Tuesday, May 5, 2009

நெடுமாறன் என்ற எளியவர்....


நாலு நாள் தாடி, கலைந்த தலை, கசங்கிய சட்டை, ஐயா நெடுமாறனின் தோற்றம் எப்போதும் வியப்புதான் எனக்கு. இங்கே தலைக்கும், மீசைக்கும் 'டை' அடிக்காமல் பெரும்பாலான தலைவர்கள் வாசலை தாண்டுவதில்லை. மீசையை ஐ-புரோ பென்சிலால் வரைந்து கொள்கிற அரசியல்வாதிகளை பார்த்தால், ஐயா நெடுமாறனை நினைத்துக் கொள்ள தோன்றும். அவருக்கு கருப்பு தேவைப்படும். ஆனால் அது கொடியாக இருக்க வேண்டும்! இதோ, நெடுமாறனின் அரசியல் வாழ்வில் மற்றுமொரு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்!

உலக தமிழர்கள் மட்டுமல்ல, 'உளவு' தமிழர்களும் கண்காணித்துக் கொண்டிருக்கும் அவரை ஒரு முறை பேட்டிக்காக சந்திக்க போனேன். ஒரு வட்ட செயலாளர் வீட்டில், கிளை செயலாளர் வீட்டில் இருக்கிற ஆர்ப்பாட்டம் கூட அவரது அலுவலகத்தில் இல்லை. உலக தமிழர்களால் கொண்டாடப்படும் அவரது அலுவலகம் அமைந்திருக்கும் தெருவில், குறுக்கும் நெடுக்குமாக பறக்க கூட ஒரு ஈ காக்காய் இல்லை. குறுகிய சந்து. மழைக்காலமாக இருந்தால் கும்மிருட்டாய் உணரலாம். கட்டை பஞ்சாயத்து செய்கிறவர்களுக்குதான் செக்யூரிடி வேண்டும். எனக்கெதற்கு? என்பது மாதிரி, 'அக்கடா'வென திறந்து கிடக்கிறது கேட்!

வாசலில் நின்று 'ஐயா' என்று குரல் கொடுத்த அடுத்த நிமிடம், 'யாரது?' என்ற அதட்டல் இல்லை. ''உள்ளே வாங்க'' என்று ஒலிக்கிற மெல்லிய குரல், அவருடையதேதான்! "கொஞ்சம் உட்காருங்க வந்திடுறேன்" என்றார். கிட்டதட்ட ஆபிஸ் முழுவதுமே வேஸ்ட் பேப்பர் கடை போல இருந்தது. எங்கு திரும்பினாலும் செய்தி தாள்கள். அவை கமர்ஷியல் நாளிதழ்கள் அல்ல. அவரது இயக்கம் சார்பாக நடத்தப்படும் பத்திரிகை வடிவிலான எளிய நாளிதழ்கள். (உள்ளே வார்த்தைகள் வலிமையாக இருக்கலாம். ஆனால் தோற்றத்தில் அந்த நாளிதழ்களில் கூட எளிமை)

"சினிமா இதழில் நான் என்ன பேசுவது?" என்றவரிடம், "உலக தமிழர்கள், குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழர்கள் அதிகம் வாசிக்கும் இணைய இதழ்" என்றேன். தமிழ்சினிமா.காம் என்பதை உள் வாங்கிக் கொண்டவர், பேச ஆரம்பித்தார். ஒரு நடமாடும் கம்ப்யூட்டர் போல புள்ளி விபரங்களை அடுக்கியது அவரது உதடுகள்.

தி.மு.க-அ.தி.மு.க தவிர்த்து ஒரு மாற்று கூட்டணி வேண்டும். அது இலங்கை தமிழர் நலனில் அக்கறை செலுத்தும் நம்பியிருந்தார் நெடுமாறன். வைகோ, ராமதாஸ், திருமாவளவன், ஆகியோருடன், இந்த கூட்டணிக்கு ஆதரவு கொடுக்க முன்வரும் இன்னும் சில உதிரி கட்சிகளையும் சேர்த்துக் கொண்டு இந்த தேர்தலில் நிற்க வேண்டும் என்ற அவரது எண்ணத்தை சொன்னார் அந்த பேட்டியில். "அதற்காகதான் எல்லாரும் சேர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

ஆனால், அரசியல் நாடகத்திற்காக தனது முகத்தில் அரிதாரம் பூசிக்கொண்டவர்கள், நெடுமாறனின் முகத்தில் கரியைதான் பூசினார்கள். சமீபத்தில் நடந்த திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கத்தின் போராட்ட மேடையில் பாரதிராஜா சொன்னார். "ஐயா, உங்களை எல்லாரும் அநாதை ஆக்கிட்டு போயிட்டாங்களே?" என்று. அன்று என்னிடம் "மூன்றாவது அணியை அமைப்போம்" அவர் நம்பிக்கையோடு பேசியதுதான் நினைவுக்கு வந்தது எனக்கு!

கவியரசு கண்ணதாசனோடு நெருங்கி பழகியவர் நீங்கள். அவரைப்பற்றிய நினைவுகளில் ஏதாவதொன்றை பகிர்ந்து கொள்ளுங்களேன்? என்றேன்.

கண்ணதாசன் என்னுடைய நெருங்கிய நண்பர் மட்டுமல்ல. என்னை தன் சொந்த சகோதரன் போல் வைத்திருந்தார். கருத்து வேறுபாடு ஏற்பட்டு இந்திரா காங்கிரசிற்கு அவர் போனபிறகு, நான் காமராஜரோடு இருந்த போதிலும் எங்கள் நட்பு அப்படியே இருந்தது. பல நேரங்களில் அரசியலில் எனக்கு பெருந்துணையாக இருந்தார். இறுதிகாலத்தில் நடந்த சம்பவம் மறக்க முடியாது. அவருக்கு உடம்பு சரியில்லாமல் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக செல்கிற நேரம். நான் ஈரோட்டில் ஒரு கூட்டத்தை முடித்துவிட்டு திரும்ப தாமதாமாகிவிட்டது. தொலைபேசியில் அவரிடம் வழியனுப்ப வர முடியாமல் போனதற்காக வருத்தம் தெரிவித்தேன்.

'பரவாயில்லை. வரும்போது உனக்கு என்ன வாங்கி வரவேண்டும்?' என்று கேட்டார். 'ஒன்றும் வேண்டாம். நீங்கள் நல்லபடியாக போய் வாருங்கள்' என்றேன். 'சொல்லுங்க ஏதாவது?' என்றார் பிடிவாதமாக. 'சொல்லட்டுமா?' என்றேன். 'சொல்லுங்க!' என்றார். 'நீங்க வரும்போது ஏதாவது அமெரிக்க பொண்ஜாதியோடு வந்திடாதீங்க' என்றேன். தொலைபேசியில் அவர் சிரித்த சிரிப்பு இருக்கிறதே... இன்னும் கூட என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

இந்த சம்பவத்தை சொல்லும்போது முகம் மலர வாய்விட்டு சிரித்தார் நெடுமாறன்.

14 comments:

Sridhar said...

நல்லவர்களுக்கு காலமில்லை வேறு என்ன சொல்வது.

எம்.பி.உதயசூரியன் said...

அண்ணன்..மிக நல்ல பேட்டி இது!

Anonymous said...

நெடுமாறன் , தமிழருவி மணியன், நெல்லை கண்ணன், நல்லகண்ணு போன்றோர்கள் அரசியல் அளப்பரைகளிலும், பகட்டிலும், பொய்மையிலும் கலந்து, கரைந்து போகாமல் அரசியல் நேர்மையை இன்றும் கடைபிடிப்பதும், கட்டி காப்பதும் இவர்கள் தான். இவர்களை போன்றோரினால் தான் இன்னமும் அரசியலில் நம்பிக்கை வைத்திருகிருகிறேன் நான்.

Anonymous said...

நாட்டை நிர்மூலமாக்குவது என்று முடிவு செய்தபின் ஆடம்பரமாக இருந்தால் என்ன.....எளிமையாக இருந்தால் என்ன ....எல்லாம் ஒன்றுதான்....மொத்தத்தில் "தமிழன்" என்ற வார்த்தையையே கெட்ட வார்த்தை ஆக்கிய பெருமையில் நெடுமாறனுக்கு முக்கிய பங்குண்டு

Anonymous said...

dont u know about nedumaran .. if u think nedumaran as tritor obiviously u r a tamil tritor ..go and learn history first

Anonymous said...

nedumaran is very simple... he is not like other politicians

Anonymous said...

//நாட்டை நிர்மூலமாக்குவது என்று முடிவு செய்தபின் ஆடம்பரமாக இருந்தால் //
நாம் சுயமரியாதையோடு இருப்பதும் உரிமைகளை கேட்பதும் நாட்டை எப்படி நிர்மூலமாக்கும். நாம் அடங்கி ஒடுங்கி அடிமை வாழ்வு வாழ்ந்தால் நாடு சுபிட்சமாய் இருக்குமா ? அப்படி பட்ட சுபிட்சம் தேவை இல்லை. நெடுமாறன் மாதிரி நாலு பேர் இல்லா விட்டால் கருணாநிதியும் ஜெயலலிதாவும் மக்களை தின்று ஏப்பம் விட்டு விடுவார்கள்.

Anonymous said...

நெடுமாறன் அய்யா உண்மையிலேயே மிக எளிமையானவர். சுயநலமில்லாத அரசியல் தலைவர், இந்திரா காந்தி அம்மையாரை காப்பாறியவர்... சில பொதுக்கூட்டங்களில், உண்ணாவிரதங்களில் பார்த்திருக்கிறேன். சக தோழர்களுடன் சாலையில் கூட அமர்ந்திருப்பார் ... அவர் தமிழர்களின் தன்னகரில்லா தலைவர். அவரின் கீழ் அனைத்து அரசியல் கட்சிகளும் அணிவகுத்து நின்றால், தனி தமிழீழம் மலருவது மிக எளிது...

ஆர்வா said...

அவருக்கு கருப்பு தேவைப்படும்.
அது கொடியாக இருக்க வேண்டும்.
இந்த வரிகளை நான் மிகவும் ரசித்தேன்.

Anonymous said...

Now a days, whoever write about nedumaaran, seeman, maniyan, etc... then all the comments immediately follows that they are great leaders, they only can support tamilians....
You all think that, If anyone need to talk about Tamil or Tamilians then it should be either LTTE or Elam, is it?????
Raja

Senthil said...

very very rare and good personality...

Joe said...

வெகு நாட்களுக்கு பிறகு ஒரு வித்தியாசமான பேட்டி.

butterfly Surya said...

நல்ல மனிதரை பற்றிய சிறந்த பதிவு.

வாழ்த்துகள்.

Kalai said...

நல்லவர்க்கு பொருள் எதற்கு-
நாடி வரும் புகழ் எதற்கு?