நெஞ்செலும்பு தெரியுற நோஞ்சான் தோளு, நிமிர்ந்து நிக்கிற பாட்ஷா தோளு, ஜிம்முக்கு போன 'கும் கும்' தோளுன்னு விதவிதமான 'தோள'ர்கள் அந்த அபார்ட்மென்ட்டுக்கு கீழே அடிக்கடி ரவுண்டு கட்ட ஆரம்பிச்சது அப்போதுதான். ஏன்னா ஷமீதா அந்த அபார்ட்மென்ட்டுக்கு குடி வந்த புதுசு அப்போ! வீடு மட்டுமில்லே, படமும் வந்த வந்த புதுசு.
'பாண்டவர் பூமியில் தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கிறேன்'னு பாடினாலும் பாடினாரு. தோள் கொடுக்க வந்த 'தோள'ர்கள்தான் இவங்கள்ளாம். சுண்டுனா ரத்தம் வர்ற செவப்பு (ஏண்டா சுண்டுறீங்க?) பேசுனா பச்சைக்கிளி பாஷை (தமிழ் அவ்ளோ தகராறா?) நடந்தா தென்றல் (வீட்டுக்கு ஏசி இல்லாம இருந்திருவாங்களாக்கும்) இத்தனை பெருமைகள் கொண்ட சந்தன ஷமீதாவை பக்கத்திலே இருந்து பாக்கணும்னு ஆச வந்திருச்சு இந்த சாதாரண பேனாக்காரனுக்கு.
இப்போ ஏண்டா உனக்கு அந்த நினைப்புன்னு கேட்கிற வயிற்றெரிச்சல் பார்ட்டிகளுக்கு... நேற்றுதான் படிச்சேன். ஷமீதாவுக்கு கல்யாணமாம்! லவ்வுல விழுந்து 'லங்ஸ்' வரைக்கும் காதல ஏத்தியிருக்கும் போல. பிடிவாதமா இருந்து பிறந்த வீட்டை கரெக்ட் பண்ணுச்சுன்னு கேள்விப்பட்டேன். வாழ்த்துக்கள்மா...! சரி, கதைக்கு வருவோம்.
சேரனிடம், "சார் உங்க படத்தை பார்த்த பிறகு ஷமீதாவோட பேட்டி போடணும்னு நினைக்கிறேன். நம்பர் கொடுங்களேன்"னு கேட்டதும், "ஒரு நிமிசம் இருங்க"ன்னு அங்கனையே டைரிய புரட்டி நம்பரை கொடுத்தாரு. (மைண்ட்லே வச்சுக்க வேணாமா இதையெல்லாம்?) நல்ல மனுசன் சேரன். "பேசினா, நான் சொன்னேன்னு சொல்லுங்க"ன்னு ஒரு பிட்டையும் போட்டாரு. அது ஸ்மால் சைஸ் பிட்டுன்னு நினைச்சேன். பிறகுதான் தெரிஞ்சுது அது பிட்டு இல்லே, என் தன்மானத்துக்கு விழப்போற வெட்டுன்னு!
சரக்கு ரயிலும் சரக்கு ரயிலும் கிராஸ் பண்ணினா தடால் புடால்னு ஒரு சத்தம் கேட்குமே, அந்த தவிப்போட மனசை ஒரு கையிலே புடிச்சிகிட்டு இன்னொரு கையால நம்பரை போட்டேன். ஏன்னா 'அவ்வ்வ்வ்வ்ளோவ்' து£ரம் ரசிச்சிட்டேன் அந்த கேரக்டரை! எதிர்முனையிலே புல்லாங்குழலோ, வயலினோ எடுத்து 'ஹல்ல்ல்லோ'ன்னு சொல்லப்போற கனவோட காத்திருந்தா, விழுந்திச்சு ஒரு தண்டோரா சத்தம். "யாருங்க...?" நான், "இன்னாரு.... இன்ன பத்திரிகையிலேர்ந்து பேசுறேன். சேரன் சாருதான் நம்பர் கொடுத்தாரு. ஷமீதாட்ட சொல்ல சொன்னாரு. மேடம் இருக்காங்களா?"ன்னு ஒரே மூச்சில ஒப்பிச்சுட்டு புல்லாங்குழலுக்காக காத்திருக்க, மறுபடியும் தவிலுதான் லைனுக்கு வந்தது.
"அலோ, ஒங்களுக்கு பேட்டி வேணும்னா கேளுங்க. அத விட்டுட்டு எவன் எவன் பேரையோ சொன்னா நாங்க எதுக்கு பேட்டி தரணும்? போனை வைங்க"ன்னுச்சு தவிலு. அடப்பாவிகளா, உங்களோட உட்கட்சி பூசலுக்கு என் அண்ட்ராயரை கிழிச்சிட்டீங்களேப்பான்னு நினைச்சுகிட்டேன். அதே நேரத்திலே வாய்ப்பு கொடுத்த ஒரு டைரக்டரை தப்பு தப்பா பேசுற இந்த தவிலை கிழிச்சுடுறதுன்னு முடிவு பண்ணிட்டு, "அல்ல்ல்ல்ல்லோ... கொஞ்சம் நிறுத்திறீங்களா"ன்னு வால்யூமை கூட்டவும், எதிர் முனை "சொல்லுங்க" என்று சுருதி குறைத்தது. "நீங்க யாரு?ன்னேன் இப்போது. "ஷமீதாவோட அக்கா"ன்னுச்சு தவிலு. "ஏங்க? உங்க தங்கச்சியை வச்சு ஒரு மனுஷன் நல்ல படம் கொடுத்திருக்காரு. உங்களுக்கும் அவருக்கும் ஆயிரம் பிரச்சனை இருக்கும். அதை விட்டுட்டு அவரை போயி இப்படி திட்றீங்களே, அதுவும் ஒரு பத்திரிகைகாரனிடம். உருப்புடுவீங்களா நீங்க? என்றேன் படார் திடீர்னு. அவ்வளவுதான். எதிர்முனையிலும் சூடு பற்றிக் கொண்டது. அவர் பேச நான் பேச, இறுதியாக நடந்த கூட்டு பஞ்சாயத்தில், "உங்களுக்கு பேட்டி தர மாட்டா என் தங்கச்சி" என்றார். "ரொம்ப நல்லது. வர்ற வாரம் புக்கை பாருங்க"ன்னு போனை வச்சிட்டேன்.
நடந்த விஷயத்தை சேரனிடம் கூட சொல்லாமல் நடந்தது என்னன்னு அப்படியே எழுதி வைக்க, புக்கை பார்த்திட்டு பதறி அடிச்சுட்டு போன் பண்ணினாரு சேரன். அந்தணன், எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே? அப்படியே போனை வைங்க. அவளே கூப்பிடுவா உங்களைன்னாரு. அடுத்த அரை மணி நேரத்தில் நான் எதிர்பார்த்த அந்த புல்லாங்குழல் வந்தது லைனில். சார், கொஞ்சம் தப்பு நடந்திருச்சு. வீட்டுக்கு வாங்களேன். நான்தான் ஷமீதான்னாரு. கூவின பூங்குயில், குருகுகள் இயம்பின... வண்டிய கிளப்பி ஷமீதா வீட்டு வாசலுக்கு போனா, நம்ம 'தோள'ர்கள்?!
"ஷமீதா வீடு எதுப்பா?" 'பிரஸ்' என்ற வண்டிய பார்த்ததும், "பேட்டியா? நானும் வர்றேன் சார்"னான் விடலைத் தோளன். தம்பி, இங்கனதான இருக்கீங்க. வரும்போதும், போம்போதும் பார்த்துக்க வேண்டியதுதானேன்னு சொல்லிட்டு லிப்ட்டில் ஏறினேன். (நொங்கை பங்கு பிரிக்கலாம். ரோசாப்பூவை முடியுமா? கவித கவித...)
"சார், நான் கொஞ்சம் கூச்ச சுபாவம். அதான் பேட்டி வேணாம்னு அக்கா சொல்லியிருந்தாங்க. என்னவோ தப்பு நடந்திருச்சு. சாரி, கேளுங்க" என்றார். நான் அவரிடம் பேசிக் கொண்டே தவுலு இருக்கான்னு தேடினேன். புரிந்து கொண்டவர் போல, "நீங்க வர்றதால அக்கா வெளியே போயிட்டாங்க. திரும்பி வர இரண்டு மணி நேரம் ஆகும். பேசுங்க"ன்னாரு ஷமீதா. குயிலு குப்பத்தில் மயிலு வளர்த்த கதையா, அப்படி ஒரு பொறுமை. நிதானம். "உங்களுக்கு எப்படி இப்படி ஒரு அக்கா?"ன்னு கேட்டே விட்டேன். "ஸாரி சார். மறுபடியும் எதுக்கு, அந்த பேச்சு?" என்றவர் பெரிய பேட்டியாக கொடுக்க, சந்தோஷமாக வெளியே வந்தேன்.
"அட பாவி தோளருங்களா?" வண்டியிலே இருந்த காத்த பிடுங்கிவிட்டுருந்தானுங்க. அதுவரைக்கும் என் மனசுக்குள்ளேயே வீசுன ஷமீதா வாசனை, வண்டிய தள்ளுனதிலே வேர்வையா வெளியேற, பேத்தாஸ் மூடுக்கு போயிருந்தேன். என்ன செய்வது? சில நேரங்களில் வண்டிக்கு காத்த பிடுங்கி விட்ட மாதிரி எவனாவது நம்ம லைப்லே கிராஸ் பண்ணிடுறானுங்க. ஹ§ம்....!