Saturday, April 4, 2009

ஞானியின் புகழுக்கு ஆணி...?

முக்காலும் உணர்ந்த ஞானியாக இருந்தாலும், அவரை முக்காபுலாவாக்கி விடுகிறார்கள் சிலர். செல்வராஜ் செய்த காரியம் இருக்கிறதே, அது பாபாவின் 'ஞான திருஷ்டி' முன்கூட்டியே அறியாதது! செல்வராஜ் என்ன செய்தார் என்பதற்கு முன் நாம் அறிந்து கொள்ள வேண்டியது, சிவசங்கர பாபாவின் நடனம்! பக்தர்கள் மத்தியில் அது பரவச நடனம். பகுத்தறிவாளர்கள் மத்தியில் அது செரிமானத்திற்கான கூத்து! இரண்டையும் சமமாக ஏற்றுக் கொள்ளும் உயர்ந்த நிலையில் இருந்தார் பாபா.

"என்னை திட்றியா, திட்டிக்கோ. கட்டிப்பிடிச்சு கொஞ்சுறீயா? இந்தா கன்னம்" என்கிற டைப் அவர். ஆடுறது மத்தவங்களுக்கு பிடிக்கலைன்னா நிறுத்திக்கலாமே? பத்திரிகையாளர்களாக நானும் உதயசூரியனும் கேட்ட கேள்விக்கு, "என் பக்தர்களுக்கு பிடிச்சிருக்கே?" என்பது அவரது பதில்.

மாலை நேர சசாங்கத்தில் அவர் மைக்கை பிடித்து உரையாற்றுவார். அடுத்த நிகழ்ச்சியாக வருவது, பாபாவின் ஆனந்த நடனம். பின்னணியில் இசையும், பாட்டும் முழங்க வேர்க்க விறுவிறுக்க ஆடுவார் பாபா. பக்தர்கள் கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள். திடீரென்று சேலையை கட்டிக் கொண்டு மதுரை மீனாட்சி போல் போஸ் கொடுப்பார். இந்த நேரத்தில் முகத்தில் தேஜஸ் கொண்டு வர வேண்டும் என்று அவர் மெனக்கெடுவது நன்றாகவே தெரியும். மீனாட்சி கையில் பச்சைக்கிளி இருக்க வேண்டுமல்லவா? தெர்மோக்கோலில் செய்யப்பட்ட பச்சைக்கிளியை அவர் கையில் கொடுப்பார்கள். அவரும் பறந்து விடாதபடி பாவனை செய்வார். சிறிது நேர அமைதிக்கு பின் மீண்டும் ஆட்டம். எங்களுக்கு புரியாத ஒரே சங்கதி இதுதான். அங்கு வரும் பக்தர்கள் அத்தனை பேரும் மறுநாள் அரசு வேலையோ, பேங்க் வேலையோ, அல்லது அதற்கு இணையான வேலையோ பார்ப்பவர்கள். விடிய விடிய ஆடிவிட்டு எப்படிதான் மறுநாள் வேலைக்கு போகிறார்களோ?

சரி ஆட்டத்திற்கு வருவோம். பக்தர்களிடம் மைக்கை கொடுத்து என்ன வேண்டுமானாலும் கேட்க சொல்வார். எல்லாவற்றுக்கும் அவரிடம் பதில் உண்டு. "உங்கள டான்ஸ் சாமியார் என்கிறார்களே?" பக்தர் ஒருவர்தான் இப்படி ஒரு கேள்வி கேட்டார். "பரவச நிலையில் அந்த சிவனே ஆடுறான். நானா ஆடுறேன்? எனக்குள்ளே இருக்கிற அவனல்லவா ஆடுறான்" என்பார் பாபா. "நடனத்தை டான்ஸ் என்றுதானே ஆங்கிலத்தில் சொல்றாங்க. இருக்கட்டுமே, நல்ல பெயர்தானே" என்பார் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல்.

இவர் தினந்தோறும் ஆடும் ஆட்டங்களை வீடியோ எடுப்பார்கள். முன்பெல்லாம் இந்த ஆட்டங்கள் பிரபல டிவி ஒன்றில் ஒளிபரப்பாகி வந்தது. அந்த வீடியோ க்ளிப்பிங்சுகளைதான் கேட்டு வாங்கி போனார் செல்வராஜ். மாதக்கணக்காக அங்கே வரும் நபர் இவர். "ஏன் கேட்கிறீங்க?" என்று கேட்டவர்களிடம் "பாபா பற்றி ஒரு புரோகிராம் ....ஜ் டி.வி யில் பண்ணப்போறேன். அதுக்குதான்" என்றார் செல்வராஜ்.

அவர் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு போய் ஒரு வாரம் இருக்கும். "நாளைக்கு ஞாயிற்று கிழமை காலை பத்து மணிக்கெல்லாம் பாருங்க. உங்க புரோகிராம் வருது"ன்னு ஆசிரமத்திற்கு தகவல் கொடுத்துவிட்டார். நம்ம புரோகிராமாச்சே? அதுவும் தனது பக்தர் ஒருவர் ஸ்லாட் வாங்கி செய்யுற நிகழ்ச்சி. எல்லா பக்தர்களுக்கும் சொல்லி மறுநாள் காலை ஆசிரமத்திற்கு வரச்சொல்லிவிட்டார் பாபா. பெரிய டி.வி யை கொண்டு வந்து மேடையருகில் வைத்துவிட்டார்கள்.

குறித்த நேரம் வந்தது. அட்டகாசமாக சிரித்தபடி திரையில் தோன்றினார் பாபா. பரவசத்தில் கையெடுத்து கும்பிட்டார்கள் பக்தர்கள். அப்படியே மெல்ல ஆட ஆரம்பித்தார் பாபா. பக்தர்களும் ஆனந்த கோஷத்தை மனசுக்குள் முணுமுணுத்தவாறே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போதுதான் நடந்தது விபரீதம். பாபா வேகமாக ஆட ஆரம்பித்ததும் பின்னணியில் ஒலித்தது அந்த பாடல். பிரபுதேவா ஒரு படத்தில் காட்டுத்தனமாக ஆடுவாரே ஒரு பாடலுக்கு, அதே பாடல்தான் அது.

காத்தடிக்குது காத்தடிக்குது... காசி மேட்டு காத்தடிக்குது.... ஊத்திகினு படுத்துக்கவா... படுத்துகினும் ஊத்திக்கவா...

அவ்வளவுதான்... ரணகளமானது ஆசிரமம். "ஐயோ பகவானே, என்ன இதெல்லாம்" என்று கோஷமிட்டார்கள் பக்தர்கள். டிவியை நிறுத்தக் கூட அவகாசம் இல்லாமல் ஓடிப்போய் டி.வி மேல் பாய்ந்து அப்படியே அந்த ஸ்கிரீனை மூடிக்கொண்டார் ஒரு பக்தர். அடுத்த வினாடி டிவி ஸ்டேஷனுக்கு பறந்தது போன். எப்படியோ நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருக்கும்போதே நிறுத்தினார்கள் அதை.

இன்றுவரை செல்வராஜ் ஏன் அப்படி செய்தார் என்பதற்கு காரணம் தெரியவில்லை. செல்வராஜை யாருக்காவது தெரிஞ்சிருந்தா கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்...

7 comments:

Anonymous said...

இவ்வாறன சாமியார்களை கண்மூடித்தனமாக பின்பற்றும் ஒரு மக்கள் கூடம் இருப்பது வேதனையாக உள்ளது. விவேக் ஒரு படத்தில் உடான்ஸ் சாமியாராக வருவார், அது கற்பனை என்றுதான் இவ்வளவு நாளும் நினைத்திருந்தேன். உங்கள் ஆக்கங்கள் மூலம் அப்படி ஒருவர் இருந்தார்/ இருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன். நன்றி. உங்கள் மற்றைய ஆக்கங்களும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக டி.ராஜேந்தர் பற்றி நீங்கள் எழுதி வருவது மிகவும் நன்றாக உள்ளது. உங்களது மேலதிக ஆக்கங்களை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன், நன்றி.
Thiva. ottawa, Canada

வண்ணத்துபூச்சியார் said...

ரசிகர்களின் வேண்டுகோளுங்கு இணங்க முனிவருக்கு அடுத்த்தாக இந்த பதிவ போட்டு அசத்திட்டிங்க..

என்ன சொல்ல.

வழக்கப்படி கலக்கல்.

Anonymous said...

The post is outstanding.

You mentioned 'சரி, விக்ரமாதித்யனை எங்கே பார்த்தேன்? இரண்டு நாட்கள் போகட்டும் சொல்கிறேன்....' last week. Waiting eagerly to know about that..

பாசகி said...

வணக்கம் அந்தணன் சார்,

நேற்று இரவு நீங்க எழுதின "அழகி" பதிவுக்கு பின்னூட்டம் போட்டுட்டு நான் வீட்டுக்கு போயிட்டேன். இன்னைக்கு காலைல அலுவலகம் வந்து எப்பவும் போல புதுபதிவு ஏதும் போட்டுருக்கிங்களானு உங்க வலைப்பதிவை பார்த்தா, இன்ப அதிர்ச்சி. என்னோட பின்னூட்டத்துக்கு மதிப்பளிச்சு அந்த குறிப்பிட்ட பதிவை நீக்கினிங்களா இல்லை உங்க நண்பர்கள் யாரேனும் சொல்லி அதை எடுத்திங்களானு ஆராய்ச்சு பண்ண விரும்பல.

எவ்வாருரிருப்பினும் மத்தவங்க உணர்வுக்கும், கருத்துக்கும் மதிப்பளிக்கற உங்களுக்கு ஒரு சின்ன நன்றியும் பாராட்டும் சொல்லாட்டி என்னோட இந்தநாள் முழுமைபெறாது.நன்றி.வாழ்த்துக்கள்.

இதுவரைக்கும் உங்க எழுத்தை நகைச்சுவைக்காக மட்டுமே படிச்சுட்டுருந்த நான், இனி உங்க மேல ஏற்பட்டுருக்கற மரியாதையோடும் தனிப்பட்ட அன்போடும் வாசிப்பேன்..

நிறையா எழுதனும்னு ஆசை, நேரமின்மையால இப்போதைக்கு இதுமட்டும்...

மீண்டும் நன்றிகள் பல...

நட்புடன்,
பாசகி

Anonymous said...

இனிய நண்பர் பாசகி,

உங்கள் கருத்துக்கு மதிப்பளித்துதான் அந்த பதிவை நீக்கினேன். பதிவுகளில் ஏதேனும் தவறாக இருப்பின் குட்டுங்கள்... தடவிக் கொள்வதோடு திருத்தியும் கொள்கிறேன்.

அன்புடன்,
அந்தணன்

R. said...

நம்ம மக்கள் ஆடுர டான்ஸ் விட நல்லா ஆடுவாரா? ஹி ஹி ஹி

வெங்க்கி said...

சார்,
சரியான லந்து போஸ்ட் இது...சிரிப்பை அடக்க முடியலை...யாகவா முனிவர், சிவசங்கர பாபா ..சூப்பர் காமெடி பீசுங்க...