Thursday, August 6, 2009

குப்புற போட்டு கொள்ளி கட்டையால சொறிஞ்சிருந்தா...


"எந்த நடிகன் கட்சி ஆரம்புச்சாலும் நான் எதிர்த்து எழுதுவேன்"னாரு விக்கி. ஜக்கி வாசுதேவ் குரல் கொடுத்தாலே, சாப்ட்டுட்டு வந்து கேக்கிறேன்னு எந்திருச்சு போறவனுங்க மத்தியிலே, விக்கியோட பேச்சு எவன கொக்கி போட்டு இழுக்கப் போவுது? "வுடுங்க சார். நம்ம அடிக்கிற நானு£று காப்பியிலே இருநு£று காப்பி ஓசியிலே பூடும். மிச்ச காப்பிய எரிய விட்டு, அந்த நெருப்பிலே ஒரு வாய் காப்பி கூட போட முடியாது. போவீங்களா"ன்னு சொல்லிட்டு எந்திரிச்சேன். "ஏங்க.. அவனுங்களுக்கெல்லாம் அறிவே கிடையாதுங்க. யாரோ எழுதிக் கொடுக்கற டயலாக்கை இவய்ங்க படிக்கிறாங்க. அப்புடி படிக்கறதை வச்சு புத்திசாலின்னு ஊரு நினைக்குது. ஆனா நான் அப்பிடி நினைக்க மாட்டேன்னு அவரு ஆவேசப்பட, "சரி, விடுங்க. கரையான் அரிக்குதுன்னு வீட்டையா சொறிஞ்சூட முடியும்"னேன் இன்னும் எடக்காக. "இப்படியெல்லாம் அவனுங்களுக்கு சாதகமா பேசுறதுக்கு எங்காவது நாண்டுக்கிட்டு சாகிற மாதிரி ஆவப்போவுது பாருங்க"ன்னு சாபம் கொடுத்தாரு விக்கி.

கண்ணகியே குரூப் டான்ஸ் ஆட வந்திருச்சு. இதில சாபத்தை கொண்டு போய் சட்டம் போட்டு மாட்ட வேண்டியதுதான்னு நான் மேலும் எடக்காக பேச, அடுத்தடுத்த வாரத்திலேயே விக்கியோட சாபம் சங்கு ஊதிட்டு வந்ததுதான் வேதனை!

எனக்கு ரொம்ப நெருக்கமான ஹீரோ அவரு. நடையா நடந்து அவர சந்திச்ச ஒரு விழா குழுவினர், சார்... நாங்க ஒரு ஃபங்ஷன் நடத்துறோம். அதிலே கண் பார்வை இல்லாதவங்களுக்கு உதவி செய்யுறோம். நீங்க அவசியம் வரணும். இன்விடேஷன்லே பேரை போட்டுர்றோம். காரு வேணும்னா வீட்டுக்கு அனுப்புறோம். ஒரு மணி நேரம். வந்திட்டு போனா போதும்னு சொல்ல, எப்போ? என்னிக்கு?ன்னு ஏராளமான கேள்வி கேட்ட ஹீரோ, "அன்னிக்கு எனக்கு ஃபேசியல் பண்ணிக்கிற வேல இருக்கு. இருந்தாலும், உங்க சோசியல் சர்வீசுக்கு முன்னாடி ஃபேசியல் மேட்டரு பெரிசு இல்லே"ன்னு சம்மதிச்சாரு.

ஃபங்ஷன் நடக்கிற நாளும் வந்திச்சு. "சார், வந்திருங்களேன் போயிட்டு உடனே வந்திரலாம். நீங்களும் வந்தா ஏதாவது சாக்கு போக்கு சொல்லிட்டு சட்டுனு கிளம்பிரலாம்"னு என்னையும் கூப்பிட்டாரு ஹீரோ. இதுவரைக்கும் போன அரசியல் மீட்டிங்குக்கெல்லாம் சும்மா போனதில்லே. கைநிறைய கடலை. காது நெறய ருசின்னு ரசிக்கிறவன் நான். கலைஞரு, வைகோன்னு நான் போன மீட்டிங்கிலேயெல்லாம் கைத்தட்டலுக்கொரு கடலை. கர்ஜனைக்கு ஒரு பொட்டலம்னு ஒரே நேரத்திலே ரெண்டு ருசிய அனுபவிச்சிருக்கேன். ஹீரோவோட போன இந்த விழாவுல இவிய்ங்க பேசுன சொற்பொழிவ கேட்டுட்டு, கற்பிழந்த தெருநாயி மாதிரி ஓ...ன்ன்னு கதறிட்டேன்னா பாருங்க.

விக்கி... உங்களோட பேனா புத்தி, சாணை புடிச்ச கத்தின்னு சத்தம் போட்டு பாராட்ட தோணுச்சு. அப்படி என்னதான் நடந்திச்சு அங்கே?

காமராஜர் ஹால். அந்த விழா ரொம்ப நெகிழ்ச்சியா இருந்திச்சு. கண் பார்வையில்லாத சில இளைஞர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைச்சிருந்தாங்க. அவங்களை பெற்றெடுத்த அப்பா அம்மாவும் அந்த விழாவுக்கு வந்திருந்தாங்க. தங்கள் பிள்ளைகள் இறைவனோட சாபத்தையும் மீறி ஜெயித்ததை அவங்க அழுத கண்ணீரோடு பார்க்க, பார்வையாளர்களையும் கண் கலங்க வைத்த விழா அது. இந்த பார்வைற்றவங்களை பாராட்டவும், அவங்களுக்கு உதவி தொகை வழங்கி இரண்டொரு வார்த்தைகள் பேசவும்தான் இந்த மாதிரி நடிகருங்களையும் அழைச்சிருந்தாங்க. டைரக்டர் சேரன் போன்ற அறிவுலக மேதைகளும் அங்கே வந்திருந்ததால், விழா நன்றாக நடக்கும்ங்கிற நம்பிக்கை எனக்கு நெறய இருந்திச்சு. ஆனா எல்லாத்தையும் கெடுத்தது, நான் போனேனே ஒரு ஹீரோவுடன். அவரேதான்.

இப்போ இவரு பேசுவாருன்னு ஸ்டேஜ்ல அறிவிக்க, பலத்த கைத்தட்டலுடன் மைக்கை பிடிச்சாரு நம்மாளு. வேதனை என்னான்னா இவரு என்ன பேச போறாரு என்றே தெரியாம, அந்த பார்வையில்லாதவங்களும் கைதட்டியதுதான்.

"இங்க இவங்களையெல்லாம் பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு. நீங்கள்ளாம் இந்த வியாதி (?) வந்ததுக்காக பெருமைப் படணும். ஏன்னா, சில பேருக்கு மெட்ராஸ் ஐ வரும். அதை பார்த்தா நமக்கும் அது தொத்திக்கும். உங்களுக்கு வந்திருக்கிற வியாதி அப்படிப்பட்டது இல்ல. அதனால் நீங்க பெருமைப்படணும்"னு ஹீரோ பேசிக்கொண்டே போக, எனக்கு நாக்க பிடுங்கிகிட்டு சாகலாமான்னு ஆயிருச்சு. இவரு கூட வந்தவன் நான்தாங்கிறதால, மேடையிலே உட்கார்ந்துகிட்டு என்னைய கேவலமா பார்க்கிறாரு சேரன்.

அந்த விழாவை ஏற்பாடு செஞ்சவங்க எறும்புக்கு கூட தீங்கிழைக்கணும்னு நினைக்காதவங்க போலிருக்கு. மைக்க பாதியிலே பிடுங்காம இவரு பேச்சை தொடர்ந்து அனுமதிச்சாங்க.

நீரோ மன்னனை குப்புற போட்டு கொள்ளி கட்டையால சொறிஞ்சிருந்தா, அடுத்த தீ விபத்துக்கு வயலின் வாசிச்சிருப்பானா? ஆனால், விழா குழுவினர் பெருந்தன்மையா நம்மாளுக்கு மாலையெல்லாம் போட்டாங்க.

இவரு கார்லே ஏறி போறதுக்கு பதிலா, நம்ம செருப்பை எடுத்து மேல் பாக்கெட்ல சொருகிகிட்டு வெறுங்காலோட நடக்கலாம்னு மனசுக்கு தோணுச்சு. விருட்டுன்னு கிளம்பி வெளியே வந்தேன்.

அப்போ பார்த்து விக்கியோட குரல் காதுல கேட்டுச்சு. "இப்படியெல்லாம் பேசுறதுக்கு எங்காவது நாண்டுக்கிட்டு சாகிற மாதிரி ஆவப்போவுது பாருங்க"

ஐயா விக்கி, இனிமே நீங்க வெறும் விக்கி இல்லே. முக்காலும் உணர்ந்த ஜக்கி வாசுதேவ் மாதிரி, முட்டாளுகளை உணர்ந்த விக்கி வாசுதேவ்!

(பின் குறிப்பு- விக்கியோ நானோ எல்லா நடிகர்களையும் குறை சொல்லவில்லை. கலைஞானி கமல், சத்யராஜ், சரத் போன்ற அறிவுஜீவிகளும் இங்கே இருக்கிறார்கள்)