதானே இருக்கு நமீதா வீடு...

Tuesday, July 14, 2009

பிரபுதேவா வீட்டு மாடி...?


அடிக்கடின்னு பிளாக்குக்கு பேரு வச்சிட்டு இப்படி ஆடிக்கு ஆடிதான் பதிவு போடுறதான்னு திட்றவங்களுக்கு... இந்த லீவை ஆடித் தள்ளுபடின்னு நினைச்சுக்கோங்களேன் பிரண்ட்ஸ்!

தெருவெல்லாம் ஓடுற டிப்பர் லாரி மாதிரி, நரம்பெல்லாம் ஓடுற ரப்பர் லாரிதான் நம்ம பிரபுதேவா. நாலு மீட்டர் துணியிலே பேண்ட் தச்சு, அதுல ஒரு குழாய்லே நாட்டியத்தையும், மறு குழாய்லே நட்டுவாங்கத்தையும் ஒளிச்சு வைக்கிற அளவுக்கு கேப் வுட்டிருப்பாரு. பேண்டு சட்டைக்குள்ளே இவரு ஆடிட்டு இருப்பாரு. சட்டையும் பேண்டும் தனியா ஆடிட்டு இருக்கும். அப்படி ஒரு தொள தொள...

அந்த காலத்திலே இதே மாதிரி டிரஸ்சை போட்டுட்டு, நாய் துரத்தி நடுவீதியிலே விழுந்த இளவட்டங்க ஏராளம். போதாத குறைக்கு தலையிலே டபுள் பீன்சை கவுத்துவுட்ட மாதிரி கொத்து கொத்தா ஹேர் டிரஸ்சிங். இந்த தென்னாட்டின் மைக்கேல் ஜாக்சனை ஸ்ட்ராவை போட்டு உறிஞ்சு ருசிச்சிட்டு இருந்திச்சு ஊரு ஒலகமெல்லாம். அந்த பீரியட்லதான் நான் பிரபுதேவா வீட்டுக்கு போயிருந்தேன். நாக்க முக்காவுக்கெல்லாம் நாலாவது தலை முறை பாட்டனா, முக்காப்புலாங்கிற பாட்டு உறுமியடிச்சிட்டு இருந்த நேரம் அது. நான் ஏன் அங்க போனேன்?

பிரபுதேவா வீட்டு மாடியிலே ஒரு சினிமா கம்பெனி இருந்திச்சு. அவங்களுக்கு போன் அடிச்சு, "அண்ணே ஒரு விளம்பரம் வேணும். நான் இன்ன பத்திரிகையிலேர்ந்து பேசுறேன்"னு சொன்னேன். எவ்வளவு ரேட்? எத்தனையாவது பக்கத்தில் வரும் என்றெல்லாம் பேசிய பிறகு "வாங்களேன்"னாரு தயாரிப்பாளர். "அட்ரசை சொல்லுங்க"ன்னு கேட்டப்போ அவரு கொடுத்த அட்ரசு நம்ம பிரபுதேவா வீட்டோட அட்ரஸ். பாழாப்போனவய்ங்க, "மாடியிலே இருக்கேன் சாரு"ன்னு ஒரு வார்த்தை சொல்லக் கூடாது?

சர்ருன்னு வண்டிய கொண்டு போயி அவரு வீட்டு முன்னாடி நிறுத்திட்டு கதவ தட்டி சவுண்டா குரல் கொடுத்தேன். சாரு...

யாரு... ன்னு கதவை தெறந்தது மைக்கேல் ஜாக்சனின் அப்பா, சுந்தரம் மாஸ்டர். "நான் இன்னாரு. இன்ன பத்திரிகையிலேர்ந்து வர்றேன்". அவ்வளவுதான். "வாங்க, உள்ளே வாங்க" என்றார். அமர்ந்தோம். "தம்பீய்ய்ய்ய்..."னு அவரு குரல் கொடுக்க, நெத்தி நெறய விபூதி. புத்திய உரசுற பார்வை. பக்தியா ஒரு கும்பிடுன்னு படார்னு வந்து நின்னாரு பிரபுதேவா. அட, சினிமாவுல பார்த்தா சிலம்பாட்டம். நேரா பார்த்தா எலும்பாட்டம். என்னய்யா இது?ன்னு ஒரே ஆச்சர்யம். ஆனாலும் பேட்டிய பிறகு எடுத்துக்கலாம். இதழ் வேலைய முடிக்கணும். மொதல்ல விளம்பர டிசைனை வாங்கிட்டு போயிரலாம்ங்குது புத்தி.

சார் என்ன சாப்பிடுறீங்க? / ஒன்னும் வேணாம் சார். / இல்லையில்லே, காபியாவது குடிங்க. சம்பாஷணைகள் தொடர, தொடர, விளம்பரத்துக்கு ரேட் சொன்னோம். ஆனால் பைனல் கூட பண்ணலியே? கேட்ட பணத்தை குடுப்பாரா? பாதியா குறைப்பாரான்னு மனசு ஒரே இடத்திலேயே நின்னு டப்பாங்குத்து போடுது. சர்ருன்னு ஒரே மூச்சுலே காபிய குடிச்சிட்டு, "சார் சொல்லுங்க" என்றேன் தெம்பாக. "நீங்கதான் சொல்லணும்" என்றார் மாஸ்டர்.

இதென்னடா வம்பா போச்சுன்னு நினைச்சுகிட்டே, "நீங்களே சொல்லுங்க சார்" என்றேன். "நானா, என்னத்தை சொல்லணும்? நீங்க ஏதாவது கேளுங்க. இவன்கிட்ட பேசணுமா? அவனையே கேளுங்க" என்றார். "சார், போன்லே பேசுனது நீங்கதானே? அப்ப நீங்களே பேசுங்க. எதுக்கு உங்க பையன்கிட்ட விடுறீங்க?" என்றேன் நான்.

"நானா? போன்லேயா? நான் எப்போ பேசினேன்? திடீர்னு வந்தீங்க. போன்லே பேசுனேன்னு சொல்றீங்க" என்றவர் குழப்பமாக எங்களை பார்க்க, குறுகுறுன்னு சிரிச்சிகிட்டே உட்கார்ந்திருந்தாரு பிரபுதேவா. "சார், அந்த சினிமா விளம்பரம்"னு நான் இழுக்க, "அட அதுவா... சரியாப்போச்சு போங்க. அந்த கம்பெனி மாடியிலே இருக்கு. ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லக் கூடாதா?" என்றார் மாஸ்டர். அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்தார் பிரபுதேவா. இது நடந்து பல வருசம் ஆயிருச்சு. இடையிலே பலமுறை நம்ம மைக் ஜாக்சனை பார்த்திருக்கேன். பேசியிருக்கேன். ஆனா, அன்னைக்கு அவரு சிரிச்ச வெள்ளந்தி சிரிப்பு இருக்கே, அதுல பாதிய புட்டு பங்கு போட்டுருச்சு சினிமா.

நாலு நாளைக்கு முன்னாடி கூட ஒரு சின்ன நிகழ்ச்சியிலே அவரை பார்த்தேன். பத்திரிகைகாரங்க நாங்க பத்து பேரு மட்டும் கலந்துகிட்ட விழா அது. நாங்கள்ளாம் வருவோம்னு அவரு எதிர்பாக்கவே இல்லை போலிருக்கு. வாய புடுங்கி வயித்தெறிச்சலை கொட்டிட போறாய்ங்களோன்னு நினைச்சு அவரு ஓடுன ஓட்டம் இருக்கே... மொளகா மண்டியிலே வளைகாப்பு வச்ச மாதிரிதான்!

எலும்பை எடுத்து எந்த பக்கம் வேணும்னாலும் போட்டுக்கிற சாமர்த்தியம் இருந்தும், பொல்லாத நாக்கை பொசுக்குன்னு சுருட்டி, உள்ளே வச்சுக்கிற அளவுக்கு தொரத்தோ தொரத்துன்னு தொரத்துதேய்யா இந்த காதல்!

Wednesday, July 8, 2009

அப்பாவி கிளி ஜோசியனும், அடங்காத டிஆரும்!


போன பிறவியிலே புலிப்பாணி சித்தரா பொறந்திருப்பாரோங்கிற சந்தேகம் டிஆரை பார்க்கும்போதெல்லாம் வரும் எனக்கு. "பாரப்பா பகலவனும் 10 ல் நின்று"ன்னு அவரு சித்தர் பாடலை சத்தம் போட்டு பாடும்போதெல்லாம், நாங்க வெளியிலே நின்னு மிரட்சியா கேட்போம். நாலு வரி பாடி முடிக்கறதுக்குள்ளே, "யோவ்... நான் சோதிடத்தை பதினைஞ்சு வருஷமா ஆராய்ச்சி பண்றவன்யா, எங்கிட்டயேவா?"ன்னு யாரோ ஒரு கிளி ஜோசியனை வளைச்சு வச்சுகிட்டு அவனை 'கிலி' ஜோசியனாக்குவாரு.

நெல்ல போட்டு பசியாத்துவாய்ங்கன்னு பார்த்தா, இப்பிடி 'இடி' மாதிரி சொல்ல போட்டு வெறியேத்துறாய்ங்களேன்னு நினைச்ச அப்பாவி கிளி, கீச் கீச்சுன்னு கத்தும். உடனே நம்ம தலைவரு, "வெள்ள ரோஜாவை கிளி ஒன்ணு லவ் பண்ணுச்சாம்..."னு கிளி ஜோசியன்கிட்ட ஒரு கதைய எடுத்துவிட்டு, அவன காசு கூட கேட்க விடாதளவுக்கு பீதிய கிளப்பி பிகில் ஊதுன நாளெல்லாம் உண்டு.

"பத்தாமிடத்திலேர்ந்து குரு பார்க்கிறனே, இந்த நேரத்திலே பாத்ரூம் போவலாமா?"ன்னு ஆஸ்தான ஜோசியருகிட்டே கேட்டு, அவரையே டெரர் ஆக்குவாரு. ஜோசியரும், "அவன் பார்த்தா என்ன? நீங்க கதவ சாத்திட்டு போக வேண்டியதுதானே"ன்னு ஒரு பதில சொல்லி சமாளிப்பாரு. இப்படி நடமாடும் சென்ட்டிமென்ட் ஸ்டோராக உலா வரும் நம்ம தலைவருக்கு இக்கட்டான நேரம் ஒன்ணு வந்திச்சு. அந்த நேரத்திலே போயி சொக்காட்டான் ஆட்டம் ஆடி சூழ்நிலைய பாழாக்குன சில விசுக்கட்டான்கள் பற்றிய செய்திதான் நான் சொல்லப் போறது...

சலீம் சலீம்னு ஒரு வேலைக்காரர் இருந்தாரு அங்கே. அண்ணன் எள்ளுன்னு சொல்றதுக்கு முன்னாடி வில்லு மாதிரி வெடச்சுக்கிட்டு வேலை செய்யுறதுல கில்லாடி. ஒரு படத்திலே நம்ம தலைவருக்கு வழக்கறிஞர் வேடம். இன்விடேஷனுக்கும் பத்திரிகை விளம்பரத்துக்கும் போட்டோ எடுக்கணும். எப்பவோ ஆரம்பிச்ச பிளான், ராகு காலம் முடியறதுக்குள்ளே எடுக்கணுமேங்கிற பரபரப்பான கட்டத்துக்கு வந்திருச்சு. வக்கீல் கோட்டு, வாரியும் படியாத தலைன்னு தலைவன் வந்து நிக்கிறாரு. அப்பதான் போட்டோகிராபர் லென்சை நோண்டிக் கொண்டிருக்க, "டேய், ங்கொ..., ராகு வர இன்னும் அஞ்சு நிமிசம்தான் இருக்கு. அதுக்குள்ளே எட்றா"ன்னு அதிரி புதிரி கௌப்புறாரு தலைவரு. "ந்தா வந்திட்டேண்ணே..."ன்னு சொன்ன போட்டோகிராபர், லென்சை சரி செய்ய, திடீர்னு யுத்த களத்திலே தலைய விட்ட சலீம், "அண்ணே வக்கிலுங்கோல்லாம் கையிலே ஒண்ணு வச்சிருப்பாங்களே, அது எங்கே?"ன்னாரு.

ஆமாண்டா, கேஸ் ஷீட்டு! டேய் எவனாவது ஓடிப்போயி ஒரு கேஷ் ஷீட்டு எடுத்திட்டு வாங்களேண்டான்னாரு டி.ஆர். தொண்டர்களும், தளபதிகளும் நாலா திசைக்கும் ஓட, வாட்சை பார்த்துக் கொண்டே "குயிக் குயிக்"குன்னு கத்திகிட்டே இருந்தாரு தலைவரு. சரியா அஞ்சாவது நிமிசம், அத்தனை பேரும் திரும்பி வந்தாய்ங்க. சொல்லி வச்ச மாதிரி எல்லார் கையிலேயும்.... கேஸ் ஷீட்டா? அட, பாழா போன கொழாப்புட்டு மண்டையனுங்க! அத்தனை பேரும் எடுத்திட்டு வந்தது கேஸ் ஷீட் இல்லை. ஆளுக்கொரு ஆடியோ கேசட்...!

அதுக்குள்ளே ராகு காலம் என்ட்ரி. பிறகென்ன, வழக்காடு மன்றம் கசாப்பு கடையானது. ஆடியோ கேசட் கொண்டு வந்த அத்தனை பேருக்கும் ராக ஆலாபனையோடு கொஞ்சம் பிரசாதமும் கொடுத்தனுப்பினாரு தலைவரு.

Sunday, July 5, 2009

மழைத்துளி பாட்டு... மவனே நீ மாட்டு...!


"தலைவா, ஒரு ஆள அனுப்பி வைக்கிறேன். நம்ம பத்திரிகையிலே ஒரு மேட்டர் பண்ணி வுடுங்க"ன்னாரு ஃபிரண்டு ராஜ்கணேஷ். பாலைவன சோலை சந்திரசேகருல பாதியும், மாயாண்டி குடும்பத்தார் சிங்கம்புலி மீதியுமா வந்திறங்குனான் மனுசன். ஹைடெக் ஆசாமியா இருப்பானோன்னு நினைச்சு "லயோலா காலேஜ் கிரவுண்டுக்கு நாலு மணிக்கு மேலே வரச்சொல்லுங்க. ஃபிரீயா பேசலாம்"னு சொல்லி நானே, என் சீட்ல முள்ளு வச்சிகிட்டேன். லயோலாவ உருவாக்கின ஃபாதர் உசிரோட இருந்திருந்தா லபோ திபோன்னு வயித்தில அடிச்சிகிட்டு வாந்தியா எடுத்திருப்பாரு. ஹ¨ம்... பயங்கரம்ப்பா அது!

பழைய எஸ்.டி வண்டியிலே வந்திறங்குனான் ஆளு. இதுக்கு ஸ்பேர் பாட்செல்லாம் கூட இப்போ எங்கியுமே கெடக்கிறதில்லையே... இத வச்சு எப்படிய்யா வண்டி ஓட்றேன்னு கேட்கவும் பயம். ஒரு ரவுண்டு ஓட்டிப் பாருன்னு கொடுத்திட்டா? கிக்கர்ல ஆரம்பிச்சி மிர்ரர் வரைக்கும் ஒரே ஸ்டிக்கர் மயம். எல்லாத்திலேயும் ஆன்மீக ஜோதி பளபளன்னு தெரிய, புன்னகையோடு இறங்கினான். "எங்கேர்ந்து வர்றீங்க?"ன்னேன் ஒரு பேச்சுக்கு. "ம்... வடலு£ர்லேந்து..."ன்னு சொல்லிட்டு ஒரு பீடியை எடுத்து வாயிலே ஃபிக்ஸ் பண்ணிக் கொண்டே, "ஐ யம் வள்ளலார்"னு கை நீட்டினான். குலுக்கணுமாம்! பரஸ்பரம் கைகுலுக்கிக் கொண்டோம். ஒரு பீடி ஃபேக்டரியை கொளுத்தி விட்டுட்டு பக்கத்திலேயே நின்ன மாதிரி அப்படி ஒரு நாத்தம். வெள்ளையும் இல்லாத பழுப்பிலும் சேராத கலரில் வேட்டி!

வடலு£ர்லேர்ந்து வர்றேன். வள்ளலார்னு வேற சொல்றான். ஆளு ஒரு டைப்பா இருக்கானேன்னு யோசிக்கும் போதே, ஆமாம்ங்கிற மாதிரியே அடுத்த வார்த்தை வந்திச்சு அந்தாளுகிட்டேயிருந்து. "கை கொடுத்தீங்களே, என்ன புரிஞ்சிகிட்டீங்க?"ன்னான். "முதல் அறிமுகம். கை கொடுத்தேன். வேற என்ன புரியணும்?"னேன். "நான் கை குலுக்கும் போது ஒங்க உடம்புல ஒரு ரச வாதம் வந்திருந்திருக்குமே?"ன்னான். அடப்பாவி, இந்த பீடி நாத்தம் புடிச்ச கையிலேர்ந்து ரச வாதமா வரும்? ரசம் வாசம் கூட வராதுன்னு நினைச்சுகிட்டு, "நேரடியாக சொல்லிடுங்க பிரதர். நான் என்ன செய்யணும்"னேன்.

"வள்ளலார் மறுபடியும் பிறந்திட்டாருன்னு ஒரு நியூஸ் போடணும்!"

ஆஹா, அவனா நீயி...? உதடெல்லாம் காஞ்சு உள் நாக்கு ஒட்டிப் போச்சு எனக்கு. அடப்பாவி, ஃபேமிலியோடு சினிமாவுக்கு போயிருந்திருக்கலாம். இங்கே வந்து மாட்ட வச்சிட்டாரேன்னு நினைச்சுக்கிட்டே, ஃபிரண்டுக்கு சாபம் கொடுத்தேன்.

இருந்தாலும், ஒண்ணுமே புரியாத மாதிரி, "எங்கே பிறந்திருக்காரு வள்ளலாரு? வடலு£ர்லேவா? அல்லது பக்கத்துல வேற ஏதாவது கிராமத்திலா? நார்மல் டெலிவரியா? இல்லே சிசேரியனா?"ன்னு அடுக்கடுக்கா நான் கேட்க, கடுகடுப்பா ஆச்சு அவன் முகம். "கிண்டல் பண்ணுற வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம். இந்த உலகம் என்னை புரிஞ்சிக்கலே. நியூஸ் போடுவீங்கன்னு வந்தா நீங்களுமா?"ன்னான். "புரிய வைக்கட்டுமா நான் யாருன்னு?" கொடாப்புல போட்ட வாழைத்தாரு, ஒரே ஒரு மணி நேரத்திலே பழுக்கிற மாதிரி, என்னைய பழுக்க வைக்க அவன் ட்ரை பண்ணுனான்னு சொல்றது தப்பு. பலவந்தம் பண்ணினான்.

லபக்குன்னு ஒரே பாய்ச்சலா தன்னோட பைக்கை தாண்டி அந்த பக்கம் குதிச்சு, பேக்குக்குள்ளே கைய விட்டான். வெளியே எடுத்தபோது ஒரு டேப் ரெக்கார்டர். இதுல வள்ளலார் பேச்சு இருக்குமோ? அவரே இதிலே வந்து நான்தான் இவன்னு சொல்லுவாரோ? ஏகப்பட்ட ஐயமும், லேசுபட்ட பீதியுமாக நான் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, "இப்ப மழை வரும் பாரு"ன்னான். வாங்க போங்கன்னு பேசிட்டு இருந்தவன், இப்படி அறிமுகமான நாலாவது நிமிஷத்திலே வா போ ன்னு பேசுவான்னு நான் எதிர்பார்க்கலே. இருந்தாலும், பேசுறது வள்ளலாரா இருக்குமோன்னு எனக்கே ஒரு டவுட். "வள்ளலார் என்ன வானிலை ஆராய்ச்சி மையத்திலா வேல பார்த்தாரு, இப்படி வானிலை அறிக்கை சொல்றதுக்கு?"ன்னு அடுத்த கேள்விய நான் கேட்க, கண்ணுலே பொறி பறக்குது மனுஷனுக்கு. "டேய், பார்றா இப்போ"ன்னான். (இதுக்கு முன்னாடி சொன்ன வா போவே தேவலாம்)

டேப் ரெக்கார்டரை ஆன் பண்ணுற வரைக்கும் நான் அப்படி நடக்கும்னு நினைக்கவே இல்லை. மழை வந்திச்சா என்ன? மண்ணாங்கட்டி. ஏ.ஆர்.ரஹ்மானோட பாட்டுதான் வந்திச்சு. 'மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம். ஆலாலகண்டா, ஆடலுக்கு தகப்பா வணக்கமுங்க...'ன்னு ரஹ்மான் மியூசிக்லே ஒரு பாடல் வருமே? அதை ஓடவிட்டுட்டு ஓட்டத்துக்கு ஏற்ப ஆட்ட ஆரம்பிச்சான் இடுப்பை. பயங்கரமான ஆட்டம். என்னத்தே கன்னையாவுக்குள்ளே பத்மினிய எறக்கிவிட்ட மாதிரி அப்படி ஒரு ஆட்டம்.

லயோலா கிரவுண்டிலே சாயங்கால நேரத்திலே வாக்கிங் போக வந்த பெரிய மனுஷன்லாம் பேஸ்த் அடிச்சுப்போயி பார்க்கிறாங்க. அங்கே விளையாடிட்டு இருந்த பசங்கள்ளாம் ஹோ....ன்னு கத்திகிட்டே ஓடியார்றாங்க. பின்னே நாலு முழத்திலே வேட்டிய கட்டிகிட்டு ஒருத்தன் தையதக்கான்னு ஆடிட்டு இருந்தா, சும்மாவா போவாய்ங்க?

டீசன்டான காலேஜ்குள்ளே, டேலன்ட்டான ஆளுங்களே வர பயப்படுற காலத்திலே, இப்படி ஒரு தற்குறி, மெர்க்குரி பல்ப்பா மின்னுரானே?ன்னு எனக்கு டவுட். ஏன்னா, ஓடிவந்த இள வயசு பசங்க, "இன்னும் நல்லா ஆடு தலைவா"ன்னு உற்சாகப்படுத்துராய்ங்க. வாக்கிங் போற பெரிசுங்களும், வாய பொளந்துகிட்டு வேடிக்கை பார்க்குதுங்க. ஆட்டம் முடிஞ்சு "நான்தான் வள்ளலார்"னு சொல்லி அந்தாளு கூட்டத்தை நோக்கி தனது பிரசங்கத்தை துவங்க, சர்டிபிகேட்ல வெள்ளாளர்ங்கிற ஜாதியை பற்றி மட்டுமே கேள்விப்பட்டிருந்த பசங்க, ஏதோ சாதிய பத்தி பிரசங்கம் பண்ண வந்த ஆளு போலிருக்குடான்னு கலைய ஆரம்பிச்சாங்க. அவங்களோட சேர்ந்து நானும் கலைய, மழைத்துளி நிற்கவே இல்லை.

அவசரப்படாதீங்க. டேப்ரெக்கார்டர்ல 'மழைத்துளி...' பாட்டு நிற்கலேன்னு சொல்ல வந்தேன். ஆமா, எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குதுன்னேன் பிரேம்ஜி ஸ்டைலில்.

பின்குறிப்பு-இவரை அனுப்பிய ராஜ்கணேஷிடம், "என்ன நண்பா இப்படி பண்ணிட்டீங்களே?"ன்னு கேட்டதுக்கு அவரு சொன்னாரு. "தலைவா, ரொம்ப நாள் இம்சை. நீங்களும் அனுபவிக்கட்டுமேன்னுதான்..."

Tuesday, June 30, 2009

விஜய் போட்ட முதல் உத்தரவு?!


"ரேகை தேயுற அளவுக்கு கை தட்டு. நாக்கே சுளுக்கிக்கிற அளவுக்கு விசிலடி. யாரை வேணும்னாலும் ரசி. அதுக்கு மேலே போனா வெளங்க மாட்டடா டேய்..."னு போஸ்ட் மரத்திலே முட்டுக் கொடுத்தபடி போதையில் தத்துவம் பேசிக் கொண்டிருந்தார் ஒரு 'ஆயுள் சந்தா' அறிவுஜீவி. விஜய் கட்சி ஆரம்பிக்க போறாருன்னு நியூஸ் வந்திச்சே, அப்பவுலேர்ந்து இப்படிதான்!

எவனோ விட்டுட்டு போன ஊறுகாய, தொட்டு நக்கிட்டு பேசுற டாஸ்மாக் கோவாலுங்க சொல்றதெல்லாமா ஒரு விஷயம்னு பேசிட்டு இருக்கணும்? நம்ம புத்தி இப்பிடி நாக்கை புடுங்கிற மாதிரி கேட்டாலும், பயபுள்ளைங்க பேசுறதிலேயும் ஒரு நேர்மை இருக்கதானே செய்யுது?

சில வருஷங்களுக்கு முன்னாடி ஒரு பிரஸ்மீட். அது விஜயகாந்த் நடிச்ச ஏதோ ஒரு படம். சைதாப்பேட்டை சிக்னல் அருகே இருக்கிற அரசாங்க பில்டிங்கிலே ஷ¨ட்டிங். லைட்டு வெளிச்சத்துக்கு முன்னாடி விஜயகாந்த் வசனம் பேசிக் கொண்டிருக்க, அவரு வர்ற வரைக்கும் நாங்களெல்லாம் ஒரு ஷாமியானாவுக்கு கீழே சேர் போட்டு உட்கார்ந்திருந்தோம். அந்த நேரம் பார்த்துதான் அவன் வந்தான். ஷ¨ட்டிங் நடக்கிற ஏரியாகிட்டே போனா விரட்டி விட்ருவாய்ங்கன்னு நெனச்சானோ என்னவோ, எங்க பக்கத்திலே வந்து நைசாக உட்கார்ந்தான். "சாரு, நீங்கள்ளாம் யாரு?"ன்னான் அப்பாவியாக. "ஏம்ப்பா, என்னா விஷயம்?"னாரு விக்கி. "கேப்டன்னா எனக்கு உசிரு சாரு"ன்னவன், இங்கிருந்தபடியே அங்கிருக்கும் அவரை ஏக்கமாக நக்கினான். விக்கிக்கு செம கோவம். பிரஸ்சுக்கு போட்ட சேர்லே ஒரு ரசிகன் வந்து உட்கார்ந்திட்டானேன்னுதான்.

அதோட முடிஞ்சிருந்தா பரவாயில்லை. "சாரு, நானு என் புள்ளைய து£க்கிட்டு கேப்டனோட படத்தை பார்க்க போனேன். கூட்ட நெரிசல்ல புள்ள செத்து போச்சு. அப்பவும் விடாம, படத்தை பார்த்திட்டுதான் பொணத்தோட வீட்டுக்கு போனேன்"னான். அவ்வளவுதான். அதுவரைக்கும் போனா போவுதுன்னு அவனை அனுமதிச்ச அத்தனை பேருக்கும் செம கோவம். "எந்திர்றா நாயே..."ன்னாரு விக்கி. மற்றவங்களும் சேர்ந்து கொள்ள, ஒரே தள்ளு. அடுத்த செகண்ட் ரோட்டில் இருந்தான் ரசிகன்.

சிலுக்கு கடிச்சி வச்ச ஆப்பிளை ஏகப்பட்ட ரூவாய்க்கு ஏலம் எடுத்து, உலகத்தையே ஒரு ஆப்பிளின் கீழே கொண்டு வர நினைச்ச, நவீன அலெக்ஸ்சாண்டருங்க திரியுற பூமி இது. இங்கதான் நான் பார்த்தேன் அந்த கொடூரத்தையும். ரஜினி நடிச்ச ஒரு படத்துக்கு போயிருந்தேன். படத்திலே ஒரு போலீஸ் ரஜினிய அடிக்க, பாராவுக்கு வந்திருந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருத்தரை புரட்டி எடுத்திட்டாய்ங்க சில பேரு. "எங்க தலைவரையா அடிச்சே?"ன்னு அவரை புரட்ட, "யோவ் நான் எங்கேய்யா உங்க தலைவர அடிச்சேன்?"னு ஓடிப் போனாரு தியேட்டரை விட்டே. போற வேகத்திலே அவரு பின்னாடியே விரட்டிட்டு போயி 'து££££...'ன்னு துப்பிட்டு ஓடி வந்தாரு ஒரு வெறிபிடிச்ச ரசிகரு. ஓடிப்போன போலீஸ்காரர் ஒரு படையோட திரும்பி வந்த போது, அப்பாவி ரசிகருங்கதான் மாட்னாய்ங்க. கிர்ணிப்பழமே கிழிஞ்சு தொங்குற அளவுக்கு அடிச்சி பின்னிட்டாய்ங்க. எச்சல் துப்பினவன் எஸ்கேப் ஆகிவிட, மிச்சர் தின்னவன்லாம் மாட்னான் அன்னிக்கு!

இது போன வாரத்து காமெடி. விஜய்யோட பிறந்த நாளுக்கு பிரஸ்சை கூப்பிட்டிருந்தாங்க. திரும்புற இடத்திலே எல்லாம் கொல கொலயா தலைங்க. உச்சி வெயில் வேற மண்டையிலே இறங்கி, தண்டு வடத்திலே தாளம் போடுது. எரிச்சல்ல திரண்டிருந்த ரசிகருங்க கூட்டத்தை வேற சமாளிக்க வேண்டியதா போச்சு ஒவ்வொரு நிருபருக்கும். காது பக்கத்தில வந்து கேத்தான் ஃபேன் மாதிரி காத்தடிச்சிகிட்டே கத்துறாய்ங்க தலைவா££££ன்னு! உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு உருண்டுகிட்டே போனா எப்படியிருக்கும்? அப்படி ஒரு அனுபவம் உள்ளே போவதற்குள்.

காலையிலே இருந்து விஜயோட முகம் தெரியுமான்னு காத்து கிடந்தவங்களுக்கு, ஒருத்தர் வந்து இறங்கியதும் உள்மனசெல்லாம் பல்பு எரிஞ்சுது. அது யாரு? நீங்க நினைக்கிற மாதிரி நடிகையெல்லாம் இல்லை. ஒரு ஆங்கில நாளிதழின் நிருபி. பார்க்க கொஞ்கம் ஸ்மார்ட்! வெயில் என்பதால் அன்னைக்கு பார்த்து பெரிய கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு ஒரு நடிகை ரேஞ்சுக்கு காரிலிருந்து இறங்கினார். யாரோ ஜுனியர் ஆர்ட்டிஸ்டு போலிருக்கு. விஜயை வாழ்த்த வந்திருக்காங்கன்னு நினைச்ச செக்யூரிடி, சூனியரெல்லாம் அந்த கேட்... அந்த கேட்டு...ன்னு குச்சியை வச்சுகிட்டு லொட்டு லொட்டுன்னு அந்தம்மா பக்கத்திலே தட்ட, செம டென்ஷன் அவங்களுக்கு. "ஸ்டுப்பிட்... நான் பிரஸ்"சுன்னாரு கோவமா. பதறிப்போன செக்யூரிடி "அம்மா போங்கம்மா"ன்னு வழிவிட்டாரு.

அதுக்குள்ளே எவனோ ஒருத்தன் வெந்த புண்ணிலே வெளக்கு மாவு படைச்சிட்டான். டேய்... அசினுடான்னு அவன் கத்த, அவ்வளவுதான். பண்ருட்டியிலேயிருந்து பறந்து வந்த பலாப்பழ கொசுங்க மாதிரி மொய்ச்சிட்டாய்ங்க. பண்ருட்டிகளின் தின்ருட்டி அட்டகாசம் ஆரம்பமாயிருச்சு. இடுக்காலே ஒருத்தன் கைய விட்டு இடுப்பை கிள்ள, அப்படியே ஆளாளுக்கு கையை விட ஆரம்பிச்சிட்டாய்ங்க. "ஸ்டுப்பிட்...நான்சென்ஸ்.. ஆ... கிள்ளுறானே..."ன்ன்னு ஒரே கூச்சல் இவங்ககிட்டேயிருந்து.

நல்லவேளை நாலைஞ்சு பேரு இதை கவனிச்சிட்டோம். படக்குன்னு பாஞ்சு நிருபியை (தொடாம) வளைச்சு பிடிச்சோம். அப்படியே காப்பாற்றி ஹாலுக்குள் கொண்டு வந்தோம். மேலு கையெல்லாம் ஒரே கிள்ளல் காயம். ரொம்ப நேரம் "ஸ்டுப்பிட்ஸ்..."னு முணுமுணுத்துகிட்டேயிருந்தாங்க நிருபி. நிருபர்களின் கேள்வி கணைகளுக்கு பதில் சொன்ன விஜய், இவங்க சும்மாவே இருக்கறதை கவனிச்சுட்டாரு. "என்ன மேடம். எனி கொஸ்டீன்ஸ்..."ன்னு கேட்டாரு. அவ்வளவுதான். வெறி புடிச்ச மாதிரி "நத்திங்..."ன்னுச்சு நிருபி. அவரு கிளம்புற நேரத்திலே கிட்டே போயி "என்னைய உங்க ரசிகருங்க கிள்ளிட்டாய்ங்கன்னு நிருபி சொல்ல, விஜய் போட்ட முதல் உத்தரவு, "யோவ்... இவங்களை பத்திரமா கார்லே ஏத்திவிட்ருங்க" என்பதுதான்.

வருங்கால சிஎம் போட்ட முதல் உத்தரவு இப்படியா இருக்கணும்?

Tuesday, June 23, 2009

பாருக்கு வந்த, பாவப்பட்ட நடிகை!


நயன்தாரா, த்ரிஷா ரேஞ்சுக்கு இல்லைன்னாலும், இன்றைய தேதிக்கு சுமார் எட்டு லட்சம் சம்பளம் வாங்கக்கூடிய ஹீரோயின் அவர். பெயரை சொன்னா சரியா இருக்காது. வேணும்னா ஒரு க்ளு. மூன்றெழுத்து நடிகை. கடைசி எழுத்து கா! நல்ல 'அழகி'ன்னு சொல்லலாம்.

ஏறத்தாழ மூணு நாலு வருஷத்துக்கு முன்னாடி பேட்டிக்காக போயிருந்தேன் அவரு வீட்டுக்கு. அன்னைக்கு பார்த்து வண்டி ரிப்பேர்ங்கிறதால ஆட்டோ சவாரி. பேட்டிய முடிச்சுட்டு கிளம்பும்போதுதான் அவங்க அப்பாவை பார்த்தேன். (முன்னாடியே பார்த்திருந்தா பேட்டியவே 'டிராப்' பண்ணியிருக்கலாம்) சின்ன சின்ன குவாட்டர்களா போட்டு செஞ்ச மாதிரியே இருந்தாரு மனுஷன்.

"சார், ஒங்க பொண்ணு போட்டோவ கொடுங்க"

"போட்டோவ வாங்கிட்டு போனா யாரு திருப்பி தர்றீங்க? ஏகப்பட்ட போட்டோ இப்படியே போயிருச்சு. நான் கோயமுத்து£ர் கவுண்டன்(?) என்னை யாரும் ஏமாத்த முடியாது. வேணும்னா சிடி இருக்கு. அதுவும் ஒன்னுதான் இருக்கு. காப்பி பண்ணி தரட்டுமா"ன்னாரு. கொடுங்கன்னேன். "வீட்ல கம்ப்யூட்டர் இல்லீயே? வாங்க, எங்கேயாவது காப்பி பண்ணலாம்" வண்டியை கிளப்பினார்.

வண்டிக்கும் சேர்த்து 'சரக்கு' போட்டிருப்பாரு போல, தேடி தேடி குழியிலேயே இறங்கிச்சு வண்டி. சிறிது நேரத்தில் மாட்டு வண்டிய ஓட்டுறது மாதிரியே கரடு முரடா ஓட்ட ஆரம்பிச்சாரு. "சார்... நான் வேணா நடந்தே வர்றேன். இடத்தை மட்டும் சொல்லிருங்க"ன்னேன். "ந்தா வந்திருச்சு" என்று பிரேக் அடித்து ஓரிடத்தில் நிறுத்தினார். இருவரும் உள்ளே போனோம். "சார், டிவிடி ல காப்பி பண்ண 150 ரூவா!" கடைக்காரன் சொல்ல, யோவ், நான் கோயமுத்து£ர் கவுண்டன். என்னை ஏமாத்துலாம்னு பாக்கிறீயா? வேணாம் வுடு. உட்காருங்க சார்"னு மறுபடியும் அந்த நெடும் பயணத்தை, இல்லையில்லை கொடும் பயணத்தை துவங்கினார்.

ஒவ்வொரு பள்ளத்திலும் வண்டியை விடும்போதும் எனக்கு பயங்கர சிரிப்பு. பத்திரிகை துவங்கி இது எத்தனையாவது வருடம் என்பதையும், புத்தகத்தின் எண்ணிக்கையையும் குறிக்க, மலர் ஒன்று-இதழ் முப்பத்தி ரெண்டு என்பது மாதிரி அச்சிட்டிருப்பார்கள். ஒவ்வொரு முறை அவர் பள்ளத்தில் இறக்கும்போதும், நான் 'விரை ஒன்று வீக்கம் பத்து, பதினொன்று' என்றே கணக்கிட்டு வந்தேன். அதனால்தான் அந்த பயங்கர சிரிப்பு.

"சார் விடுங்க. நான் நண்பர்கள் யாருட்டேயாவது ஸ்டில் வாங்கிக்கிறேன்"னு சொன்னதையும் பொருட்படுத்தாமல் விரைவாக வண்டியை செலுத்தி ஓரிடத்தில் நிறுத்தினார். 100 அடி ரோட்டில் உள்ள போட்டோ ஷாப். நல்லவேளையாக 50 ரூபாய் கேட்டார்கள். "தம்பி, நான் கோயமுத்து£ர் கவுண்டன். ஏமாந்திருவேனா? அவன்கிட்டே கொடுத்திருந்தா 150 ரூவா போயிருக்கும்"னவரு, "வாங்க, அவரு காப்பி பண்ணட்டும். பக்கத்திலே போயிட்டு வந்திருவோம்"னாரு. அவருக்கு ஏத்த மாதிரி பக்கத்திலேயே ஒரு டாஸ்மாக்! "ஒங்களுக்கு...?" "ஒன்னும் வேணாம் சார். சீக்கிரம் போயிரலாம்"னேன். "என்ன தம்பி நீங்க? ஒரு பீராவது குடிக்கலாம். சரி விடுங்க, ஒரே ஒரு கட்டிங்"னுட்டு போனவரு திரும்பி வரும்போது, கையிலே ரெண்டு குவாட்டர் பாட்டில்.

மொத பாட்டிலே பிரிச்சு சர சரவென்னு காலி பண்ணியவரு, ரெண்டாவது பாட்டிலை பிரிக்க திராணியில்லாம மூடி எது, கிளாஸ் எதுன்னு தெரியாத ரேஞ்சுக்கு போயிட்டாரு. இந்தாள கொண்டு போயி வீட்டுல சேர்க்கிறதா? இல்ல இப்படியே விட்டுட்டு கிளம்பிடுறதா? ஒரே குழப்பம் எனக்கு. "த...ப்ம்ம்வீ, என்..ன்ன்னன யாருழ்ம் ஏமமாழ்த்மம மொழிட்யி£து. நாழ்ன் கோழ்யமத்து£ர்ரு கழ்வுன்ன்டேன்,,..." அவ்வளவு போதையிலும் பஞ்ச் டயலாக் வேற!

கோயமுத்து£ர் கவுண்டன், இப்படி கவுன் 'டவுன்' ஆவார்னு நான் நெனச்சு கூட பார்க்கலே.

அவரு கையிலே இருந்த வண்டி சாவிய வாங்கி எப்படியாவது முன்னாடி உட்கார வச்சு வீட்டுக்கு கொண்டு போயிரலாம்னு நினைச்சா, மனுசன் சாவியை இருக்கமா பிடிச்சுகிட்டு தரவே இல்லை. நாம பிடுங்கி, அந்தாளு கத்தி, வம்பே வேணாம்! அந்த பொண்ணுக்கே போன் அடிச்சிர வேண்டியதுதான். விஷயத்தை சொன்னா, "சார் அப்படியே விட்டுட்டு போயிராதீங்க. எப்படியாவது வீட்டில கொண்டு வந்து சேர்த்திருங்க. ஒங்களுக்கு புண்ணியாப் போவும்"னுச்சு. இருதலைக் கொள்ளி எறும்பா இருந்தாலும் பரவாயில்லை. எறும்பைவிட சின்னதா இருக்கிற துரும்பாயிட்டேன் நான். அவரை ஆட்டோவிலே ஏத்தலாம்னு ட்ரை பண்ணினா, என்னை கடத்தப் பாக்கிறியான்னாரு பயங்கரமாக!

"இல்லங்க. நீங்களே ஆளு யாராவது அனுப்புங்க"ன்னு சொல்லிட்டு டாஸ்மாக் இருக்கிற இடத்தையும் அடையாளம் சொல்லிட்டேன். வேறு யாராவது வருவாங்கன்னு பார்த்தா, அந்த நடிகையே பர்தா போட்டுட்டு வந்திடுச்சு. எனக்கு பரிதாபம் ஒரு பக்கம். ஆச்சர்யம் மறுபக்கம். ஆட்டோ டிரைவர் பாருக்குள்ளே போய் அந்தாள து£க்க, அவருகிட்டேயும் அதே பிரச்சனை. பெரிய போராட்டத்திற்கு பிறகு, ஏதோ கவச குண்டலத்தோடவே பொறந்த மாதிரி அவ்வளவு போதையிலும் அந்த குவார்ட்டர் பாட்டிலை விடாம புடிச்சிகிட்டு வெளியிலே வந்தார்.

வண்டி சாவியே வாங்கி, பின்னாடியே ஓட்டிட்டு போய் வண்டிய விட்டுடலாம்னு நினைச்சு சாவியை கேட்டா, "நான் கோய..."ன்னு ஆரம்பிச்சு பஞ்ச் டயலாக்கையும் சாவியையும் விடாம இறுக்கமா பிடிச்சுகிட்டார். அங்கே இருந்து அசிங்கப்பட வேண்டாம்னு நினைச்ச நடிகை, "சரி சார் வண்டியை அப்புறமா எடுத்துக்கலாம். நீங்க கௌம்புங்க. ஸாரி ஃபார் த இன்கன்வீனியன்சு"ன்னுச்சு.

சிடியை வாங்கிகிட்டு ஆபிசுக்கு போயிட்டேன். மறுநாள் போன் பண்ணி "வண்டிய எப்போ எடுத்தீங்க?"ன்னு ஒரு பேச்சுக்கு கேட்டபோதுதான் ஷாக்கா இருந்திச்சு. இந்தாளு பண்ணிய களேபரத்திலே அந்த பொண்ணும் வண்டிய மறந்திருச்சு போல. மறுநாள்தான் போய் பார்த்திருக்காங்க. பார் வாசல்ல வண்டிய வச்சா எடுக்காம போற அளவுக்கு நல்லவங்க இருக்கானுங்களா என்ன? வண்டி அம்போ...