Saturday, May 30, 2009

புகைச்சல் விட்ட, நகைச்சுவை திலகம்!


சந்தர்ப்பம் கிடைச்சா, இந்துத்வாவை சந்துல நுழைச்சு சந்தோஷப்பட நான் ஒன்றும் இராம.கோபாலன் இல்லே! ஆனா அவரையும் என்னையும் சந்திக்க வச்சாரு பத்மஸ்ரீ விவேக்! ஏன்? எதற்கு? எப்படி? என்னாச்சு?

இப்பிடி மொத்தமா கேள்விகள எடுத்து மூஞ்சுக்கு நேரா எறிஞ்சாலும், அந்த அவமானத்தை நினைக்கும்போது பதிலே சொல்ல முடியாதளவுக்கு மைனஸ் ஆகுது மனசு. அது ஒரு முத்திப் போன கத்திரி சீசன். அக்கினி வெயில்ல ஆளே பஞ்சராகிட்டிருக்காங்க அங்கங்கே! அந்த நேரத்திலே நானும் நண்பர் பாலுவும் ஒரு பைக்லே ஏறிகிட்டு (நாறிகிட்டுன்னும் படிக்கலாம், அவ்வளவு வேர்வை) விவேக்கை பார்க்க போனோம். "பிரசாத் ஸ்டுடியோவிலேதான் இருக்காரு. போனா பார்க்கலாமே"ன்னு புதை குழிக்கு வழி சொன்ன அந்த பொல்லாத 'கொலிக்ஸ்' கன்னத்திலே பொளிச்சுன்னு அறைஞ்சிருக்கணும். (வந்த பிறகாவது)

"நேரம் இருந்தா ஏதாவது எழுதிக்கொடுங்களேன்"னு 'குங்குமம்' எடிட்டர் சாருப்பிரபா கேட்டதாலே விவேக்கை சந்திக்க போனேன். அதுக்கு முன்னாடி குங்குமத்திலே என்ன நடந்ததுன்னே தெரியாம போனதால வந்த விளைவு அது. ஒரு படத்திலே மனோகராவில் வரும் நீதிமன்ற வசனத்தை அப்படியே ஸ்டைலா அடிச்சிருப்பாரு விவேக். அது சம்பந்தமா பேட்டியும் கொடுத்திருந்தாராம் குங்குமத்துக்கு. "சிவாஜியால் எனக்கு பெருமை"ன்னு விவேக் சொல்ல, "என்னால் சிவாஜிக்கு பெருமை"ன்னு மாத்தி எழுதிட்டாய்ங்க. சும்மா இல்லாம, 'என்னால் சிவாஜிக்கு பெருமை'ன்னு டைட்டிலும் வச்சுட்டு சன் டி.வியிலேயும் ஒரு நாளைக்கு முப்பது வாட்டி திருப்பி திருப்பி சொல்லவும் விவேக்கோட போனுக்கு ஒட்டுமொத்த சினிமா இன்டஸ்ட்ரியும் வந்து ஒரே காச்மூச்! அவ்வளவுதான்... உடம்பெல்லாம் பைல்ஸ் வந்த மாதிரி ஓன்ன்ன்ன்னு அலற ஆரம்பிச்சிட்டாரு விவேக். (தப்பில்லையே?)

எலியே எரவாணத்திலே சிக்கிக்கிட்டு தொங்குது, இதுலே கரப்பான் பூச்சி போயி வாலை நக்குனா என்னாவும்? என் நிலைமையும் அப்படிதான் இருந்திச்சு. விவேக்கிடம் போய் "குங்குமத்துக்காக ஒரு இன்டர்வியூ"ன்னு வாயை திறந்தேன். அவ்வளவுதான், அத்தனை ஆத்தாவும் மொத்தமா ஏறுனா மாதிரி மூஞ்சை வச்சிகிட்டு "எங்கேர்ந்து?"ன்னாரு. நான் திரும்பவும் "குங்குமம்"னு சொல்லவும், உதடு உண்டி வில்லு ஆயிருச்சு விவேக்குக்கு! வையாபுரி உடம்புலே ஓம்பூரிய ஒட்ட வைச்சா மாதிரி உடம்பை விறைச்சுக்கிட்டு அப்படியே எந்திருச்சாரு. வாயிலேர்ந்து சரோஜாதேவி புத்தகத்திலே வருமே, முக்கியமான 'மேட்டர்களோட' பேரு. அதுவா வந்து கொட்டுது. அவ்வளவும் என்னையில்லே, என்னைய அனுப்பியதா அவரு நினைச்சுக்கிட்டிருந்த சாருப்பிரபாவை! "அவன் பண்ணின வேலையாலே நான் சந்திச்ச பிரச்சனை கொஞ்சமா, நஞ்சமா? இவ்வளவும் பண்ணிட்டு ஆளு அனுப்புறானா, பேட்டிக்கு?
நான் நினைச்சா என்னாவும் தெரியுமா? தொலைச்சிருவேன்"னு பாய, நான் "சார் என்னைய அவரு அனுப்பலே"ன்னேன்.

அதுக்கு பிறகாவது என்னை உட்கார வைச்சி பேசியிருக்கலாம். நானும் பாலுவும் நின்னுகிட்டே இருந்தோம். பொதுவா பேட்டின்னு ரிப்போர்ட்டர்ஸ் போனா முதலில் உட்கார சொல்ற வழக்கம் எல்லா நடிகர் நடிகைகளுக்கும் உண்டு. சேர் இல்லேன்னா அவங்களும் எழுந்து நிப்பாங்க. சேர் வந்த பிறகு நம்மோடு சேர்ந்து உட்காருவாங்க. இப்படியே பழகிய எனக்கு விவேக் கொடுத்த மரியாதை, ரொம்ப கேவலமாக பட்டது. அப்படியே திரும்பி சுற்றும் முற்றும் பார்த்தா அவ்வளவு பேரும் எங்களையே பார்த்திட்டு இருந்தாங்க. "சார் பேட்டி வேணாம்னா விடுங்க. அதுக்குப்போயி எதுக்கு இவ்வளவு பேசுறீங்க? தைரியம் இருந்தா சாருபிரபாகிட்டே போயி பேசுங்களேன்"னேன். "இப்பதான் அவன் ஆபிசுக்கே நேரா போயி காதெல்லாம் நாறி போற மாதிரி திட்டிட்டு வர்றேன். பின்னாடியே ஆளு அனுப்புறானா?"ன்னாரு மறுபடியும்! (அட, இது வேறயா....? தெரியாம போச்சேடா சொக்கா...)

விருட்டுன்னு கோவிச்சுகிட்டு வெளியே வந்தோம் நானும் பாலுவும். (இப்போ பாலு தினமலர்லே இருக்கார். அப்போ அவரும் ரொம்ப கோவப்பட முடியாதபடி ஒரு இன்டர்நெட் பத்திரிகையிலே இருந்தார்) வண்டியிலே வரும்போது விவேக் மாதிரியே குரலை மாத்தி என் முகத்தை பார்த்து பாலு சொன்னாரு. "அண்ணே சொம்பு ரொம்ப நசுங்கியிருக்கே?"

"இல்ல பாலு, யாரு சொம்பு நசுங்குதுன்னு பாருங்க"ன்னு அப்போதைக்கு பதிலை சொன்னாலும், உள்ளுக்குள்ளே ஒரு காட்டுமிராண்டி கோவணத்தை அவுத்து போட்டுட்டு குய்யோ முறையோன்னு ஆடுறான். ராவெல்லாம் யோசிக்சு காலையிலே ஒரு முடிவுக்கு வந்தேன். இந்து முன்னணி தலைவர் இராம.கோபாலன் வீட்டுக்கு அப்பாயின்ட்மென்ட்டே வாங்காம போயிட்டேன்.

"ஐயா, ஒரு பேட்டி?"

"உட்காருங்க தம்பி. பேரு என்னா?" பேச ஆரம்பிச்சாரு பெரியவரு.

எங்கெங்கோ தாவி சினிமாவிலே வந்து நின்னுச்சு மேட்டர். நமக்கும் அதுதானே டார்கெட்? "ஐயா, எல்லா படத்திலேயும் இந்து மதத்தை போட்டு தாக்கு தாக்குன்னு தாக்குறாரே விவேக், அவரை கண்டிச்சு போராட்டம் எதுவும் நடத்த மாட்டீங்களா?"ன்னு நான் கேட்க, அதுக்காகவே காத்திருந்தது காவி சிங்கம்!

"ஆமா, நெறய பேரு எங்கிட்டவும் சொன்னாங்க. நான் சினிமா பார்க்கிற பழக்கம் இல்லேன்னாலும் அவங்க சொல்றதை பார்த்தா அவன் ரொம்பதான் பேசுறான். இனிமேலாவது அவன் இந்து மதத்தை இழிவு படுத்தறதை நிறுத்தணும். இல்லைன்னா, அவன் எங்கெல்லாம் ஷ§ட்டிங் போறானோ, அங்கே எங்க அமைப்பு போயி செருப்பை வீசும்"னாரு. அந்த வார்த்தையை கேட்கும்போதே நெஞ்சிலே நீலகிரி தைலத்தை தடவிய மாதிரி கு­ளுகுளுன்னு இருந்திச்சு.

செருப்படி விஷயத்தை 'ஹைலைட்' பண்ணி ஒரு சினிமா பத்திரிகையில் பெரிய கவர் ஸ்டோரியாக எழுதி வெளியிட்டேன். அவ்வளவுதான்... அலறி அடித்துக் கொண்டு விகடன் அலுவலகத்திற்கு ஓடினார் விவேக். "என்னையும் இராம.கோபாலனையும் நீங்கதான் சந்திக்க வைக்கணும்" விவேக்கின் வேண்டுகோளை அப்படியே ஏற்று இருவரையும் சந்திக்க வைத்தது ஆ.வி. அந்த பேட்டியில்தான் முதன் முதலாக தன்னை ஆத்திகன் என்றும், வடபழனி கோவிலுக்கு வாரம் தவறாமல் போகிறவன் என்றும் ஒப்புக் கொண்டார் விவேக்.

விவேக்கிற்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு வந்ததும், அவரை பாராட்டி தமிழ்சினிமா.காம் இணைய இதழில் மனசார வாழ்த்தி தலையங்கம் எழுதியதும் நான்தான்.

அப்போ நம்ம கோவாச்சி...? அது அப்பவே போச்...!

Tuesday, May 26, 2009

'காரேறி வந்த காட்டேரிங்க'


எந்த ஃபங்ஷனுக்கு போனாலும், 'காரேறி வந்த காட்டேரிங்க' மாதிரியே வர்ற நடிகைகளை பார்த்தா ஏன்தான் இப்படி வர்றாங்களோன்னு தோணும். தலைவிரி கோலத்தோட வர்ற அவங்கள, கொல வெறியோட பார்க்கும்போதெல்லாம், கோலி சோடாவ தட்டிவிட்ட மாதிரி குபுக்குன்னு கிளம்பும் வேதனை! ஏன் இப்படி வரணும்? தலைய குளிச்சோமா, முழம் பூவ வச்சோமான்னு வந்தா, குலதெய்வமேன்னு கொண்டாடுறதுக்குதான் நாங்க இருக்கோம்ல? (சர்ர்ர்ரி... சரி)

போன வாரம் 'பயம் அறியான்'னு ஒரு படத்தோட பிரஸ்மீட். ஹீரோயினும் அவங்க அம்மாவும் வந்திருந்தாங்க. கண்ணு எது, கடவாயி எதுன்னே புரியாத அளவுக்கு கூந்தல விரிச்சு முன்னாடி போட்டுகிட்டு வந்திருந்திச்சு பொண்ணு. அட, அவங்க அம்மாவாவது பொண்ணுக்கு புத்தி சொல்லக்கூடாதான்னு அந்த பக்கம் திரும்புனா, வயசுக்கு சம்பந்தமில்லாத ஒரு ஜீன்சையும், வாயுக்கு சம்பந்தமில்லாத ஒரு லிப்ஸ்டிக்கையும் போட்டுட்டு அந்தம்மா இருந்த கோலம், பயங்கரம்ம்ம்ம்டா சாமீய்! தெனோமும் இவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா பார்க்கறதாலதான் படத்துக்கு 'பயம் அறியான்'னு டைட்டில் வச்சிட்டாய்ங்க போலிருக்கு.

தலை நெறய கொண்டை, அதை சுத்தி சுத்தி மல்லிப்பூன்னு களையா வர்ற நடிகைகள் யாராவது இருக்காங்களா? அவசரப்படாதீங்க, நெஞ்சை புடிச்சிட்டு யோசிச்சாலும் ஒருத்தர் மொகம்தான் கண்ணுக்குள்ளே நிக்குது. அது, பழம் தின்னு கொட்டைய போட்டு, அந்த கொட்டையையும் தின்னு பழத்தை போட்ட பரவை முனியம்மாதான்! நானும் பார்க்கிறேன். இந்தம்மாவுக்கு பிறகு வேற யாருக்குமே இப்படி வர்ற துணிச்சல் இல்லே. இன்னொரு அம்மா இருந்திச்சு. அது தேனி குஞ்சரம்மா.

எம்ஜிஆருக்கு ஜோடியா நடிச்ச ரெண்டு நடிகைகளை அன்னைக்கு ஒரு விழாவிலே பார்த்தேன். டிஎன்ஏ டெஸ்ட்டை யூஸ் பண்ணிதான் இந்த தொல்பொருள் தோழிகளோட வயசை கண்டுபிடிக்க முடியும் போலிருக்கு. அந்தளவுக்கு மேக்கப். 'ஒட்டடை பலத்திலேதான் உத்திரமே நிக்குது'ன்னாரு நாகேஷ். அது மாதிரி, லிப்ஸ்ட்டிக்கும், பேன்கேக்கும் இல்லேன்னா இவங்க ரெண்டு பேருக்குமே வயலின் வாசிச்சிருக்கும் வருஷம்! அப்படி ஒரு 'மேக்கப்' பலத்தோட வந்திருந்தாங்க! என்ன சொல்ல வர்றேன்னா, இவங்க கூட தலையை விரிச்சு போட்டுட்டுதான் வந்திருந்தாங்க அந்த விழாவுக்கு.

பெண்கள் ஏரியாவிலே ஆம்பளைக்கு என்ன வேலைன்னு நீங்க கோவப்பட்டாலும் சரி. இவரை பத்தி இந்த இடத்திலே சொல்லியே ஆகணும். (இங்கே சொல்லாம வேற எங்கே போயி சொல்லுறதாம்?) கூட்டம் நடக்கிற இடத்துக்கெல்லாம் கூந்தல விரிச்சு போட்டுட்டு வர்ற இன்னொரு நபர் நம்ம மன்சூரலிகான். மொணக்குன்னு முன்னாடி குனிஞ்சு மொத்த முடியையும் நெத்திக்கு கொண்டு வருவாரு. அடுத்த நொடியே படக்குன்னு பின் பக்கம் சாஞ்சி எல்லாத்தையும் பின்னாடி கொண்டு போவாரு. இந்த 'சீசா' விளையாட்டுல சின்னா பின்னமாவும் மொத்த கூந்தலும். அப்படியே தலைக்குள்ளே விரலை விட்டு சிக்கெடுப்பாரு. பிறகு மறுபடியும் மொணக்குன்னு முன்னாடி... படக்குன்னு பின்னாடி... பொறந்து ஆறே மாசத்துல தலை நின்னுடுமாம் குழந்தைங்களுக்கு. நாற்பத்தி ஆறு வயசு ஆன பிறகும் தலை நிக்காத ஒரே குழந்தை நம்ம மன்சூருதான் போலிருக்கு!

இப்படி கூந்தல் பராமரிப்புல தங்க மெடலே வாங்குற அளவுக்கு 'ஹேர் போன' நம்ம தமிழ்சினிமா மோகினிங்களுக்கு சரியா வேப்பிலை அடிக்க மாட்டியா கடவுளேன்னு நான் வேண்டிக்கிட்ட நாளாவது நாளு அந்த சம்பவம் நடந்திச்சு. இதே மாதிரி ஒரு விழாவுக்கு வந்திருந்தாரு நம்ம கார்த்திகா. கருவாப்பையா கருவாப்பையான்னு 'கரு கலையுற' வேகத்துக்கு ஒரு ஆட்டம் ஆடுவாரே, அவரேதான்!

காட்டேறிங்களுக்குதான் கவலையில்லே, இவர மாதிரி தேவதைகளுக்கு என்ன வந்திச்சாம்? அன்னைக்கு பார்த்து இவரும் கூந்தல கூட்டமா அள்ளி போட்டுகிட்டு வந்திருந்தாரு. நிகழ்ச்சக்கு கொஞ்சம் லேட்டா வந்ததால உருப்படியான எடத்திலே உட்கார வைக்க முடியாம திணறுன விழா ஆளுங்க, ஓடிப்போயி இரண்டு சேரை து£க்கிட்டு வந்து போட்டாங்க. கார்த்திகாவுக்கு ஒன்ணு. அவங்க அம்மாவுக்கு ஒன்ணு. அது மரத்திலே செஞ்ச மடக்குற நாற்காலி.

விழாவை இறுதி வரைக்கும் இருந்து ரசிச்ச கார்த்திகா, கடைசியா எழுந்திருக்கும்போதுதான் "அம்ம்ம்ம்ம்ஆன்..."னு கத்துச்சு. மடக்குற இடத்திலே மாட்டிகிச்சு கூந்தல். அதுக்குள்ளே பாஞ்சு போயி, பரவசமா காப்பாத்த இறங்கிச்சு ஒரு கோஷ்டி. முடியை பிரிச்சுவிட்ட அடுத்த நிமிஷமே கார்த்திகா "லலலலல்ல்லலா..." பாடுவாங்கன்னு நெனப்பு போலிருக்கு. நல்ல வேளையா அவங்க அம்மாவே கூந்தலுக்கும் சேதமில்லாம, கார்த்திகாவுக்கும் வலியில்லாம பிரிச்சுவிட, 'தேங்ஸ்'னு காப்பாத்த வந்தவங்களை கை கூப்பி வணங்கிட்டு, கப்புன்னு ஓடிப்போச்சு கார்த்திகா. இப்படி ஆயிருச்சேங்கிற வெட்கம்தான்!

இப்போ கூட கார்த்திகா அப்படியே விரிச்சு போட்டுட்டுதான் வர்றாரு. அதென்னவோ பாஞ்சாலி சபதம் மேல, நம்ம பாஞ்சாலிங்களுக்கு அப்படி ஒரு விருப்பம்!

பின்குறிப்பு- இந்த பதிவு, நான் பெண்ணுரிமைக்கு எதிரானவன் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருந்தால், மன்னிக்கவும். நான் அப்படிப்பட்டவன் அல்ல!

Sunday, May 24, 2009

பார்த்திபன் வீசிய பந்துகள்...


தமிழ்சினிமாவிலே டி.ராஜேந்தர் ஒரு அஷ்டாவதானின்னா, பார்த்திபன் ஒரு நஷ்டாவதானி! இவரு எடுக்கிறதெல்லாம், பாக்ஸ் ஆபிஸ் படமா இருக்கனும்னுதான் நினைப்போம். ஆனா, எல்லாமே 'ஃபால்ஸ்' ஆபிஸ் படமா இருக்கும்! ஆனாலும் மனுசனை எந்த விழாவிலே பார்த்தாலும், "உற்சாகமே... உன் பேர்தான் பார்த்திபனா?"ன்னு கேட்க தோணும்.

வாயால 'சிலம்பம்' சுத்துற ஆளு பார்த்திபன். வார்த்தை சித்தர் வலம்புரிஜான் மாதிரி, இவரு வார்த்தை அக்தர்! வீசுற ஒவ்வொரு பந்துமே ராக்கெட் வேகத்திலே போய், ஜாக்கெட்லதான் விழும்! மேடையிலே பார்த்திபன் இருந்தார்னா, சுமார் நடிகையா இருந்தாலும், ஜிலீர்னு மாறி ச்சில்லுன்னு சிரிச்சே ஆகணும். அப்படி ஒரு பாராட்டு கிடைக்கும் இவருகிட்டேயிருந்து. ஒருமுறை அனுஹாசன் மேடையிலே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிகிட்டு இருந்தார். மேடையேறிய பார்த்திபன், "இந்த நிகழ்ச்சியை அனு அனுவா ரசிக்கிறேன்"னு ஏக்கமா அனுஹாசனை பார்க்க, புரிஞ்சிட்டு கைதட்டின ரசிகர்களோடு சேர்ந்து, தன்னையே மறந்து கைதட்டினார் அனு.

"ஆயுதம் விக்கிறவங்க, அவங்ககிட்டே இருக்கிற துப்பாக்கி பீரங்கியெல்லாம் கொடுத்திட்டு, இங்கேயிருந்து எதையாவது வாங்கிட்டு போக நினைச்சா, சினேகாவோட சிரிப்பை மட்டும் அனுப்பி வைக்கலாம். ஏன்னா, அதுதான் உலகத்திலேயே பயங்கரமான ஆயுதம்"னாரு பார்த்திபன். பக்கத்திலே இருந்த சினேகா பளீர்னு சிரிக்க, அந்த நேரத்திலே கரண்ட் ஆஃப் ஆகியிருந்தாலும் காப்பாற்றியிருக்கும் சினேகாவின் சிரிப்பு.

பார்த்திபனின் 'எல்லை மீறிய' பயங்கரவாதம் ஒன்றை நேரில் பார்த்து ஆடிப் போயிட்டேன். அந்தம்மா ஒரு முக்கியமான அரசியல் கட்சியிலே மிகவும் முக்கியமானவர். அழகோ அழகு! மேடை ஏறிய பார்த்தி, அந்தம்மாவை வர்ணிக்க ஆரம்பிச்சுட்டார். அவங்க பார்வையிலே கோபத்தை காட்ட ஆரம்பிச்சிட்டாங்க. நல்லவேளை, புரிஞ்சுகிட்டாரு புதுமை பித்தன். (வீட்டுக்கு போன பிற்பாடு அர்சனை, ஆறு கால பூஜையெல்லாம் நடந்திருக்கும்ங்கிறது என்னோட யூகம்)

இப்படியெல்லாம் சூரியனுக்கே 'டார்ச்' அடிக்கிற பார்த்திபனோட வாழ்க்கை மட்டும் இருட்டா போச்சு! கருத்துப்போன பார்த்திபனுக்கு கட்டி தங்கமான்னு பல்லு வெளக்காத பயலுக எல்லாம் பாஞ்சு பாஞ்சு கண்ணு வச்சதாலதான், இல்லறம்ங்கிறதுல 'ரம் இல்'லாம போச்சு போலிருக்கு. ஒசரத்திலே உரியை கட்டி, அதிலே தாராளமாக தயிரையும் வச்சு, தாவி தாவி தின்னுக்கோன்னு ஆண்டவனே ஆஃபர் வச்சுட்டான் இந்த பார்த்திப பூனைக்கு. ஹ¨ம்... என்னதான் செய்வாரு அவரும்? (இதுக்கும் மேல ரொம்ப போனா, சீதாயணத்தையும் சேர்த்து எழுதணும் என்பதால் இத்தோடு நிற்க!)

"இப்படியெல்லாம் பேசுறீங்களே, எப்பிடி சார்?"னு கேட்டேன் ஒருமுறை அவரிடம். அது ஸ்கூல்லே படிக்கும்போது ஆரம்பிச்சுதுன்னு அந்த வரலாறை வாசிக்க ஆரம்பிச்சாரு பார்த்தி. எட்டாவது படிக்கும் போது ஆங்கில பாடம் எடுத்திட்டு இருந்தாராம் வாத்தியாரு. 'நெய்தர்', 'நார்' என்ற இரண்டு இங்கிலீஷ் வார்த்தையும் எப்படி 'யூஸ்' பண்ணுறதுன்னு கிளாஸ். அப்போ பார்த்து இவரு பையிலே வச்சுருந்த மாம்பழத்தை நைசா கடிச்சிகிட்டே கிளாசை கவனிச்சாராம்.

கவனிச்ச வாத்தியாரு, செம்மையா இவரை 'கவனிச்ச'தோடு, "எப்பிடிடா இருந்திச்சு மாம்பழம்?"னு கேட்க, இவரு சொன்னாராம். "நெய்தர் காய், நார் பழம்"னு! இந்த பதிலை எதிர்பார்க்காத வாத்தியாரு கிளாஸ் பசங்க அத்தனை பேரையும் எழுந்து நின்று கைதட்ட சொல்ல, அங்கே ஆரம்பிச்சுது பார்த்திப குசும்புகள்! திடீர்னு கருப்பண்ணசாமி சிலைய அனுப்பி வைப்பாரு நிருபர்களுக்கு. இன்னொரு முறை மாடர்ன் காலண்டர் வரும் அவருகிட்டேயிருந்து. இப்படி வருஷத்துக்கு மூணு முறையாவது தனது இருப்பை பொறுப்பா சொல்லிட்டு இருக்கிற பார்த்தி, இப்போதெல்லாம் ஒரு விசிட்டிங் கார்டு கூட அனுப்பறதில்லே. (டப்பு வேகலே போலிருக்கு)

முன்பெல்லாம் வருகிற இவரது பேட்டிகளில், ஒரு பையனை தத்தெடுத்து வளர்க்கிறார் என்ற செய்தி கட்டாயம் இடம் பெறும். ஒரு முறை பார்த்திபனிடம், "ஏன் சார்? தத்தெடுத்திட்டீங்க. சந்தோஷம். அதுக்காக ஒரு பேட்டி தவறாம இதையே சொன்னா, அந்த பையன் வளர்ந்த பிறகு உங்களை அப்பான்னு கூப்பிட சங்கடப் பட மாட்டானா? என்னதான் இருந்தாலும் நாம அநாதைங்கிற உணர்வுதானே அவனுக்கு வரும்"னு கேட்டேன்.

கொஞ்ச நேரம் அமைதியா இருந்த பார்த்திபன், இனிமே அப்படி எந்த பேட்டியிலேயும் சொல்ல மாட்டேன். உங்களுக்கு நன்றின்னாரு. இப்பவும் அதை கடைபிடிக்கிறாரு.

ஒருமுறை நான் இவரை பற்றி எழுதின படுமோசமான விமர்சன கட்டுரை ஒன்றை தனது ஆபிஸ் நோட்டீஸ் போர்ட்டில் ஒட்டி, என் எழுத்துக்கும் மரியாதை கொடுத்ததை எப்படி எடுத்துக்கொள்வது? (பகைவர்க்கும் அருள்வாய் நன்நெஞ்சே டைப் போலிருக்கு) இவரை பற்றி வெளிவந்த தப்பு தப்பான செய்திகளை மட்டுமே சீக்கிரம் ஒரு தொகுப்பாக வெளியிடப் போறாராம். நம்ம கட்டுரையும் இருக்கும்னு நம்புறேன்.

Thursday, May 21, 2009

"தம்பி உசுரோடதான்யா இருக்காரு"


'தம்பி' இருக்காருன்னு 'நம்பி' இருந்த ஜனங்க மனசிலே கம்பிய பழுக்க வச்சு காயப்பட வைச்சிட்டாய்ங்க! நாலு நாளா ஊருபட்ட ரிப்போட்டர்கள் கிட்டே நாக்கு உலர விசாரிச்சதிலே நறுக்குன்னு சொல்லிட்டாங்க, "தம்பி உசுரோடதான்யா இருக்காரு"ன்னு! அதிலும் நக்கீரன்ல அவரே அந்த நியூசை படிக்கிற மாதிரி ஸ்டில்லு! இது போட்டோ ஷாப் வேலைன்னு தெரிஞ்சாலும், அத பார்த்ததிலேர்ந்து நரம்பெல்லாம் 'பிரம்பு' மாதிரி நட்டுகிட்டு நிக்குது, நன்றி கோபாலண்ணே...!

மீசையிலேர்ந்து ஒத்த முடிய புடுங்கி காவலுக்கு போட்டு வச்சிட்டு, காட்டுலே 'உடும்பு சூப்பு' குடிச்சிட்டு இருந்தப்போ ஒரு அமீபா கூட உள்ளே வரலே. அதே வீரப்பன் செத்துட்டாருன்னு தெரிஞ்சதும், ஒகேனக்கல் வரைக்கும் வந்து நக்கலடிச்சுட்டு போறாரு கன்னட எடியூரப்பா. இதே கதைதானாம் இப்போ கொழும்பிலேயும். தமிழருங்க கடையெல்லாம் சூறையாடுறதா செய்தி வருது. இருமறதுக்கே பயப்படுற பசங்கள்ளாம் உறுமுராய்ங்களாம்... தம்பி, சீக்கிரம் வெளியே வா!

ஒரு விடுதலைப்படை தலைவன் அவ்வளவு எளிதாக சிக்கிக் கொள்வாரா? தலையிலே ஊறுகிற ரெண்டு பேனுங்க சந்திச்சிக்கிட்டா கூட இப்படி கேள்வியா கேட்டு கிளியர் பண்ணிக்குதுங்களாம்.

நாலைந்து வருஷத்துக்கு முன்னாடி படிச்ச பேட்டி இது. அந்த போலீஸ் அதிகாரியோட பேரு மறந்து போச்சு. அவரே முன்னணி இதழ் ஒன்றில் இந்த பேட்டிய கொடுத்திருந்தாரு. பிரபாகரன் சென்னையில் தங்கியிருந்த நேரமாம் அது. ஒரு புல்லட் வச்சிருந்தாராம் தம்பி. (அந்த புல்லட் இல்லே, இரு சக்கர வாகனம்) அதிலேதான் சென்னையை சுற்றி வருவதெல்லாம். தம்பியை கண்காணிக்க சொல்லி, இந்த போலீஸ் அதிகாரிக்கு அசைன்மென்ட் கொடுத்திருந்தாங்களாம் உளவுத்துறையில்.

மூணு நாளா பிரபாகரன் போற இடமெல்லாம் போயிருக்காரு அதிகாரி. சரியா மூணாவது நாள். புல்லட்டில் போயிட்டு இருந்த பிரபாகரன், சோழா ஓட்டல் அருகில் போனதும் வண்டிய நிறுத்திட்டாரு. பின்னாடியே போன அதிகாரியும், கிட்டதட்ட 100 அடி து£ரத்திலே வண்டிய நிறுத்திட்டு அவரு போகட்டும். ஃபாலோ பண்ணலாம்னு வெயிட் பண்ணுறாரு. இப்படியே பத்து நிமிஷம் போச்சு. இரண்டு பேருமே நகர்றதா இல்லை. பையிலே இருந்து ஒரு தம்மை பத்த வச்சுட்டு வேற பக்கம் திரும்பி குப் குப்புன்னு புகையை விட்ட அதிகாரி, ஒரு சிகரெட்டை முழுசா இழுத்திட்டு திரும்பினா...? பக்கத்திலே பிரபாகரன். "என்ன சார்?"னு தோளில் கையை போட்டு அதிகாரியோட பேர சொல்லி பேச ஆரம்பிச்சாராம். "நான் உங்களை மூணு நாளா கவனிச்சுட்டு வர்றேன். என்னை ஃபாலோ பண்றீங்க. வேணாம். இனிமேலும் ஃபாலோ பண்ணினா வேற மாதிரி விளைவுகளை சந்திப்பீங்க"ன்னாராம். அந்த சம்பவத்தை பல வருடங்களுக்கு பிறகு நினைவு கூர்ந்த அந்த அதிகாரி "அந்தாளுக்கு உடம்பு முழுக்க கண்" என்று வியந்திருந்தார். எப்பவுமே அலர்ட்டா இருக்கிற ஒரு போர்ப்படை தலைவன், எப்படி கடைசி நேரத்தில் இப்படிப் போய் மாட்டிக் கொள்வான்? லாஜிக் இடிக்குதே!

விடுங்க, ஃபாலோ பண்ற விஷயத்தை பேச ஆரம்பிச்சதும் இன்னொரு விஷயம் நினைவுக்கு வருது. நாம சிரிச்சு ரொம்ப நாளாச்சுங்கிறதால, இந்த சிரிப்பு ஸ்பெஷல்.

ராஜீவ் கொலைக்கு சில வருடங்களுக்கு பிறகு நடந்த சம்பவம் இது. நான் தராசு புலனாய்வு இதழில் வொர்க் பண்ணிட்டு இருந்த நேரம்.... ஒரு க்ரைம் சீரியல் எழுத ஆரம்பிச்சிருந்தாரு ஆசிரியர் ஷ்யாம். அங்கே சுகுமார்னு ஒரு நபர். ஆபிஸ் பாய், அக்கவுன்டன்ட், பில் கலெக்டர், மானேஜர்னு எல்லா வேலைகளையும் கலந்து கட்டி செய்யுற ஆல் இன் அழகுராஜா இவரு. இன்பிரியாரிடி காம்ப்ளக்ஸ், சுப்பிரியாரிடி காம்ப்ளக்ஸ்னு கேள்விப்பட்டிருப்பீங்க. இவரு, சின்சியாரிடி காம்ப்ளக்ஸ்(?) உள்ள ஆளு. ஷ்யாம் 'ம்' ன்னு சொன்னா, அதுக்கும் ஒரு அர்த்தம் கண்டுபிடிச்சு ஒரு வேலையை செஞ்சுட்டு வந்து நிக்கிற தங்க தளபதி.

இவரிடம்தான் ஒரு வேலை சொன்னார் ஷ்யாம். "யோவ், போயி வித விதமா துப்பாக்கி படம் போட்ட புக்ஸ் ஏதாவது இருந்தா வாங்கிட்டு வா. லே-அவுட் பண்ணும்போது யூஸ் ஆவும்"னாரு. சின்சியரா மவுண்ட்ரோட்லே இருக்கும் புக் ஸ்டால் ஒன்றுக்கு போன சுகுமார், "துப்பாக்கி படம் போட்ட புக்ஸ் எங்கே கிடைக்கும்? எந்த ரேக்லே வச்சிருக்கீங்க?" என்று கேட்டாரு. ஆளு ஒரு மாதிரி இருக்காரு. துப்பாக்கி படம் போட்ட புக்ஸ் கேட்கிறார். விடுதலைப்புலியா இருப்பாரோன்னு நினைச்ச கடை ஆளுங்க, "இன்னைக்கு ஸ்டாக் இல்லே. நாளைக்கு வாங்க. கலெக்ட் பண்ணி வச்சுருக்கோம்"னு சொல்லிட்டு, விஷயத்தை போலீஸ் காதிலே போட்டுட்டாங்க. சரியா, சுகுமார் வர்ற நேரமா மஃப்ட்டியிலே வந்திருச்சு போலீஸ். உடனே பிடிச்சா இவரு மட்டும்தான் மாட்டுவாரு. இவரை ஃபாலோ பண்ணினா, ஒரு கூட்டத்தையே பிடிக்கலாமேன்னு அவங்க நினைப்பு.

நைசா ஃபாலோ பண்ண ஆரம்பிச்சாங்க. வெயிலு ஓவரா இருக்கு. ஓரு பீர் போட்டுட்டு போனா சுகமா இருக்குமேன்னு கடைக்குள்ளே பூந்திட்டாரு சுகுமார். போலீசும் நைசா பின்னாடியே போச்சு. பீர் அடிச்சிட்டு அப்படியே எழுந்து வெளியே போன சுகுமார், பக்கத்திலேதானே மோட்சம் தியேட்டர் இருக்கு. ஒரு 'பிட்' படம் பார்க்கலாமேன்னு உள்ளே போயிட்டாரு. இப்போதான் போலீசுக்கே பெரும் குழப்பம். என்னடா, போராளின்னு நினைச்சா இவன் சோக்காலியா இருப்பாம் போலிருக்கேன்னு நினைச்சுது. ஆனாலும், நம்ம ஃபாலோ பண்ணுறதை தெரிஞ்சுகிட்டு வித்தை காட்டுறானோன்னும் டவுட். விடாம இரண்டு நாளா ஃபாலோ பண்ண ஆரம்பிச்சாங்க. ஒரே குழப்பம் அவங்களுக்கு.

தராசு ஆபிசுக்கு போறான். செக்ஸ் படம் பார்க்குறான். தண்ணியடிக்கிறான். மறுபடியும் துப்பாக்கி சம்பந்தமாக புத்தகங்களை பிளாட் பார்ம் கடையிலே தேடி திரியுறான். யாராக இருக்கும்?னு பயங்கர கன்பியூஷன். கடைசியா தராசு ஆசிரியரிடமே சொல்லி எச்சரிச்சுடுவோம். அவரும் அலர்ட்டா இருப்பாரேங்கிற நோக்கத்திலே ஒரு நாள் ஆபிசுக்கே வந்திட்டாங்க. விஷயத்தை முதல் நாளில் இருந்தே ஆரம்பிச்சு விபரமாக சொல்ல சொல்ல, விழுந்து விழுந்து சிரிச்சாரு ஷ்யாம். "இவரா பாருங்க"ன்னு பெல் அடிச்சு சுகுமாரை உள்ளே கூப்பிட்டாரு. அவங்களும் இவருதான்னு அடையாளம் காட்டினாங்க.

"இவரு எங்க ஆபிஸ்லே வொர்க் பண்றவர். நான்தான் துப்பாக்கி சம்பந்தப்பட்ட புத்தகங்களை வாங்கிட்டு வரச்சொன்னேன்" என்று விளக்கிய ஷ்யாம், "இவரு பிட்டு படம் பார்க்கறதை போட்டு கொடுத்திட்டீங்க. நன்றி"ன்னாரு. அப்போ சுகுமார் முகத்தை பார்க்கணுமே?!

Tuesday, May 19, 2009

நண்பர்களே,

உலகத்தையே உலுக்கிய ஒரு 'வீர மரணம்' என்னையும் அதிர வைத்திருப்பதால், பதிவுகள் போடுகிற மனநிலையில் இல்லை. ஓரிரு நாட்களுக்கு பிறகு வழக்கம்போல் எழுதுவேன்.

இப்போதைக்கு மன்னிக்கவும்

Sunday, May 17, 2009

பிரகாஷ்ராஜின் ''ச்செல்லங்கள்...''


"ச்செல்ல்ல்ல்ல்ல்ல்லோம்..., நான் அப்பிடி சொல்லலையே செல்ல்ல்ல்ல்லோல்ம்"னு நிருபர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பிரகாஷ்ராஜ் பதில் சொன்னப்போ, புதுசா சினிமா ரிப்போர்ட்டிங்குக்கு 'ஷிப்ட்' ஆகி வந்திருந்த ஒரு அரசியல் நிருபருக்கு ஹார்ட் அட்டாக்கே வந்திருச்சு. பிரஸ்மீட் முடிஞ்சதும், "என்னங்க இந்தாளு, ஒரு ரிப்போர்ட்டரை ச்செல்லம்ன்றாரு. இவங்களும் சும்மாயிருக்காய்ங்க. ஒன்னுமே புரியலேயே?"ன்னாரு.

"இங்கே எல்லாமே அப்படிதான். "என்னா தலைவா? நேத்தெல்லாம் து£க்கமே இல்லை போலிருக்கு, கண்ணெல்லாம் ரெட்டா இருக்கு? அவுட்டோர்லே போய் இன்டோர் கேம் ஆடிட்டீங்களா?"ன்னு கேஷ¨வலா பொடி மட்டைய மூக்குக்கு நேரா நீட்டி 'தும்ம' வைப்பாய்ங்க நம்ம ரிப்போர்ட்டருங்க. பெரிசா கண்டுக்க மாட்டாய்ங்க ஹீரோக்களும். அதுக்கு பதிலா இப்படி கூட்டத்திலே போட்டு குமுறும்போது நம்மாளுகளும் திருப்பி கண்டுக்க மாட்டாய்ங்க. இது ஒரு மாதிரி உலகம்ங்க"ன்னு சொல்லி புரிய வெச்சேன்.

பூஞ்சிட்டு கன்னங்களேன்னு ஓடிவந்து, பொன் வண்ண கிண்ணங்களை பரப்பி வைக்கிற அநேக ஹீரோக்கள், வளர்ந்தப்புறம், "போங்கடாங்"னு போறது சினிமாவிலேதான்!

டூயட்னு பேரு போட்ட டாடா சீராவிலே, 'சீசாவை' நிரப்பிக்கிட்டு ரிப்போர்ட்டருங்களோட ரூமுக்கே வந்து 'தண்ணீரா' அன்பு செலுத்துற பிரகாஷ்ல ஆரம்பிச்சு, "ஹேய்..."னு வினாடியிலே கைகுலுக்கி வேற பக்கம் திரும்பிகிட்டு 'வென்னீரா' வெறுப்பு காட்டுற பிரகாஷ் வரைக்கும் பார்த்துகிட்டேதான் இருக்கேன்.

பிரகாஷ்ராஜ் வில்லனா? ஹீரோவா? குணச்சித்திர நடிகரா? காமெடியனா?ன்னு கேட்டா, எல்லாந்தான்னு சொல்லுவான் ரசிகன். பக்கத்திலே இருந்து பார்க்கிற எங்களை கேட்டாலும் "புரியலையே எசமான்"னுதான் சொல்லுவோம்.

போன வாரம் குடும்ப நல கோர்ட்டுக்கு வந்திருந்தாரு பிரகாஷ்ராஜ். அதுவும் தனது 'குடும்பத்தோட(!?) எல்லாம் விவாகரத்துக்காகதான். "ச்செல்லோம்"னு எத்தனை தடவ பொண்டாட்டிய கூப்பிட்டிருப்பாரு? அத விடுங்க, பாசத்தை பாக்கெட்ல அடைச்சுட்டு வந்ததை கண்ணால பார்த்து, கண்ணு வச்சவன் நானு. டைரக்டர் பாலா கல்யாணத்துக்கு மதுரைக்கு வந்திருந்த பிரகாஷ்ராஜ், "வாங்கடா அம்மா மெஸ்சுக்கு போகலாம்"னு தரணியையும், ஸ்ரீகாந்தையும் கூட்டிட்டு கௌம்புனாரு. கூடவே நானும்! (அழைக்கப்பட்ட விருந்தாளியாகதான்!)

மதுரையிலே கும்பிடுறதுக்கு மீனாட்சின்னா, கொட்டிக்கறதுக்கு அம்மா! வறுத்து வச்ச மட்டனையும், வாட்டி வச்ச சிக்கனையும் போட்டோ எடுத்து மாட்டியிருப்பாய்ங்க. கூடவே, தமிழே உணவுன்னு வாழுர வைரமுத்துவோட போட்டோவும், கிராமமே க்ளாஸ்னு தமிலிஷ்லே பேசுற பாரதிராஜாவோட போட்டோவும் மாட்டியிருப்பாய்ங்க. இவங்க மட்டுமில்லே, ஒட்டுமொத்த கோலிவுட்டும் அங்கதான் இருக்கும். போட்டோவிலே பின்னாடி இவங்களும், முன்னாடி மூணு அடி நீள இலையும் இருக்கிற மாதிரியே எடுத்திருப்பாய்ங்க எல்லா போட்டோவையும். தமிழ்சினிமாவிலே ரொம்ப பேரு இங்கே போயி நாக்கை நனைச்சவங்கதான்! அப்படிப்பட்ட அம்மாவிலே பறக்கிறதையும், பாயறதையும் பறந்து பறந்து சாப்பிட்டு முடிச்சிட்டு, மறக்காம பிரியாணி பார்சல் வாங்கிக்கிட்டாரு பிரகாஷ்ராஜ். "ச்செல்லத்துக்கு பிடிக்கும்"னு அவரு சொன்னது அவரோட லலிதகுமாரிய! சூடு ஆறுவதற்குள்ளே ஃபிளைட் புடுச்சு சென்னைக்கு ஓடி போனப்போ என் கண்ணுக்கு தெரிஞ்ச பிரகாஷ்ராஜை ஒரு கேரக்டரா பார்த்தேன்.

ஒரு தடவ பேட்டிக்காக வீட்டுக்கு போயிட்டேன். தரையிலே உட்காந்து ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம். காலே மரத்துப் போச்சு. முடிச்சுட்டு எழும்போது 'ஸ்லிப்' ஆயிருச்சு காலு. அவ்வளவுதான், பாஞ்சு பிடிச்சுகிட்ட பிரகாஷ், "கொஞ்சம் கால நனைங்க. சரியாயிடும்"னு தண்ணி எடுக்க ஓடினாரே, அப்போ அவர வேற ஒரு கேரக்டரா பார்த்தேன்.

கரு.பழனியப்பன் கல்யாணத்திலே வெளியே நின்னு ஜாலியா பேசிட்டு இருந்தவருகிட்டே ஓடிவந்து ஆட்டோகிராப் கேட்ட 20 வயசு பையனை, "பேசிட்டு இருக்கேன்லே..."னு சொல்லிகிட்டே விரட்டிப் பிடிச்சு முதுகுல செம்மையா அறைஞ்ச பிசாசு குணத்தையும் பார்த்தேன்.

விதவிதமா நடிக்கிற நல்ல நடிகன்னு ஊரு ஒலகமே சொல்லுது. இப்போ சொல்லுங்க, அவரு எங்கே நடிக்கிறாரு?

Saturday, May 16, 2009

அஜீத் என்ற நிராயுதபாணி?


திரும்ப திரும்ப அஜீத்துதானா? வேற மேட்டருக்கு போய்யா...ன்னு பின்னாடி தார்குச்சியால 'நறுக்' போட்ட கலையரசன்ங்கிற நண்பருக்கு, "அலோவ், ஸாரு... இந்த மேட்டர மட்டுமாவது சொல்லி முடிச்சிரலாம்னு நெனக்கிறேன். மேலே போலாமா...?"

எங்க விட்டேன்? ஆங்... நார்த் மெட்ராஸ்லே! துக்கத்துக்கு போன அஜீத்தை, வெக்கத்த பார்க்காம விரட்டி விரட்டி ஆட்டோகிராஃப் கேட்டுச்சு மக்க படைங்க! "இங்கே இருந்தா டிஸ்டிரப் பண்ணுவாங்க. நீங்க கௌம்புங்க"ன்னு இறந்தவரோட பிள்ளை வந்து ரிக்வெஸ்ட் பண்ண, அப்படியே டெட் பாடியோட முகத்தை பார்த்து பிளாஷ்பேக்குக்கு போனாரு அஜீத். கண்ணிலே விழுந்த கவலை து£சியை கையால துடைக்கும்போதே, அந்த கெட்ட நாள் மூளைக்குள் பாஸ் ஆகி, ஒரு குண்டான் நிறைய குளோரோபாஃர்ம் கொடுத்தது.

சந்தையிலே நின்னா தராசு. பண்ணையிலே நின்னா மிராசுன்னு வாழ்ந்த மனுசனை, நிராயுத பாணியா நிக்க வச்சுது நேரம்! ஜாதகத்தை ரொம்பவே நம்புற மனுசன் அவரு. ஆனாலும், தன்னோட கனவு படமா நம்பிக்கிட்டு இருந்த 'நான் கடவுள்' படத்திலே இருந்து நீக்கப்படுவாருன்னு ஒரு சோசியன் கூட முன்கூட்டியே சொல்லலே அவரிடம். "வாங்கிய அட்வான்சை இன்னிக்கு இரவுக்குள்ளே திருப்பி கொடுத்திருங்க"ன்னு சொல்லிட்டாங்க. அதை கூட புரட்டி கொடுத்திரலாம். ஆனா படம்? வண்டியை எடுத்துகிட்டு ராத்திரி முழுக்க அலைஞ்சாங்க தலயும் நிழலும். சினிமாவிலே மட்டும்தான் நன்றியை சப்பாத்தியா சுட்டு நாகரீகத்தை சைட் டிஷ்ஷா வச்சுகிட்டு 'சரக்கு' அடிப்பாய்ங்க! போன இடத்திலே எல்லாம் "அட நாலு நாளைக்கு முன்னாடி சொல்லியிருந்தா கொடுத்திருப்பேனே"ன்னு உச் கொட்டினாய்ங்க. கடைசியா அவரு தட்டிய இடம், இதோ இங்கே டெட் பாடியா கிடக்கிறாரே... இவரு வீட்டு கதவை!

மொதல்ல ஜில்லுன்னு தண்ணி. பிறகுதான் மற்றதெல்லாம்னு சொன்னவரு, அடுத்த அரை மணி நேரத்திலே ஜில்லுன்னு குளிர வைச்சாரு அஜீத்தை. பெட்டி நிறைய பணம். அதுவும் கேட்ட பணத்தில் சில்லரை குறையாமல்! "போய் கொடுங்க. மத்ததை நாளைக்கு பேசிக்கலாம்" அப்படிப்பட்ட மனுஷன் செத்துக் கிடக்கும்போது கூட்டத்துக்கும் கோஷத்துக்கும் அஞ்சி ஓடுறதா? "வேணாம். நான் இருக்கேனே"ன்னாரு அஜீத். ஆனாலும் விடாப்பிடியாக கெஞ்சினார் செத்துப்போனவரோட பிள்ளை. காரை எடுத்துக்கொண்டு டிரைவ் இன் ஹோட்டலுக்கு வந்தவர், வீட்டுக்கு போக வேணாம். எடுக்கிற நேரத்திலேயாவது போவோம்னு அங்கேயே காருக்குள்ளே உட்கார்ந்திருந்தாரு. சரியா எடுக்கிற நேரத்திலே மறுபடியும் போய் கலந்து கொண்டவர், நடந்தே சுடுகாடு வரைக்கும் போனார். வாக்கிங்கையே கார்லே போற சில பணக்கார சேட்டுங்க, அஜீத் நடந்து வர்றதை ஆச்சர்யமா பார்த்தாங்க. இவரு கலந்துகிட்டதாலேயே சவ ஊர்வலம் பேரணியானது.

'கடவுள்' கஷ்டத்தை கொடுப்பான். சந்தோஷத்தை கொடுப்பான். அஜீத்துக்கு அட்வான்சை கொடுத்திருந்தான். பணத்த வாங்கிய மறுநாளே அட்வான்சை திருப்பி கொடுத்திட்டு, அப்படியே காரை நேரா அடையார் கேட்லே இருக்கிற சலு£னுக்கு விட சொன்னார் அஜீத். தோள் வரைக்கும் வளர்ந்திருந்த முடியை நறுக்க சொல்லும் போது அவரை அறியாமல் கண் கலங்கினார். சும்மாவா பின்னே? பரமசிவம் படத்துக்காக பி.வாசு இந்த முடியை வெட்ட சொன்னப்போ கூட, "இல்லை சார். நான் கடவுள் என்னோட கனவுப்படம். அந்த படத்துக்காக வளர்க்கிற இந்த முடியை வெட்ட மாட்டேன்"னு சொன்னவரு, இப்போ கண்ணுக்கு எதிரே விழுற முடியை பார்க்கும்போது நிஜமாவே கண்கலங்கினாரு.

சார் கண்ணுல பட்ருச்சா?ன்னு கவலையோட கேட்ட சலு£ன் காரருக்கு அஜீத் சொன்ன பதில் "ஆமாம் கண்ணு பட்ருச்சு!" இப்பவும் அஜீத் 'நான் கடவுள்' படத்தை பார்க்கவே இல்லையாம். பார்க்கலாம்னு அழைச்ச நண்பர்களிடம் அவரு சொன்னா வார்த்தை,

"நான், கடவுளை பார்த்திட்டேன்!"

சொல்ல வேண்டிய லட்சம் கோபங்களை ஒரே ஒரு வார்த்தையில் அடக்கிவிடலாம். அஜீத் சொன்ன இந்த ஒரு வாக்கியத்திற்குள் இருந்தது லட்சமா, கோடியா...?

Thursday, May 14, 2009

அஜீத்தின் தொப்பையும், அடங்காத கோபமும்!


விட்டா, அஜீத்துக்கு மன்றம் தெறக்கிறோம்... வர்றீயளான்னு யாராவது கேட்டாலும் ஆச்சர்யபடுறதுக்கு இல்லே. அப்படி நானும், சூரியனும் மாத்தி மாத்தி மருவாதி பண்ணிட்டு இருக்கோம் 'தல'ய்க்கு!

ஏன்? எதுக்கு?ன்னு ஓய்வு பெற்ற நீதிபதிய வச்சு விசாரிக்க சொல்லிறாதீங்கப்பு. சினிமாவுல மனுஷன பார்க்குறதே கஷ்டம். மனுசனாவும் இருந்துகிட்டு, நடிகனாவும் வாழ்ந்துகிட்டு இருக்கிற ஒரு ஆள பற்றி எழுதினா, படிக்கிற நடிகருங்களுக்கு 'பந்தா' பண்ணுற பழக்கம் விடுமே? அதுக்காகதான் இந்த அல்டிமேட் பதிவுகள்! ஊரு ஒலகத்துக்கெல்லாம் இவரு 'தல'யா இருந்தாலும், ஓராயிரம் பேருக்கு தல(£)ய்லாமா! கர்...புர்...னு சைட்லே கேட்கிற சவுண்டுக்கெல்லாம் நாங்க மசியறதா இல்லை மக்களே...

எலக்ஷன் அன்னைக்கு காலையிலே ஏழரை மணிக்கெல்லாம் வந்து க்யூவிலே நின்று ஓட்டு போட்டார் அஜீத். ஸ்டில்லை பார்த்தாலே தெரிஞ்சுருக்கும். கொஞ்சம் நீளமான க்யூதான். அங்கே நின்னவங்க "நீங்க நேரா போயி வோட்டு போடுங்க சார். எதுக்கு க்யூவிலே நிக்கிறீங்கன்னு கேட்ட பிறகும் பரவாயில்லே"ன்னு சொன்னாராம். அவரு அப்படிதான்!

நிஜத்தை ஏத்துக்கிற பொறுமையும், நெருப்பை தாங்கிக்கிற வலிமையும் உள்ளவரு. இப்போதான் அவரு ஸ்மார்ட்! நாலைஞ்சு படங்களுக்கு முன்னாடி, கட்டி வைச்ச மெத்த மாதிரி 'கனம்ம்ம்மா' இருந்த நேரம். அவரு தொப்பைய கிண்டல் அடிச்சு ஒரு ஹீரோ தனது படத்திலே ஒரு ஆட்டத்தையே வைச்சிருந்தாரு. இவருகிட்டே பேட்டின்னு போனவங்க எல்லாரும், "தொப்பைய கொறக்கலாமே?"ங்கிறதை தொடர் கேள்வியா கேட்டிருப்பாங்க போலிருக்கு. நான் போயிருந்த நேரமும் அப்படி ஒரு கேள்வியை கேட்டுட்டு அடக்கமா உட்காந்திருந்தாரு ஒரு நிருபர். நான் கொஞ்சம் லேட்டா போனதால அவரு எனக்கு முன்னாடி என்ன கேட்டார்னே தெரியாம, "போன படத்தை விட இந்த படத்திலே கொஞ்சம் ஸ்மார்ட்டா இருக்கீங்க"ன்னு சொன்னேன்.

மழை பெஞ்சது தெரியாம, "தண்ணி லாரி புட்டுகிச்சா? ஒரே ஈரமா இருக்கே"ன்னு கேட்டா எப்படி பார்ப்பீங்க? அப்படி பார்த்தாரு அஜீத். கிண்டல் பண்றானோங்கிற கோபமும் இருந்திச்சு அந்த பார்வையிலே. "இப்போதான் இவரு தொப்பைய குறைங்கன்னாரு. பின்னாடியே நீங்க வந்து ஸ்மார்டுங்கிறீங்க"ன்னு சொல்லிட்டு என் கண்ணுக்குள்ளே பூந்து மனச நோண்ட ஆரம்பிச்சாரு.

"இவர விடுங்க. நீங்க இந்த படத்திலே அழகுதான்" என்றேன் விடாப்பிடியாக. இப்போ லேசா முகத்திலே சந்தோஷம் மின்ன, "இல்லே சார். எனக்கு மட்டும் ஆசையா, இப்படியிருக்கனும்னு? என்னோட முதுகு வலிக்காக ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுறேன். தினமும் மூணு. ஸ்டீராய்டு சாப்பிட்டா உடம்பு வெயிட் போடும். அதை குறைக்கணும்னா எக்சர்சைஸ் பண்ணனும். என் முதுகு தண்டு பிரச்சனையினாலே அது முடியாது. தயவு செஞ்சு என்பிரச்சனைய புரிஞ்சுக்கோங்க" என்றார். நான் மீண்டும் விடாப்பிடியாக "இப்போ உங்களை அழகில்லேன்னு யாரு சார் சொன்னா? கொஞ்சம் தொப்பையை குறைங்கன்னு சொல்றதுக்கும், அழகில்லைன்னு சொல்றதுக்கும் நிறைய டிபரன்ஸ் இருக்கே? இப்பவும் சொல்றேன். இந்த படத்திலே நீங்க அழகுதான்"னு சொன்னேன். இந்த வார்த்தைகள் அவருக்கு குளுக்கோஸ் ஏத்தியிருக்கணும். "அப்பிடியா, தேங்ஸ்"ன்னாரு. இத சொல்லும்போது அவரு இன்னும் அழகா இருந்தாரு.

அந்த மீட்டிங் என்ன பண்ணுச்சோ, சில படங்களுக்கு பிறகு அவரை பார்க்கும்போது, மிஸ்டர் ஸ்மார்ட்டாக மாறியிருந்தாரு அஜீத். பார்த்தீங்களா, இப்படிதான் ட்ராக் மாறி எங்கெங்கோ போயி..., க்யூவிலே வெயிட் பண்ணிய விஷயத்துக்கு வர்றேன்.

நார்த் மெட்ராஸ்சை இப்போ நாத்த மெட்ராஸ்சுன்னு மாத்திரலாமான்னு கேட்டா, அங்கே உள்ள ஜனங்களே "பேர் பொருத்தம் பெஸ்ட்"டுன்னு சொல்லுவாங்க. அந்தளவுக்கு அழுக்கும், அலங்கோலமுமாக கிடக்கிற அந்த ஏரியாவுக்கு போயிருந்தார் அஜீத். பில்லா ரிலீசுக்கு முன்னாடின்னு நினைக்கிறேன். (தகவல் உபயம் நான் சொன்னேனே, நிழலு நிழலுன்னு ஒருத்தரு. அவரேதான்)

போனது ஒரு சாவு வீட்டுக்கு. நண்பரோட பழைய கார்லே இவரு போயி இறங்க, இந்த காருக்குள்ளே இவரான்னு ஆச்சர்யப்பட்ட ஜனங்க, ஆஹா, ஓஹோன்னு வாயாலேயே எஸ்எம்எஸ் அனுப்பி, அந்த ஏரியா முழுசும் கட்டுக்கடங்காத கூட்டம். எழவு வீட்லே உழவு மாட்ட விலை கேட்ட கதையா, ஆட்டோகிராஃப் கேட்டு பாதி பேரு, அடுத்த படம் என்னான்னு கேட்டு மீதி பேரு... ஒரே இம்சை. ஆனாலும் நிஜமான கவலையோடு உட்கார்ந்திருந்தாரு அஜீத்.

சம்பந்தப்பட்ட வீட்டு ஆளுங்களே, "சார் நீங்க போயிருங்க. இல்லேன்னா இவங்க இம்சை பண்ணுவாங்க"ன்னு சொன்னாங்க. என்ன செஞ்சாரு அஜீத்?

அடுத்த பதிவிலே சொல்றேனே? முக்கியமா அவரு நான் கடவுளுக்காக முடி வளர்த்ததையும், அதை எடுக்கறதுக்கு முன்னாடி நடந்த எமோஷனல் சம்பவத்தையும் சொல்லுறேன்... ப்ளீஸ் வெயிட்!

Wednesday, May 13, 2009

மீனாவின் 'இடை' தேர்தல்!


நான் சந்திச்ச அநேக நடிகைகளுக்கு 'குரலு மேல உரல' போட்டா மாதிரி 'பயங்கர' வாய்ஸ்! பல நடிகைகங்க அண்டங்காக்கா கொண்டக்காரிகளா இல்லேன்னாலும், அண்டங்காக்கா தொண்டக்காரிகளா இருந்தாங்க! இப்படிப்பட்ட சிம்மக்குரலிகளிடம் பேட்டியெடுக்க போனில் அப்பாயின்ட்மென்ட் வாங்கும்போது அது நிஜ 'அப்பா'யின்மென்ட் ஆகி, நான் டிஸ் அப்பாயின்மென்ட் ஆன கதையெல்லாம் உண்டு. எதிர்முனை 'ஹலோ'விடம் ரொம்ப கேஷ§வலா, "சார் உங்க பொண்ணை கொஞ்சம் கூப்பிடுங்களேன்"னு சொல்லுவேன். "பொண்ணுதான் பேசுறேன். சொல்லுங்க"ன்னு கேட்கிற பாக்கியம், இந்த பேனாக்காரனுக்கு மட்டுமே வாய்ச்ச பெருத்த அசௌகர்யம்.

இவங்களுக்கு மத்தியிலே இவரை மட்டும்தான் இப்படி கேட்க தோணும். "நடிகை மீனா, உங்க குரலென்ன நந்தவனத் தேனா?"

ரஜினி அங்க்கிள்னு கூப்பிட்டுகிட்டே ஓடிவர்ற அந்த குழந்தை மீனா, உருண்டு திரண்டு ஊரையே மயங்க வைச்சப்போவும் அதே மழலைக் குரல்தான். கண்ணை மூடிட்டு குரலை மட்டும் கேட்டா, இப்பவும் படுக்கையிலே 'மூச்சா' போவாங்களோன்னு சந்தேகம் வரும்ன்னா பாருங்களேன்! (ஓவராயிருச்சோ? விடுங்க பார்த்துக்கலாம்...)

இடைத்தேர்தல் நடந்தா மொத்த ஜனங்களின் பார்வையும் அந்த ஒரு தொகுதியிலேயே இருக்குமே? அப்படி மொத்த சினிமாக்காரர்களின் பார்வையும் மீனாவின் 'இடை' தேர்தலில் குவிஞ்சு கிடந்த நேரம் அது. ஒருபக்கம் பார்த்திபன் கவிதை எழுதுறாரு. 'மீனே கண்ணா? கண்ணே மீனா?' அப்பிடின்னு! இன்னொரு பக்கம் 'தஞ்சாவூரு மண்ணெடுத்து தாமிரபரணி தண்ணிய விட்டு'ன்னு மீனாவ வர்ணிச்சு எழுதிய சினிமா பாட்டை முன்னணி டைரக்டர் ஒருத்தரு தினமும் திருக்குறள் மாதிரி ஒப்பிக்கிறாரு. "ஹே, அது... வந்து... மீனா... என்னத்த சொல்றது... அவங்க..."ன்னு கார்த்திக் கடலை முட்டாயி மெல்லுராரு. சொன்னவன் பாதி பேரு. சொல்லாதவன் மீதி பேருன்னு எல்லாரையும் சேதுவாக்கிட்டு, அழகிய அலையா மீனா உலா வந்த நேரத்திலேதான் நான் அவங்களை பார்க்க போயிருந்தேன்.

இங்க் பில்லர்லே இங்கிலீஷை நிரப்பி, அதிலே ரெண்டு சொட்டை தமிழ் குடுவையிலே விட்டு, கலக்கி கலக்கி மீனா பேசுனதிலே, பேனாவ பிரிச்சு குறிப்பெடுக்கவும் மறந்து போச்சு எனக்கு. அவரு மேல ஒரு டைரக்டரு பிரியமா இருக்கறதாகவும், இரண்டு பொண்ணுக்கு அப்பாவான அவரு, இவரு நெனப்புல வீட்டுக்கே கூட போகாம ஆபிஸ்லேயே து£ங்குறதாவும் கேள்விப்பட்டதை மீனாட்ட கேட்டா, "ஐயோ பாவம்"னு சொல்லிட்டு "அப்பிடியா"ன்னும் கேட்டுச்சு.

முன்னணி வார இதழ்லே இவரையும், அவரையும் இணைச்சு வர்ற கிசுகிசுவை (அதுவும் இரண்டு வாரத்துக்கு ஒரு தடவ...) படிச்சீங்களான்னு கேட்டுட்டு அவரு வாயையே பார்த்தேன். "படிச்சேன். ஏன்தான் இப்படி எழுதறாங்களோ? அதிலே கொஞ்சம் கூட உண்மையில்லே தெரியுமா?"ன்னுச்சு. "உண்மையில்லேங்கறது எனக்கும் தெரியும்"னு நான் சொன்னதும், படக்குன்னு எழுந்து உட்கார்ந்த மீனா, "அப்புறம் ஏன் எழுதுறாங்க? நீங்களாவது சொல்லுங்களேன்"னுச்சு அப்பாவியாக.

நான் சொன்ன உண்மையை நெசமாவே தெரியாதது மாதிரி கேட்டுச்சா, அல்லது தெரிஞ்சே நடிச்சுதாங்கிறது மீனாவுக்கே வெளிச்சம். "அந்த பத்திரிகை ரிப்போர்ட்டரை ஒரு நாளு கேட்டேன். இப்படி எழுதறீங்களே, அதெல்லாம் நெசந்தானா?"ன்னு. "அது பெரிய இம்சை தம்பி. அத எதுக்கு இப்போ கேக்கிறீங்க"ன்னு ஒரு பதில சொல்லிட்டு எஸ்கேப் ஆக பார்த்தாரு. 'செல்லமா' அவரு 'மீசையை' பிடிச்சு இழுத்து கேட்டப்போ, அவரு சொன்னதுதான் இது"ன்னு நான் ஒரு விஷயம் சொன்னேன். அதை ரொம்ப அதிர்ச்சியோட கேட்டுச்சு மீனா.

"தம்பி, அவங்களுக்குள்ளே லவ்வு இருக்கா, இல்லையான்னே தெரியலே. ஆனா அந்த பையன்தான், 'அண்ணே... எங்களை பற்றி அடிக்கடி கிசுகிசு எழுதுங்கண்ணே'ன்னு கேட்டுகிட்டே இருக்காரு. ஒரு வேளை ஒன் சைடு லவ்வா இருக்கும் போலிருக்கு. நாம இப்படி போட, போட, அது மனசுல ஏதாவது ஆச வருமான்னு பார்க்கிறாரு போலிருக்கு. நமக்கென்ன, ஒரு செய்தியாச்சுன்னு போயிட்டு இருக்கு அந்த கிசுகிசு"ன்னாரு.

இத அப்பிடியே மீனாவிடம் நான் போட்டுக் கொடுக்க (இதுதான் சரியான வார்த்தையா இருக்கும்னு நெனக்கிறேன்) கொஞ்சம் அதிர்ச்சிதான் அந்த நிலா முகத்திலே. "அப்பிடியா சார். நெசமா அப்பிடி சொன்னாரா? நான் அந்த டைரக்டரையே நேரா கேக்குறேன். இத சும்மா விட மாட்டேன்"னுச்சு.

அதுக்கு பிறகு நேருக்கு நேரா பேசுனாங்களா? கணக்கை நேராக்கிக்கிட்டாங்களா?ன்னு எனக்கு தெரியாது. காலம் வேகமா ஓடியதில் மீனாவுக்கு முப்பத்தியாறு வயசாயிருச்சு. வித்யாசாகர்னு ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியரை கல்யாணம் செய்து கொள்ளப் போறதாகவும், அவரு மீனாவோட சொத்துக்கு ஆசை படாதவராகவும் இருக்கறதா சொன்னாங்க.

மீனான்னு ஒரு மிகப் பெரிய சொத்து கிடைக்கும்போது, மத்ததெல்லாம் பம்மாத்துங்கிறதுதான் என்னோட அபிப்ராயம். வேணும்னா அந்த புதுமாப்பிள்ளை கோடம்பாக்கத்திலே ஒரு கருத்துக் கணிப்பு நடத்தி பார்க்கட்டுமே?

Tuesday, May 12, 2009

டிஆரும், மன்சூரும்.... எலக்ஷன் 'சிரிப்பு'க் கட்டுரை


நெட்டையனும், குட்டையனும் நீராட போனாங்களாம்! குட்டையனுக்கு அலையிலே கண்டம். நெட்டையனுக்கு 'நீரே' கண்டம். வெளங்கிரும்டா கூட்டணின்னு பாலமன் ஆப்பைய்யா சொல்ல, பக்கத்திலே இருந்து 'கெக்கேபிக்கேன்'னு சிரிச்சான் தமிழன். ஆப்பையா சொன்னது எத பத்தி? மன்சூரும், டிஆரும் ஒண்ணா கூட்டணி வச்சாங்களே அத பத்தி!

ராகு கால நேரத்திலே ரூமை சாத்திட்டு , லைட்டையும் ஆஃப் பண்ணிட்டு இருட்டிலே யாருகிட்டேயும் பேசாம உட்கார்ந்திருப்பாரு டி.ஆர். லைட் எறிஞ்சா உள்ளே ஆளு இருக்குன்னு தெரிஞ்சுகிட்டு கஷ்ட காலம் உள்ளே வந்திருமாம்! அதுக்காகதான் இந்த லைட்ஸ் ஆஃப்!

"லைட்ஸ் ஆன்..."னு கம்பீரமா குரல் கொடுக்கிற ஒரு டைரக்டர் ராவு காலத்துக்கு பயந்து இப்படி 'ஆஃப் காலமா' இருக்கறது எனக்கே பொறுக்காம "¬ட்டை ஆஃப் பண்ணிட்டு இருட்லே உட்கார்ந்தா எல்லாம் சரியாயிடுமா, அது எப்பிடிண்ணே...?"னு கேட்டேன். (இதான் மேண்டிலான்னு செந்தில் கேப்பாரே அப்பிடி) "சார்... எம்.ஏ படிச்சவங்கிற முறையிலேயும், சோதிடத்தை ஆராய்ச்சி பண்றவங்கிற முறையிலேயும் சொல்றேன்" (இந்த இரண்டு முறையிலேயும் இல்லாம சும்மா சொன்னாலே என் காதுல விழும்னு சொல்ல ஆசதான். ஆனாலும் ஆங்...னு கேட்டுகிட்டேன்) "ராவு காலம் ரொம்ப மோசமானது சார். அந்த நேரத்திலே என்ன பண்ணாலும் தப்பாயிரும். சிந்திச்சா கூட ஆபத்து"ன்னாரு. ஆழ்ந்து து£ங்கிற நேரத்தை தவிர, மற்ற நேரங்கள்ல சிந்திக்காம ஒரு மனுசனால எப்பிடி இருக்க முடியும்? இந்த சந்தேகத்தை அவருட்டேந்து வேலையை விட்டு நிக்கிற அன்னிக்காவது கேட்கணும்னு நினைச்சேன். முதுகு தோலு முக்கியம்ங்கறதால இந்த நிமிசம் வரைக்கும் மூச்! வேற யாராவது தலைவன எங்கியாவது பார்த்தா என் சார்பா மறக்காம கேட்ருங்கப்பு.

இப்பிடியாப்பட்ட டிஆரு, தான் நடிக்கும் பட பூஜைக்கு பூனைய குறுக்கே விட்ட மன்சூரோட கூட்டணி சேர்றாருன்னா எவ்வளவு பெரிய பின் விளைவுகள் ஏற்படும்னு நினைச்சாலே ஈரக்கொல நடுங்குது. மாருக்குள்ளே சடுகுடுங்குது. இவங்க ரெண்டு பேரும் ஒரே மேடையிலே ஏறி பிரச்சாரம் பண்ணினா எப்பிடியிருக்கும்? "ராவு காலம் போகட்டும்"னு அவரும், "லைட்டை கொளுத்தி வச்சா 'ராவு' போயி வெளிச்சம் வருமே?"ன்னு இவரும் குதர்க்கமா பேசி கூட்டணிக்கு கோடாலி போட்ற மாட்டாங்களா?

இப்பிடியே சிந்திச்சுட்டு இருந்த எனக்கு, ராஜேந்தருக்கு ஆதரவா சிம்பு பிரச்சாரம் பண்ண போனாரே, அப்போ ஒரு வருத்தம் வந்திச்சு. அப்படியே திருச்சிக்கு போயி, கூட்டணி கட்சி தலைவரான(?) மன்சூருக்கும் ஆதரவா பிரச்சாரம் பண்ணியிருக்கலாமே?

அட மறதி மன்னா. சிம்பு எப்பிடி மன்சூருக்கு ஆதரவா பிரச்சாரம் பண்ணுவாரு? உனக்குதான் அந்த விஷயம் தெரியுமேன்னுச்சு மூளை! அட, ஆமான்ல...

சிம்புவுக்கு அப்போ எட்டு வயசு இருக்கும். சபாஷ் பாபுன்னு ஒரு படத்தை எடுத்திட்டு இருந்தாரு டிஆர். சும்மாவே மழலை மேதை சிம்பு. அப்பவே அவரை ஆக்ஷன் ஸ்டராக்க முடிவு பண்ணிய டிஆர், "அடேய் இந்த படத்திலே சிம்பு ஒரு ஃபைட் பண்ணுராரு. அந்த சண்டையை ஜாக்கிசான் பார்த்தா கூட அசந்து போகணும்"னு மாஸ்டரிடம் சொல்லிட்டாரு. சபாஷ் பாபு யூனிட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே கெட்ட நேரம், இந்த படத்திலே வில்லன் நம்ம மன்சூருதான்!

அந்தரத்திலே பறந்து மன்சூரை தாக்க தயாராக வந்திட்டாரு சிம்பு. தலைய சிலுப்பிக்கிட்டு அப்பா மாதிரியே "வாடா என் மச்சி, வாழக்காய் பச்சி"ன்னு ஏதேதோ டயலாக் பேசிட்டு மன்சூரை தாக்கணும். அவரு பயங்கரமா அடிவாங்கி குப்புற விழுந்து குபீர்னு ரத்தம் கக்கணும். டைரக்டர் விளக்க, "அட போங்கய்யா... என் தன்மானம் கேட்கலே"ன்னு எழுந்திருச்சு போயிட்டாரு மன்சூர். "கூப்பிடுய்யா அந்தாள. ஏன் நடிக்க கூடாது?"ன்னு டிஆர் கேட்க, "அது எப்பிடிங்கய்யா எட்டு வயசு பையன், மாடு மாதிரி வளர்ந்திருக்கிற என்னை அடிச்சு குப்புற தள்ளுவாரு? என்னதான் அவரு ஹீரோன்னாலும், நான் திருப்பியே அடிக்காம எல்லாத்தையும் வாங்கிக்கனும்னா எதுக்கு மனுசனா நடிக்கணும்? பேசாம மாடா வேசம் போட்டுட்டு போறேன்"னு சொல்லிட்டு நடையை கட்டிட்டாரு.

ஷ¨ட்டிங்கே நிக்குது. மட்டேர் மட்டேர்னு மார்லே அடிச்சிகிட்ட டிஆர், "நம்ம வீட்லே திரும்புற எடத்திலே எல்லாம் அவன் போட்டோ கிடக்கும். வாய்ப்பு கொடுங்கய்யா, வாய்ப்பு கொடுங்கய்யான்னு வரும்போதெல்லாம் ஒரு போட்டோவோட வருவான். இப்போ பார்த்தியாடா சிம்பு"ன்னு அழ, எட்டு வயசு பையனுக்கு ஒன்னுமே புரியலே. சிம்புவும் திடுக்கிட்டு பார்க்க, தி.நகர் சாலையிலே எடுத்துக் கொண்டிருந்த அந்த ஷ¨ட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்த ஜனங்களும் ஆச்சர்யத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாங்க டிஆர் அழுவதை.

பிறகு யார் யாரோ போய் மன்சூரை கெஞ்சி கூட்டிட்டு வந்தாங்க. "நானும் அடிப்பேன். அதுக்கு சம்மதன்னா ஒளிப்பதிவு கருவிய வைங்க. இல்லைன்னா போறேன்"னு மன்சூரு பிடிவாதம் காட்ட, அப்பிடியே எடுத்தாரு டிஆரு. தன் பிள்ளை மன்சூரிடம் அடிவாங்குறத பொறுக்க முடியாம அவரு அழுதுகிட்டே கேமிரா பிடிச்சதை இப்போ நினைச்சாலும் நமக்கும் அழுகாச்சி வரும்.

இப்போ சொல்லுங்க, சிம்பு திருச்சிக்கு போயி மன்சூருக்கு ஆதரவா பிரச்சாரம் பண்ணியிருக்கலாம்னு நினைக்கிறீங்க?

Sunday, May 10, 2009

பூமிகாவுக்கு 'மூட்' வந்திருச்சு...


தாட் பூட் தஞ்சாவூர்னு குதிச்சாலும் 'மூட்' போச்சுன்னா மொத்தமும் காலி! ஆணானப்பட்ட ரஜினியா இருந்தாலும் சரி, 'வீணானப்பட்ட' வையாபுரியா இருந்தாலும் சரி. 'மூட்' ரொம்ப முக்கியம்!

எனக்கு தெரிஞ்ச ஹீரோ ஒருத்தரு. ஒரே ஒரு படம்தான் நடிச்சாரு. (ஓடுச்சான்னு கேட்டு, வெந்த புண்ணுல வெங்காயத்தை பிழியாதீங்கய்யா...) அப்பா துட்டுள்ள பார்ட்டி. பிள்ளையின் நச்சரிப்பு தாங்காம நடிக்க அனுமதிச்சாரு. படம் எடுக்கிறதுக்காக பாதி பணத்தையும் அர்ப்பணிச்சாரு.

மனுசனுக்கும், பூனைக்கும் 'திங்க்' பண்ணுற விஷயத்திலே டிபரன்ஸ் இருந்தாலும், 'திங்கிற' விஷயத்திலே உமிழ்நீர் ஒன்ணுதானே? நம்ம ஹீரோ நடமாடுற இடமெல்லாம் ஒரே சுடிதார் சுண்டெலிகள்! மசால் வடை மணத்திலே 'குஷால்' ஆனார் ஹீரோ! ஃபுளோர் உள்ளே போனாலே, நகத்தை கடிச்சு துப்புறதும், நாக்கை சுழற்றி சப்புறதுமா ஒரே பேஜாரு.

டயலாக்கை சொல்லி கொடுத்தாலும், நாக்கு வரைக்கும் வந்து 'லாக்' ஆகி நின்னுது வார்த்தைகள். அதுவும் ஹீரோயின் தன் பக்கத்திலே வந்தாலே, படபடன்னு ஆடுச்சு பார்ட்டி! து£ரத்திலே இருந்து எல்லாத்தையும் கவனிச்சுட்டு இருந்த அப்பா சரியா யூகிச்சிட்டாரு. மாட்டுக்கு தண்ணி வைச்சா 'ஹம்ம்ம்ஆ...' சத்தம் குறையலாம்! "ஒரு வாரம் டைம் குடுங்க. பையன் சரியாயிடுவான்"னு சொல்லி ஷ§ட்டிங்கையே தள்ளி வைச்சாரு. (ச்சும்மாவா? பாதி பணம் இவருதாச்சே?)

பையனை கூப்பிட்டு, ஜாலியா 'பாங்காக்' போயிட்டு வாடான்னு அனுப்பிச்சாரு. கைநிறைய அமெரிக்கா டாலரையும் கொடுத்து, கூடவே துணைக்கு அவனோட ஃபிரண்டையும் அனுப்பி வைச்சாரு. கிளம்பும்போது பையன்ங்கிட்ட "ஜாக்ரதையா இருடா. முக்கியமான நேரத்திலே கந்தசஷ்டி கவசத்தை மறக்காதே"ன்னாரு. அவரு 'கவசத்தை'ன்னு அழுத்தி சொல்லும்போதே பையன் புரிஞ்சுகிட்டான். "சரிப்பா"ன்னு வெட்கப்பட்டுக் கொண்டே ஜிப்பை இழுத்து மூடுனான். (சூட்கேசோட ஜிப்பைன்னு சொல்ல வந்தேன்)

ஒரே வாரம்தான். திரும்பி வந்தபோது அவன் அவனா இல்லை. வேற ஆளா இருந்தான். சுண்டெலியும் தெரியலே, மசால் வடை மணத்தையும் மதிக்கலே. 'த்ரி புறமும்' நின்ன திரிபுர சுந்தரிங்க யாரும் அவன் கண்ணுக்கு படலே. டயலாக்கை கேட்டமா? நடிப்பை பிழிஞ்சமான்னு மொத்த படத்தையும் 28 நாளில் முடிச்சாங்க. எல்லாம் ஹீரோவோட டெடிக்கேஷன். "எப்பிடி சார் இதெல்லாம்?னு டைரக்டர் கேட்டப்போ, அப்பா சிரிச்சாரு ஒரு சிரிப்பு. அந்த சிரிப்புக்குள்ளே செலவான டாலரும், பலமான மேட்டரும் இருந்திச்சு...!

மூட் விஷயத்திலே இன்னொரு சம்பவம்! சிரிச்சாலும், அழுதாலும் ஒரே மாதிரி இருக்கிற பூமிகாதான் அந்த படத்தின் ஹீரோயின். க்ளைமாக்ஸ் எடுத்திட்டு இருந்தாங்க. அது ஒரு ரயில்வே ஸ்டேஷன். கண்ணீரும் கம்பலையுமா பூமிகா ரயில்லே ஏறி போகணும். ஜன்னல் வழியா ராதிகாவும், ரகுவரனும் பூமிகாவிடம் சில டயலாக்குகள் பேசணும். அதுக்கு அழுதுகிட்டே அந்த பொண்ணு சில பதில்கள சொல்லணும்.

சிட்டிக்குள்ளே இருக்கிற ரயில் நிலையத்திலே ஷ§ட்டிங் எடுக்க பர்மிஷன் கிடைக்கலே. ரொம்ப பாடுபட்டு காட்டாங்குளத்து£ர் ரயில்வே ஸ்டேஷன்லே பர்மிஷன் வாங்கியிருந்தாங்க. இது மாதிரி பொதுமக்கள் கூடும் இடங்களில் படப்பிடிப்பு நடத்தனும்னா, இரவு பத்து மணிக்கு மேலேதான் பர்மிஷன் கொடுக்கறது ரயில்வேயின் வழக்கம். ஏன்னா பொதுமக்களுக்கு இடையூறு குறையுமே?

கேமிரா வைக்கிறது, லைட்ஸ் அரெஞ்ச் பண்ணுறதுன்னு ஒரு வழியா பனிரெண்டு மணிக்கு நடிக்க ஆரம்பிச்சாங்க. லைட்ஸ்.... கேமிரா... ஆக்ஷன்.... கிளாப் கட்டைய மூக்குக்கு நாலு சென்ட்டி மீட்டர் முன்னாடி வச்சு து£க்கம் கலையுற மாதிரி ஓங்கி அடிச்சிட்டு ஒதுங்கிக்கிட்டாரு உதவி இயக்குனர். ராதிகாவும் ரகுவரனும் உருக்கமாக பேச ஆரம்பிச்சாங்க. எல்லாம் சரியாதான் போயிட்டு இருந்திச்சு. கண்ணீரோடு பதில் சொல்ல வேண்டிய பூமிகா, டயலாக்கை விட்டுட்டு "கெக்கெக்கேன்..."னு சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பிச்சுது. "கட்... கட்..." பதறிப்போன டைரக்டர் ஓடிவந்து "என்னாச்சு என்னாச்சு?"ன்னாரு பூமிகாவிடம்.

பதிலே சொல்ல முடியாம சிரிச்சிட்டு இருந்த பூமிகா, "ஸாரி சார். நேத்து ஒரு மேட்டர். அது இப்போ ஞாபகத்துக்கு வந்திருச்சு. ம்... டேக் போகலாம்"னு சொல்லிட்டு, கண்ணுல கிளிசரின ஊத்திகிட்டு ரெடியாச்சு. "லைட்ஸ்... கேமிரா... ஆக்ஷன்..." ரகுவரனும் ராதிகாவும் உருக்கமாக பேச ஆரம்பிக்கும்போதே மறுபடியும் "கெக்கெக்க்கே....!" பூமிகாதான். கொஞ்சம் பெரிய ஹீரோயின். தெலுங்குல முக்கியமான இடத்திலே இருந்த நேரம் வேற. எதையாவது சொல்லி கோவிச்சுட்டு கிளம்பிட்டா என்னாவறது? பக்குவமா பக்கத்திலே வந்த டைரக்டர், "நீங்க வேணா கேரவேன்லே கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்திட்டு வர்றீங்களா?"ன்னாரு பரிதாபமாக! என்ன நினைச்சுதோ, "இந்த முறை சரியா பேசிடுறேன்"னுச்சு பூமிகா.

மறுபடியும் நடந்ததே நடந்திச்சு. கரெக்டா தனது முறை வரும்போது சிரிக்க ஆரம்பிச்சுது பொண்ணு. அப்புறம் என்ன நினைச்சுதோ? "சார், எனக்கு மூட் இல்லே. இன்னொரு நாளு எடுத்துக்கலாமேன்"னுது ரொம்ப சாதாரணமாக. பர்மிஷன் வாங்கிய கஷ்டமோ, தயாரிப்பாளர் இந்த ஒரு நாளுக்காக செலவு செய்த தொகையோ, அதுக்கெங்கே தெரியப்போவுது? ரொம்ப கவலையோடு "சரி"ன்னு சொன்ன டைரக்டர், பூமிகாவை அனுப்பிட்டு ரகுவரன், ராதிகா சம்பந்தப்பட்ட சீன்களையும், குளோஸ் அப்புகளையும் அங்கேயே வைச்சு எடுத்துட்டு சென்னைக்கு கிளம்பினாரு.

பிறகு ஏ.வி.எம். ஸ்டுடியோவில் ரயில்வே ஸ்டேஷன் செட் ஒன்றை போட்டார் தயாரிப்பாளர். (நல்லாவே தாங்குற கை என்பதால் பிரச்சனையில்லை) அதுவும் காட்டாங்குளத்து£ர் ரயில்வே ஸ்டேஷனில் எடுத்த காட்சிகளோடு ஒப்பிடணும் என்பதால், அதே மாதிரி செட் போட்டார்கள். ஒரு ரயில் பெட்டியையும் அப்படியே தத்ரூபமாக உருவாக்கியிருந்தார்கள். "கடவுளே, நல்ல மூட்லே நடிக்கணும் அந்த பொண்ணு"ன்னு வேண்டிக் கொண்டே "ஆக்ஷன்..." சொன்னார் டைரக்டர். எந்த கொல சாமி புண்ணியமோ, அதிக டென்ஷன் இல்லாமல் அந்த காட்சி முடிந்தது.

படம் ரிலீஸ் ஆனது. சூப்பர் ஹிட்!

Friday, May 8, 2009

மீரா ஜாஸ்மினும், முரட்டு மோதலும்...!

மீராவுக்கும் ஜீராவுக்கும் ஓரெழுத்து வித்தியாசம்தான். ஆனாலும், மீராவை பார்க்கிறப்போல்லாம் எனக்கு 'ஜீரா' நினைப்பு வரும்! இனிப்பு பற்றி, ஒரு கணிப்பு வச்சுகிட்டு அளந்து அளந்து சாப்பிடுற முன்ஜாக்கிரதை முத்தண்ணாக்கள் கூட, மீரா ஜாஸ்மின் திரையில் வந்தால் ஓவரா ரசிச்சு ஃபீவர்லே விழுவாய்ங்க. மறுநாளே 'சுகர்' டெஸ்ட் பண்ணுற அளவுக்கு சோர்ந்து போவாய்ங்க.

அப்படிப்பட்ட அல்டிமேட் இனிப்புக்கே கொஞ்ச நாளா கசப்பு மருந்து கொடுத்திட்டு இருக்கு மீடியா! "நான் ஒதுங்கி ஒதுங்கி போனாலும் விட மாட்டேங்கிறாங்களே"ன்னு மீரா வருந்தியதா நண்பர் ஒருத்தரு சொன்னாரு. அடப்பாவி அசுரனுங்களே... ஐஸ்கிரீமை வென்னீர்லே போட்டு ஆகப் போறதென்ன?

நான் முதன் முதலா 'ரன்' படத்தின் பாடல் காட்சியை பார்த்திட்டு வெளியே வந்தப்போ முன்னாடி நின்ன லிங்குசாமியிடம், "பாஸ§, எங்க புடிச்சீங்க அந்த பாஸந்திய..."ன்னு கேட்டேன். பூர்வீகம், ஊர்வீகத்தையெல்லாம் ஒரே மூச்சுலே ஒப்பிச்ச லிங்கு, "ஆளு எப்பிடி"ன்னாரு. ஆஹா...ன்னு நான் சொல்றதுக்கு முன்னாடி ஒரு பத்திரி¬யாளர் கூட்டமே 'மீரா பஜன்'ஸ் பாடியது கோரசாக!

சொர்க்கத்தின் கதவை சொரண்டி சொரண்டியே விரல் நகமெல்லாம் தேய்ஞ்சு போன ஒரு சாயங்கால வயசிலே நான் மீராவை நேரிலே பார்த்தேன். அதுக்கு பிறகு என்னோட வயசு புதுப்பிக்கப்பட்டு இருபதுக்கு போனேங்கறதெல்லாம் ரொம்ப ஓவர் இல்லீங்க, உண்மை! ஜுட் படத்திலே நடிக்க 'கமிட்' ஆயிருந்திச்சு பொண்ணு. அப்பா அம்மாவோட, அக்கம் பக்கத்து வீட்டாளுகளையும் கூட்டிட்டு ஷட்டிங்கிற்கு வந்து, கும்பலா கொல வாங்கிற வழக்கம் என்னிக்குமே இருந்ததில்லே மீராவுக்கு. மேக்கப் மேன், ஹேர் டிரஸ்சர், கார் டிரைவர்னு ஒரு 'மினி மீல்ஸ்' மாதிரி கச்சிதமானது அவங்க கூட்டணி. "லெப்ட்லே திரும்பு, ரைட்லே போ"ன்னு அவரோட மேனேஜர் சொல்றதுதான் அருள்வாக்கு அதுக்கு. ஒருமுறை குமுதம் சித்ராமணி வந்து, ஒரு ஸ்டில் எடுக்கறதுக்குள்ளே ஆட்டோ மீட்டர் மாதிரி சூடாயிட்டாரு. ஜனாதிபதிகிட்ட மட்டும்தான் பர்மிஷன் கேட்கலே. மற்றபடி அவரு இவருன்னு எவரு எவருகிட்டேயோ கேட்டு, ஓக்கே சொன்ன பிறகுதான் முன்னாடி வந்து கண்ணாடி மாதிரி பளிச்சுன்னு சிரிச்சுது. அப்படி ஒரு கட்டுப்பாடு. ஒழுக்கம்(ன்னு சொல்ல ஆசைதான். தெரியாத விஷயத்திலே தலைய கொடுப்பானேன்?)

அப்படிப்பட்ட கட்டுப்பாட்டு கவசத்தை கழற்ற¤ போட்டுட்டு, ஸ்ரீகாந்த் வீட்டுக்கே வந்து அவங்க குடும்பத்தோட அன்பா பழகுற அளவுக்கு ஃப்ரியா இருந்திச்சு. கேரளாவிலே இருந்து வரும்போது நேந்திரங்காய் சிப்ஸ் கொண்டு வரும். (அதிலே ஒரு பகுதியை நம்ம வீட்டுக்கும் கொடுப்பாரு அப்பா) நேரடியா இல்லேன்னாலும், மீராவின் கைபட்ட நேந்திரங்காயிக்கு அபார ருசி. அதிருக்கட்டும்... அப்படியாப்பட்ட பனிக்கட்டி மீராவே நடுநடுங்கிப் போச்சு ஒருநாளு.

தேவதைகள் கையிலே அருவாளை கொடுத்தா, ஒன்ணு அருவா பூவாகணும். இல்லேன்னா தேவதை காளியாகணும்! நான் சொல்லப் போற மேட்டர்லே ரெண்டாவது நடந்திருச்சு. மோகன் ஸ்டுடியோவிலே ஜுட் பட ஷ¨ட்டிங். அன்னைக்கு பார்த்து சண்டைக்காட்சி எடுத்திட்டு இருந்தாங்க. பெப்சி விஜயன்தான் ஸ்டன்ட் மாஸ்டர். பெரிய காய்கறி மார்கெட் செட். ஒரு பக்கம் மழை ஊத்திகிட்டு இருந்திச்சு. (செயற்கையாகதான்) காலையிலே இருந்து சாயங்காலம் வரைக்கும் தண்ணியிலேயே நின்னுகிட்டு இருந்தாங்க மொத்த பேரும். அடிக்கிற மழையிலே ஃபைட் வச்சுருந்ததாலே குளிரும் கோவமுமா இருந்திச்சு பொண்ணு.

ஃபைட்டர்களில் ஒருவரை மீரா ஓடிப்போய் வண்டி கடையாணியால குத்தற மாதிரி ஷாட். பைட்டரோ முழு ஆட்டை முழுசா முழுங்கிட்டு, அப்புறம்னு அடுத்த பந்திக்கு வெயிட் பண்ணுற அளவுக்கு ரொம்ப சாஃப்ட்டா இருந்தாரு. இந்த டேக்குக்கு போறதுக்கு முன்னாடி ஏகப்பட்ட ரிகர்சல்ஸ். மழை ச்சோன்னு அடிக்க, ஓடிப்போய் ஏய்ய்ய்ய்ய்ய்ய்னு கத்திக்கிட்டே அவரை போய் குத்துற மாதிரி நின்னுச்சு மீரா. கடையாணியோட கடைசி முனை அவரு மேலே லேசா படணும். எல்லாத்தையும் கரெக்டா செஞ்ச மீரா, டேக்குன்னு கத்தினதும் ஓவரா உணர்ச்சிவசப்பட்டுருச்சு.

ஹேய்ய்ய்ய்ய்ய்னு கத்திக்கிட்டே ஓடிப்போய் அவரு மாருலே நச்சுக்குன்னு கடையாணியை எறக்கிடுச்சு. மழையிலே ஒன்ணும் தெரியலையா? அல்லது காட்சியில் இன்வால்வ் ஆயிடுச்சா, தெரியலே. சரியான குத்து. செம்மையா கீறிடுச்சு அவரு நெஞ்சை. அந்தாளுக்கு நிஜமாகவே கோவம் வந்து மீராவை புடிச்சு வேகமா தள்ளிவிட, போன அதே வேகத்திலே பின்னாடி விர்ர்ர்ருன்னு வந்து விழுந்தாரு மீரா. விழுந்ததிலே மண்டையிலே அடி.

எல்லாரும் ஓடிப்போய் து£க்கினாங்க. ரெயின் ஸ்டாப்! "ஸாரி, எமோஷனாலாயிட்டேன்"னாரு ஃபைட்டர். அவரு நெஞ்சுக்கு 'டிஞ்சரை' போட்டாலும், இரண்டு பேருக்குமே உள்ளுக்குள்ளே எரிச்சல். அதுக்கு பிறகும் பல சீன்களை எடுத்திட்டு இருந்தாங்க. 'ஷாட்' இல்லாத நேரத்திலே து£ரமா நின்னு இருவரும் ஒருவரை ஒருவர் முறைச்சுகிட்டேயிருந்தாங்க. பிறகு முயல் குட்டி மூடுக்கு வர ரெண்டு மூணு நாளு ஆச்சு.

வருடங்கள் ஓடிப்போச்சு. மீராவின் கோபம் இப்போதான் அதிகமாயிருக்கணும். கடையாணியும் மீடியாவும் ஒரே நேரத்திலே சிக்குனா கலவரம்தான் போலிருக்கு. ஆண்டவா, அந்த பொண்ணுக்கு சாந்தியையும் சமாதானத்தையும் கொடு (நன்றி அமீர்)

Thursday, May 7, 2009

"மீனு கொழம்பு இல்லீயா, போடாங்..."


ஈசிஆர் படத்திலே நீங்க பட்ட கஷ்டங்களையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளலாமேன்னு பின்னு£ட்டம் போட்ட அந்த முகம் தெரியாத நண்பருக்கு என்னோட நன்றி. ஏன்னா காமெடி சேனல்கள் பெருகிற வரும் நேரத்தில், ஒரு 'அழுகாச்சி' சேனலுக்காக ரிமோட்டை அமுக்குகிற அவரது தைரியத்தை மெச்சுகிறேன். ஆனாலும் அண்ணாச்சி... நான் சொல்லப்போறது இன்னொரு தயாரிப்பாளரோட கஷ்டத்தை! நம்ம சங்கதியை கேட்கணும்னா நீங்க யாரோட வேட்டியையாவது நாலா கிழிச்சு நாலு துண்டா வச்சுக்கிறது நல்லது. துடைக்க வசதியா இருக்குமே!

பாதி ராத்திரியிலே முழிச்சிகிட்டு லைட்டை போட்டுட்டு பார்த்தா நாலைஞ்சு எறும்புங்க 'நைட் ஷிப்ட்' பார்த்திட்டு இருக்கும். அதிகபட்சமா அது தானிய போக்குவரத்தா இருக்கும். நான் செல்வகுமாரை பார்க்கும்போதெல்லாம், போன பிறவியிலே இந்தாளு எறும்பா இருந்திருப்பாரோன்னு தோணும். ஏன்னா எல்லா நேரத்திலும் பரபரப்பா ஓடிட்டே இருப்பாரு மனுஷன். பத்திரிகைகளுக்கு விளம்பரங்கள் வாங்கி தருகிற ஏஜென்ட் வேலை இவருக்கு. அதிலே கிடைக்கிற கமிஷனை சேர்த்து வச்சிருந்தாரு. இவரு ஓடி ஓடி சேர்த்த பணத்தை கூடி கூடி கும்மியடிச்சாய்ங்க கோடம்பாக்கத்திலே. ஏன்னா இவருக்கும் படம் எடுக்கிற ஆசை வந்தது. பந்தா பரமசிவம்னு ஒரு படத்தை எடுத்தாரு. பூஜை போடுறதுக்கு முன்னாடிதான் பந்தா பரமசிவம். போட்ட நாளில் இருந்தே இவரு 'நொந்தா பரமசிவம்'

ஒரு நாள் இவரு ஏதோ வேலையா ஒரு தெரு வழியா போயிட்டு இருந்தாரு. அந்த தெருவில் ஷ¨ட்டிங்... வழியை அடைத்துக் கொண்டு கார்களும், கேரவேன்களும், பெட் ஃபோர்டுகளுமாக நிற்க, ஏதோ ரஜினி படம் எடுக்கிறாங்க போலிருக்கு. தயாரிப்பாளரை பார்த்து ஏதாவது விளம்பரம் கேட்கலாமேன்னு எட்டி பார்த்தாரு நம்மாளு. அடப்பாவி மனுஷா.... இது உன் படத்து ஷ§ட்டிங்டான்னு இமை கொட்டி சிரிச்சுதாம் இவரு கண்ணு ரெண்டும்! அடுத்தவன் காசிலே மஞ்ச தேய்ச்சு குளிச்சிட்டு அதிலே கொஞ்சத்தை எடுத்து ---ஞ்சிலே தடவி விட்ட கதையா, இவரை பார்த்து "வாங்க..."ன்னாரு வெற்றிலை வாயோடு டைரக்டர். தடுமாறி போயி நின்னாரு நம்ம தயாரிப்பாளர்.

ஏதுக்குய்யா இத்தனை வண்டிகள கொண்டாந்து நிறுத்தியிருக்£ங்க, இன்டீரியர் ஷ§ட்டிங்தானே, நாம ஒன்றும் ரேஸ் கீஸ் எடுக்கலையே?ன்னு கேட்க ஆசைதான். கேட்டா பேக்கப்புன்னு சொல்லிட்டு போயிட்டா என்ன பண்ணுறது? மார புடிச்சிகிட்டு வண்டிய உதைச்சவரு அப்படியே வீட்டுக்கு வந்து விழுந்தாராம். ஆனாலும் பிச்சு பீராஞ்சு அப்பப்போ ஷ§ட்டிங்கிற்கு பணத்தை கொடுத்து படத்தையே முடிச்சிட்டாரு. இனிமே டப்பிங் வேலைதான். இது என் படம். நானே உழைச்சு சம்பாதிச்ச காசிலே எடுத்தது. டப்பிங் எப்படி பண்ணுராங்கன்னு பார்ப்போம்ங்கிற ஆசையிலே டப்பிங் தியேட்டருக்கு போயிட்டாரு.

அதுக்கும் முன்னாலே படத்தோட டைரக்டர் யாருன்னு சொல்லிடுறேன். டி.பி.கஜேந்திரன்! எண்ணெய் சட்டிய குப்புற கவுத்து போட்டா எப்படியிருக்குமோ, அப்படியே இருப்பாரு மனுசன். பல குடும்ப கதைகளை எடுத்தவரு. எல்லாத்துக்கும் மேலே விசுவோட அசிஸ்டென்டா இருந்தவரு. செல்வகுமாரு போயிருந்த நேரத்தில் டைரக்டர் வரலே. வந்தவுடன்தான் வேலை ஆரம்பிக்கும். ஒவ்வொருத்தரும் பேசுறதை கேட்கணும். இன்னைக்கு ஒரு நாளாவது அலையுறதை விட்டுட்டு இங்கேயே இருக்கணும் என்றெல்லாம் ஆசைப்பட்டு செல்வகுமார் காத்திருக்க, சர்ருன்னு வந்து நின்னுது கார். கதவை திறந்து கொண்டு கிட்டதட்ட உருண்டபடியே வெளியே வந்தார் டி.பி.கஜேந்திரன். (யோவ் நின்னுகிட்டு பேசு. எதுக்கு உட்கார்ந்தே பேசுறேன்னு பார்த்திபன் கலாய்ப்பாரே, அதே ஸ்டைலில் இவரு உருண்டு வந்தார்)

வந்தவரை நாலு ஸ்டெப்பு முன்னாடி போய் இரு கரம் கூப்பி வரவேற்றார் செல்வகுமார். "ம்...ம்... இருக்கட்டும்" என்றபடியே உள்ளே போன டி.பி.ஜி, "ஏன்யா புரடக்ஷன், இன்னிக்கு என்னய்யா மெனு?" என்றார். "சார், இன்னிக்கு அமாவாசைங்கறதால...." புரடக்ஷன் மேனேஜர் லேசாக இழுக்க, கடுப்பாக முகத்தை வைத்துக் கொண்டு, "....தால?" என்றார் கஜேந்திரன். "அமாவாசைங்கிறதால சைவம்தான் சார்!"

"அவ்வளவுதான். பந்து படீரென்று எகிற ஆரம்பித்தது. ஏன்யா, அமாவாசைன்னா எனக்கென்னா வந்திச்சு? மீனு கொழம்பு இல்லைன்னா எனக்கு சாப்பாடு எறங்காதுன்னு தெரியாதா ஒனக்கு. போய்யா நீங்களும், உங்க டப்பிங்"குன்னும் என்று சீறிவிட்டு காரேறி பறந்தே விட்டார். (அட, அவரு கோவிச்சுட்டு போன காருக்கும் சேர்த்துதான் வாடகையை அழுதிட்டு இருந்தாரு செல்வகுமாரு) என்னடா, டப்பிங் நடக்கும்னு ஆசையா வந்தா, இப்படி ஃபைட்டிங் நடந்திருச்சே என்று பதறிப்போன செல்வகுமார், "சார்... சார்..."னு பின்னாடியே ஓட, நிற்காமல் பறந்தது கார்.

இன்னைக்கு டப்பிங் நடக்கலே என்றாலும், தியேட்டர் வாடகையை தண்டமாக அழணும். டப்பிங் கலைஞர்களுக்கு பேட்டா கொடுக்கணும். இப்படி ஏகப்பட்ட சுமைகள் அழுத்த, இந்த நாளை வேஸ்ட் பண்ண வேணாம்னு நினைச்ச செல்வகுமாரு, "ஏன்யா... காடையோ கவுதாரியோ அவரு கேக்கறதை வாங்கி கொடுங்களேன்யா" என்று இந்த பக்கம் ஏசிவிட்டு அந்த பக்கம் பைக்கை எடுத்துக் கொண்டு பறந்தார். டைரக்டர் வீட்டுக்குதான்.

"சார், எல்லாம் வாங்கிட்டு வரச்சொல்லிட்டேன். நீங்க அவசியம் வரணும்" பணத்தை படத்திலே போட்டுட்டு, பவ்யமாக நின்னார் செல்வகுமார். "ம், சரி... சரி... போங்க வர்றேன்"னு பெரிய மனசு பண்ணினார் டைரக்டர். இப்படி ரிலீஸ் வரைக்கும் செல்வகுமாரை படுக்க வச்சு உடுக்கை அடிச்ச டைரக்டர், இப்படத்தின் பத்திரிகையாளர் ஷோவில் பேசிய பேச்சு இருக்கே, ஆஸ்கார் விருது பர்மா பஜார்லே கிடைச்சா என்ன விலை கொடுத்தாவது வாங்கிக் கொடுக்கலாம் இவருக்கு.

"உங்க முன்னாடி நிக்கிற இந்த தயாரிப்பாளரு படத்தை ரிலீஸ் பண்றதுக்குள்ளே என்ன கஷ்டப்பட்டாருன்னு எனக்குதான் தெரியும். கொஞ்சம் அசந்திருந்தா நேத்து ராத்திரி தொங்கியிருப்பாரு. நல்லவேளை, அவங்க அப்பா அம்மா செஞ்ச புண்ணியம். உசிரோட இருக்காரு" என்று பேச, நாங்கள்ளாம் படத்திலே நடிச்ச பிரபுதான் இவ்வளவு கொடைச்சல் கொடுத்திட்டாரோன்னு நினைச்சோம். வெளியே வரும்போதுதான் பிஸ்மி சொன்னார். "தலைவா, கொஞ்சம் விசாரிங்க. எல்லா பிரச்சனைக்கும் இந்தாளுதான் காரணம்"

விசாரிச்சோம். தண்டோரா அடிச்சி தலைவலிய கொடுத்தவரும் இவரே, மண்டைய சுத்தி மருந்து தடவ சொன்னவரும் இவரேதானாம்! நாங்க தப்பா நினைச்சிட்டு இருந்த பிரபு கடைசி நேரத்திலே தனது சம்பளத்திலே ஐந்து லட்சத்தை விட்டு கொடுத்தாராம். பிறகு மறுபடியும் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு அந்த பணத்தை வேண்டாம் வேண்டாம்னு பிரபு வாங்க மறுத்தும் பிடிவாதமாக கொடுத்திட்டு வந்தாரு செல்வகுமாருங்குது 'வாழவந்தான் தோட்டத்து வரலாறு!'

Wednesday, May 6, 2009

பாவனா கண்டுபிடிச்ச புரப்பல்லர் ஃபேன்!

இன்னைக்கு உலக சிரிப்பு தினமாம். வண்ணத்துப்பூச்சியார் சொன்னதா உதயசூரியன் சொன்னாரு. கொஞ்ச நாளாகவே இதையெல்லாம் கவனிக்க முடியாதபடி லெமூரியா கண்டத்திலே இருந்தோம் ரெண்டு பேரும்! (வீட்லே ஊருக்கு போயிருக்காங்கடோய்...)

சிரிக்கிற மாதிரி ஏதாவது சொல்லணுமேன்னு நினைச்சிட்டு இருக்கும்போதுதான் பாவனாவோட ஸ்டில்லை யதார்த்தமா பார்த்தேன். ஊரெல்லாம் 'கோல்கேட்' போட்டு பல்லு வெளக்குனா, பாவனா மட்டும் சொட்டு நீலம் போட்டு வாய் கொப்பளிக்கும் போல. "லைட்ஸ்ச பவுன்ஸ் பண்ணு"ன்னு கேமிராமேன் சொல்லும்போது, "கொஞ்சம் சிரிங்களேன் பாவனான்"னு சைடுலே கிச்சு கிச்சு மூட்டுவேன். ஏதோ ஒரு படம் எடுத்து நான் கண்ட பலன் அதுதான்! மை டியர் மக்களுகளா, அதுவரைக்கும்தான்யா நம்ம லிமிட்! அதுக்கு மேல யாரு லிமிட்டு?ன்னு கேட்டு, சந்தில சைக்கிள் ஓட்டாதீங்க. நம்மள பொறுத்தவரைக்கும் பொண்ணு தங்கம்!

அப்படியிருந்தும் ஒரு ஆளு திரும்ப திரும்ப ட்ரை பண்ணுனப்போ, 'போடாங்...'னு சொல்லிடுச்சு பொண்ணு. "நேத்து முழுக்க அந்த 'புரப்பல்லர்' போன் பண்ணிகிட்டே இருந்திச்சு தெரியுமா?"ன்னு சொல்லிட்டு கெக்கேபிக்கேன்னு சிரிக்கும். (புரப்பல்லர்?-சினிமாவிலே புயல் அடிக்கும் சீன்களில் எல்லாம் இதை கொண்டுதான் காற்றடிக்க வைப்பார்கள். அதாவது பெரிய ஃபேன்) அவரு என்னோட 'பெரிய புரப்பல்லர்'னு சொல்லி கிண்டலடிக்கும் பாவ்ஸ். (சரி...சரி...)

படத்திலே இவரு கல்லு£ரி மாணவிங்கிறதால இவருக்கு பிரண்ட்ஸ்சா நடிக்க வைக்க நிறைய ரிச் கேர்ள்சை வரவழைச்சிருந்தோம். (கிட்டதட்ட 100 பேரு) அதுலே ஏதாவது ஒரு பட்சி சிக்காதான்னு உதவி ஒளிப்பதிவாளர் ஒருத்தருக்கு ஒரே ஏக்கம். நடிக்கும்போதே இதையும் 'நோட்' பண்ணியிருப்பாரு போல பாவனா. அந்த அசிஸ்டென்டோட பேரை இப்போதைக்கு மணான்னு வச்சுப்போம். (நிஜ பேரை சொன்னா வீட்லே வெள்ளாவி வச்சுர மாட்டாங்களா?) மதியம் மூணு மணி இருக்கும். கொஞ்சம் து£ரமா தள்ளி வந்து தன்னோட செல்போன்லேந்து மணாவுக்கு போன் போட்டுச்சு.

கேமிராமேன் பன்னீர்செல்வம், ஸ்ரீகாந்த், மற்றும் நான். எங்க மூணு பேருகிட்டேயும் "அவனை நான் சுத்தல்ல விடப்போறேன். கண்டுக்காதீங்க" என்று கூறிவிட்டு, எங்கள் கண்ணெதிரிலேயே டிராமாவ ஆரம்பிச்சுது. குரலை ஏக்கமா வச்சுக்கிட்டு, "நானும் எத்தனையோ படத்திலே நடிச்சிருக்கேன். ஆனா, உங்களை பார்த்ததும் எனக்கு என்னவோ பண்ணுது. எங்காவது போகலாமா? ஃப்ரியா பேசணுமே"ன்னு சொல்ல, இந்த நு£று பொண்ணுல எதுவா இருக்கும்ங்கிற சந்தேகத்திலேயே எல்லா பொண்ணுகளையும் பார்த்துகிட்டே லவ்வை வளர்க்க ஆரம்பிச்சாரு மணா. எங்கே பார்க்கலாம்? எப்போ பார்க்கலாம்? இந்த கூட்டத்திலே நீ யாரு? எங்கேயிருக்கே?ன்னு அடுக்கடுக்கா கேள்வி கேட்டு, படபடப்பா பார்வையை ஓட விட்டாரு.

"ஆங், அஸ்கு புஸ்கு... நீ என்னை பார்க்கணும்னா அவ்வளவு ஈசியா கிடைச்சிருவேனா? நீ நாளைக்கு காலையிலே பத்து மணிக்கு ஸ்பென்சர் பிளாசா வா. நான் உனக்காக காத்திருப்பேன்"னு சொல்லிட்டு போனை கட் பண்ணுச்சு பாவனா. "இப்போ அவனை பாருங்களேன். அந்த ரிச் கேள்ர்ஸ் ஏரியாவை விட்டு வரமாட்டான். நீங்க நாளைக்கு காலையிலே பத்து மணிக்கு உங்களோட வரணும்னு வேற இடத்துக்கு கூப்பிடுங்க. என்ன பண்ணுறான், பாப்போம்"னு சொல்லுச்சு.

அங்கிருந்தபடியே மணாவை தன் அருகில் அழைத்தார் பன்னீர்செல்வம். பக்கத்திலே பாவனாவும், நாங்களும் செம த்ரில்லோடு காத்திருக்க உரையாடலை ஆரம்பித்தார் கேமிராமேன். "தம்பி, இப்போ ஷ§ட்டிங்கை முடிச்சுட்டு சீக்கிரம் வீட்டுக்கு போயிரு. நாளைக்கு நமக்கு ஷ§ட்டிங் இல்லை. அதனால் காலையிலே பத்து மணிக்கு என் வீட்டுக்கு வந்திரு. நாம முக்கிய வேலையா வெளியே போகணும்"னு சொல்ல, "அது வந்து... நாளைக்... வந்து... பேமிலியோட வெளியே போறதா சொல்லியிருக்கேனே"ன்னு மணா சொல்ல, "என்னய்யா, முக்கியமான வேலைங்கிறேன். பேமிலி அது இதுங்கிறே. சரி, உன் வீட்டுக்கு போனை போடு நான் பேசுறேன்"னாரு பன்னீர்.

இவ்வளவு ஆழத்துக்கு பள்ளம் தோண்டிவிட்டு, கள்ளம் கபடம் இல்லாம கவனிச்சுட்டு இருந்திச்சு பாவ்ஸ். மணா மழுப்ப, பன்னீர் செல்வம் நெருக்க, ஒருகட்டத்தில் பொறுமை இழந்த பாவனா 'கெக்கேக்ககே'ன்னு சிரிக்க, லேசா அந்த குரலை உள்வாங்கிக்கிட்ட மணா, அட... இவ்வளவு நேரம் உசர ஊசலாட வச்சது நீங்கதானான்னு பார்க்க, எல்லாரும் சிரியோ சிரின்னு சிரிச்சோம்.

அப்புறம் படம் வெளி வந்து நான் மட்டும் சிரிப்பா சிரிச்சேன். அது தனிக்கதை! (நேரம் வரும்போது சொல்றேன்)

படக்குறிப்பு- நடுவாப்ல நிக்கிற அந்த கருப்பு சட்டைக்காரன் நானேதான்!

Tuesday, May 5, 2009

நெடுமாறன் என்ற எளியவர்....


நாலு நாள் தாடி, கலைந்த தலை, கசங்கிய சட்டை, ஐயா நெடுமாறனின் தோற்றம் எப்போதும் வியப்புதான் எனக்கு. இங்கே தலைக்கும், மீசைக்கும் 'டை' அடிக்காமல் பெரும்பாலான தலைவர்கள் வாசலை தாண்டுவதில்லை. மீசையை ஐ-புரோ பென்சிலால் வரைந்து கொள்கிற அரசியல்வாதிகளை பார்த்தால், ஐயா நெடுமாறனை நினைத்துக் கொள்ள தோன்றும். அவருக்கு கருப்பு தேவைப்படும். ஆனால் அது கொடியாக இருக்க வேண்டும்! இதோ, நெடுமாறனின் அரசியல் வாழ்வில் மற்றுமொரு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்!

உலக தமிழர்கள் மட்டுமல்ல, 'உளவு' தமிழர்களும் கண்காணித்துக் கொண்டிருக்கும் அவரை ஒரு முறை பேட்டிக்காக சந்திக்க போனேன். ஒரு வட்ட செயலாளர் வீட்டில், கிளை செயலாளர் வீட்டில் இருக்கிற ஆர்ப்பாட்டம் கூட அவரது அலுவலகத்தில் இல்லை. உலக தமிழர்களால் கொண்டாடப்படும் அவரது அலுவலகம் அமைந்திருக்கும் தெருவில், குறுக்கும் நெடுக்குமாக பறக்க கூட ஒரு ஈ காக்காய் இல்லை. குறுகிய சந்து. மழைக்காலமாக இருந்தால் கும்மிருட்டாய் உணரலாம். கட்டை பஞ்சாயத்து செய்கிறவர்களுக்குதான் செக்யூரிடி வேண்டும். எனக்கெதற்கு? என்பது மாதிரி, 'அக்கடா'வென திறந்து கிடக்கிறது கேட்!

வாசலில் நின்று 'ஐயா' என்று குரல் கொடுத்த அடுத்த நிமிடம், 'யாரது?' என்ற அதட்டல் இல்லை. ''உள்ளே வாங்க'' என்று ஒலிக்கிற மெல்லிய குரல், அவருடையதேதான்! "கொஞ்சம் உட்காருங்க வந்திடுறேன்" என்றார். கிட்டதட்ட ஆபிஸ் முழுவதுமே வேஸ்ட் பேப்பர் கடை போல இருந்தது. எங்கு திரும்பினாலும் செய்தி தாள்கள். அவை கமர்ஷியல் நாளிதழ்கள் அல்ல. அவரது இயக்கம் சார்பாக நடத்தப்படும் பத்திரிகை வடிவிலான எளிய நாளிதழ்கள். (உள்ளே வார்த்தைகள் வலிமையாக இருக்கலாம். ஆனால் தோற்றத்தில் அந்த நாளிதழ்களில் கூட எளிமை)

"சினிமா இதழில் நான் என்ன பேசுவது?" என்றவரிடம், "உலக தமிழர்கள், குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழர்கள் அதிகம் வாசிக்கும் இணைய இதழ்" என்றேன். தமிழ்சினிமா.காம் என்பதை உள் வாங்கிக் கொண்டவர், பேச ஆரம்பித்தார். ஒரு நடமாடும் கம்ப்யூட்டர் போல புள்ளி விபரங்களை அடுக்கியது அவரது உதடுகள்.

தி.மு.க-அ.தி.மு.க தவிர்த்து ஒரு மாற்று கூட்டணி வேண்டும். அது இலங்கை தமிழர் நலனில் அக்கறை செலுத்தும் நம்பியிருந்தார் நெடுமாறன். வைகோ, ராமதாஸ், திருமாவளவன், ஆகியோருடன், இந்த கூட்டணிக்கு ஆதரவு கொடுக்க முன்வரும் இன்னும் சில உதிரி கட்சிகளையும் சேர்த்துக் கொண்டு இந்த தேர்தலில் நிற்க வேண்டும் என்ற அவரது எண்ணத்தை சொன்னார் அந்த பேட்டியில். "அதற்காகதான் எல்லாரும் சேர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

ஆனால், அரசியல் நாடகத்திற்காக தனது முகத்தில் அரிதாரம் பூசிக்கொண்டவர்கள், நெடுமாறனின் முகத்தில் கரியைதான் பூசினார்கள். சமீபத்தில் நடந்த திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கத்தின் போராட்ட மேடையில் பாரதிராஜா சொன்னார். "ஐயா, உங்களை எல்லாரும் அநாதை ஆக்கிட்டு போயிட்டாங்களே?" என்று. அன்று என்னிடம் "மூன்றாவது அணியை அமைப்போம்" அவர் நம்பிக்கையோடு பேசியதுதான் நினைவுக்கு வந்தது எனக்கு!

கவியரசு கண்ணதாசனோடு நெருங்கி பழகியவர் நீங்கள். அவரைப்பற்றிய நினைவுகளில் ஏதாவதொன்றை பகிர்ந்து கொள்ளுங்களேன்? என்றேன்.

கண்ணதாசன் என்னுடைய நெருங்கிய நண்பர் மட்டுமல்ல. என்னை தன் சொந்த சகோதரன் போல் வைத்திருந்தார். கருத்து வேறுபாடு ஏற்பட்டு இந்திரா காங்கிரசிற்கு அவர் போனபிறகு, நான் காமராஜரோடு இருந்த போதிலும் எங்கள் நட்பு அப்படியே இருந்தது. பல நேரங்களில் அரசியலில் எனக்கு பெருந்துணையாக இருந்தார். இறுதிகாலத்தில் நடந்த சம்பவம் மறக்க முடியாது. அவருக்கு உடம்பு சரியில்லாமல் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக செல்கிற நேரம். நான் ஈரோட்டில் ஒரு கூட்டத்தை முடித்துவிட்டு திரும்ப தாமதாமாகிவிட்டது. தொலைபேசியில் அவரிடம் வழியனுப்ப வர முடியாமல் போனதற்காக வருத்தம் தெரிவித்தேன்.

'பரவாயில்லை. வரும்போது உனக்கு என்ன வாங்கி வரவேண்டும்?' என்று கேட்டார். 'ஒன்றும் வேண்டாம். நீங்கள் நல்லபடியாக போய் வாருங்கள்' என்றேன். 'சொல்லுங்க ஏதாவது?' என்றார் பிடிவாதமாக. 'சொல்லட்டுமா?' என்றேன். 'சொல்லுங்க!' என்றார். 'நீங்க வரும்போது ஏதாவது அமெரிக்க பொண்ஜாதியோடு வந்திடாதீங்க' என்றேன். தொலைபேசியில் அவர் சிரித்த சிரிப்பு இருக்கிறதே... இன்னும் கூட என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

இந்த சம்பவத்தை சொல்லும்போது முகம் மலர வாய்விட்டு சிரித்தார் நெடுமாறன்.

Monday, May 4, 2009

அப்படியா பழகினாரு சிம்பு?


சிம்புவை பற்றி அதிகம் சொல்ல தேவையில்லை! ஏன்னா, 'எத்திசையும் இன்பமுற' அவரது புகழ் ஒலிப்பதால், துபாய் மேட்டரை மட்டும் சொல்லிவிட்டு 'ஜுட்' விடுவது உத்தமம்!

"டேய் மச்சி, டேய் மாமூ"ன்னுதான் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கிட்டாங்க. "இவ்ளோ து£ரம் திக் பிரண்ட்ஸா இருக்காங்களே, அத்தனை பேரும் ஒரு படத்திலே நடிக்கிறேன்னு சம்மதிச்சு ஒருநாள் டேட்ஸ் கொடுத்தா கூட போதும். நான் கோடீஸ்வரன்"னாரு கூட வந்த ஒருத்தர். "வென்னீரை குடிச்சமா, விரதத்தை முடிச்சமான்னு இல்லாம இதென்ன வெட்டிப்பேச்சு? ஆடப் போறது அவங்க வேலை. கூடப் போறது நம்ம வேலை. இதுல எதுக்கு புரட்யூசர் கனவு காண்றீங்க. இந்த குரூப் இப்படியே சந்தோசமா திரும்பி வந்தா, தெரு முனை பிள்ளையாருக்கு சிதறு தேங்காயே ஒடைக்கலாம். வேணும்னா பாருங்க" என்றேன் என் ஞான திருஷ்டிய நம்பி!

சென்னையிலேர்ந்து புறப்படுற கடைசி நிமிஷம் வரைக்கும் அருண் விஜய்க்கு விசா கிடைக்கலே. அதனால் அவரை அடுத்த பிளைட்ல வரச்சொல்லிட்டு எங்களை ஏத்தினாங்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். மறுநாள் காலை துபாய் வந்த அருண் விஜய்க்கு விசா ஏற்பாடு செஞ்சு வெளியே கொண்டு வருவதில் தொடர் சிக்கல். அதனால விமான நிலையத்திற்குள்ளேயே உட்கார வச்சு, வெளியே விசாவுக்கு துரிதப்படுத்திக்கிட்டு இருந்தாங்க. காலையிலிருந்து குளிக்காம, சாப்பிடாம கடும் கோபத்திலிருந்தாரு அருண். ஒருவழியா அவரை வெளியே கொண்டு வர இரவு எட்டாயிருச்சு. அப்படியே மறுநாள் கிரிக்கெட் கிரவுண்டுக்கு போயாச்சு எல்லாரும்.

ஆட்டம் துவங்கியது. சினிமாவிலேதான் பறப்பதும், பாயறதும்! நிஜத்தில் ஒரு பந்தை அடிப்பதற்குள் டவுசராகிப் போனார்கள் நம்ம ஸ்டார்கள். சென்னையிலே தோற்றுப் போன வெறியிலே நல்லாவே பிராக்டீஸ் பண்ணிட்டு வந்திருந்தாங்க தெலுங்கு நடிகருங்க. ஒவ்வொரு பந்தும், ஸ்கார்பியோ வேகத்திலே பறக்க, தடுக்கவும் முடியாம, பிடிக்கவும் முடியாம ஒவ்வொருத்தர் மூக்கும் கோவத்தில் கிரிக்கெட் பால் கலருக்கு போயிருச்சு. இந்த கேப்லதான் சாத்தான் சட்னு நுழைச்சிருப்பான் போல. ஒரு கேட்சை விட்டுட்டாரு அருண் விஜய். பக்கத்திலே நின்ன சிம்பு, "ங்கோ..." ன்னு அவரை பார்த்து கோவப்பட, அடுத்த சில மணி நேரத்தில் அதற்கான பலனை அத்தனை பேருமே அறுவடை செஞ்சோம். மேட்சில் படுதோல்வி.

இடையில் ஒருமுறை ட்ரிங்க்ஸ் பிரேக்கில் கேப்டன் அப்பாஸ் (தலைவா கோவிச்சுக்காதீங்க. இவரு ஒரு நாள் முதல்வர் மாதிரி 'ஒருநாள் கேப்டன்') சரியா விளையாடலேன்னு எல்லாரையும் தாறுமாறா திட்ட, "நானே போனாப் போவுதுன்னு வந்திருக்கேன். இந்த திட்ற வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம்"னு எகிறினார் சிம்பு. அதை தொடர்ந்துதான் இந்த ங்கோ... சமாச்சாரம்.

தோற்றுப்போன ஆத்திரத்தில் உள்ளே வந்த சிம்புவை ஜன்னல் ஓரமாக நின்ற ரசிகர் ஒருத்தரு, "தலைவா... இப்பிடி தமிழன் மானத்தையே வாங்கிட்டீங்களே"ன்னாரு. அவ்வளவுதான், "டேய்... ங்கொ----ள... யாருகிட்டே? புட்றா அவனை"ன்னு விரட்டினாரு சிம்பு. அதற்குள்ளே ரசிகன் எஸ்கேப். ரசிகன் ஓடினாலும், அவன் வேலையை இப்போ அருண் விஜய் எடுத்துகிட்டாரு. சிம்புவிடம் வந்து, "டேய், என்னடா சொன்ன என்னைய பார்த்து? யாரை பார்த்து ங்கே... ங்கற? அடிச்சு மூஞ்சை பேத்துருவேன்"னு கையை து£க்கிக் கொண்டு பாய, "டேய் ஆம்பிளையா இருந்தா கைய வச்சு பாருடா"ன்னு துள்ள ஆரம்பிச்சாரு சிம்பு.

வார்த்தை தடித்தது. விலக்க வேண்டிய நடிகருங்க என்ன காரணத்தாலோ சற்று பின்வாங்கினாங்க. நல்லவேளையாக ஸ்ரீகாந்த் ஓடிவந்து "மாப்ளே, ஏண்டா இப்படி சண்டை போடுறீங்க? விடுங்கடா"ன்னு கெஞ்ச ஆரம்பிச்சாரு. இப்போ இன்னும் வேகமாக ரெண்டு பேரும் எகிற, எல்லாரும் சேர்ந்து ஒருவழியா புடிச்சு அமுக்கினாங்க இரண்டு பேரையும். அப்போதான் சிம்பு அந்த தன்னம்பிக்கை ஸ்லோகத்தை எடுத்துவிட்டாரு.

"டேய், நான் ஒரு சூப்பர் ஸ்டாருங்கறதையும் மறந்து உங்களோட ஆட வந்தேன்ல. என் புத்திய..." என்று ஆவேசப்பட்டார். "போடாங்... சினிமாங்கிறது யாரை வேணும்னாலும் மேலே து£க்கும். கீழே இறக்கும். நானும் மேலே வருவேண்டா. இப்பிடியே இருப்பேன்னு பார்க்காதே"ன்னு எகிற ஆரம்பிச்சாரு அருண். இடையிலே தடால்னு குறுக்கே விழுந்த ஆர்யா, "டேய் மச்சான் விடுங்கடா"ன்னு கெஞ்ச, "இல்லடா. நான் ஒரு சூப்பர் ஸ்டாருன்னு நினைச்சாடா உங்க கூடெல்லாம் பழகுறேன்? எவ்வளவு எளிமையா பாகுபாடு பார்க்காம பழகுறேன். அவன் அப்படி சொல்றானே"ன்னாரு மறுபடியும்.

ஒருவழியா அழுகையும் ஆத்திரமுமா அங்கிருந்து வேன்லே ரூமுக்கு கிளம்பினாங்க நம்ம ஸ்டார்ஸ். வண்டி போயிட்டு இருக்கும்போதே விஷால் அருணிடமும், ஆர்யா சிம்புவிடமும் சமாதானம் பேசினாங்க. அவங்க ரெண்டு பேரோட நோக்கமும் ஹோட்டலுக்கு போறதுக்குள்ளே இவங்களை சமாதானப்படுத்திடனும். முதலில் "விடுங்கடா..."ன்னு ஒதுங்கிப் போன ரெண்டு பேரும் கை குலுக்க சம்மதிச்சாங்க. "என்னை மன்னிச்சிருடா மாப்ளே. நான்தான் தப்பா பேசிட்டேன்"னாரு சிம்பு. "சரி, விட்றா. நான் கூட அவ்வளவு கோவப்பட்டு ஒன்னை அடிக்க வந்திருக்க கூடாது"ன்னாரு அருண் விஜய்.

சண்டை முடிஞ்சுதுன்னு எல்லாரும் நிம்மதியாக சிரிக்க ஆரம்பிச்சோம். வண்டி போய் கொண்டிருக்க திடீர்னு அருணிடம், "மாப்ளே... என்னைக்காவது நான் சூப்பர் ஸ்டாரு, நீ சாதாரண நடிகன்னு நினைச்சு பழகியிருக்கேனா?"ன்னு மறுபடியும் ஆரம்பிச்சாரு சிம்பு. "டேய் ஆரம்பிச்சுட்டாண்டா"ன்னு ஆர்யா, பரத் ரெண்டு பேரும் சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பிக்க, கூடவே சிம்புவும் அருணும் சிரிச்சாங்களே பார்க்கலாம்! அதுக்கு முன்னாடி அப்பிடி ஒரு சண்டை அங்கே நடந்திச்சு?

Sunday, May 3, 2009

நடிகை ஸ்ரேயாவும், ஒரு அரவாணியும்?


கிரிக்கெட்ட பத்தி பேச்செடுத்தாலே தறிக்கெட்டு ஓடுற ஆளு நானு! என்னைய கூட்டிகிட்டு போனாங்க கிரிக்கெட் கிரவுண்டுக்கு. (ச்சும்மா வேடிக்கை பார்க்கதான்!) அதுவும் சேப்பாக்கம் கிரவுண்டோ, மடிப்பாக்கம் கிரவுண்டோ இல்லே, துபாய்லே இருக்கே ஷார்ஜா கிரவுண்டு.... அங்கே! டிக்கெட் உபயம் நடிகர் ஸ்ரீகாந்த் (மறக்கலே சாரு)

தெலுங்கு நடிகர்களும், தமிழ் நடிகர்களும் ஆடிய கிரிக்கெட் மேட்ச் அது. சென்னை மேட்ச்சை தொடர்ந்து துபாயில் ஆடுவதற்காக கிளம்பியது டீம். 'லேஸ்' கட்டறதையே கூட 'லேசி'யா நினைக்கிற என்னை பிளைட்டில் 'சீட் பெல்ட்' கட்ட வச்சுது எமிரேட்ஸ். உசரத்திலேயிருந்து சிட்டிய பார்க்கிறது சிலாகிப்புதான் என்றாலும், சைடிலே ஓடுற மரங்களும், ஜன்னல் வழியா அடிக்கிற காத்தும் இல்லாத பயணம், சுத்த போர்!

ஷார்ஜா கிரவுண்டில் எல்லா நடிகர்களும் பிராக்டீஸ் பண்ணிக் கொண்டிருக்க, பந்து வாயில் விழுகிற மாதிரி 'ஆ' வென்று கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தேன் நான். விஷால், சிம்பு, ஜீவா, ஆர்யான்னு எல்லாருமே அசிரத்தையாகவே ஆடிக் கொண்டிருந்தார்கள். (பயணக் களைப்பு?)

அடுத்த நாள்தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. டே நைட் மேட்ச் என்பதால் காலை பதினொரு மணிக்கெல்லாம் கிரவுண்டுக்கு போய்விட்டோம். ரெஸ்ட் ரூமிற்குள் போனால்... அட, நம்ம ஸ்ரேயா! கூடவே அவங்க அம்மா(ன்னுதான் சொன்னாங்க) நம்ம ஹேண்ட் பேக்குதானேங்கிற மாதிரியே தன்னோட பொண்ணையும், 'ஓரமா வெச்சுட்டு' அந்தம்மா எங்கேயோ வேடிக்கை பார்த்திட்டு இருந்திச்சு. விட்டால் ஸ்ரேயாவின் பேண்ட் பாக்கெட்ல நுழைஞ்சு உட்கார்ந்திருவானோ என்ற அச்சத்தை தருகிற மாதிரி நெருக்கமாக உட்கார்ந்திருந்தான் ஒரு இளைஞன். அவன் தனது கையை எடுத்து நெஞ்சுக்கு பக்கத்திலே ஒர்ர்ர்ரு மாதிரி வச்சுகிட்டு அபிநயம் பிடிக்க, (அவன் நெஞ்சுக்கு பக்கத்திலேதான்) அதே மாதிரியே ஸ்ரேயாவும் செஞ்சார். அப்படியே விழிகளை கேணத்தனமா வளைச்சு வேறொரு முத்திரை காட்டினான் அவன். உட்கார்ந்தபடியே அந்த முத்திரையை அப்படியே செஞ்சுச்சு ஸ்ரேயா.

அது ரெஸ்ட் ரூம்ங்கிறதால நடிகர்கள் தங்களோட டிரஸ்சை மாற்றி கிரிக்கெட் பிளேயர்ஸ் டிரஸ்சை போட்டுக்கறதும், 'பேடு' கட்டுவதுமாக இருந்தாங்க. இந்த களேபரத்திலே ஓரமா உட்காந்திருந்த இந்த ஜோடி செய்யுற அழிச்சாட்டியத்தை யாருமே கண்டுக்கலே. ஆனா, என் கண்ணு அந்த இடத்தை விட்டு எங்கேயுமே போகலே. என்னதாண்டா நடக்குது அங்கே?ன்னு பெரும் குழப்பம் எனக்கு. மெல்ல எழுந்து அவங்களுக்கு அருகிலே போனேன். அதே சமயம், அவங்க 'நோட்' பண்ணாத டிஸ்டென்சில் உட்காந்தேன்.

இப்போதான் அவன நல்லா வாட்ச் பண்ண முடிஞ்சுது. நெற்றி புருவத்தை லேடீசெல்லாம் என்னவோ பண்ணுவாங்களே, ஆங்... ட்ரிம்? அத பண்ணியிருந்தான். உதட்டிலே லேசா லிப்ஸ்ட்டிக். சதா படபடன்னு அடிச்சிக்கிற கண்ணு. டக்குன்னு புரிஞ்சு போச்சு எனக்கு. அவனா நீயி...? (அதனாலதான் தாய்குலம் 'கேர் டேக்' பண்ணாம டேக் இட் ஈஸியாயிருச்சு போல) ஆஹா, பொண்ணு போற ரூட்டு சரியில்லேயே... சொக்கா போன போட்டு ஊருக்கு சொல்டான்னு உள் மனசு துடிக்க, துடிக்கிற மனச ஒரே 'அமுக்!' வெயிட் பண்ணி வேடிக்கைய கவனிடான்னுச்சு புத்தி.

மொழிய ஒளிச்சி வச்சுட்டு விழியாலே விளையாடிகிட்டாங்க ரெண்டு பேரும். அப்படியே டக்குன்னு உதட்டை மடக்கி, நுனி நாக்கை கடிச்சு என்னென்னவோ செஞ்சான் அவன்(ள்) அதையே திருப்பி செஞ்சுது ஸ்ரேயா. இந்த குறும்படம் சுமார் இருபது நிமிசம் இப்படியே ஓட, இப்போ திடீர்னு எழுந்து ஒரு ஸ்டெப் சொல்லிக் கொடுத்தான் அவன்(ள்) அட, 'சுமார் புத்தி' சுந்தரா. அது டான்ஸ் மாஸ்டர்டா. பொண்ணுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுக்குதுன்னு அப்புறம்தான் உறைச்சுது எனக்கு. மேற்படி பார்ட்டி யாரோ தெலுங்கு டான்ஸ் மாஸ்டரோட அஸிஸ்டென்ட்டா இருக்கணும். டைம் வேஸ்டாதானே போகுது. போற இடத்திலே டான்ஸ் சொல்லிக் கொடுன்னு அனுப்பியிருக்கணும். வந்த இடத்திலேதான் இப்படி. (என்னாவொரு டெடிக்கேஷன்?) அதுக்கு பிறகும் அதை வேடிக்கை பார்க்க மனசு வருமா என்ன?

ஆனால் அந்த கிரிக்கெட் கிரவுண்டில் ஸ்ரேயா ஒரு ரவுண்டு வந்திச்சு பாருங்க. ஒரே அமர்க்களம்! அதைவிட ஒரு பெரிய அமர்க்களம் கொஞ்ச நேரத்திலே நடந்திச்சு. நடத்தியவர் சிம்பு. அதை அடுத்த பதிவில் சொல்லட்டுமா?

Saturday, May 2, 2009

விஜய் போட்ட வில்லங்க பிரியாணி


குழம்புல குரும்பாட்டை போட்டு, நரம்புலே கரகாட்டம் ஆட வைக்கிற பொன்னுசாமி, முனியாண்டி, அஞ்சப்பர் அண்ணனுங்களே அசந்து போற அளவுக்கு இருக்கும் விஜய் வீட்டு பிரியாணி! மஞ்சவாய்கான் பட்டியிலே இருந்து துண்டு பீடி புடிச்சுட்டு வர்ற சாதாரண ரசிகனா இருந்தாலும் சரி, மதராச பட்டணத்து மவராசனா இருந்தாலும் சரி, விஜய் வீட்டு பொட்டலத்திலே விசேஷமான அன்பிருக்கும். அதைவிட பிரமாதமா 'ருசி' இருக்கும்!

அப்பப்போ ஷோபா கல்யாண மண்டபத்தை 'கிராஸ்' பண்ணும்போது 'அறுபத்து மூவர்' திருவிழா மாதிரி, கோலாகல கூட்டம் முண்டியடிக்கும். மூலவரை பார்த்திட்டு வெளியே வரும்போது பிரசாதம் கிடைக்குமே, அதுமாதிரி விஜயை பார்த்திட்டு வெளியே வரும்போது பிரியாணி கிடைக்கும்! எஃக்கை முழுங்கிகிட்டே "இளைழ்ய தளழ்பழ்தி வாழ்ழ்ழ்க"ன்னு கோஷம் போடுற ரசிகன், லெக் பீசை கடிச்சிக்கிட்டே, "தலைவா...."ன்னு சாமியாடுவான். நல்லவேளையாக பக்கத்திலேயே தண்ணீ பாட்டிலை உடைச்சு தாகத்தை தீர்த்து ஆறுதல் படுத்துவாய்ங்க சீனியர் ஆபிசருங்க! ஐ மீன் சீனியர் ரசிகர் மன்ற பொறுப்பாளருங்க. மூணு மாசத்துக்கு ஒருமுறை இந்த ராட்சச ராணுவத்தை மேற்பார்வையிட்டுட்டு காரேரி விர்ர்ர்ராகிவிடுவாரு விஜய். வில்லாகி விடுவாருன்னு கூட மாத்தி படிங்க, தப்பில்லே!

போற வரும்போது ஓரக்கண்ணால இந்த உற்சவத்தை பார்த்தாலும், நின்னு பார்த்தா, "பிடிய்யா ஒரு பிரியாணி பொட்டலத்தை"ன்னு கொடுத்திட்டா என்ன பண்றது? அதனாலயே இண்டு இடுக்கிலே வண்டிய நுழைச்சு சர்ர்ர்ர்ருன்னு போயிடரது நம்ம வழக்கம். இடையிலே என்ன நடந்ததோ, "பிரியாணி திருவிழாவுக்கு வரியா நீ?" ன்னு கேட்க ஆரம்பிச்சாங்க 'பிரஸ்'சையும்! ஆனால் இதுல ரொம்ப ரொம்ப நாகரிகம் வெளிப்பட்டுச்சு.

ஒவ்வொரு முறை படம் ரிலீஸ் ஆகும்போதும், "விஜய் அழைக்கிறார்"னு போனில் கூவுவாரு அவரோட பிஆர்ஓ பி.டி.செல்வகுமார். வீட்டு மொட்டை மாடியில் தல வாழ இலை போட்டு குலை குலையா 'பந்தி'ரிக்கா விளையாட்டு நடக்கும்! ஒவ்வொருவரையும் கைகுலுக்கி வாங்கன்னு அழைப்பார் விஜய். இவ்வளவு பவ்யமா? இவ்வளவு அன்பான்னு திக்குமுக்காட வைப்பாரு. "இன்னொரு லெக் பீஸ் வச்சுக்கோங்க"ன்னு விஜயே கோழிக் காலோடு வரும்போது, உள் மனசு "கொக்கரக்கோ"ன்னு கூவும். அவரு பரிமாறுவதை அக்கம் பக்கத்து மாடியில் இருந்து வச்சக் கண் வாங்காம பார்க்கிற குடும்பஸ்தர்கள், வெளியே வரும்போது நம்மையும் விஜயை பார்ப்பது போலவே பார்ப்பார்கள். கொஞ்சம் கூச்சமாக கூட இருக்கும். (நல்லவேளையாக மேற்படி நாட்களில் ரசிகர்கள் திரளாதபடி பார்த்துக் கொள்வார்கள்)

சிக்கனையும் மட்டனையும் போட்டு சீராட்டினா, நாமும் பாராட்டிதானே ஆகணும்? ஆனாலும், சில நேரங்களில் குத்திக்காட்டும்போது கோவப்பட மாட்டார்கள் விஜயும் அவரது அப்பாவும். ஆனால் இந்த பிரியாணி திருவிழாவை புறக்கணித்த ஒரு நிருபர் 'மர்ம காய்ச்சல்' வந்து மாற்றலாகி போன சோகத்தைதான் இப்போது பார்க்க போகிறோம்.

'அறம் எனப்படுவது இல்வாழ்க்கை, அன்பு எனப்படுவது பிரியாணி' என்ற இரண்டு வார்த்தைகளுக்குள் அடங்கிப் போனது தமிழனின் வாழ்வு. ஒரு ஞாயிற்று கிழமை மதிய பொழுதில், செல்வகுமாரின் செல்போனிலிருந்து வந்தது நமக்கு 'கொக்கரக்கோ' சத்தம். அது ஒரு கிறிஸ்துமஸ் நேரம். "யாரும் சாப்பிட வேண்டாம். வந்துகிட்டே இருக்கேன்"னாரு செல்வகுமாரு. அடுத்தடுத்த அரை மணி நேரத்தில், எல்லா நிருபர்கள் வீட்டுக்கும் போனது சுட சுட பிரியாணி. 'நீங்கள் பெற்ற இன்பம் குடும்பமும் பெறுக' என்ற விஜயின் பெரிய மனசுதான் காரணம். கேரியரில் ஒரு மினி முனியாண்டி விலாசே வந்திருந்தது. ரசித்து ருசித்தவர்களும், ருசித்து ரசித்தவர்களும் குட்டி து£க்கத்தில் ஆழ்ந்திருக்க, நான் சொன்ன நிருபர் மட்டும் காத்திருந்து காத்திருந்து கண் சிவந்து போனார். வழி தெரியாமல் சுற்றிய பிரியாணி வள்ளல்கள், மாலை நாலு மணிக்குதான் அவர் வீட்டு கதவை தட்டினார்கள். கோபத்தில், "போங்கய்யா... நீங்களும் உங்க பிரியாணியும்" என்று சினந்தவர், கதவை 'படீர்' என்று சாத்தினார். அவ்வளவுதான். அடுத்த நான்காம் நாள் அவர் வேலை பார்த்த பத்திரிகையில் ஏதேதோ என்கொயரி.

இந்த புறக்கணிப்புதான் அவருக்கு பிரச்சனையானது. சிக்கன் பிரியாணியில் லெக் பீஸ் கிடந்தால் ருசி. 'டிஸ்மிஸ்' கிடந்தால்? கிடந்தது அவருக்கு!

இந்த டிஸ்மிஸ்சுக்கு காரணம் 'அவருதான்'னு கை காட்டுறாரு நிருபர். இல்லைன்னு மறுக்குது இன்னொரு டீம். நண்பர் இப்போ வேறொரு மாவட்டத்தில் பெரிய நாளிதழ் ஒன்றில் பெரிய பொறுப்பில் இருக்கிறார். போன வாரம் போன் பண்ணி, "ஊருக்கு வர்றேன். சிக்கன் பிரியாணி போடுறீயளா?" என்றேன்! "வில்லங்கத்தை ரயில்லே கூட்டிட்டு வருவீய போலிருக்கே"ன்னாரு. அந்த பதிலுக்குள்ளே இருந்தது ஆயிரமாயிரம் சோகம்!