Thursday, April 9, 2009

ஆவி அமுதாவின் 'துப்ர'பாதம்!

பரிசுத்த ஆவியோ, பிறந்ததலிருந்தே ஷாம்பூ, சோப்புகளையே பார்க்காத பரி'சுத்தமில்லாத' ஆவியோ, எதுவாகவும் இருக்கட்டும்... ஆவிகள் என்றால் அலர்ஜி எனக்கு!

ஆவி அமுதாவில் தொடங்கி, விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் வரைக்கும் டி.வியில் பார்த்து பொறி கலங்கி போயிருந்தாலும், ஒரு சந்தர்ப்பத்தில் இவங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது எனக்கு. ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற அத்தியாவசிய சமாச்சாரங்களை கூட மேற்படி அமானுஷ்ய ஏரியாவிலே இருந்து வாங்கி வச்சிருப்பாங்களோங்கிற சந்தேகமெல்லாம் வரும் இவங்களை நினைச்சா.

எங்க ஊர்லே பெருமாள்னு ஒரு ஆசாரி இருந்தாரு. அவரு ஒரு முறை செகன்ட் ஷோ படம் பார்த்திட்டு வரும்போது, சுடுகாட்டுலே இருந்து ஆவி ஒன்னு இவரை மறிச்சிருச்சாம். கை ரெண்டையும் நீட்டி, "இதுல மாட்டியிருக்கிற விலங்கை உடைச்சு விடு"ன்னு கேட்டுச்சாம். (மாட்டி விட்டது எந்த போலீஸ் ஆவியோ?) அவரும், பதட்டப்படாம வீட்டுக்கு வந்து வெட்டிரும்பு, சுத்தியலை எடுத்திட்டு போயி விலங்கை உடைச்சுவிட்டாராம். அன்னையிலேர்ந்து இவரை 'பேயுக்கும் காப்படிச்ச பெருமாள் ஆசாரி'ன்னு பட்டப் பெயர் வச்சு கூப்பிட ஆரம்பிச்சாங்க! பேய்கள் பற்றிய சந்தேகங்கள், பொழிப்புரைகள், இலக்கணப் பிழைகள் போன்றவற்றை விளக்கும் நடமாடும் 'கோனார் பேய் உரை'யாகவே இருந்தார் பெருமாள் ஆசாரி. இவர் செத்த பின்னால் மேலே போய் வேலை கெடக்கும்னு நினைச்சாங்களோ என்னவோ, இவரு கூடவே சுத்தியலையும் வெட்டிரும்பையும் போட்டு புதைச்சிட்டாங்க.

சரி, விஷயத்துக்கு வருவோம். ஒரு முறை ஆவி அமுதாவை பேட்டியெடுக்க போயிருந்தேன். அப்போது இவரை ஒரு தனியார் தொலைக்காட்சியில் வாரா வாரம் காட்டிக் கொண்டிருந்தார்கள். இவர் டாக்டர் இல்லை. ஆனா ஆபரேஷன் செய்வார். இவர் கடவுள் இல்லை. ஆனா தீட்சை கொடுப்பார் என்ற ரேஞ்சில் போட்டு தாக்க, நாலு பேர் உட்கார கூட இடமில்லாத அவர் வீட்டில் நிமிடத்திற்கு நானு£று பேர் கூடினார்கள். அரசியல் பேரணிக்கு ஆள் தேவைப்பட்டால் அப்படியே வந்து லம்ப்பாக அள்ளிக் கொள்ளலாம் என்கிற அளவுக்கு வியாதியஸ்தர்கள், கவலையஸ்தர்கள், கண்ணீரஸ்தர்கள் கூடினார்கள் தினந்தோறும்.

குப்புசாமி ஐயா என்ற பரிசுத்தமான ஆவிதான் எனக்குள் வருகிறது. ஆறுமுகம் ஐயா என்ற மருத்துவருடைய ஆவிதான் எனக்குள் இறங்கி நோய் தீர்க்கிறது என்றார் அமுதா. உள்ளுக்குள்ளே டப்பாங்குத்து ஆடினாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் "நீங்க ஆவியை கூப்பிடுறதை நான் பார்க்கணுமே" என்றேன். பிரபல பத்திரிகையில் பேட்டி வரப்போவதால் ஆவி, 'ஆமாம் சாமி' போட்டது. ஒரு இருட்டறையில் அமர்ந்தார் ஆவி அமுதா. முன்னால் ஒரே ஒரு மெழுகுவர்த்தி. சரக்கென்று கண்களை மூடி சுவிட்ச் போட்ட மாதிரி, "ம்ம் ம்ம் சொல்லுங்கள்" என்றார் புலவர் கீரன் ரேஞ்சுக்கு. அற்புதமான து£ய தமிழ். கேள்வியை நான் கேட்க, பதிலை ஆவி சொல்லிக் கொண்டிருந்தது. ஐ மீன் அமுதாவுக்குள் இருந்த ஆவி. பார்த்ததை அப்படியே எழுதினேன். பத்திரிகையிலும் வந்தது.

ஏற்கனவே பேய் விழுந்தால் பிசகிப்போகிற அளவுக்கு கூட்டம். இதில் எங்கள் இதழும் வெளிவந்ததால் எக்கச்சக்க கூட்டம். ஃபீட் பேக் தெரிந்து கொள்ள நேரில் போயிருந்தேன். நான் வந்ததே தெரியாமல் கால்ஸ்(?) அட்டர்ன் பண்ணிக் கொண்டிருந்தார் அமுதா. பேட்டியில், "இதை ஒரு சேவையாக செய்கிறேன்" என்றவர், நேரில் கிட்டதட்ட வசூலே பண்ணிக் கொண்டிருந்தார். அவ்வளவு கூட்டத்தில் நான் வந்தது தெரியவில்லை அவருக்கு.

யாரோ ஒருவர் ஏதோ பிரச்சனையை சொல்லி "குழந்தையை வீட்டிலே வந்து பாருங்க" என்று கெஞ்சிக் கொண்டிருந்தார். அமுதாவின் அம்மாவோ, "இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஆவிக்கு லீவு. அதை எழுப்பி அழைச்சுட்டு வரணும்னா டபுள் சம்பளம் ஆவும், பரவால்லயா" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆஹா, தப்பு பண்ணிட்டமோ என்று நினைத்த நான், அதன்பின் தொடர்ந்து சில நாட்கள் அங்கே போய் நோட் பண்ண ஆரம்பித்தேன். "என் மேல் வள்ளலார் ஆவி வருது (?)" என்று ஒருமுறை சொன்னார் அமுதா. "நான் இதுவரைக்கும் அவரு எழுதின ஒரு பாட்டை கூட படிச்சதில்லே. ஆனா நான் தியானத்தில் இருக்கும்போது எந்த வரியை வேணும்னாலும் கேளுங்க. சொல்றேன்"னாரு. ஆனா, திடு திப்புன்னு ஒரு நாள் அவங்க வீட்டுக்கு சொல்லாம நுழைஞ்சப்போ அவர் டேபிளில் வள்ளலார் கவிதை தொகுப்பை பார்த்தேன். "நான் உப்பு போட்டு சாப்பிடறதே இல்லை" என்றார் பேட்டியில். ஆனால், இன்னொரு சந்தர்பத்தில் அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே மாட்டினார் என்னிடம். எதையும் வெளிகாட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து அவதானித்து மறுபடியும் ஒரு கட்டுரை எழுதினேன். இந்த முறை செம லாக்! புக் கடைக்கு வந்த அதிகாலையிலேயே 'துப்ர பாதம்' என் போனில். பேசியது, ஸாரி... ஏசியது அமுதாவேதான்!

கொஞ்ச நாளைக்கு கெட்ட கனவுகள் வந்தால் கூட, ஆவியோட வேலையாக இருக்குமோ என்று அஞ்சினேன். காலம் உருண்டது. ஒரு நாலைந்து மாதங்களுக்கு முன், பிஆர்ஓ சுரா போன் பண்ணினார். "அந்தணன், அமுதான்னு ஒரு டாக்டர். காட்டிலே இருக்கிற மூலிகையை ஆவியின் உதவியோட கண்டுபிடிச்சு தீராத நோயெல்லாம் தீர்க்கிறாங்க. ஒரு ஆர்ட்டிகள் போட முடியுமா? அடையாறுலதான் க்ளினிக். வர்றீங்களா"ன்னாரு. "சார், ஆவி அமுதாவா"ன்னேன் பளீர்னு. "ஆமா, ஆமாம்" என்றவரிடம், "சார் எனக்கும் அந்த பொண்ணுக்கும் ஆவாது. விடுங்க" என்றேன். காரணத்தை கேட்டவரிடம், மொத்த கதையையும் சொல்ல, "அது நடந்து ஆறேழு வருஷம் இருக்கும்லே, வாங்க மறந்திருக்கும்"னாரு.

இது பெரிய பங்களா. நான் முதலில் அவரை பார்த்த அந்த சிங்கள் பெட்ரூம் பிளாட் கண்ணில் நிழலாடிவிட்டு போனது. வரவேற்பறையில் காத்திருந்தேன். சிறிது நேரம் கழித்து வந்த அமுதா, நான் முன்பு பார்த்த ஏழை அமுதா அல்ல. பார்க்கவே செழிப்பாக இருந்த பணக்கார அமுதா. (ஆவிகள் வாழ்க) கொஞ்சம் உற்றுப் பார்த்தவர், "நீங்க அந்தணன்தானே?" என்றார். இனி வெளங்குன மாதிரிதான்னு நினைச்சுகிட்டே ஆமான்னேன். "நீங்க என்னை பற்றி தப்பு தப்பா எழுதினீங்க. அதே பத்திரிகையிலே என்னை பற்றி கொஞ்ச நாளிலேயே நல்லா போட்டாங்க தெரியுமா"ன்னாரு. நான் "இல்லீயே" என்று சொல்ல, அவர் "ஆமாம், வந்திச்சு" என்று சொல்ல, மறுபடியும் ஒரு வார்.

பதறிப்போன சுரா, லாவகமாக இடையே நுழைஞ்சு வெளியே அழைத்து வந்தார். பேட்டி ஆரம்பிக்கவேயில்லை. இப்போது அமுதா இன்னும் வளர்ந்திருக்கிறாராம். கேள்விப்பட்டேன்...!

19 comments:

PREMKUMAR C said...

Super sir.Very interesting.

அன்புச்செல்வன் said...

ஆவி அமுதாவை பத்தி கட்டுரை மட்டும் எழுதாமல் ரொம்ப மெனக்கெட்டு ஜேம்ஸ் பாண்டு வேலை எல்லாம் பார்த்திருக்கிறீங்க. பலே, பலே, ரொம்ப அருமை அந்தணன் அண்ணா! உங்க பதிவ படிக்கும்போது நான் சிரிப்பா சிரிக்கிறேன்.
-அன்புச்செல்வன்

Anonymous said...

Murugan
In Tamil Nadu (India as well), there are lot of people like Aavi Amutha to exploit the false beliefs & weakness of innumerable suffering people.

Jayakumar Vellaiyan said...

Very interesting.. Thodarndhu padikuraen.. Become your fan!
Best wishes.

Sridhar said...

paarthu appuram marupadiyum nama aavi pidikka ponum (For cold) he he he

Anonymous said...

ஆவிகள் உண்மையோ பொய்யோ , ஆனால் அன்மன்ஷ்ய சந்தேகங்களை வைத்தே பொய் வியாபாரம் செய்யும் ஆவி அமுதாக்கள் நம்ம நாட்டுல அதிகம் . உங்கள் பதிவு அருமை,வாழ்த்துகள் சார் !!

Joe said...

நுணுக்கமா கவனிச்சு ஆவி அமுதாவின் வண்டவாளங்களை கிழிச்சிருக்கீங்க! பிரமாதம்.
இதைப் படித்து நம்ம மக்கள் திருந்தினா சரி.

தலைவர் said...

தல,.. கலக்கிட்ட இல்ல, கின்டிட்ட போ.
இப்படியா நாறடிக்கறது,உன் கிட்ட யாரும் மாட்ட கூடாது, டார் டார அவுத்து தூப்பிட்ட,... ச்சீ மானத்த வாங்கிட்டனு சொல்ல வந்தேன்,
இப்ப நான் கலன்டுகிறேன்,இல்ல என்ன பத்தியும் டபாய்க்க ஆரம்பிச்சுடுவே...

கும்மாச்சி said...

அந்தணன் நல்ல பதிவு, இதில் இழையோடும் நகைச்சுவை ஒரு புதிய யுத்தி.

யூர்கன் க்ருகியர் said...

Great Findings!
உங்கள் பெரும்பான்மையான நேர்காணல்கள் அனைத்தும் நகைச்சுவையில் முடிவது சிறப்பு!

Karthick said...

Nice Sir. Ithula Nagaichuvai vida. Ippadi oru poiyaana Polapu Nadathi Bangala Katra alavukku oruthangalala munnera mudiyumna.. Evlo periya muttalgalaga irukaanga makkal. Ivangala Aaavinga thaan kappathanum

R.Gopi said...

"தல" தப்பியது தம்பிரான் புண்ணியம்
"ஆவி அமுதா" மாட்டியது அண்ணன் அந்தணன் புண்ணியம்

போட்டு தாக்கு, போட்டு தாக்கு .........
மேட்டர எல்லாம் புட்டு வச்சு, போட்டு தாக்கு

butterfly Surya said...

கலக்கல்.

biskothupayal said...

அவங்க (பாவி) ஆவி அமுதாவா

vijay.s said...

anthanan avargalay...unga pathivai thodarnthu padithu varugiren... un nagaichuvai unarvukku naan rasigan...

after reading ur article on amutha...we came to know the reality... the latest issue of avalvikatan wrote abt amutha and her achievements...pls clarify and let the world know the truth...appavi makkal thirumbavum baathika pada koodathu..pls...

Anonymous said...

தங்கள் அப்படியே குறிப்பிட்ட பத்திரிகை செய்தியின் லிங்க்கும் கொடுத்தல் இன்னும் சுவராஸ்யமாக இருக்கும்

Unknown said...

Aavi Amuda is a fraud. I can prove it.

அருண்சங்கர் said...

ஆவி அமுதாவிற்கு வேப்பிலை அடிக்க எல்லாரும் அந்தணன் அண்ணன் தலைமையில் வாருங்கள் என வரவேற்கிறேன். நகைச்சுவையான பதிவுகள். தொடர வாழ்த்துக்கள்.

Anonymous said...

idha padama eduttha nalla vasul agum...poi chinna kolandhai kitta sollunga sir....
ippadiku,
aavaiyai nambhadhor sangam...