Monday, May 3, 2010

தே‌வயா‌னி‌ என்‌ற முதலா‌ளி‌யம்‌மா‌

தாஜ்மஹால் மேல தார் ஊத்தினா கூட சுற்றுபுற ஆர்வலர்கள் சும்மாயிருப்பாங்க. ஆனா, சினிமாவுல இருக்கிற வெட்டிப்புற ஆர்வலர்களின் ஆத்திரமும், ஆதங்கமும் இன்னும் அடங்க மாட்டாம சுத்துது ஒரு காதல் ஜோடியை, ஜோடியா பார்க்கும் போதெல்லாம்! இந்த வாரம் ஒரு முன்னணி இதழில் அவங்களோட பேட்டிய படிக்கிறப்போ பெருமையா இருந்திச்சு. அப்படியே சேனலை திருப்பினா அங்கேயும் இந்த ஜோடி. காபி வித் அனுவில் டிகாஷனும் பாலுமாக கலந்து கலந்து அவங்க பேசியது நிஜமாகவே இன்பீரியாரிடி பையனுங்களுக்கு ஒரு கப் சுப்பிரியாரிடி 'சூப்' கொடுத்த மாதிரி சூப்பரோ சூப்பர்.

கலருக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம்? கோலி சோடாவுல இருக்கிற கோலிக்கும் சோடாவுக்குமான சம்பந்தம்தான் அது. கோலி இல்லேன்னாலும் சோடா ருசிக்கும்! நிறம் இல்லேன்னாலும் காதல் வண்ணமயமானது. இதை பற்றியெல்லாம் யோசிக்காம, 'யாரும் யாரும் யாராகியரோ'ன்னு தள்ளிப் போகாம, இந்த ஜோடிய பிடிச்சு 'ஜோ' தனியா 'டி' தனியா ஆக்கிறனும்னு ஒரு கும்பல் ட்ரை பண்ணி கிட்டதட்ட பதினைஞ்சு வருசமாச்சு. இப்போ இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவா, அம்மாவா இந்த ஜோடி பின்னி பெடலெடுக்குது. இவ்வளவு சொல்லியும் அது தேவகுமாரன், ராஜயானின்னு புரியாம போச்சுன்னா, இத படிக்கிற நீங்க சினிமா ஏரியாவுல வீக்குன்னு அர்த்தம்.

என் பத்திரிகை நண்பர் ஒருவருக்கு பெரிய வருத்தம். "நல்லாதாங்க பேசிட்டு இருந்தாரு. ஆனா நாலு வாரத்துக்கு முன்னாடி நம்ம மேகசின்ல ஒரு பிட்டை போட்டுட்டாய்ங்க. இப்பல்லாம் போன் அடிச்சா, எடுக்கவே மாட்டேங்கிறாரு" என்று ராஜகுமாரன் பற்றி முணுமுணுத்தார் அவர். "நானும் படிச்சேன்"னு சொல்லிட்டு சிரிச்சேன். இந்த சிரிப்புக்கு பின்னாடி ஒரு மனுசனோட 'மாரு வலி' இருக்குன்னு புரியாமலேயே. 'இப்போதெல்லாம் யாராவது காலிங் பெல் அடிச்சா அவருதான் வந்து தெறக்கிறாராம். அதுவும் மாவரைச்ச கைய கூட துடைக்காம...' என்று முடிந்திருந்தது அந்த துணுக்கு. சில துணுக்குகள்தான் இப்படி சம்பந்தப்பட்டவர்களை துணுக்குற வைக்கும். இவ்வளவுக்கு பிறகும் நண்பரிடம் நட்பு வைக்க அவர் என்ன நாலுங்கெட்டவரா என்ன?

"அவங்க எத்தனை அழகு? அவங்க நினைச்சிருந்தா எவ்வளவு பெரிய..." சொல்லி முடிப்பதற்குள் ராஜகுமாரன் வாயை இப்போதும் ஒரு கை பொத்துகிறதென்றால் அதுதான் தேவயானியின் காதல். இந்த ராஜகுமாரனுக்காக தேவயானி செய்த தியாகங்களை அவர்களை விட அதிகம் கவனிக்க வேண்டியது எங்களை போன்ற பத்திரிகை சிகாமணிகள்தான். அப்படி ரொம்ப கவனிச்சப்போ கிடைச்ச சின்ன நகைச்சுவை 'கேக்'தான் இப்போ நான் சொல்லப் போறது.

'காதலுடன்' என்றொரு படத்தை இயக்கினார் ராஜகுமாரன். தயாரிப்பு இவருடைய திருமதிதான். நாய் கழுத்துல கட்டுன பிஸ்கட் மாதிரி, ஒருத்தருக்கும் பிரயோஜனம் இல்லாம போச்சு அத்தனை முதலீடும். ஆனால் கவுரவம் வருதோ, இல்லையோ. கடன் வந்தது சுனாமி மாதிரி. அதையெல்லாம் சீரியலில் நடிச்சு சீரியஸ் ஆக அடைத்தார் தேவயானி. இவ்வளவுக்கு பிறகும், மேற்படி துணுக்கு எழுத்தாளர்களின் துன்பம் பொறுக்காமல் மீண்டும் கணவரை டைரக்டர் ஆக்கியிருக்கிறார். படத்தின் பெயர் திருமதி தமிழ். இந்த படத்தில் இன்னொரு ஆபத்து, ராஜகுமாரன்தான் ஹீரோ(?)

படப்பிடிப்பு ஒரு கார்டனில் நடந்து கொண்டிருந்தது. வில்லனுடன் ஹீரோ ஃபைட் பண்ணுவது போல காட்சி. அதுவும் இவர் வேகமாக ஓடிவந்து வில்லனின் முகத்தில் குத்த வேண்டும். நேஷனல் ஜியாகரபி சேனலை கோடம்பாக்க டைரக்டர்கள் குத்தகைக்கு எடுத்திருந்தால், எறும்பை கூட ஹீரோவாக்கி படம் எடுப்பார்கள். அதில் யானையெல்லாம் அடிவாங்கி அலறும். ராஜகுமாரனும் இந்த சீரியஸ் நகைச்சுவைக்கு தப்பவில்லை.

இப்படி காட்சிகள் எடுக்கும்போது பஞ்ச் சரியாக முகத்துக்கு அருகே வரும். ஆனால் குத்து முகத்தில் விழாது. நாலைந்து படங்கள் இயக்கிய ராஜகுமாரனுக்கு இது தெரியாமலிருக்காது. அவர் விட்ட முதல் குத்திலேயே வில்லனின் கண்ணில் பூச்சி பறக்க ஆரம்பித்துவிட்டது. காரணம், ராஜகுமாரனின் மாவரைத்த கை(?) வலுவாக வில்லன் முகத்தை பதம் பார்த்ததுதான். லோ பட்ஜெட் படம் என்பதால் ஒரு கேமிராவைதான் ஸ்டண்ட் காட்சிகளில் யூஸ் பண்ணிக் கொண்டிருந்தார் இவர்.

நாலைஞ்சு கேமிரா யூஸ் பண்ணனும் என்று ஆசைதான். ஆனால் நாய் விற்ற பணம் குரைக்காது என்றாலும், ஃபைட்டுக்கு இறைக்கிற காசு நிச்சயம் உதைக்குமே! அதனால் இதே காட்சியை வேறு வேறு கோணங்களில் எடுக்க முடிவெடுத்திருந்தார். கேமிராவை கிழக்காப்ல வச்சு ஓடிவந்து ஒரு குத்து. அப்படியே கேமிராவை மேற்காப்ல வச்சு இன்னும் வேகமா ஓடிவந்து ஒரு குத்து. மூணாவது குத்துக்கு கேமிராவை ரெடி பண்ணும்போது வில்லனுக்கு ஒரு பக்கம் வீங்கி ஐஸ் வக்கிற அளவுக்கு போயிருச்சு நிலைமை.

எல்லாத்தையும் கவனிச்சுட்டு இருந்த தேவயானி, (முதலாளியம்மாவாச்சே. ஸ்பாட்ல இருக்க வேணாமா?) "ஏங்க அவரு முகத்துல குத்துறீங்க? நீங்க குடுக்கிற பஞ்ச் ஒரு குறிப்பிட்ட இடத்தில நிக்க வேணாமா" என்றார் கோபமும் கொஞ்சலுமாக. இந்த ஆறுதல் வார்த்தைக்காகவே காத்திருந்த வில்லன், "அத ஏம்மா கேக்கிறீங்க. ஒவ்வொரு தடவ அவரு குத்தும்போதும் நான் சொல்லிகிட்டேதான் இருக்கேம்மா. அதுக்கு அவரு சொல்றாரு..."ன்னு சொல்லி ஒரு காரணத்தை சொல்ல, அதுவரைக்கும் இருந்த டென்ஷனை கூட மறந்திட்டு அடங்க மாட்டாம சிரிச்சுது அந்த யூனிட் மொத்தமும்!

"யோவ், எனக்கு கண்ணாடி போட்டாதான்யா எல்லாம் தெரியும். ஆனால் ஷ¨ட்டிங் நடக்கும்போது எப்படி போடுறது? ஒரு உத்தேசமா குத்துறேன். அதென்னவோ உன் மூஞ்சிய பேக்குது. கொஞ்சம் பொறுத்துக்கோய்யா..." இதுதான் வில்லனிடம் ராஜகுமாரன் சொன்ன பதில்.

முகம், கவுரவம். சில நேரங்களில் அதில் மூக்கு கண்ணாடி இருந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவுரவம் !

12 comments:

RRSLM said...

காபி வித் அணுவில் தான் இவர் தேவயானியின் கணவர் என்பதை தெரிந்து கொண்டேன்........மேலும் அந்த ஷோவில், தேவயானி நிறைய ஆச்சர்யபடவைத்தார்.......... இத்தம்பதிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

Sridhar said...

வழக்கம் போல் கலக்கல்

King Viswa said...

அட்டகாசம்.

இதை, இதைத்தான் நாங்க அந்தணன் சாரிடம் எதிர்பார்க்கிறோம்.

தொடருங்கள் நண்பரே.

King Viswa said...

//ராஜகுமாரனின் மாவரைத்த கை(?) வலுவாக வில்லன் முகத்தை பதம் பார்த்ததுதான்//

அந்தணன் டச்.

butterfly Surya said...

நேஷனல் ஜியாகரபி சேனலை கோடம்பாக்க டைரக்டர்கள் குத்தகைக்கு எடுத்திருந்தால், எறும்பை கூட ஹீரோவாக்கி படம் எடுப்பார்கள். அதில் யானையெல்லாம் அடிவாங்கி அலறும். //////// hahahhaa..

வாங்க ... வாங்க..

உண்மைத்தமிழன் said...

அண்ணே.. மறுபடியும் வந்துட்டீங்களா..?

இனி உங்க ராஜ்யந்தான்..!

Joe said...

நன்றி அந்தணன், மீண்டும் வந்ததற்கு! ;-)

Anonymous said...

Welcome Back Thala.....

Anonymous said...

waiting completed

சேலம் தேவா said...

வஞ்சபுகழ்ச்சி அணின்னு ஒன்னு கேள்விப்பட்டு இருப்பிங்க.அது இதுதான்.அந்தணனின் பழ மொழிகள் ன்னு ஒரு தனி பதிவே போடலாம் அண்ணே .அடிக்கடி எழதுங்க அண்ணே.

அன்பரசு said...

தேவயானியும், ராஜகுமாரனும், இன்னும் ஆச்சர்யப்பட வைக்கிறார்கள். பார்த்திபன் சீதா திருமணத்திற்குக் கூட இவ்வளவு முணுமுணுப்புகள் இல்லை (அவர்கள் பிரிந்து விட்டது வேறு விஷயம்)

Anonymous said...

மூக்கு கண்ணாடி இல்லன்னா என்ன காண்டக்ட் லென்ஸ் போட்டுக்கலாமே! [நாய் கழுத்துல கட்டிவிட்ட பிஸ்கட், ரொம்ப யதார்த்தமான நடைமுறைக்கு ஒத்துவரக் கூடிய உதாரணம், முன்பெல்லாம் நாய் கையில் கிடைத்த முழுத் தேங்காய் என்பார்கள், உண்மையில் முழுத் தேங்காயை நாய் சீண்டவே சீண்டாது!] K. ஜெயதேவா தாஸ்.