Saturday, March 14, 2009

இருப்பதை எடுத்து கொடுப்பார் கிடைத்ததை எடுத்து அடிப்பார்!

கடந்த வாரம் ஒரு பிரஸ்மீட் வைத்திருந்தார் டி.ராஜேந்தர். பல வருடங்களுக்கு பிறகு அவரை அங்கு சந்தித்ததால், "அண்ணே... எப்படியிருக்கீங்க?" என்றேன். பரஸ்பர பதிலை சொல்லிவிட்டு "என்ன சார், வீட்டு பக்கமே வரமாட்டேங்கிறீங்க?" என்றார் உரிமையோடு. அவரே மறந்து போனாலும் அந்த வீட்டை என்னால் மறக்கவே முடியாது. கொஞ்சம் கரடு முரடான மனிதராகவே அறியப்பட்ட இவரை நான் பலவித குணங்களோடு பார்த்திருக்கிறேன் அந்த வீட்டில். சொல்ல ஆரம்பித்தால் தனி புத்தகமே போடலாம். பலருக்கு சீரியஸ் மனிதராகவும் சிலருக்கு வேடிக்கை மனிதராகவும் இருக்கும் ராஜேந்தரை பற்றி வெளியுலகத்திற்கு தெரியாத சில சம்பவங்களோடு சொன்னால், உங்களுக்கே ஆச்சர்யம் வரும். கூடவே ஒரு குழப்பமும் வரும். இவர் எப்படிப்பட்டவர்...?

'டி.ராஜேந்தரின் உஷா' என்ற வார இதழை இவர் துவங்கிய போது அங்கே வேலைக்கு சேர்ந்தேன். சுமார் ஐந்து வருடங்கள். தினமும் பார்த்திருக்கிறேன். ஒரே சிவதாண்டவம்தான். கோபம் வந்தால் கையில் இருப்பதை எடுத்து அடித்துவிடுவார். சந்தோஷம் வந்தால் பையில் இருப்பதை எடுத்து கொடுத்துவிடுவார். நல்லவேளையாக நான் இரண்டுக்கும் அப்பாற்பட்டவனாகவே காலம் தள்ளியிருக்கிறேன்.

இவரது அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்களில் பலர் இன்று பெரிய நிலையில் இருக்கிறார்கள். ஆனால் சலீம் என்றொரு ஆபிஸ் பாய் இருந்தார் அவரது அலுவலகத்தில். இப்போது எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. தீவிர ரஜினி ரசிகர். நடக்கும்போது கூட ரஜினி மாதிரியே நடப்பார். பேசும்போதும் அப்படியே. பாட்ஷா வந்த புதிதில் தன்னை மாணிக் பாட்ஷா என்றே சொல்லிக் கொள்வார்.

ரஜினியை புகழ்கிற விஷயத்தில் இவருக்கும் ராஜேந்தருக்கும் அடிக்கடி பிரச்சனை வரும். வேலைக்காரர்தானே, என்று இவரும் விட மாட்டார். முதலாளியாச்சே என்று அவரும் அடங்கிப் போக மாட்டார். வெறும் வார்த்தை போராக இருந்த இவர்களின் பிரச்சனை ஒரு நாள் வெடித்தது. அந்த சம்பவம் இப்போதும் கண்களில் பச்சை பசேல் என்று பசுமையாக இருக்கிறது ராஜேந்தரின் லுங்கியை போலவே!

காலை பத்து மணி இருக்கும். போர்டிகோவில் நின்று பேசிக் கொண்டிருந்தோம். பச்சை லுங்கி உடுத்தியிருந்தார் ராஜேந்தர். இவர் போட்டிருந்த மேல் சட்டையில் 12 கலர்களும் அடக்கம். இப்படியெல்லாம் இருந்தால்தான் அவருக்கு பிடிக்கும். ஆவேசமாக எதை பற்றியோ டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தவர், கேட்டை திறந்து கொண்டு ஒரு உருவம் உள்ளே நுழைந்ததை கண்டதும் பேய் பிடித்தவர் போலானார். கையில் ஏதாவது கிடைத்தால் எடுத்து அடிக்கலாம் என்ற எண்ணத்தோடு குனிந்தவர், "ஏய் நாயே? எவ்வளவு தைரியம் உனக்கு. இந்த கோலத்தோடு என் ஆபிசுக்குள்ளே வர்றீயா?" என்று ஆவேசப்பட்டுக் கொண்டே கட்டையையோ, கல்லையோ தேட ஆரம்பித்தார். வேறொன்றுமில்லை, கேட்டை திறந்து கொண்டு உள்ளே வந்தது சலீம்.

ரஜினி போல இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு நெற்றி ஓரத்தையும் ஷேவ் பண்ணியிருந்தார். இத்தனை நாட்களும் முன்நெற்றியில் சுருண்டு விழுந்த கேசங்கள் ஷேவ் செய்யப்பட்டிருந்தன. பார்த்தவுடன் கண்ணை உறுத்துகிற ரஜினியின் ஹேர் ஸ்டைல் அப்படியே பொருந்தியிருந்தது சலீமுக்கு. ஒரே கெட்ட வார்த்தைகளால் சலீமை அர்ச்சனை செய்தபடி துரத்த ஆரம்பித்தார் டி.ஆர்.

அவரது கையில் மாட்டினால், அதிகபட்ச சேதமாகிவிடுவோம் என்பதை உணர்ந்த சலீம், அந்த பெரிய வீட்டை சுற்றி சுற்றி ஓடினார். விடாமல் விரட்டினார் டிஆர். ஒரு சந்தர்ப்பத்தில் மெயின் கேட்டை திறந்து கொண்டு ரோட்டில் இறங்கி ஓடினார் சலீம். என்ன செய்கிறோம் என்பதையே உணராமல், தெருவில் இறங்கி தானும் ஓட ஆரம்பித்தார் டிஆர். நானும், சக நண்பர்களும் அதிர்ச்சியோடு இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். சிங்கத்திடம் சிக்கினால் சிக்ஸ்டி ஃபைவ் ஆகிவிடுவோம் என்று அஞ்சிய சலீம், தனது பலம் முழுவதையும் திரட்டிக் கொண்டு ஓடி, கடைசியில் எஸ்கேப் ஆனார்.

தெருமுனை வரை ஓடிய டிஆர், அப்போதுதான் தன் நிலை உணர்ந்து அதிர்ச்சியடைந்திருப்பார் போலும். தலையை தொங்கப் போட்டுக் கொண்டு விறுவிறுவென்று வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார். அந்த தெரு முனையில் ஒரு ஆட்டோ ஸ்டேண்ட் இருக்கிறது. அவர்களும் இந்த முயல் சிங்க வேட்டையை திகிலோடு ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

வீட்டிற்குள் நுழைந்த டிஆர் வெட்கத்தோடு, "ஸாரி சார், கொஞ்சம் எமோஷனலாயிட்டேன்" என்று கூறியபடியே வீட்டுக்குள் போய்விட்டார். அன்று மாலை வரை கீழே இறங்கவே இல்லை. சரி, எப்போது திரும்பி வந்தார் சலீம்? சரியாக பத்து நாட்கள் கழித்து. முன்நெற்றியில் லேசாக முடி முளைக்க ஆரம்பித்திருந்த நேரத்தில்! மீண்டும் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என்று நாங்கள் அஞ்ச, அப்படி எதுவுமே நடக்காதது போல நடந்து கொண்டார்கள் இருவரும்!




11 comments:

ARASIAL said...

அந்தணன்... பிடிங்க நம்ம வாழ்த்துக்களை... வலையுலகுக்கு பெரிய மாலையோடு வரவேற்கிறேன்... (வேணும்னா ஒரு நிஜ மாலையை நேர்ல போட்டுடறேன்!)

நம்ம பாலுவும் அன்பு வேலாயுதமும் சொல்லித்தான் எனக்கு இந்த டிஆர் கதைகள் பரிச்சயம். கேட்கத் திகட்டாத கதைகள்தான். இன்னும் நிறை எபிசோட் இருக்கும்னு தெரியுது. அதனால தினமும் ஒரு டிஆர் கதை சொல்லுங்க!

-ஷங்கர்
தட்ஸ்தமிழ்

M Bharat Kumar said...

Annae Arambhamae Asathal..........
Adhu Singa Muyal Vettai ALla...Karadi....Muyal annae...........

BHARATH

Simple_Sundar said...
This comment has been removed by the author.
rajesh.v said...

migavum arumai.

rajesh.v

Simple_Sundar said...

படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு வேகமான ஆக்க்ஷன் கம் காமெடி திரைப்படத்தை பார்த்ததை போல ஒரு பீலிங். அசத்தலான narration.

- Sundar

Simple_Sundar said...

படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு வேகமான ஆக்க்ஷன் கம் காமெடி திரைப்படத்தை பார்த்ததை போல ஒரு பீலிங். அசத்தலான narration.

- சுந்தர்

Anonymous said...

கதைகள படிக்கும் போதே சிரிப்பு வருதே ... பார்த்தவங்களுக்கு ஒரே ஜாலியா இருந்து இருக்கும் :)

நா.இரமேஷ் குமார் said...

அண்ணே...டி.ஆர். பேட்டி கொடுக்கும் போது ஆடுகிற டான்ஸ் பிரபலம் தானே? அஞ்சு வருஷம் தொடர்ச்சியா எப்படி காலம் தள்னீங்க?

கிரி said...

ஹா ஹா ஹா ஹா செம காமெடி

கிரி said...

கற்பனை செய்து பார்த்தேன் ஹா ஹா ஹா

Anonymous said...

it was an excellant writing. Mr.Anthanan. Really I enjoyed very much. today only know your blog. Missed a lot. kindly accept my koodos.