பழைய எஸ்.டி வண்டியிலே வந்திறங்குனான் ஆளு. இதுக்கு ஸ்பேர் பாட்செல்லாம் கூட இப்போ எங்கியுமே கெடக்கிறதில்லையே... இத வச்சு எப்படிய்யா வண்டி ஓட்றேன்னு கேட்கவும் பயம். ஒரு ரவுண்டு ஓட்டிப் பாருன்னு கொடுத்திட்டா? கிக்கர்ல ஆரம்பிச்சி மிர்ரர் வரைக்கும் ஒரே ஸ்டிக்கர் மயம். எல்லாத்திலேயும் ஆன்மீக ஜோதி பளபளன்னு தெரிய, புன்னகையோடு இறங்கினான். "எங்கேர்ந்து வர்றீங்க?"ன்னேன் ஒரு பேச்சுக்கு. "ம்... வடலு£ர்லேந்து..."ன்னு சொல்லிட்டு ஒரு பீடியை எடுத்து வாயிலே ஃபிக்ஸ் பண்ணிக் கொண்டே, "ஐ யம் வள்ளலார்"னு கை நீட்டினான். குலுக்கணுமாம்! பரஸ்பரம் கைகுலுக்கிக் கொண்டோம். ஒரு பீடி ஃபேக்டரியை கொளுத்தி விட்டுட்டு பக்கத்திலேயே நின்ன மாதிரி அப்படி ஒரு நாத்தம். வெள்ளையும் இல்லாத பழுப்பிலும் சேராத கலரில் வேட்டி!
வடலு£ர்லேர்ந்து வர்றேன். வள்ளலார்னு வேற சொல்றான். ஆளு ஒரு டைப்பா இருக்கானேன்னு யோசிக்கும் போதே, ஆமாம்ங்கிற மாதிரியே அடுத்த வார்த்தை வந்திச்சு அந்தாளுகிட்டேயிருந்து. "கை கொடுத்தீங்களே, என்ன புரிஞ்சிகிட்டீங்க?"ன்னான். "முதல் அறிமுகம். கை கொடுத்தேன். வேற என்ன புரியணும்?"னேன். "நான் கை குலுக்கும் போது ஒங்க உடம்புல ஒரு ரச வாதம் வந்திருந்திருக்குமே?"ன்னான். அடப்பாவி, இந்த பீடி நாத்தம் புடிச்ச கையிலேர்ந்து ரச வாதமா வரும்? ரசம் வாசம் கூட வராதுன்னு நினைச்சுகிட்டு, "நேரடியாக சொல்லிடுங்க பிரதர். நான் என்ன செய்யணும்"னேன்.
"வள்ளலார் மறுபடியும் பிறந்திட்டாருன்னு ஒரு நியூஸ் போடணும்!"
ஆஹா, அவனா நீயி...? உதடெல்லாம் காஞ்சு உள் நாக்கு ஒட்டிப் போச்சு எனக்கு. அடப்பாவி, ஃபேமிலியோடு சினிமாவுக்கு போயிருந்திருக்கலாம். இங்கே வந்து மாட்ட வச்சிட்டாரேன்னு நினைச்சுக்கிட்டே, ஃபிரண்டுக்கு சாபம் கொடுத்தேன்.
இருந்தாலும், ஒண்ணுமே புரியாத மாதிரி, "எங்கே பிறந்திருக்காரு வள்ளலாரு? வடலு£ர்லேவா? அல்லது பக்கத்துல வேற ஏதாவது கிராமத்திலா? நார்மல் டெலிவரியா? இல்லே சிசேரியனா?"ன்னு அடுக்கடுக்கா நான் கேட்க, கடுகடுப்பா ஆச்சு அவன் முகம். "கிண்டல் பண்ணுற வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம். இந்த உலகம் என்னை புரிஞ்சிக்கலே. நியூஸ் போடுவீங்கன்னு வந்தா நீங்களுமா?"ன்னான். "புரிய வைக்கட்டுமா நான் யாருன்னு?" கொடாப்புல போட்ட வாழைத்தாரு, ஒரே ஒரு மணி நேரத்திலே பழுக்கிற மாதிரி, என்னைய பழுக்க வைக்க அவன் ட்ரை பண்ணுனான்னு சொல்றது தப்பு. பலவந்தம் பண்ணினான்.
லபக்குன்னு ஒரே பாய்ச்சலா தன்னோட பைக்கை தாண்டி அந்த பக்கம் குதிச்சு, பேக்குக்குள்ளே கைய விட்டான். வெளியே எடுத்தபோது ஒரு டேப் ரெக்கார்டர். இதுல வள்ளலார் பேச்சு இருக்குமோ? அவரே இதிலே வந்து நான்தான் இவன்னு சொல்லுவாரோ? ஏகப்பட்ட ஐயமும், லேசுபட்ட பீதியுமாக நான் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, "இப்ப மழை வரும் பாரு"ன்னான். வாங்க போங்கன்னு பேசிட்டு இருந்தவன், இப்படி அறிமுகமான நாலாவது நிமிஷத்திலே வா போ ன்னு பேசுவான்னு நான் எதிர்பார்க்கலே. இருந்தாலும், பேசுறது வள்ளலாரா இருக்குமோன்னு எனக்கே ஒரு டவுட். "வள்ளலார் என்ன வானிலை ஆராய்ச்சி மையத்திலா வேல பார்த்தாரு, இப்படி வானிலை அறிக்கை சொல்றதுக்கு?"ன்னு அடுத்த கேள்விய நான் கேட்க, கண்ணுலே பொறி பறக்குது மனுஷனுக்கு. "டேய், பார்றா இப்போ"ன்னான். (இதுக்கு முன்னாடி சொன்ன வா போவே தேவலாம்)
டேப் ரெக்கார்டரை ஆன் பண்ணுற வரைக்கும் நான் அப்படி நடக்கும்னு நினைக்கவே இல்லை. மழை வந்திச்சா என்ன? மண்ணாங்கட்டி. ஏ.ஆர்.ரஹ்மானோட பாட்டுதான் வந்திச்சு. 'மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம். ஆலாலகண்டா, ஆடலுக்கு தகப்பா வணக்கமுங்க...'ன்னு ரஹ்மான் மியூசிக்லே ஒரு பாடல் வருமே? அதை ஓடவிட்டுட்டு ஓட்டத்துக்கு ஏற்ப ஆட்ட ஆரம்பிச்சான் இடுப்பை. பயங்கரமான ஆட்டம். என்னத்தே கன்னையாவுக்குள்ளே பத்மினிய எறக்கிவிட்ட மாதிரி அப்படி ஒரு ஆட்டம்.
லயோலா கிரவுண்டிலே சாயங்கால நேரத்திலே வாக்கிங் போக வந்த பெரிய மனுஷன்லாம் பேஸ்த் அடிச்சுப்போயி பார்க்கிறாங்க. அங்கே விளையாடிட்டு இருந்த பசங்கள்ளாம் ஹோ....ன்னு கத்திகிட்டே ஓடியார்றாங்க. பின்னே நாலு முழத்திலே வேட்டிய கட்டிகிட்டு ஒருத்தன் தையதக்கான்னு ஆடிட்டு இருந்தா, சும்மாவா போவாய்ங்க?
டீசன்டான காலேஜ்குள்ளே, டேலன்ட்டான ஆளுங்களே வர பயப்படுற காலத்திலே, இப்படி ஒரு தற்குறி, மெர்க்குரி பல்ப்பா மின்னுரானே?ன்னு எனக்கு டவுட். ஏன்னா, ஓடிவந்த இள வயசு பசங்க, "இன்னும் நல்லா ஆடு தலைவா"ன்னு உற்சாகப்படுத்துராய்ங்க. வாக்கிங் போற பெரிசுங்களும், வாய பொளந்துகிட்டு வேடிக்கை பார்க்குதுங்க. ஆட்டம் முடிஞ்சு "நான்தான் வள்ளலார்"னு சொல்லி அந்தாளு கூட்டத்தை நோக்கி தனது பிரசங்கத்தை துவங்க, சர்டிபிகேட்ல வெள்ளாளர்ங்கிற ஜாதியை பற்றி மட்டுமே கேள்விப்பட்டிருந்த பசங்க, ஏதோ சாதிய பத்தி பிரசங்கம் பண்ண வந்த ஆளு போலிருக்குடான்னு கலைய ஆரம்பிச்சாங்க. அவங்களோட சேர்ந்து நானும் கலைய, மழைத்துளி நிற்கவே இல்லை.
அவசரப்படாதீங்க. டேப்ரெக்கார்டர்ல 'மழைத்துளி...' பாட்டு நிற்கலேன்னு சொல்ல வந்தேன். ஆமா, எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குதுன்னேன் பிரேம்ஜி ஸ்டைலில்.
பின்குறிப்பு-இவரை அனுப்பிய ராஜ்கணேஷிடம், "என்ன நண்பா இப்படி பண்ணிட்டீங்களே?"ன்னு கேட்டதுக்கு அவரு சொன்னாரு. "தலைவா, ரொம்ப நாள் இம்சை. நீங்களும் அனுபவிக்கட்டுமேன்னுதான்..."