பெரிய ஜோதிட சாம்ராட்டுன்னு நினைப்பு உலகநாதனுக்கு! ஏதாவது கேட்டால், அவரது காதுக்குள் இறங்கி இரண்டு முறை டொக் டொக்குன்னு தட்டணும். ஆங்... என்று விழித்துக் கொண்டு, என்னா கேட்டீங்க? என்பார் கொட்டாவிக்கும் கோவத்துக்கும் நடுவாந்திரமாக வாயை வைத்துக் கொண்டு. இத்தனைக்கும் வாரா வாரம் வரும் ராசி பலனில் 'கணித்தவர்- உலகநாதன்' என்று எங்காவது அச்சிட்டிருக்க வேண்டுமே? ம்ஹ§ம்... பேர் வராமல் எழுதும்போதே இத்தனை மிதப்பு.
மண்டையில் முக்கால்வாசி ஸ்ரீபெரும்புது£ர் மாதிரியே திடலாக கிடக்கும் அவருக்கு. நாமக்கல் கோழிமுட்டையை நாலா சுருக்கி நெத்திக்கு கீழே ஒட்ட வச்சா அவரோட கண்ணு! எல்லா விரல்களையும் பிரித்து வைத்துக் கொண்டு எந்நேரமும் கணக்கு போட்டுக் கொண்டிருப்பார். "டேய், ஒலகநாதா.... குருவோட அஞ்சாம் பார்வை இன்னைக்கு எங்கடா விழுது?"ன்னு எங்களையெல்லாம் வச்சிகிட்டு கேட்பாரு டிஆர். மறுபடியும் விரல்களை பிரித்து இவர் கணக்கு போடுவதற்குள், "அட, ங்கோ..." ன்னு ஏசிட்டு கணக்கை சட்டுபுட்டுன்னு போட்டு, ஒலகநாதனை ஒதவாத நாதனாக்கிவிட்ட சந்தோஷத்தில் எங்களையெல்லாம் பார்த்து புன்முறுவல் பூப்பார் டிஆர்.
உஷா பத்திரிகையில் வரும் இரண்டு பக்க ஜோதிடத்தை கணிக்கிறேன் பேர்வழி என்று, ஒரு மினி கருத்தரங்கமே நடத்துவார்கள் இருவரும். அதற்குள் உலகம் ஒரு சுற்று அநாவசியமாக சுற்றி முடித்திருக்கும்! "யோவ்..." ம்பாரு ஒலகநாதன் சில நேரம் எங்களில் யாரையாவது. அண்ணன் சொல்றாருன்னா அது வேற, இந்தாளு எதுக்கு யோவ்னு நம்மளை கூப்பிடணும்? முரட்டு ஈகோ மூக்குக்கு மேலே வர, வச்சுக்கிறேன் இருடான்னு காத்திட்டு இருந்தோம் மொத்த பேரும். அதுக்கு தோதாக வந்திச்சு (நல்ல)நேரம். அது ஒலகநாதனுக்கு என்ன நேரம்ங்கிறதை கீழே படிச்சுட்டு சொல்லுங்க...
இன்டர்காம் வந்த புதுசு. டிஆர் வீட்லே எல்லா ரூம்லேயும் பொருத்திட்டாங்க. ஒலகநாதன் ரூமுக்கும் ஒன்னு. எங்களோட ரூம், கம்யூட்டர் ரூம், லே அவுட் ரூம், அப்படி இப்படின்னு பாத்ரூம் டாய்லெட்டை தவிர எல்லா இடத்திலேயும் இன்டர்காம்!
பெண் குரலில் இன்டர்காமை தட்டினார் நெல்லை பாரதி. ஒலகநாதன் ரூமுக்குதான்! "சார், நாங்க அடையார்லே இருந்து பேசுறோம். உங்க பத்திரிகையிலே வர்ற ஜோதிட பகுதிய ரெகுலரா படிக்கிறோம். எப்பிடிதான் இவ்வளவு கரெக்டா எழுதிறீங்களோ போங்க. அப்படி அப்படியே நடக்குது. எங்க வீட்லே எல்லாரும் ஒங்களோட ஃபேன்தான். ஒரு பத்து உருப்படிகிட்ட ஒங்ககிட்டேதான் ஜாதகத்தை காட்டணும்னு தவியா தவிக்கிறோம். ஒரு எட்டு வந்திட்டு போங்களேன்"னு சொல்வார். அவ்வளவுதான் ஒலகநாதனுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்திரும். அஹ்ஹ்ஹ்...னு சிரிச்சிகிட்டே, "நம்மகிட்ட என்ன இருக்கு. எல்லாம் அவனோட அருள். எங்க, ஒங்க அட்ரசை சொல்லுங்க, வர்றேன்"னு பேனாவை எடுத்து பரக்க பரக்க குறிப்பார். திருவள்ளுவர் தெரு, துபாய் குறுக்கு சந்துங்கிற ரேஞ்சில் ஏதாவது ஒரு நம்பரையும் தெருவையும் நெல்லை பாரதி எடுத்துவிட, எல்லாரும் ஆர்வமாக ஒலகநாதன் ரூமையே வாட்ச் பண்ணுவோம்.
கொஞ்ச நேரத்திலே பவுடரை அப்பிகிட்டு பக்காவாக கிளம்பும் ஜென்மம். ஏதோ பொண்ணு பார்க்க கௌம்புறது மாதிரி அத்தனை ஜோடனை இருக்கும் அந்த முகத்திலே. கம்பீரமா ஹேண்ட் பேக்கை கக்கத்திலே செருகிட்டு போவாரு. அவர் போயிட்டாரான்னு பார்த்து கன்பாஃர்ம் பண்ணிக்கொண்டு விழுந்து விழுந்து சிரிச்சிருக்கோம். ஆனா போன மனுஷன் திரும்பி வர்ற வரைக்கும் இருந்து ரசிக்கனும்னே சில நேரங்களில் ஓவர் டைம் பார்த்திருக்கோம். ஆஞ்சு ஓஞ்சு போய் அக்கடான்னு சேர்ல வந்து சாய்வார். நிறைய சுத்தியிருப்பாரு போலிருக்கு, அட்ரசை தேடி. ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல.
ஒரு வாரம் முழுக்க இப்படியே அலைய விட்டோம். ஆனா, அப்பிராணி மனுஷன், நேத்துதான் அலைஞ்சமே? இன்னைக்கு மடிப்பாக்கம், நேத்துக்கு முந்தின நாள் கோடம்பாக்கம்னு அலைஞ்சு எல்லா அட்ரசுமே தப்பாயிருக்கேன்னு ஒரு நாளாவது நினைக்கணுமே? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சந்தோஷத்தோடவே கிளம்புனாரு ஒலகு. நாங்களே போனா போவுதுன்னு இந்த அலைகழிப்பை நிறுத்தினோம் அப்புறம்.
போன மாசம், வள்ளுவர் கோட்டம் ஏரியாவிலே பைக்லே வேகமா போயிட்டு இருந்தேன். எதிர்ப்பக்கம் பார்த்தால்.. அட நம்ம ஒலகநாதன்! எந்த அட்ரசை தேடி இந்த நெடும் பயணமோ?
சோசியனுங்களுக்கு, கெரகம் தெரியுற அளவுக்கு வெவரம் தெரிய மாட்டேங்குதுப்பா...!
7 comments:
ulaganathanikku bathil ulagamtheriyathanathannu peru vachirukkalam
பல பேரை பாடா படுத்தியவர்க்ள் போல இருக்கே நீங்கள்.
It's all in the game..
Life is nothing but fun & Joy.
Thanx for sharing.
Cheers.
நல்ல கலக்கல் பதிவு. நான் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் போல :)
உலகம் பாவம்ப்பா...
பாவம்
உங்கள் வர்ணனை மிக மிக அருமை. சிரித்து சிரித்து வயிறு புண் ஆகிவிட்டது
Post a Comment