Saturday, May 22, 2010

அறுவுகெட்ட ப்ளேய்... மானங்கெட்ட ப்ளேய்...-வடிவேலு


உலகமே உம்முன்னு இருந்தாலும், கவலையே படாம கம்முன்னு இருக்கிறவன் எப்படி நிருபனா இருக்க முடியும்? லைட்டரை எடுத்தமா, லைட்டா பத்த வச்சமான்னு இருந்தாதானே லைஃப்ல ஒரு சுவாரஸ்யம் இருக்கும்? நான் பார்த்த பல நிருபருங்க, கேள்வியிலேயே மாஞ்சாவைத் தடவி கரெக்டா கழுத்துக்கு நேரா பறக்க விடுவாங்க. காதறுந்தாலும் செய்தி, கழுத்தறுந்தாலும் செய்தி.

"உங்களுக்கு பரபரப்பா செய்தி வேணும். அதுக்காக என் வாய புடுங்காதீங்க"ன்னு தப்பிச்சு ஓடுற அநேக நடிகர் நடிகைகளை அன்றாடம் பாக்கிற கண்ணுதானே இது! சினிமா வட்டாரம்தான் இப்படின்னா, எனக்கு தெரிஞ்ச அரசியல் நிருபருக்கு நேர்ந்த அதிர்ச்சிகரமான சம்பவம் இது. உதட்டுக்கு மேல 'ப்ரீத்தி'ன்னு பேரு அடிக்காத குறையா பேசிக் கொண்டிருக்கிற நிருபர் அவர். "வாய்யா மிக்சி"ன்னு வாயார அழைப்பாங்க சக நிருபர்கள். அந்தளவுக்கு வாய திறந்தா லொட லொட... பேட்டிக்காக போயிருந்தாரு குமரி அனந்தனிடம். அவர் பரபரப்பா இருந்த நேரம் அது.

காங்கிரஸ்ல ஒலிக்கிற 'கோஷ்டி' கானம் இருக்கே, அது ஒவ்வொரு நாளும் வேஷ்டிய காணோம்ங்கிற மாதிரியே இருக்கும். பல வருடங்களாக நடக்கிற இந்த குருசேத்திர போர், வம்சாவளி சொத்து பத்திரம் மாதிரி! சுட சுட கைமாறுகிறதே தவிர முடிவுக்கு வந்த பாடில்லை. இந்த நேரத்திலதான் அண்ணாக் கயிறுல அரிவாளை தொங்க விட்ட மாதிரி அபாயமா இருந்திச்சு இவரோட கேள்விகள்! இதுக்கு பதில் சொல்றதா வேண்டாமான்னு யோசிச்ச குமரி, "சரி... முதலில் டீ யை குடிச்சுட்டு பேசுவோம்"னு சொல்லிட்டு சேரை விட்டு எழுந்தார். அப்படியே ஆபிஸ் பாய்க்கு ஆர்டர் போடுற மாதிரியே, "டேய் சாருக்கு டீ வாங்கிட்டு வா..."ன்னு குரல் கொடுத்துக் கொண்டே வெளியே போனார். அவ்வளவுதான், வாசலில் நின்ற காரை ஓட்டிக் கொண்டு அப்படியே வீட்டுக்கே போய்விட்டார்.

வாசலுக்கு போன குமரி வந்திடுவார் என்று அரை மணி நேரம் காத்திருந்த நிருபருக்கு அப்புறம்தான் சந்தேகமே வந்தது. ஒருவேளை அண்ணனே பிளாஸ்கை எடுத்துக் கொண்டு கடைக்கு போயிட்டாரோ என்கிற அளவுக்கு மிகைப்பட்ட சந்தேகம் அது. (ரொம்பதான்...) நேரம் ஓடிக்கொண்டிருக்க மெல்ல தலையை நீட்டி வெளியே எட்டிப் பார்த்தால் வாசலில் ஒரே ஒரு பெரிசு உட்கார்ந்து கொண்டு பழைய பேப்பரை புரட்டிக் கொண்டிருந்தார். "ஏங்க... அண்ணன் எங்க?" இது நிருபர். "யாரு... குமரியண்ணனதான கேக்கிறீங்க? அவரு போயி அரை மணி நேரம் ஆச்சே"ன்னாரு பெருசு. அவ்வளவுதான் ஷாக்காகி போச்சு நிருபருக்கு. நம்ம வாழ்க்கையில எத்தனையோ கேள்வி கேட்டு பதில வாங்கியிருக்கோம். ஆனால் இப்போ கிடைச்ச பதில்...? சாமீ கொடூரம்டான்னாரு மனசுக்குள்ளே.

வடிவேலுவை பார்க்க போன இன்னொரு நிருபரின் அனுபவம் இது. வாங்கண்ணேய்...னு வடிவேலுவே வரச்சொல்லி நேரமும் கொடுத்திருந்தார். சொன்ன நேரத்தில டாண்ணு போயி நின்னுட்டாரு நிருபர். 'உட்காருங்க' என்று நியூஸ் பேப்பரை கையில கொடுத்திட்டு அவரு வேலையை பார்த்திட்டு இருந்தாரு ஆபிஸ் பாய். வாசலை பார்க்கறதும், பேப்பரை நோக்கறதுமாக நிருபரோட நிமிடங்கள் கரைஞ்சுகிட்டேயிருந்திச்சு.

வடிவேலு இருந்திருந்தா வாத்து பொரியலில் இருந்து, வடகறி வரைக்கும் மரியாதை 'மணக்கும்!' இவய்ங்க ஒரு டீ குடின்னு கூட சொல்லலியேன்னு ஒரு பக்கம் எரிச்சல். வரச்சொன்ன மனுசன் டாண்ணு வரணுமா வேணாமான்னு மறுபக்கம் புகைச்சல். இப்படியே அரை மணி நேரம் போச்சு. திடீரென்று வாசல் பக்கம் வந்து நின்றது வடிவேலுவின் கார். முன் டயரை பார்த்ததும் நிருபரின் முகத்தில் நிம்மதி நம்ம சாய்ஸ்!

உள்ளேயிருந்து பார்த்தா முன் டயரும், கொஞ்சம் காரும் தெரியும். அவ்வளவுதான். அதை பார்த்ததற்கே இத்தனை சந்தோஷம். ஆனால் கார் வந்து நின்று பல நிமிடங்கள் ஆகியும் வைகை புயல் ஆபிசுக்குள் வருவதற்கான ஒரு சின்ன அசைவு கூட தெரியவில்லை. மறுபடியும் வாட்ச். புரட்டி புரட்டி பார்த்த பேப்பரையே திரும்ப ஒரு முறை பார்ப்பது என்று ஆயாசத்தின் உச்சத்துக்கே போனார் நிருபர். "என்னங்க இப்படி பண்றீங்க?" என்று கேட்டுவிடுகிற அளவுக்கு கோபம் கொப்பளிக்க, செல்போனை எடுத்து நம்பரை போட்டால் எதிர்முனை செம பிஸி. இப்படியே மணிக்கணக்கில் நீண்டு கொண்டிருக்க, விரல் நகத்தையெல்லாம் கடித்து துப்பியிருந்தார் நிருபர்!

முக்குல இருக்கிற கடைக்கு மூணு தெருவ சுத்தி போன மாதிரி, அனலடிக்குது நிருபருக்கு. வந்தா குறைந்த பட்ச கோவத்தையாவது காட்டிடணும் என்று முடிவெடுத்தபோதுதான் தெப்பலாக நனைந்தபடி உள்ளே வந்தார் வடிவேலு. "அறுவுகெட்ட ப்ளேய்... (பயலேவைதான் இப்படி) மானங்கெட்ட ப்ளேய்..." என்பதோடு நில்லாமல் வாயிலிருந்து கெட்ட வார்த்தைகளை அள்ளிக் கொட்டிக் கொண்டே வந்து நிருபர் முன் உட்கார்ந்தார். "அண்ணேய், கோவிச்சுக்காதீங்க. பயபுள்ள ஒரு வேலைய செஞ்சுபுடுச்சு" என்றவர் ஏன் லேட் என்பதை விளக்க ஆரம்பித்தார்.

வழக்கமா ஆபிஸ் வந்ததும் கதவை திறந்து கொண்டு கீழே இறங்கி விடுவாராம் வடிவேலு. டிரைவர் கதவை பூட்டிக் கொண்டு தம்மடிக்க கிளம்பிவிடுவார். முதலாளிக்கு எதிரே குடிக்க முடியாத ஆத்திரத்தையெல்லாம் சேர்த்து தணிப்பது மாதிரி ஒரே நேரத்தில் ஆறேழு சிகரெட்டை இழுத்து தள்ளிவிட்டு அப்படியே ஒரு டீயையும் குடித்துவிட்டுதான் ஆபிசுக்குள்ளேயே வருவாராம். சம்பவ தினத்தன்று யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தாராம் வடிவேலு. இவர் காருக்குள்ளிருப்பதை கவனிக்காத டிரைவர் 'முதலாளி இறங்கிட்டாரு'ன்னு நினைச்சு கதவை பூட்டிட்டு கிளம்பிட்டாரு.

போன டிரைவர் சும்மா போகாமல் ஏசியையும் ஆஃப் பண்ணிவிட்டு போனதால் வேர்த்து விறுவிறுத்துப் போன வடிவேலு, தொப்பலாக நனைந்திருந்தார் காருக்குள்ளேயே. டிரைவருக்கு போன் அடித்தால் ஊருக்கு போன் பண்ணி யாருக்கோ கடலை போட்டுக் கொண்டிருந்தாராம் அந்த மனுஷன். அந்த நேரத்தில்தான் நம்ம நிருபரின் போனும் வடிவேலுவுக்கு போயிருக்கிறது. இப்படி தொலை தொடர்பே கொலாப்ஸ் ஆகிற அளவுக்கு மூவரும் மாறி மாறி தொடர்பு கொண்டதால், அடித்த 'தம்'மை அப்படியே 'கட்' பண்ணிவிட்டு ஓடோடி வந்து கதவை திறந்தாராம் டிரைவர்.

"அதாண்ணே லேட்டு..."ன்னாரு வடிவேலு.

9 comments:

Saravanan Seshan and Prakash Loy said...

உங்கள் எழுத்துக்கள் மிக அருமையாகவும் நகைச்சுவையாகவும் உள்ளன. நாங்கள் விரும்பி படிக்கும் வலைப்பூக்களில் உங்களுடைய வலைப்பூவும் ஒன்று. தங்கள் பணி தொடரட்டும். வலைப்பூவின் பெயருக்கேற்ப அடிக்கடி எழுதுங்கள். நன்றி. - சரவணன் மற்றும் பிரகாஷ் லாய்

Anonymous said...

nice director

Vadivel N. Chandran said...

உங்கள் பணி தொடரட்டும்...!

King Viswa said...

அந்தணன் அவர்களின் அப்டேட் ஆன வலைப்பூ அடிக்கடி சரவெடியாக பின்னுகிறது.

வாழ்த்துக்கள்.

King Viswa said...

டிரைவர் இன்னமும் தொடர்கிறாரா?


தொடர்ந்தால் ஆச்சர்யம்தான்.

Unknown said...

நல்ல ப்ளே...

Anonymous said...

Thalai,
As usual hilarious and perfect!!!!

butterfly Surya said...

சூப்பர்.. சூப்பர்..

Anonymous said...

அது சரி அதுக்கு முன்னாடி ஆன லேட்டு?