Friday, April 17, 2009

அர்த்த ராத்திரியில் அல்டிமேட் ஸ்டார்...


கடைவாயிலே தள்ளி, 'தொட' கறிய ருசிக்கிற வரைக்கும் கூட நெனச்சேன், இந்த சந்திப்பு நமக்கு நிறைய சங்கதியை தரும்னு. ஆனா, ஏகன் மாதிரியே 'போங்கடிச்சிட்டாரு' அந்த ஏகனோட ஃபிரண்டு! விக்ரமாதித்யன் வேதாளத்துக்கு கதை சொன்ன மாதிரி, ஓரம் எது? உட்புறம் எதுன்னே புரியாம ஒரு விஷயத்தை சொல்ல ஆரம்பிச்சிட்டேன்ல, ஸாரி பிரண்ட்ஸ். இது அல்டிமேட் ஸ்டார் பற்றிய ஒரு அல்டிமேட்டான விஷயம்!

ரொம்ப நாளாவே அஜீத்தை பற்றி ஒரு புத்தகம் எழுதனும்னு ஆச எனக்கு. அவரிடம் கேட்டா, "வேணாம் பாஸ். நான் அவ்வளவு பெரிய ஆளு இல்லே(?)ம்"பாரு. அதனால அவருக்கு நெருக்கமான ஆளுங்களை பிடிச்சு விஷயத்தை கறந்திரலாம்னு ஐடியா. இந்த பதிவு முழுக்க முழுக்க சினிமாவுக்கு அப்பாற்பட்டதா இருக்கணும்னு நினைச்சதாலே, அவரோட மேனேஜர் சுரேஷ் சந்திரா, பிஆர்ஓ வி.கே.சுந்தர் ரெண்டு பேரையும் விட்டுட்டு மூணாவதா ஒரு ஆளை பிடிச்சேன். பிரதாப்!

அஜீத் நாயர்னா, பிரதாப் டீக்கடை! அஜீத் ரகசியான்னா, பிரதாப் பிட்டு துணி! இப்படி ரெண்டு பேரோட நெருக்கம், ரொம்ப சுருக்கமானது. பிரதாப்பை நேரடியா மீட் பண்ணிடலாம். ஆனா மனுசன் பேசணுமே? அந்த நேரத்திலேதான் செந்தில் சொன்னாரு. "ஏங்க, அவனும் நானும் ஒன்னா படிச்சவன்ய்ங்க தெரியுமா? வாங்க, நான் கூட்டிட்டு போறேன்..." சைட் அடிக்க போன பிகர், சந்துக்குள்ளே சிக்குனா எப்படியிருக்குமோ, அப்பிடியிருந்துச்சு எனக்கு!

சாப்டுகிட்டே பேசலாம்னாரு பிரதாப். வந்தது சிக்கன் பிரியாணி. கடைவாயிலே தள்ளி, 'தொட' கறிய ருசிக்கிற வரைக்கும் கூட நெனச்சேன், இந்த சந்திப்பு நமக்கு நிறைய சங்கதியை தரும்னு.

"பிரதாப், ஒன்னுமில்லே. அஜீத் சார பற்றி ஒரு புத்தகம் எழுதலாம்னு. அவரை பற்றி நிறைய விஷயங்களை, ஜனங்களுக்கு தெரியாத இன்னொரு ஏரியாவ சொல்லணும். மொதல்ல அவரு எப்படிப்பட்ட டைப்? பொதுவா சினிமா ஹீரோங்க வெளியே நடிப்பாங்க. உள்ளே பார்த்தா வேற மாதிரி இருப்பாங்க. சொல்லுங்க"ன்னேன்.

"அவர பத்தி என்னத்த சொல்றது. அவரு இதெல்லாம் லைக் பண்ண மாட்டாரே? அவரு உண்டு அவரு வேல உண்டுன்னு இருப்பாரு"

அப்புறம்...?

"அப்புறம் அவருக்கு இதெல்லாம் பிடிக்காதே, ம்ம்ம்... வேற விஷயங்களுக்கு போக மாட்டாரு. ஷ§ட்டிங் முடிஞ்சா வீட்டுக்கு வந்திருவாரு. அப்புறம்ம்ம்ம்ம்ம்ம்... ம் என்னத்தை சொல்றது? அவருக்கு இதெல்லாம் பிடிக்காதே" இதை பிரதாப் சொல்லி முடிப்பதற்குள் நான் பாதி பிளேட் பிரியாணியை காலி பண்ணியிருந்தேன். மனுஷன்கிட்டே ஒன்னுமே பேராது போலிருக்கேன்னு நினைச்சுகிட்டே, அவருக்கு ஏராளமான ரசிகருங்க இருக்காங்க. அவங்களோட அன்பையும் வெறித்தனமான காதலையும் வேற மாதிரி யூஸ் பண்ற ஐடியா இருக்கா தலைவருக்கு? "வேற மாரின்னா...?" அதாங்க, அரசியல் அப்பிடி இப்பிடின்னு... "அப்பிடியா, இது பத்தி நான் என்னத்தை சொல்றது? அவரு மனசிலே... இப்ப எதுவும்... டேய், செந்திலு. சாரு என்னடா என்னென்னவோ கேக்குறாரு?" ஒரே மூச்சில் ஒரு பாட்டில் ஐஸ் வாட்டரை காலி பண்ணியது பார்ட்டி!

"சரி, விடுங்க. உங்களுக்கே நான் எழுதற மாதிரி ஏதாவது தோணும் இல்லையா? அத சொல்லுங்க போதும்"னேன். இப்போ கொஞ்சம் உயிர் வந்திச்சு பிரதாப்புக்கு. "இல்லைங்க, அவருக்கு? எதுக்கு சொல்றேன்னா? அது வந்து"ன்னு ஆரம்பிச்சவரு, எழுத்துக்கூட்டி இன்சால்மென்ட்லே சொன்னதை, ஒரே மூச்சில் எழுதிடறேன். நிஜமாகவே அல்டிமேட் அல்டிமேட்தான்!

"அஜீத் சார் பென்ஸ் காரே வச்சிருந்தாலும், என் கார்லதான் வர ஆசைப்படுவார். (டாடா இன்டிகாம்) ஏன்னா, என் கார்ல டேப் இல்லை. அத பிரிச்சு போட சொன்னதே அவருதான். கார்லே போகும் போது அமைதியா போகணும். அதுதான் பிடிக்கும் அவருக்கு. அது மட்டுமில்லே, காரை நான் ஓட்ட ஜன்னல் வழியா இந்த ஊரு உலகத்தை, கடைத் தெருவை ஒரு குழந்தை மாதிரி ரசிச்சிட்டு வருவார். அப்படி ஒருமுறை ராத்திரி பதினொரு மணி இருக்கும். கிளம்பிட்டோம். ஈசிஆர்ல இருக்கிற அவரு வீட்டுல இருந்து பாண்டி பஜார் நோக்கி வந்திட்டு இருந்தோம். அன்னிக்கு பார்த்து செம ஜாலி மூடு அவருக்கு. நள்ளிரவு பனிரெண்டு தாண்டிருச்சு. அப்படியே வள்ளுவர் கோட்டம் வழியா பீச் ரோடை புடிச்சு வீட்டுக்கு போயிரலாமான்னாரு. சரின்னு சொல்லி வண்டியை கண்ணதாசன் சிலைகிட்டே திருப்பினேன்... வண்டி ஆஃப்!"

"சாவியை திருப்பி திருப்பி போட்டாலும், ஒரு இன்ஞ் நகலே வண்டி. பெட்ரோல் இருக்கான்னு கூட பார்க்காம வண்டியை கிளப்பியிருக்கேன். இப்போ என்னா பண்றது? "வண்டியிலேயே இருக்கீங்களா, போய் ஏதாவது காலி கேன்லே பெட்ரோல் வாங்கிட்டு வந்திர்றேன்"னு கேட்க, "அட, விட்றா. இப்போ பாரு"ன்னு காரிலேர்ந்து கீழே இறங்குனாரு. ஸ்டியரிங்கை புடின்னு சொல்லிட்டு அப்படியே வண்டிய தள்ள ஆரம்பிச்சாரு. பதறி போன நான், "அட இதென்ன வேண்டாத வேலை. நான் தள்றேன். நீங்க ஸ்டியரிங்கை புடிங்க"ன்னேன். "அட விட்றா. இப்படி வண்டிய தள்ளி ரொம்ப நாளாச்சு"ன்னவரு, அங்கிருந்து வாணி மஹால் வரைக்கும் தள்ளிகிட்டே வந்தாரு. (சுமார் அரை கி.மீ) நல்லவேளை, அவரு குனிஞ்சுகிட்டே வண்டிய தள்ளியதாலே கிராஸ் பண்ணி முன்னாடி போன யாரும் கண்டுக்கலே"

"வீட்லே வந்து போட்டு குடுத்திருவாரோன்னு பயம். ஏன்னா, அவர போயி வண்டிய தள்ள விட்டியான்னு எனக்குதானே டோஸ் கொடுப்பாங்க மேடம்? சொல்லவே இல்லை அவரு. இப்போ நீங்க எழுதி, "ஆமா... புக் எப்போ வருது?"ன்னாரு பிரதாப்!

"இது மாதிரி இன்னும் நிறைய சொல்லுங்க. அப்புறம் எல்லாத்தையும் சேர்த்து ஒன்னா போடலாம்"னேன். "அப்பிடியா... நான் என்னத்தை சொல்றது?"ன்னு வேதாளம் முருங்கை மரத்தை பார்க்க, "யோசிச்சு வைங்க. வர்றேன்"னு கிளம்பினேன். ஆறு மாசம் விடாம அலைஞ்சா, தல பற்றி ஒரு புக் தேறும்னு நினைக்கிறேன்.

தேறுங்ம்கிறீங்க...?

13 comments:

Cable Sankar said...

தேறுனாலும் தேறும்.. எதுக்கும் நம்பிக்கைய விட்டுறாதீங்க..

UNGALODU NAAN said...

NALLA VELA THALAYA ENGA KALAIPNGALONU BAYANDUTTU VANDEN


ILLPPA SAMY


THALA THALA DHAN

கிரி said...

உங்க உதாரணம் அனைத்தும் சூப்பர்

தலைய பற்றி எழுதனீங்க சரி..அப்படியே எங்க தலைவர பற்றி எழுதறது :-)

jchat said...

'தல'போல வருமா...

அன்பு said...

ஆனாலும் உங்களுக்கு விபரீத ஆசைங்க பாஸ், வருசம் முழுதும் அலஞ்சாலும் ஒண்ணும் தேறாதுன்னு தோனுதுங்கண்ணா.....அன்பு

rajesh.v said...

please write some thing about our superstar rajinikanth.

rajesh.v

Sridhar said...

நிச்சயமா எதுவும் தேறாது.முகமூடி இல்லாத நடிகன்.தலை உயரத்தில் இருந்தாலும் கால் தரையில் இருப்பவர்.

நிலா ரோஷினி. said...

உங்கள் எழுத்துக்கள் மிகவும் ரசிக்க கூடியதாக உள்ளது. தவறாமல் படிக்கிறேன். நன்றி. மயில் அழகாக ஆடும் என்று சொல்லவேண்டியதில்லை. இருப்பினும் உங்களைப் பாராட்டியதில் மகிழ்ச்சி.

வண்ணத்துபூச்சியார் said...

பிரதாப்பை மீண்டும் எப்போது சந்திப்பீர்கள்.

வழக்கம் போல் தூள்.

ஆதவன் said...

thalaya pathi eludhina nalla thaan irukkum. super boss..

Maximum India said...

உங்கள் எழுத்துக்கள் மிகவும் ரசிக்க கூடியதாக உள்ளது.

Latha said...

We know Ajith is a very modest and a down to earth person and your article is a best example

Anonymous said...

enga thalaya pathi kandippa
oru book eluthunga please