Tuesday, March 31, 2009

அண்ணேய்ய்ய்ய். பேனாவை எடுத்திட்டாருண்ண்ண்ண்ண்ணேய்

ஒரு பேட்டிக்காக போயிருந்த போதுதான் சிவசங்கர் பாபா என்னையும் உதயசூரியனையும் கவர்ந்திருந்தார். (ம்க்கூம், கடைசியா உ.சூ. சிரிச்சிட்டே ஓடிட்டாருன்னு கதை முடியும், அப்படிதானே?)

அப்போது நீலாங்கரை பக்கத்திலிருந்தது அவரது ஆஸ்ரமம். இடுப்பில் இரண்டு கைகளையும் ஸ்டைலாக வைத்துக் கொண்டு "இந்த மாலை நேர சசாங்கத்திலே..." என்றபடி அவர் மைக்கை பிடித்தால் தமிழ் வெள்ளம் கரை புரண்டு ஓடும். எதிரே அமர்ந்திருக்கிற பக்த கோடிகள் இந்த தமிழ் வெள்ளத்தோடு பாபா தருகிற டிபன் வெள்ளத்தையும் ருசிக்கலாம். எல்லாமே இலவசம் என்பது இன்னும் ருசியல்லவா?

உட்கார்ந்த இடத்திற்கே வந்து கைகழுவ தண்ணீரும், டிபனை சாப்பிட்டு முடித்ததும் பிளேட்டை வாங்கிக் கொண்டு போகிற பவ்யமும், எனக்கு தெரிந்து எந்த ஆசிரமத்திலும் இல்லை. (இதே வேலையா திரிவாய்ங்க போலருக்கு என்று நீங்கள் நினைத்தாலும் தப்பில்லை) ஏதோ, மாலை நேரத்திலே போனாமா? நாலு தோசையை உள்ளே தள்ளினோமா என்ற சந்தோஷத்தை ஒரே நாளில் கெடுத்தார் உதய சூரியன். (ஆரம்பிச்சிட்டாய்ங்கய்யா...)

தினம் தினம் கூடும் சுமார் 1000 பேர் கூட்டத்தில் எங்களை பார்த்தால் மட்டும் இன்னும் குளிர்வார் பாபா. காரணம், வருகிறவர்கள் எல்லாம் அவரை கடவுளாக பார்க்க, நாங்கள் மட்டும் நண்பராக பார்த்தோம். "இன்னும் கொஞ்சம் வேட்டிய தழைய கட்டினா நல்லாயிருக்குமே? இன்னிக்கு நீங்க ஆடும்போது புது ஸ்டெப் வச்சீங்க" போன்ற காமெண்டுகளை எந்த பக்தன் உதிக்கப் போகிறான் எங்களை மாதிரி? அதனாலேயே நாங்கள் ஆசிரமம் வந்தால், மைக்கில் பேசிக் கொண்டிருந்தாலும் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவரது பர்சனல் அறைக்குள் இருப்பார் பாபா. எதிரே நாங்கள் இருப்போம், முகமெல்லாம் பல்லாக! இவ்வளவு சந்தோஷமாக இருந்தாலும், அவரிடம் பிடிக்காத விஷயம்.... அடிக்கடி உள்ளங்கையை நீட்டி, "என் ரேகையை கவனிங்க. இதிலே சிவனோட உடுக்கை இருக்கு, சூலாயுதம் இருக்கு. அவரு தலையிலே சூடுற பிறை இருக்கு. இதோ, கங்கை கூட வழியுது பாருங்க" என்பார். முதல் முறை ஏற்படுகிற பிரமிப்பு, வாரத்திற்கு மூன்று நான்கு முறை கேட்கும் போது சப்பென்று போய், அவர் பேனாவை உருவினாலே 'பேஸ்த்' ஆக ஆரம்பித்தோம்.

இந்த காலகட்டத்தில்தான் ஆடிட்டர் ஸ்ரீதரும், ஹெல்த் எடிட்டர் டாக்டர் ராஜ்மோகனும் "எங்களை பாபாவிடம் கூட்டிட்டு போங்க. ஒங்களுக்கு ரொம்ப பழக்கமாமே?" என்றார்கள். விதியாகப்பட்டது வலியதாச்சே? அவர்களிடம், "அதுக்கென்னா போயிட்டா போச்சு" என்று நாளும் குறித்துவிட்டோம். ஆனால் எங்களுக்குள் இருந்த பயத்தை எப்படி சொல்வது? நான் சொன்னேன், "இவங்களை கூட்டிட்டு போறது பிரச்சனையில்லே. பேசிட்டு இருக்கும்போது அவரு பேனாவை எடுத்து ரேகை போட ஆரம்பிச்சா நீங்க சிரிச்சுறக் கூடாது. அப்புறம் எல்லாருக்கும் அசிங்கமாயிடும்" என்றேன். "ஆமாண்ணே..." என்றார் உ.சூ வும் அவசரம் அவசரமாக!

நினைத்தபடியே எல்லாம் நடந்தது. யாருக்கும் கிடைக்காத பெறும் பேற்றை நாங்கள் பெற்று தந்ததாகவே நினைத்தார்கள் விருந்தாளிகள் இருவரும். குளிர குளிர அடித்த ஏசி அறையில் பாபா தன்னுடைய தமிழை பந்தி வைத்துக் கொண்டிருந்தார் அவர்களுக்கு. கூப்பிய கையை இறக்கவே இல்லை இருவரும். நானும், உதயசூரியனும் பாபாவுக்கு எதிரே உள்ள நாற்காலியில் அமர்ந்திருந்தோம். நாங்கள் செய்த ஒரே தவறு அருகருகே அமர்ந்திருந்ததுதான். பக்தி பரவசமாக போய் கொண்டிருந்த அந்த அரை மணி நேரத்தில்தான் நாங்கள் நினைத்துக் கொண்டிருந்த அபாய நேரமும் வந்தது.

பேசிக் கொண்டேயிருந்த பாபா திடீரென்று எதிரே இருந்த குவளையிலிருந்து ஒரு பேனாவை எடுத்தார். என் காதருகில் வந்த உதயசூரியன், சும்மாயிருந்து தொலைய வேண்டியதுதானே? "அண்ணேய்ய்ய்ய். பேனாவை எடுத்திட்டாருண்ண்ண்ண்ண்ணேய்..." என்றார் கிடுகிடு குரலில். அவ்வளவுதான். நான் பல்லை இறுக கடித்துக் கொண்டு வேறு திசையில் சீரியசாக பார்க்க ஆரம்பித்தேன். ஆனால், உதயசூரியனிடமிருந்து ஒரு விசும்பல் சவுண்ட் மட்டும் வந்து கொண்டிருந்தது. நைசாக ஓரக்கண்ணால் அவரை கவனித்தால், மனிதர் வாயை இறுக பொத்திக் கொண்டு பொங்கி வந்த வெடி, மற்றும் இடி சிரிப்பை வயிற்றுக்குள் அடக்கிக் கொண்டு குலுங்கிக் கொண்டிருந்தார். அதுவும் கொஞ்ச நேரம்தான். படீரென்று வெடித்தது சிரிப்பு. அப்படியே "கெக்க்க்கேகக்யேய்ய்..." என்று சிரித்துக் கொண்டே எழுந்து வெளியே ஓடினார்.

விருந்தாளிகளிடம், இதுதான் சிவனின் உடுக்கை என்றெல்லாம் விளக்கம் அளித்துக் கொண்டிருந்த பாபா, எதிரே நடந்த இத்தனை கலவரத்தையும் கவனிக்காதவர் போல தொடர்ந்து கொண்டிருந்தார்.

சரி, அப்புறம் என்னாச்சு? அதற்கு பிறகு நாங்கள் பலமுறை அங்கு போயிருக்கிறோம். ஒருமுறை கூட எங்களுக்கு ரேகை காட்டியதில்லை பாபா! அவருக்கா தெரியாது?

7 comments:

முரளிகண்ணன் said...

செமை காமெடி

அமர பாரதி said...

பதிவுகள் அனைத்தும் அருமை நண்பரே. இந்த மாதிரி சிரித்து ஏதும் பிரச்சினையில் சிக்கலில் மாட்டியிருக்கிறீர்களா?

selvibabu said...

சினிமாவிற்கு நடனம் அமைக்கும் சிவசங்கர் பாபாவும் இந்த பாபாவும் ஒரே மனிதரா?சிரிக்காம சொல்லுங்க சார் (மன்மதராசா நடன இயக்குனர்?

எம்.பி.உதயசூரியன் said...

anna,K K K K K K K K K K K K.! annikku siicha adhey sirippai ippo meendum sirikaren.aanaalum andha nerathila..vedichu sidharugira sirippai mukki munagi adakki..kanneer vazhiya neenga sikki thavichadhai ninaicha..sema comedy. -m.p.udayasooriyan

யூர்கன் க்ருகியர் said...

சிவ சிரிப்பு பாபா !

Sridhar said...

commentla kooda sirikarar paarunga innum maraaveyillai

கிரி said...

//மாலை நேரத்திலே போனாமா? நாலு தோசையை உள்ளே தள்ளினோமா என்ற சந்தோஷத்தை ஒரே நாளில் கெடுத்தார் உதய சூரியன்//

ஹா ஹா ஹா

//மனிதர் வாயை இறுக பொத்திக் கொண்டு பொங்கி வந்த வெடி, மற்றும் இடி சிரிப்பை வயிற்றுக்குள் அடக்கிக் கொண்டு குலுங்கிக் கொண்டிருந்தார். அதுவும் கொஞ்ச நேரம்தான். படீரென்று வெடித்தது சிரிப்பு//

ஹா ஹா ஹா அவருக்கு மட்டுமல்ல எனக்கும் தான் :-)))