Tuesday, March 31, 2009

பாசம் வச்ச பச்சக்கிளிதான்....

டி.ராஜேந்தர் பார்ப்பதற்குதான் அன்னாசி மாதிரி! பிழிந்தால் நவரசம் என்பதை முன்பே சொல்லியிருந்தேன். அதுதான் இவ்வளவு கொடூரத்திற்கிடையேயும் நண்பர்களை தக்க வைத்திருக்கிறது இப்போதும்!

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன் இவரோடு பார்த்தவர்களை இப்போதும் பார்க்கிறேன். குடந்தை ராஜப்பா, கருணாநிதி, மதி, மற்றும் சிலரின் பெயர்கள் மறந்துவிட்டது. ராஜேந்தரை சுற்றி சுற்றியே வருபவர்கள் இவர்கள். உயிருள்ளவரை உஷா காலத்திலிருந்தே அவரது உற்ற நண்பர்கள். அல்லது தொண்டர்கள். அல்லது கவுரவமான வேலைக்காரர்கள்!

இவர்களுக்கு என்ன செய்திருக்கிறார் டி.ஆர்? கொஞ்சம் அக்கறையோடு கேட்டுப்பார்த்தால் உதட்டை பிதுக்குவார்கள். ஆனாலும், இவர்களின் சந்தோஷமும் துக்கமும் டி.ராஜேந்தர்தான். இவர்களையும், ராஜேந்தரையும் இறுக்கமாக முடுக்கி வைத்திருக்கிற ஸ்பானர் எது? அவர் கொடுக்கிற சின்ன சின்ன அன்புதான்! (நன்றாக கவனிக்கவும், அன்புதானே தவிர அன்பளிப்பு அல்ல)

அப்போதுதான் தனியார் தொலைக்காட்சிகள் உருவாகி வந்த நேரம். தனது படங்களின் தொலைக்காட்சி உரிமையை எந்த டி.வி க்கும் வழங்கியிருக்கவில்லை இவர். அதனால் வாரத்திற்கு ஒருமுறை இவரது அலுவலகத்தில் அடுக்கப்பட்டிருக்கும் ஏதாவது இரண்டு படப்பெட்டிகளாவது தியேட்டர்களுக்கு போகும். அந்த பெட்டிகள் திரும்பி வரும்போது கூடவே கலெக்ஷனும் வரும். எல்லா செலவுகளும் போக குறைந்தது பத்தாயிரமோ இருபதாயிரமோ தருவார்கள். திருமதி. உஷா இருந்தால் "அவங்ககிட்டே கொடுங்க" என்று அந்தப்பக்கம் கை நீட்டி விடுவார். அவர் இல்லையென்றால், அந்த பணத்தை அப்படியே இவர்களுக்கு (இன்னும் சிலரும் அப்போது கூட இருந்தார்கள்) பிரித்துக் கொடுத்துவிடுவார். "யேய், அக்கா வர்றதுக்குள்ளே வந்து வாங்கிக்கோங்கப்பா" என்று இவர் அவசரம் காட்டுவது ஆச்சர்யமாக இருக்கும்! இன்றைய நிலையில் இந்த வருமானத்திற்கும் வாய்ப்புகள் இருக்கப் போவதில்லை. ஆனாலும் தொட்டு தொடர்கிறது இவர்களின் பாச பந்தம்!

செங்கல்பட்டிலிருந்து தினமும் உஷா அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தார் லே-அவுட் ஆர்ட்டிஸ்ட் முருகன். உஷா இதழுக்கு இயக்குனர் ஒருவர் ஆவேச பேட்டியளித்திருந்தார். 'அர்ஜுன் ஒரு வளர்த்த கடா' -இதுதான் அந்த கட்டுரையின் தலைப்பு. நம்ம முருகன் அதை எப்படி எழுதியிருந்தார் தெரியுமா? 'அர்ஜுன் வளர்த்த, ஒரு கடா!' யாரும் கவனிக்காமல் அப்படியே பிரசுரமானது. கட்டுரையை வாசித்த வாசகர்கள் ஒரு இடத்திலும், அர்ஜுன் கடா வளர்த்தார் என்ற விபரமே வரவில்லையே என்று மண்டையை பிய்த்துக் கொண்டிருப்பார்கள். அப்படி சுதந்திரமாக செயல்படக் கூடியவர் முருகன். இந்த விஷயத்தை அறிந்த பிறகும், "பரவாயில்லைப்பா... ஒரு வார்த்தையை மாத்தி போட்டுட்டான்(?) விடுங்க" என்று மன்னித்துவிட்டார் டி.ஆர்.

இந்த முருகனுக்கு டி.ஆர்.அன்பு காட்டிய விஷயத்தைதான் இப்போது சொல்லப்போகிறேன். இவர் திமுக வில் எம்.எல்.ஏ வாக இருந்த நேரம் அது. செங்கல்பட்டில் ஒரு பொதுக்கூட்டத்திற்கு அழைத்திருந்தார்கள் டி.ராஜேந்தரை. வழக்கமாக மாலை நேரத்தில் ரயில் பிடித்து செங்கல்பட்டு போய் இறங்கும் முருகன் அன்று, "அண்ணே... ஒங்களோட வேன்ல வந்து இறங்கிக்கிறேன்" என்று கூறியிருந்தார். "அதுக்கென்னடா சரி" என்று கூறிவிட்டார் இவரும்.

இவரது பிரச்சார வேனில் மேற்படி கோஷ்டிகள் ஏறிக்கொள்ள வண்டி கிளம்பியது. பயணத்தின்போது முருகனிடம், வீடு எங்கேயிருக்கு? செங்கல்பட்டிலிருந்து வீட்டுக்கு போக எவ்வளவு து£ரம்? எப்படி போவே? என்றெல்லாம் விசாரித்தபடியே சென்றார் டி.ஆர். வேன் செங்கல்பட்டை அடைந்தபோது இவருக்காக காத்திருந்த தொண்டர்கள் பெருத்த கோஷத்தை எழுப்பினார்கள். கூச்சல்களுக்கிடையே இவரிடம் சொல்லிவிட்டு போக கூட அவகாசம் இல்லாமல் கதவை திறந்து கொண்டு கீழே இறங்கிவிட்டார் முருகன்.

ஆனால் முருகன் இறங்கும்போது பஸ்சில் போக சொல்லி இருபது ரூபாயை அவரது கையில் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்த ராஜேந்தர் இந்த அமர்க்களத்தில் கொஞ்சம் தாமதிக்க, அதற்குள் சில அடி து£ரம் போய்விட்டார் முருகன். வெளியே வாழ்க கூச்சல் கேட்டுக் கொண்டிருக்க, வேனின் ஜன்னல் இடுக்கு வழியாக ஒரு இருபது ரூபாய் தாளை நீட்டியபடி, "யேய்... முருகா. இந்தா பணம். பஸ்சிலே போ. நடந்து போகாதே" என்று ஓங்கிக் குரல் கொடுத்துக்கொண்டிருந்தார் டி.ஆர். பிறகு அந்த கூட்டத்தில் முண்டியடித்து பணத்தை வாங்கிக் கொண்டார் முருகன்.

இப்போது சொந்த ஊரில் கவுன்சிலராக இருக்கிறார் நம்ம முருகன். சென்னைக்கு ஏதாவது வேலையாக வந்தால் கூட, "அண்ணனை ஒரு எட்டு பார்த்திட்டு போகலாம்னு வந்தேன்" என்று நமக்கும் ஒரு போன் அடிப்பார்.

அண்ணேய்ய்ய்ய். பேனாவை எடுத்திட்டாருண்ண்ண்ண்ண்ணேய்

ஒரு பேட்டிக்காக போயிருந்த போதுதான் சிவசங்கர் பாபா என்னையும் உதயசூரியனையும் கவர்ந்திருந்தார். (ம்க்கூம், கடைசியா உ.சூ. சிரிச்சிட்டே ஓடிட்டாருன்னு கதை முடியும், அப்படிதானே?)

அப்போது நீலாங்கரை பக்கத்திலிருந்தது அவரது ஆஸ்ரமம். இடுப்பில் இரண்டு கைகளையும் ஸ்டைலாக வைத்துக் கொண்டு "இந்த மாலை நேர சசாங்கத்திலே..." என்றபடி அவர் மைக்கை பிடித்தால் தமிழ் வெள்ளம் கரை புரண்டு ஓடும். எதிரே அமர்ந்திருக்கிற பக்த கோடிகள் இந்த தமிழ் வெள்ளத்தோடு பாபா தருகிற டிபன் வெள்ளத்தையும் ருசிக்கலாம். எல்லாமே இலவசம் என்பது இன்னும் ருசியல்லவா?

உட்கார்ந்த இடத்திற்கே வந்து கைகழுவ தண்ணீரும், டிபனை சாப்பிட்டு முடித்ததும் பிளேட்டை வாங்கிக் கொண்டு போகிற பவ்யமும், எனக்கு தெரிந்து எந்த ஆசிரமத்திலும் இல்லை. (இதே வேலையா திரிவாய்ங்க போலருக்கு என்று நீங்கள் நினைத்தாலும் தப்பில்லை) ஏதோ, மாலை நேரத்திலே போனாமா? நாலு தோசையை உள்ளே தள்ளினோமா என்ற சந்தோஷத்தை ஒரே நாளில் கெடுத்தார் உதய சூரியன். (ஆரம்பிச்சிட்டாய்ங்கய்யா...)

தினம் தினம் கூடும் சுமார் 1000 பேர் கூட்டத்தில் எங்களை பார்த்தால் மட்டும் இன்னும் குளிர்வார் பாபா. காரணம், வருகிறவர்கள் எல்லாம் அவரை கடவுளாக பார்க்க, நாங்கள் மட்டும் நண்பராக பார்த்தோம். "இன்னும் கொஞ்சம் வேட்டிய தழைய கட்டினா நல்லாயிருக்குமே? இன்னிக்கு நீங்க ஆடும்போது புது ஸ்டெப் வச்சீங்க" போன்ற காமெண்டுகளை எந்த பக்தன் உதிக்கப் போகிறான் எங்களை மாதிரி? அதனாலேயே நாங்கள் ஆசிரமம் வந்தால், மைக்கில் பேசிக் கொண்டிருந்தாலும் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவரது பர்சனல் அறைக்குள் இருப்பார் பாபா. எதிரே நாங்கள் இருப்போம், முகமெல்லாம் பல்லாக! இவ்வளவு சந்தோஷமாக இருந்தாலும், அவரிடம் பிடிக்காத விஷயம்.... அடிக்கடி உள்ளங்கையை நீட்டி, "என் ரேகையை கவனிங்க. இதிலே சிவனோட உடுக்கை இருக்கு, சூலாயுதம் இருக்கு. அவரு தலையிலே சூடுற பிறை இருக்கு. இதோ, கங்கை கூட வழியுது பாருங்க" என்பார். முதல் முறை ஏற்படுகிற பிரமிப்பு, வாரத்திற்கு மூன்று நான்கு முறை கேட்கும் போது சப்பென்று போய், அவர் பேனாவை உருவினாலே 'பேஸ்த்' ஆக ஆரம்பித்தோம்.

இந்த காலகட்டத்தில்தான் ஆடிட்டர் ஸ்ரீதரும், ஹெல்த் எடிட்டர் டாக்டர் ராஜ்மோகனும் "எங்களை பாபாவிடம் கூட்டிட்டு போங்க. ஒங்களுக்கு ரொம்ப பழக்கமாமே?" என்றார்கள். விதியாகப்பட்டது வலியதாச்சே? அவர்களிடம், "அதுக்கென்னா போயிட்டா போச்சு" என்று நாளும் குறித்துவிட்டோம். ஆனால் எங்களுக்குள் இருந்த பயத்தை எப்படி சொல்வது? நான் சொன்னேன், "இவங்களை கூட்டிட்டு போறது பிரச்சனையில்லே. பேசிட்டு இருக்கும்போது அவரு பேனாவை எடுத்து ரேகை போட ஆரம்பிச்சா நீங்க சிரிச்சுறக் கூடாது. அப்புறம் எல்லாருக்கும் அசிங்கமாயிடும்" என்றேன். "ஆமாண்ணே..." என்றார் உ.சூ வும் அவசரம் அவசரமாக!

நினைத்தபடியே எல்லாம் நடந்தது. யாருக்கும் கிடைக்காத பெறும் பேற்றை நாங்கள் பெற்று தந்ததாகவே நினைத்தார்கள் விருந்தாளிகள் இருவரும். குளிர குளிர அடித்த ஏசி அறையில் பாபா தன்னுடைய தமிழை பந்தி வைத்துக் கொண்டிருந்தார் அவர்களுக்கு. கூப்பிய கையை இறக்கவே இல்லை இருவரும். நானும், உதயசூரியனும் பாபாவுக்கு எதிரே உள்ள நாற்காலியில் அமர்ந்திருந்தோம். நாங்கள் செய்த ஒரே தவறு அருகருகே அமர்ந்திருந்ததுதான். பக்தி பரவசமாக போய் கொண்டிருந்த அந்த அரை மணி நேரத்தில்தான் நாங்கள் நினைத்துக் கொண்டிருந்த அபாய நேரமும் வந்தது.

பேசிக் கொண்டேயிருந்த பாபா திடீரென்று எதிரே இருந்த குவளையிலிருந்து ஒரு பேனாவை எடுத்தார். என் காதருகில் வந்த உதயசூரியன், சும்மாயிருந்து தொலைய வேண்டியதுதானே? "அண்ணேய்ய்ய்ய். பேனாவை எடுத்திட்டாருண்ண்ண்ண்ண்ணேய்..." என்றார் கிடுகிடு குரலில். அவ்வளவுதான். நான் பல்லை இறுக கடித்துக் கொண்டு வேறு திசையில் சீரியசாக பார்க்க ஆரம்பித்தேன். ஆனால், உதயசூரியனிடமிருந்து ஒரு விசும்பல் சவுண்ட் மட்டும் வந்து கொண்டிருந்தது. நைசாக ஓரக்கண்ணால் அவரை கவனித்தால், மனிதர் வாயை இறுக பொத்திக் கொண்டு பொங்கி வந்த வெடி, மற்றும் இடி சிரிப்பை வயிற்றுக்குள் அடக்கிக் கொண்டு குலுங்கிக் கொண்டிருந்தார். அதுவும் கொஞ்ச நேரம்தான். படீரென்று வெடித்தது சிரிப்பு. அப்படியே "கெக்க்க்கேகக்யேய்ய்..." என்று சிரித்துக் கொண்டே எழுந்து வெளியே ஓடினார்.

விருந்தாளிகளிடம், இதுதான் சிவனின் உடுக்கை என்றெல்லாம் விளக்கம் அளித்துக் கொண்டிருந்த பாபா, எதிரே நடந்த இத்தனை கலவரத்தையும் கவனிக்காதவர் போல தொடர்ந்து கொண்டிருந்தார்.

சரி, அப்புறம் என்னாச்சு? அதற்கு பிறகு நாங்கள் பலமுறை அங்கு போயிருக்கிறோம். ஒருமுறை கூட எங்களுக்கு ரேகை காட்டியதில்லை பாபா! அவருக்கா தெரியாது?

Saturday, March 28, 2009

தொப்புளுக்கு குளோஸ் அப்.... துரத்தியடித்த ப்ரிவியூ

எல்லா படத்தையும் ஓசியிலேயே பார்த்திடுறீங்க. கொடுத்து வச்ச ஆளுய்யா நீங்கன்னு வாயிலே புகை வரும்படி வாழ்த்தினார் நண்பர். (அவருக்கு சிகரெட் குடிக்கிற பழக்கம் இல்லை என்பதை அறிக) இன்பமோ, துன்பமோ யாம் பெற்றதை நீங்களும் பெறுக என்று அழைத்துப்போனேன் ஒரு படத்திற்கு. நாலு ரீல் முடிவதற்கு முன்பே "பாவம் சார் நீங்க"ன்னாரு... சில வருடத்திற்கு முன்பே நண்பர் அறிமுகம் ஆகியிருந்தால், ஒரு வியத்தகு அனுபவத்திற்கு இட்டுச் சென்றிருக்கலாம்.

தி நகர் ஏரியாவில் இருக்கிறது மேனா தியேட்டர். ப்ரிவியூ தியேட்டராக இருந்த இதில், இப்போது தனியார் தொலைக்காட்சிகளுக்காக செட்டுகள் போடப்பட்டு நிகழ்ச்சிகள் படமாகி வருகின்றன. இங்குதான் அந்த பயங்கரம் அரங்கேறியது.

படத்தின் பெயரோ, இயக்குனர் பெயரோ நினைவில் இல்லை. டைட்டில் போட்டு சில நிமிடங்கள் ஆனபின் போயிருந்தேன். வழக்கமாக பிரஸ் நண்பர்கள் மட்டுமே அமர்ந்திருப்பார்கள் என்று நம்பி, ஒரு சீட்டில் அமர்ந்தேன். படம் ஓடிக் கொண்டிருந்தது.

ஒரு கருத்த ஆசாமி (அவர்தான் ஹீரோ) அடிக்கடி ஸ்கீரினுக்கு இரு முனைக்கும் இடையில் நடந்து கொண்டேயிருந்தார். அவரது காஸ்ட்யூம் வெறும் கோவணம் மட்டுமே! கேமிராவும் அவரது கருத்த பின்புறத்தை அடிக்கடி காண்பித்துக் கொண்டேயிருந்தது. இவர் நகர்ந்து கொண்டிருந்தாரே தவிர கதை நகர்ந்த மாதிரி தெரியவில்லை. படத்தின் கதாநாயகி என்று ஒரு பெரியம்மாவை காண்பித்தார்கள். என்னவொரு நம்பிக்கை, அவரது தொப்புளுக்கு அடிக்கடி குளோஸ் அப் வேறு. "அம்மா நடிச்சுட்டு வந்திர்றேன், வீட்ல பத்திரமா இருக்கணும் என்னா?" என்று குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு வந்திருப்பார் போலும். இடுப்பை சுற்றி ஒரே வரி வரியாக ரேகைகள்! (அதன் மேல் கொஞ்சம் ஏஆர்ஆர் சுண்ணாம்பை தேய்த்திருந்தாலாவது பரவாயில்லை, வரிகள் மறைந்திருக்கும்)

தாங்க முடியாமல், "கொலையா கொல்றானுங்களேப்பா" என்று பக்கத்து சீட் நண்பரிடம் சொல்லிவிட்டு, அவரது பதிலுக்காக திரும்பினேன். பயங்கர அதிர்ச்சி. திரையில் வரும் அந்த கோவண ஆசாமிதான்! ம்ஹ§ம், கமென்ட் அடிக்கக் கூடாது. இன்டர்வெல் விட்டதும் எஸ்கேப் என்ற முடிவோடு அமர்ந்திருக்க, எனது மன நிலையிலேயே மொத்த தியேட்டரும் அமர்ந்திருந்தது போலும். இன்டர்வெல் என்ற ஒரு தேவ வார்த்தை திரையில் தோன்ற, ஒட்டுமொத்த பிரஸ்சும் அப்படியே சந்தோஷத்தோடு எழுந்தது. ஆனால் அந்த நம்பிக்கையில் விட்டார்கள் ஒரு அறை. ஒரு வினாடிக்குள் இன்டர்வெல் என்ற டைட்டில் மறைந்து படம் ஓட ஆரம்பித்தது.

'போட்டா போட்டுக்கோ' என்ற மன நிலையோடு கதவை திறக்க போனால், அங்குதான் இன்னும் சோதனை. இவனுங்க இப்படியெல்லாம் பண்ணுவானுங்கன்னு நினைச்சாய்ங்களோ என்னவோ, வெளியே பூட்டியிருந்தாய்ங்க. "ஹலோ, கதவ திறங்க" என்ற சாஃப்ட்டாக ஆரம்பித்த வார்த்தைகள், "கதவை திறங்கடா கம்னாட்டிகளா" என்று அலறும்படி ஆனது. ஆனால் எதற்கும் மசிவதாக இல்லை அவர்கள். இத்தனை சுதந்திர வேட்கையையும் உள்ளேயிருந்து கவனித்துக் கொண்டிருந்தார் அந்த கோவண ஹீரோ.

வேறு வழியில்லாமல் (இந்த முறை வேறு இடத்தில் அமர்ந்து) மிச்ச படத்தையும் பார்த்து முடித்தேன். வணக்கம் போட்டபின்தான் கதவை திறந்தார்கள். நம்பிக்கையோடு பிரஸ் தோழர்களுக்கு கை கொடுக்கவும் முன் வந்தார் கோவண ஹீரோ. அவர்தான் படத்தின் இயக்குனர் என்பதும் வெளியே வந்தபின்தான் தெரிந்தது. நம்பினால் நம்புங்கள், இதற்கு முன்பு யாரிடமும் எந்த பத்திரிகையாளர்களும் இப்படி நடந்து கொண்டதில்லை. அவரின் கையை, "விடுய்யா..." என்று ஓங்கி தட்டிவிட்டு வேக வேகமாக நடக்க ஆரம்பித்தோம் தியேட்டருக்கு வெளியே!

இன்று வரை அந்த படம் ரிலீஸ் ஆகவே இல்லை என்பது உங்களுக்கு கூடுதல் தகவல். எங்களுக்கு ஆறுதல் தகவல். இப்போது சொல்லுங்கள், முதல் பாராவில் நண்பர் சொன்னது சரியா?

Friday, March 27, 2009

என்னது, செடி வளர்ந்திருச்சா....?

விஜய், "யேய்ய்ய்ய்..."னு பிரஸ் மீட்ல அதட்டுன க்ளிப்பிங்ஸ் ஒன்னு வேல்டு முழுக்க 'ப்ளே' ஆகிட்டு இருக்கு. (இந்த படம் வில்லுவை விட நல்லா ஓடுதாம்) நாலு நாளைக்கு முன்னே இதை பார்த்த அரசியல் பத்திரிகை ஆசிரியர் ஒருத்தர் எனக்கு போன் பண்ணி, அப்படி என்னதான் கேட்டீங்க அந்த நிருபர்கள் கூட்டத்திலேன்னாரு. கேட்டீங்கன்னு அவரு கேட்டது என்னையில்லே, என்னை மாதிரி நிருபர்களை!

"அது இங்கே நடந்த பிரஸ்மீட் இல்லே. சென்னை நிருபர்கள் விஜயிடம் அப்படி கோவப்படுறா மாதிரி கேட்க மாட்டாங்க. இது திருச்சியில் நடந்த பிரஸ்மீட். அவங்களுக்கு தெரியாதில்லையா, விஜய் இப்படி கேட்டா கோவப்படுவாருன்னு. அதனாலே கேட்டுட்டாங்க" என்றேன் அப்பாவியாக! இப்படி பதில் சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்லை? அவரு கோவப்பட்டா நீங்க(ள்ளாம்) விட்ருவீங்களா? என்னய்யா பத்திரிகைகாரங்கன்னு பொறிஞ்சாரு. கேட்க மாட்டோம்னு சொல்றதுக்கே கோவப்படுறாரே, எப்படி கேட்போம்னு தெரிஞ்சா எப்படியெல்லாம் கோவப்படுவாரோ?

நான் பல வருஷமா பார்த்திட்டு இருக்கிற மூத்த பத்திரிகையாளர் அவரு. கேள்வி கேட்க ஆரம்பிக்கும்போதே ஏதோ எதிராளியை மடக்கி மல்லாக்கொட்டை திங்க வைச்சுருவாரோங்கிற மாதிரியே இருக்கும். ஒரு முறை விஜயகாந்திடம் இப்படி கேட்டார். "கேப்டன், நான் உங்களை பல வருசமா வாட்ச் பண்ணிகிட்டே இருக்கேன். அப்பப்போ உங்க வீட்டு முன்னாடி கூடுற ரசிகர்களையும் வாட்ச் பண்றேன்"னுட்டு கொஞ்சம் பிரேக் விட்டார். (ஐயய்யோ பெரிய குண்டை போட்டுறப் போறாருன்னு காதை கூர்மையாக்கிட்டு கேட்டால், மீதி கேள்வியை முடிச்சாரே பார்க்கலாம்) "நீங்க அவங்ககிட்டே பழகிற விதமும், அவங்க உங்களை வாழ்த்துறதையும் பார்த்தா உங்களை கருப்பு எம்ஜிஆர்னு சொல்றதிலே தப்பில்லேன்னு தோணுது. இது பற்றி என்ன சொல்றீங்க"ன்னாரு. இதுக்கு விஜயகாந்த் சொன்ன பதில்தான் இன்னும் சிறப்பு. அட போங்கண்ணே... ரசிகர்கள் விரும்புறாங்க. அவங்க ஆசையை ஏன் வேணாம்னு சொல்லணும்?

இது நீண்டகாலமாக ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் பார்க்கறதால வர்ற தயக்கம், அல்லது பிரச்சனைன்னு கூட சொல்லலாம்.

அஜீத்தை பார்க்க போயிருந்தார் இன்னொரு நிருபர். ஒரு பேச்சுக்கு "என்னண்ணே, நம்ப ஆபிஸ் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு"ன்னாரு அஜீத். அதுக்கு இவரு வேற ஏதாவது பதில் சொல்லியிருக்கலாம். இவர் ஒரு பதிலை சொல்லப்போக அப்போதைக்கு (பல்லை கடிச்சிகிட்டு) அமைதியா இருந்த அஜீத், அவரு போன பிறகு விழுந்து விழுந்து சிரிச்சாராம். ஏன்?

"ஆமா ஆமாம். போன தடவை நான் வந்திருக்கும்போது இந்த செடி சின்னதா இருந்திச்சு. இப்போ பாருங்க வளர்ந்து என் தோளுக்கு நிக்குது" என்றார் நிருபர். வேடிக்கை என்னவென்றால், அந்த செடி அழகுக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் செடி. பல மாதங்களாக அதே உயரத்துடன் அங்கேதான் நிக்குது. இதைதான் நினைத்து விழுந்து விழுந்து சிரித்தார் அஜீத்.

அதே நேரத்தில் கடுமையான கேள்விகளோடு நேருக்கு நேர் மோதுற நிருபர்களும் உண்டு. இதே விஜயிடம் பேட்டியெடுக்க போயிருந்தார் நண்பர் இரா.த.சக்திவேல். முன்பே அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொண்டுதான்....

எல்லா கேள்விகளுக்கும் வேண்டா வெறுப்பாக ம்... ம்ஹ§ம்... இல்லை... என்று ஒற்றை வரியிலேயே பதில் சொல்லிக் கொண்டிருந்தார் விஜய். ஒருகட்டத்தில் பொறுமை இழந்த சக்தி, "சார் உங்களுக்கு பிடிக்கலைன்னா சொல்லுங்க. நான் பாட்டுக்கு எந்திருச்சு போயிடுறேன். அதை விட்டுட்டு இப்படி பதில் சொன்னா எப்படி எழுதறது?" என்று கேட்டுவிட்டு விருட்டென்று சீட்டில் இருந்து எழுந்து கொண்டார். அவ்வளவுதான்.... பதறிப்போன விஜய், "ங்ணா ஏன்னா கோவிச்சிக்கிறீங்க? கொஞ்சம் வேற விஷயத்திலே அப்செட்டா இருந்தேன். எப்படி வேணும்னு கேளுங்க, சொல்றேன்" என்றார். அதற்கு பின் அந்த பேட்டி பல மணி நேரம் நீடித்தது.

"ரொம்ப பயன்துட்டான்ல"


'ம­ளுக்' என்று குழாயை திறந்துவிட்ட மாதிரி கண்ணீர் வரும் ராஜேந்தருக்கு! எந்த சந்தர்பத்தில் அழுவார் என்பதை யாராலும் கணிக்க முடியாது. "நான்லாம் ஊர்லே இருக்கும்போது ஒரு வேளை சோ..." என்று ஆரம்பிக்கும்போதே தாரை தாரையாக கண்ணீர் ஓடும். சிறு பிள்ளைகள் மாதிரி, இரண்டு கைகளாலும் துடைத்துக் கொள்வார். அந்த வாக்கியத்தை முடிப்பதற்குள்ளாகவே அடுத்த சம்பவத்திற்கு தாவி, "நானெல்லாம்...." என்று இரண்டு கைகளாலும் சிட்டிகை போட்டுக்கொண்டே, "ங்கொம்...." என்று ஆரம்பித்து சென்னை பாஷையை சிதறு தேங்காயாக்குவார்.

சிரிக்க ஆரம்பித்தார் என்றால், பக்கத்து பில்டிங்குகள் கூட கிடுகிடுக்கும். உட்கார்ந்த இடத்திலேயே அப்படியே குட்டிக்கரணம் அடித்து சிரிப்பார். அப்படியரு சிரிப்போற்சவம் நடந்து கொண்டிருந்தபோதுதான் ராஜேந்தரை உலுக்குகிற அந்த நிகழ்ச்சியும் நடந்தது. வயதான அம்மாள் ஒருவர் வாசலில் நின்று கொண்டு, "என் ராசா... நீதான் இந்த கொடுமைய தட்டிக் கேட்கணும்" என்றார் பெருங்குரலெடுத்து!

அப்போது இவர் பூங்கா நகர் தொகுதியின் திமுக எம்.எல்.ஏ. அந்த வயதான அம்மாளும் பூங்கா நகரிலிருந்துதான் வந்திருந்தார். சினிமாவில் வருவது போல, "என்னாச்சும்மா... அழாம சொல்லு, நான் இருக்கேன்ல" என்று ஆறுதல் கூறிய ராஜேந்தர், அந்த அம்மா சொன்ன கதையை கேட்டு ஒரு புறம் கண்ணீர் வழிய, மறுபுறம் நெஞ்சை புடைத்துக் கொண்டு ஒரு பெரும் போருக்கு ஆயத்தமானார்.

அவர் சொன்னது இதுதான். "அய்யா.... என் புள்ளைய திருட்டு கேஸ்லே போலீஸ் புடிச்சிட்டு போயிடுச்சு. விடிய விடிய அடிச்சிருப்பானுங்க போலிருக்கு. குத்துயிரா கிடக்கிறான். பெரிய ஆஸ்பத்திரிலே சேர்த்துருக்கோம். ஆனா ஒரு டாக்டரும் வைத்தியம் பார்க்க மாட்டேங்குறான். புள்ள துடியா துடிக்கிறான். கொஞ்சம் வந்து பாருங்களேன். உங்களை விட்டா எனக்கு யாரு இருக்கா..." ன்னாங்க. அந்த கடைசிவரியில் தனது அத்தனை வருட பொறுமையையும் தொலைத்துவிட்ட டி.ஆர், "யேய் ங்கோ.... எட்றா வண்டிய" என்றார். அந்த அம்மாளையும் வண்டிக்குள் திணித்துக் கொண்டு புறப்பட்டது பீரங்கி! இருக்கிற நிலைமையை பார்த்தால் அது காராக படவில்லை என் கண்களுக்கு!

சென்ட்ரல் ரெயில்வே நிலையத்திற்கு எதிரே இருக்கிறதே, அதே ஜிஎச்சுதான். காரை விட்டு கீழே இறங்கிய டி.ஆர், "எங்கே இருக்கான் உம் புள்ள? முதல்ல அவன காட்டு. அப்புறம் காட்றேன் இவனுங்களுக்கு" என்றார் அந்தம்மாளிடம். கண்ணீரும் கம்பலையுமாக அந்தம்மாள் வழிகாட்ட, ரதகஜதுரகபதாதிகளுடன் வேக வேகமாக வார்டுகளை கடக்க ஆரம்பித்தார் ராஜேந்தர்.

யேய், ராஜேந்தருடா... என்று முகத்திலும் குரலிலும் ஆச்சர்யம் காட்டியபடி ஒவ்வொரு பேஷண்ட்டாக எழுந்து இவர் பின்னாலேயே ஓடி வர, மேற்படி பையனை நாங்கள் அடைவதற்குள் எங்களுக்கு பின்னால், சுமார் ஐநு£று அறுநு£று பேர் வேடிக்கை பார்க்கும் ஆர்வத்துடன் திரண்டிருந்தார்கள். கூட்டத்தை பார்த்ததும் ஜல்லிக்கட்டுக் காளை இன்னும் கொஞ்சம் முறுக்கிக் கொண்டு துள்ளியது. "டேய், யாருடா இவனை அடிச்சது?" என்றார் படத்தில் வருவது போலவே.

அன்றைக்கு பார்த்து எந்த கோட்டான் முகத்திலே முழிச்சாரோ, அந்த பையனை அடித்த இன்ஸ்பெக்டரும் அந்த பேஷன்டுக்கு அருகில்தான் நின்றிருந்தார். பையனின் அம்மா, "இவருதாங்க அடிச்சாரு" என்று இன்ஸ்பெக்டரை காட்ட, நரம்புகள் புடைக்க கத்த ஆரம்பித்தார் டி.ஆர். "யோவ்... ஒரு பச்ச மண்ண(?) இப்படி அடிச்சிருக்கியே, உனக்கெல்லாம் தம்பி தங்கச்சி இருக்காங்களாய்யா? இவன் செத்துப் போயிருந்தா என்னய்யா பண்ணுவே? இவன் திருப்பி அடிக்க மாட்டான்னுதானே அடிச்சே? வா, எங் கூட சண்டை போடு. யூனிபார்மை கழட்டிட்டு வா..." என்று சொல்லிக் கொண்டே, தன் சட்டை பித்தான்களை சரக் சரக்கென்று கிழித்து தள்ளினார். இந்த கோப வார்த்தைகளை அவர் முடித்திருந்தபோது, ராஜேந்தரின் வெள்ளை சட்டையில் ஒரு பட்டன் கூட இல்லை. அநேகமாக முக்கால் வாசி சட்டையை கழற்றியிருந்தார்.

பக்கத்தில் நின்றிருந்த நாங்கள் பாய்ந்து சென்று மேற்கொண்டு அவர் சட்டையை கழற்றாமல் பார்த்துக் கொண்டோம்.

இல்ல சார்... இவன் என்ன செஞ்சான்னு..? இன்ஸ் ஆரம்பிக்கும்போதே குறுக்கிட்டு, "என்ன வேணா செய்யட்டும்யா? கொல கூட பண்ணட்டும். அவனை அடிக்கிற அதிகாரம் உனக்கு இருக்கா? சட்டம் தெரியுமா உனக்கு? இபிகோ" ன்னு ஆரம்பிச்சு மறுபடியும் யாருக்கும் புரியாத விஷயங்களை எடுத்துவிட்டார், "நானும் லாயருக்கு படிக்கணும்னு ஆசைப்பட்டவன்தான், தெரியுமா" என்றார் மூச்சு வாங்க...

அதற்குள், ஆஸ்பிடல் டீன் பதறியடித்துக் கொண்டு ஓடோடி வந்தார். "சார், வாங்க நம்ம ரூம்லே போய் உட்கார்ந்து பேசுவோம்" என்று அவர் அழைக்க, சிங்கம் மறுபடியும் ஒரு துள்ளு துள்ளி அடங்கியது. இத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த அந்த பையனின் அம்மா கையெடுத்து கும்பிட்டார். கண்ணிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது. "இந்த பையனை காப்பாத்த வேண்டியது எங்க பொறுப்பு" என்று உறுதியளித்தார் டீன்.

"யோவ் போங்கய்யா அவங்கவுங்க வார்டுக்கு" என்று வேடிக்கை பார்த்தவர்களை டீனே துரத்தியடித்தது வேடிக்கையாக இருந்தது.

காரில் திரும்பும்போது, "கொஞ்சம் தண்ணி வாங்குங்கய்யா" என்றார் டிஆர். அழுது அழுதே அஞ்சு லிட்டர் தண்ணியை வெளியேத்தினவருக்கு, ஒரு லிட்டர் பாட்டில் ஒன்றை வாங்கி கொடுத்தோம். ஒரே மூச்சில் குடித்தவர், "ரொம்ப பயன்துட்டான்ல" என்றார் இன்ஸ்பெக்டர் குறித்து. "நாங்களும்தான்...." என்று வாய் வரை வந்ததை அடக்கிக் கொண்டு "ஆமாண்ணே..." என்றோம் கோரசாக!

கடைசிவரை அந்த பையன் என்ன தப்பு பண்ணினான்னு யாருமே கேட்கலே! அது ஏன்னுதான் இன்னிக்கு வரைக்கும் புரியலே...

Tuesday, March 24, 2009

அவரு ஒரு 'நீர் வாழ்' தாவரம்!

நான் கடவுள் ரிலீசுக்கு முன்பு ஒரு இடத்தில் விக்ரமாதித்யனை சந்திச்சேன். அந்த ஒரு இடம் எது என்று சொல்வதற்கு முன், யார் விக்ரமாதித்யன்னு சொல்லணும். நான் கடவுள் படத்திலே தாடியும், மீசையுமா ஒரு வயசானவரு நடிச்சிருப்பாரே, இன்னும் குறிப்பா சொல்லணும்னா அந்த தே...வியாப் பையன்னு சாமிய திட்டுவாரே, அவரேதான்!

பேசிக்கலா அவரு ஒரு கவிஞர். அவர் எழுதுற கவிதைகளை சின்னப்பிள்ளைகளோ, பெண்களோ படிக்க முடியாதுன்னாலும், அதுக்குன்னு ஒரு கூட்டம் மயங்கிக் கிடக்கும். (இருபது வயதில் முலையுண்டு காம்பில்லை, நாற்பது வயதில் காம்புண்டு முலையில்லை... இவரோட கவிதைக்கு இது ஒரு பருக்கைன்னா பார்த்துக்கோங்களேன்)

"இப்போ குடிக்கறதில்லை"ன்னாரு எங்கிட்ட. சந்தோஷமா இருந்திச்சு. ஏன்னா அவரு ஒரு 'நீர் வாழ்' தாவரம்! எது இல்லேன்னாலும் இருப்பாரு. அது இருக்கணும் அவருக்கு. நான் துவக்கத்தில் வொர்க் பண்ணிக் கொண்டிருந்த பத்திரிகைக்கு அடிக்கடி வருவாரு. கைநிறைய பேப்பரை அள்ளி பப்ளிஷரிடம் கொடுப்பாரு. அத்தனையும் மேலே நான் சொன்னேனே, அதே டைப் கவிதைகள். கையோடு சுட சுட பணம் கொடுக்கணும். வாங்கிட்டு போயி, குடிப்பாரு. குடிச்சிட்டு எழுதுவாரு. மறுபடியும் வருவாரான்னு கேட்காதீங்க. கட்டாயம் வருவாரு.

இவருக்கு உதிரியா உதிரியா கொடுக்கறதுக்கு பதிலா, இவரையே எடிட்டராக்கி ஒரு பத்திரிகை நடத்தினா என்ன என்ற முடிவுக்கே வந்திட்டாரு பப்ளிஷர். ஒரு முறை இவரு வர லேட்டாயிருச்சுன்னு கூப்பிட ஆளனுப்பினாங்க. போன பையன் திரும்பி வந்து "அவரு இப்போ வர மாட்டாருங்க"ன்னான். என்னடான்னு கேட்டதுக்கு அவன் சொன்னான், "அவரு இப்போதான் வீட்டிலே இருக்கிற காலி பாட்டிலையெல்லாம் கவுத்து சொட்டு சொட்டா தீர்த்தம் புடிக்கிறாரு. அவரு ரூம்லே ஆயிரம் பாட்டிலாவது இருக்கும். அவரு எப்போ கவுத்து, எப்போ வந்து...." ஒரு ஃபுல் வாங்கித் தரேன்னு பையன் கூப்பிட்டிருந்தாலும் அவர் வந்திருக்க மாட்டார். ஏன்னா, விக்ரமாதித்யன் அப்படிதான்!

ஒருமுறை என்னிடம் கேட்டார். இந்த உலகத்திலேயே சிறந்த கவிஞர்கள் மூணு பேரு யாரு? இந்த கேள்வியின் போது அவர் குழறுகிற அளவுக்கு குடிச்சிருந்தாரு. பாரதியார்... ம், பாரதிதாசன்.... ம், கண்ணதாசன்.

'.......ரு' நான்யா! நான்தான். அவர் குடித்திருக்காவிட்டாலும் இப்படி சொல்லக் கூடியவர்தான். ஆனாலும் அவர் மேல் எங்களுக்கு பெரும் மரியாதை உண்டு. சில விஷயங்களை வெளிப்படையா பேசுவாரு. அவரு தங்கியிருக்கிற காம்பவுண்டில் வரிசையாக வீடு. சாயங்கால நேரத்தில் தலைகால் புரியாம போகிற இவர், தனது வேட்டியை கூட அங்கங்கே தொலைத்துவிட்டு போவார். தலை தெறிக்க ஓடுவார்கள் காம்பவுண்ட் பெண்கள்.

மறுநாள் நேற்றைய பாசிசத்திற்கு சம்பந்தமே இல்லாமல் பொழுது புலரும். ச்சும்மா தும்பை பூ போல வேட்டி சட்டையோடு வாசலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருப்பார். தண்ணீர் எடுக்கும் பெண்களிடம், என்ன தங்கச்சி... பாக்காமலே போறீங்க என்பார் வெள்ளந்தியாக. இவர்கள் அனைவரும் முதல் நாள் இவரை பார்த்து தெறித்து ஓடிய பெண்கள்! சொல்லவா முடியும், முதல் நாள் அட்டகாசத்தை. இல்லேண்ணே... என்றபடியே நகர்வார்கள் பெண்கள்.

சரி, விக்ரமாதித்யனை எங்கே பார்த்தேன்? இரண்டு நாட்கள் போகட்டும் சொல்கிறேன்...

Sunday, March 22, 2009

விதி ஆர்மோனியத்தில, வில்லங்கம் தோள்பட்டையிலே!

சிம்மம் குமாரு சிம்மம் குமாருன்னு ஒரு மியூசிக் டைரக்டரு. என்னது, இப்படியெல்லாம் சொல்றதுக்கு படத்திலே மியூசிக் போட்ருக்கணுமா? எல்லாம் போட்ருக்காரு. படத்து பேருதான் ஞாபகத்தில இல்ல.

உ.சூ பெரிய பத்திரிகை ஒன்னுல எடிட்டரா இருந்த நேரம். "மாப்ளே, நான் ஒரு வி.வி.ஐ.பி கிட்டே கூட்டிட்டு போறேன். ஒரு பேட்டி எடுத்து போட்டேன்னா ஒன்னய கூட்டிட்டு வந்த என்னை மதிச்சு ஒரு படத்தையே எடுத்திடுவாரு. அதிலே நானே மியூசிக் போட்டு படத்தையும் டைரக்ட் பண்ணின மாதிரி இருக்கும்"னாரு சிம்மம் குமாரு. (எப்டீல்லாம் வழி கண்டுபிடிக்கிறாய்ங்க?) சரி, அதுக்கென்னா செஞ்சுட்டா போச்சுன்னு ரெண்டு பேரும் கிளம்பி போனாங்க. கொளுத்துற வெயிலா இருந்தாலும் கோட்டை கழற்றவே மாட்டாரு அந்த விவிஐபி. கடலோரத்திலே தொழில்! அந்த காத்து மாதிரியே சிலுசிலுன்னு பேசுவாரு. என்ன கொடுமைன்னா, "இப்போதான் தம்பி. நீங்க கதவை திறந்துட்டு உள்ளே வரும்போது ஒரு கவிதை எழுதுனேன்னு போட்டு தாளிச்சுருவாரு"

"யேய் மாப்ளே, அங்க வந்து கவிதை கிவிதைன்னு அந்தாளு வாசிச்சா நான் சும்மாயிருக்க மாட்டேன்"ங்கிற கண்டிஷனோடுதான் போனாரு உ.சூ. ஈசிஆர் ரோட்டு பக்கம் வண்டிய திருப்பினாங்க ரெண்டு பேரும்.

வாங்க வாங்கன்னு ஏகப்பட்ட வரவேற்பு. "முதல்ல டீ சாப்பிடுங்க தம்பி. நமக்குன்னு ஸ்பெஷலா இலங்கையிலேர்ந்து வந்த டீ!" இலங்கையிலேயே போட்டு வந்திச்சான்னு உதடு வரைக்கும் வந்த குசும்பை கழுத்தோட நெரிச்சு உள்ளே தள்ளிட்டு, டீ யை ருசிக்க தயாரானார் உ.சூ. என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள். கடவுளே, இந்தாளு கவிதை கிவிதை பாடிட கூடாதுன்னு உதயசூரியன் நினைச்சிட்டு இருக்கிற நேரத்திலேதான், விதி என்ட்ரி!

"தம்பி, காலையிலே எழுந்து எத்தனையோ வேலைகள் பார்த்தாலும், சங்கீத ஆலாபனைய பண்றதை மட்டும் நான் நிறுத்தவே மாட்டேன். இப்போ பாருங்க, இன்னிக்கு காலையிலே ஒரு ஆலாபனை வந்திச்சு" என்று ஏதோ கொட்டாவி வந்தது போல சாதாரணமாக சொல்லிவிட்டு பாட ஆரம்பித்தார் விவிஐபி. தொண்டையை கனைத்துக் கொண்டு, ஆஆஆஆஆஆஆஆ.....ஆ! என்று ராகம் பாட ஆரம்பிக்க, உதட்டில் வைத்திருந்த டீ கப்பை அப்படியே து£க்கி ஓரமாக வைத்துவிட்டு "கெக்க்கக்ககக்கேன்ன்"னு சிரிச்சுகிட்டே வெளியே ஓடி வந்தாரு உதய சூரியன். சம்பந்தப்பட்டவரோட அறையிலே இருந்து மெயின் ரோடு வரைக்கும் சிரிச்சுகிட்டே ஓடி வந்தவர், அப்படியே பஸ் பிடித்து சென்னைக்கே வந்துவிட்டார்.

இரண்டு நாட்கள் கழித்து ஆபிசுக்கு வந்தார் சிம்மம். "டேய், மாப்ளே, இப்படி பண்ணிட்டியேடா"ன்னு விழுந்து விழுந்து சிரிக்க, "மன்னிச்சுக்கோடா"ன்னு இவரும் சிரிக்க,

இப்போதெல்லாம் கண்ட நேரத்திலே பாடுறதில்லையாம் விவிஐபி. குறிப்பா பத்திரிகைகாரங்க வந்தா....!

Saturday, March 21, 2009

கொலுசு வடிவ இதயமும்....கோபித்துக் கொண்ட டி.ஆரும்!


மனைவி கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டுக்கு போவது போல காட்சி. (படத்தின் பெயர் நினைவில் இல்லை) தடுக்க வேண்டிய கணவர் இடத்தில் நம்ம டி.ராஜேந்தர்! வேறு ஹீரோவாக இருந்தால் கட்டிப்பிடித்து ஒரு இச்! அல்லது சேலை தலைப்பை பிடிச்சு இழுத்து, ÔபோவாதேÕ என்று ஒரு கெஞ்சல்! ஆனால் நம்ம ஆளு எப்பவுமே மூணாவது ரகம் ஆச்சே? இரண்டு கைகளையும் விரித்து, மறித்துக் கொண்டு ஒரு கபடி டோர்னமென்ட்டே நடத்துவார். அதையும் மீறி கை இடுக்கில் நுழைந்து(?) ஹீரோயின் வெளியேற, ஒரு நீண்ட அழுகாச்சி பாடலோடு துவங்கும் அந்த காட்சி...

யோவ்... கதாநாயகிய தொடக் கூடாதுங்கறதை நான் என்னோட பாலிசியா வச்சிருக்கேன். வேற எவனுக்காவது சினிமாவுலே இந்த தில் இருக்கா, சொல்ல சொல்லு பார்ப்பம்Õ என்பார் அடிக்கடி! இந்த யோவ்... நீங்களும் நானும் அல்ல. ஒட்டுமொத்த சினிமா இன்டஸ்ட்ரி!

மும்தாஜோடு இவர் நடிக்கும் காட்சியை வீட்டிலேயே படமாக்கிக் கொண்டிருந்தார். (வீடே ஏவிஎம் ஃபுளோர் மாதிரிதான் இருக்கும். அவ்வளவு பெரிசு) வேடிக்கை என்னவென்றால் (தனியாக ஒன்று இருக்கிறதா என்ன, ஒட்டுமொத்தமும் வேடிக்கைதான்!) இவர் ஊரிலுள்ள கெட்ட வார்த்தையெல்லாம் சொல்லி அசிஸ்டென்டுகளை திட்டிக் கொண்டிருப்பார். லாங்குவேஜ் புரியாத காரணத்தாலேயே டைரக்டரின் அங்க அசைவுகளை ரசித்துக் கொண்டிருப்பார் மும்தாஜ். பல நேரங்களில் இவர் நேரடியாக மும்தாஜையே திட்டி தீர்க்கும்போதும், அந்த புன்னகை மாறாமல் நிற்கும் பொண்ணு!

அன்றைய காட்சி என்ன என்பது தெரியவில்லை. அதுவும் அவருக்கு மட்டும்தான் தெரியும். இதய வடிவில் ஒரு கொலுசு படம் வரைந்து அதை மும்தாஜின் முந்தானையில் ஸ்டாப்ளர் அடிக்க நினைத்திருப்பார் போலிருக்கிறது. என்னிடம் திரும்பி, Ôகொலுசு வடிவத்தில் ஒரு இதயத்தை பேப்பரில் நறுக்கிக் கொடுங்கÕ என்றார். எடிட்டோரியல் வேலையை விட்டுவிட்டு ஷ§ட்டிங்கை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றதால் இந்த வேலை கொடுக்கப்பட்டது எனக்கு! நானும் அவர் சொன்னபடியே (ஊரிலுள்ள கடவுளையெல்லாம் வேண்டிக்கொண்டு) நறுக்கிக் கொடுத்தேன்.

சட்டென்று திரும்பி அவரது அசிஸ்டென்ட் ஒருவரிடம், அத எட்றா என்றார். எது என்று சொன்னால்தானே அவர் எடுப்பார், பாவம்! அவர் கீழே குனிந்து பேந்த பேந்த முழிக்க, பொட்டேர் என்று விழுந்தது அவரது பிடறியில்! அறைந்தது டி.ஆர்தான்! மிக சமீபமாக நின்று கொண்டிருந்த மும்தாஜ் இதற்கு ஒரு சின்ன அதிர்ச்சியாவது காட்ட வேண்டுமே? தினமும் இதுபோல நிறைய பார்த்திருப்பார் போலும்! அப்படியே நின்று கொண்டிருந்தார். அந்த முந்தானையை எட்றா. ஒரு பொண்ணு முந்தானைய தொடக் கூடாதுன்னு பார்க்கிறேன். புரிஞ்சுக்க மாட்றீங்களே என்றார் டி.ஆர்.

அந்த அசிஸ்டென்ட் ஒரு கையால் பிடறியை தடவிக் கொண்டே இன்னொரு கையால் மும்தாஜின் முந்தானையை பிடித்து டி.ஆரிடம் நீட்ட, நான் கொடுத்த அந்த கொலுசு வடிவ இதயத்தை (என்ன கற்பனைடா சாமி...) அந்த முந்தானையில் ஸ்டாப்ளர் அடித்தார். படம் ரிலீஸ் ஆனது. நாம் நறுக்கிக் கொடுத்த இதயம் குளோஸ்-அப்பில் வரும் என்ற கற்பனையோடு தியேட்டருக்கு போனால், கொலுசு வடிவ இதயமும் இல்லை, அந்த காட்சியும் இல்லை. படத்தில் இடம் பெறாத அந்த காட்சியால் நான் அறிந்து கொண்ட ஒரே விஷயம்,

டி.ஆர், பெண்களின் முந்தானையை பிடிப்பவரல்ல என்பதைதான்...!

Tuesday, March 17, 2009

குடிகார செல்லனும், குலதெய்வம் நயன்தாராவும்!குடிகாரர்கள் விசித்திரமானவர்கள்! எங்கள் கிராமத்தில் நான் சிறுவயதில் பார்த்த செல்லனில் துவங்கி, சென்னையில் நான் பார்த்து பழகிய குடிகாரர்கள் அனைவருக்கும் குடிப்பதற்கு ஒரு காரணம் இருந்தது.

எனக்கு தெரிந்த வி.ஐ.பி நண்பர் ஒருவர், "சார் நான் இன்னைக்கு ரொம்ப ஜாலியா இருக்கேன். கண்டிப்பா டிரிங்ஸ் அடிக்கணும்"னு குவார்ட்டரை உள்ளே தள்ளுவார். அதே நண்பரை மறுநாள் சந்திக்கும்போது, "ஒரு சின்ன பிரச்சனை. கவலையா இருக்கேன். ஏதாவது சாப்பிடலாமா" என்பார். இவர் சாப்பிடலாமா என்று கேட்பது குவார்ட்டரை தவிர வேறென்ன? சந்தோஷமும், கவலையும் இல்லாத மத்திமமான சூழல் மறுநாள் வந்தே தொலையும். "ரொம்ப போரடிக்குது சார். கொஞ்சமா சாப்டா நல்லாயிருக்கும்லே" என்பார். இந்த மூன்று சூழ்நிலைகளை தவிர மனுசனுக்கு வேற ஏதாவது வரப்போகுதா என்ன?

செல்லனுக்கு, குடித்துவிட்டு சைக்கிளில் ஏறுகிற வரைதான் பிரச்சனை. பெடலில் கால் வைக்கிறேன் என்று ஒரு நு£று முறையாவது சூன்ய வெளியில் காலை விடுவார். பெரிய போராட்டத்திற்கு பிறகு சைக்கிளில் ஏறிவிட்டால் மிச்சத்தை வேகமாக வீசுகிற காற்றே பார்த்துக் கொள்ளும். அவ்வளவு ஸ்டிராங்காக இருப்பார் மனுசன். நயன்தாரா எடைக்கு எடை வாழைப்பழம் கொடுத்திச்சே, அது மாதிரி செல்லன் எடைக்கு எடை கொடுப்பதாக வேண்டிக் கொண்டால், ஒரு தட்டில் இவரையும் இன்னொரு தட்டில் ஒரு சீப்பு வாழைப்பழத்தையும் வைத்தால் போதுமானதாக இருக்கும்! கடந்த முப்பது வருஷமா அவரு இப்படிதான் இருக்கார். எப்பவாவது ஊருக்கு போனால் செல்லன் எப்டியிருக்காரும்பேன். "அவனுக்கென்ன... நல்லாதான் இருக்கான் குடிகாரப்பய"ன்னு சொல்லும் அம்மா! எனக்கு தெரிந்து குடிகாரர்களுக்குதான் ஆயுள் அதிகமாக இருக்கிறது.

நாலு வருசத்துக்கு முன்னாடி ஒரு முக்கியமான விஐபி கொடுத்த பார்ட்டி அது. நாங்களெல்லாம் ரொம்ப மதிக்கிற மனுஷன் அவர். பார்ட்டி கொடுத்தவரும் நாங்க ரொம்ப மதிக்கிற நபர். பேர சொல்லக்கூடாதான்னு கேட்காதீங்க. அப்புறம் அவங்க முகத்தை குவார்ட்டர் அடிச்சுட்டுதான் தைரியமா எதிர்கொள்ள முடியும், தேவையா அது?

பேச்செல்லாம் முடிஞ்சு, கடையை (பாரை) ஒப்பன் பண்ணுகிற நேரம். 'ப்ளீஸ் ஜாய்ன் த காக்டெயில் பார்ட்டி'ன்னு இங்கிலீஷில் அன்பொழுகி மேடையில் இருந்து கீழே இறங்கிட்டாரு விஐபி. மொத்த கூட்டமும் கடையை சூழ்ந்து கொண்டது. நான் சொன்னனே பெரிய மனுசன். திடீர்னு அண்டர்வேரோடு நிக்கிறாரு. கிளாசை கையிலே எடுக்குறதுக்கு முன்னாடியே போதையா? தடுமாறிப்போன விஐபி, அண்ணே, எண்ணன்னே இது?" ன்னு கேட்டாரு. அதுக்கு நம்ம ஆளு சொன்ன பதில்தான் உலகமே கவனிக்க வேண்டிய பண்பாடு!

"இல்லே தம்பி, நான் குடிச்சுட்டேன்னா அங்கங்க வேட்டிய தவற விட்டுர்றேன். வீட்டுக்கு போனா ஒங்க அண்ணி திட்றா. அதான், மடிச்சு பையிலே வைச்சுருக்கேன்" என்று பேக்கை ஓப்பன் பண்ண, குப்புன்னு காது அடைக்கிற மாதிரி சிரிச்சாங்க எல்லாரும். எனக்கு தெரிஞ்சு அதிகம் 'நாய்ஸ் பொல்யூஷன்' வருகிற இடம் 'பார்' மட்டும்தான்!

Saturday, March 14, 2009

இருப்பதை எடுத்து கொடுப்பார் கிடைத்ததை எடுத்து அடிப்பார்!

கடந்த வாரம் ஒரு பிரஸ்மீட் வைத்திருந்தார் டி.ராஜேந்தர். பல வருடங்களுக்கு பிறகு அவரை அங்கு சந்தித்ததால், "அண்ணே... எப்படியிருக்கீங்க?" என்றேன். பரஸ்பர பதிலை சொல்லிவிட்டு "என்ன சார், வீட்டு பக்கமே வரமாட்டேங்கிறீங்க?" என்றார் உரிமையோடு. அவரே மறந்து போனாலும் அந்த வீட்டை என்னால் மறக்கவே முடியாது. கொஞ்சம் கரடு முரடான மனிதராகவே அறியப்பட்ட இவரை நான் பலவித குணங்களோடு பார்த்திருக்கிறேன் அந்த வீட்டில். சொல்ல ஆரம்பித்தால் தனி புத்தகமே போடலாம். பலருக்கு சீரியஸ் மனிதராகவும் சிலருக்கு வேடிக்கை மனிதராகவும் இருக்கும் ராஜேந்தரை பற்றி வெளியுலகத்திற்கு தெரியாத சில சம்பவங்களோடு சொன்னால், உங்களுக்கே ஆச்சர்யம் வரும். கூடவே ஒரு குழப்பமும் வரும். இவர் எப்படிப்பட்டவர்...?

'டி.ராஜேந்தரின் உஷா' என்ற வார இதழை இவர் துவங்கிய போது அங்கே வேலைக்கு சேர்ந்தேன். சுமார் ஐந்து வருடங்கள். தினமும் பார்த்திருக்கிறேன். ஒரே சிவதாண்டவம்தான். கோபம் வந்தால் கையில் இருப்பதை எடுத்து அடித்துவிடுவார். சந்தோஷம் வந்தால் பையில் இருப்பதை எடுத்து கொடுத்துவிடுவார். நல்லவேளையாக நான் இரண்டுக்கும் அப்பாற்பட்டவனாகவே காலம் தள்ளியிருக்கிறேன்.

இவரது அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்களில் பலர் இன்று பெரிய நிலையில் இருக்கிறார்கள். ஆனால் சலீம் என்றொரு ஆபிஸ் பாய் இருந்தார் அவரது அலுவலகத்தில். இப்போது எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. தீவிர ரஜினி ரசிகர். நடக்கும்போது கூட ரஜினி மாதிரியே நடப்பார். பேசும்போதும் அப்படியே. பாட்ஷா வந்த புதிதில் தன்னை மாணிக் பாட்ஷா என்றே சொல்லிக் கொள்வார்.

ரஜினியை புகழ்கிற விஷயத்தில் இவருக்கும் ராஜேந்தருக்கும் அடிக்கடி பிரச்சனை வரும். வேலைக்காரர்தானே, என்று இவரும் விட மாட்டார். முதலாளியாச்சே என்று அவரும் அடங்கிப் போக மாட்டார். வெறும் வார்த்தை போராக இருந்த இவர்களின் பிரச்சனை ஒரு நாள் வெடித்தது. அந்த சம்பவம் இப்போதும் கண்களில் பச்சை பசேல் என்று பசுமையாக இருக்கிறது ராஜேந்தரின் லுங்கியை போலவே!

காலை பத்து மணி இருக்கும். போர்டிகோவில் நின்று பேசிக் கொண்டிருந்தோம். பச்சை லுங்கி உடுத்தியிருந்தார் ராஜேந்தர். இவர் போட்டிருந்த மேல் சட்டையில் 12 கலர்களும் அடக்கம். இப்படியெல்லாம் இருந்தால்தான் அவருக்கு பிடிக்கும். ஆவேசமாக எதை பற்றியோ டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தவர், கேட்டை திறந்து கொண்டு ஒரு உருவம் உள்ளே நுழைந்ததை கண்டதும் பேய் பிடித்தவர் போலானார். கையில் ஏதாவது கிடைத்தால் எடுத்து அடிக்கலாம் என்ற எண்ணத்தோடு குனிந்தவர், "ஏய் நாயே? எவ்வளவு தைரியம் உனக்கு. இந்த கோலத்தோடு என் ஆபிசுக்குள்ளே வர்றீயா?" என்று ஆவேசப்பட்டுக் கொண்டே கட்டையையோ, கல்லையோ தேட ஆரம்பித்தார். வேறொன்றுமில்லை, கேட்டை திறந்து கொண்டு உள்ளே வந்தது சலீம்.

ரஜினி போல இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு நெற்றி ஓரத்தையும் ஷேவ் பண்ணியிருந்தார். இத்தனை நாட்களும் முன்நெற்றியில் சுருண்டு விழுந்த கேசங்கள் ஷேவ் செய்யப்பட்டிருந்தன. பார்த்தவுடன் கண்ணை உறுத்துகிற ரஜினியின் ஹேர் ஸ்டைல் அப்படியே பொருந்தியிருந்தது சலீமுக்கு. ஒரே கெட்ட வார்த்தைகளால் சலீமை அர்ச்சனை செய்தபடி துரத்த ஆரம்பித்தார் டி.ஆர்.

அவரது கையில் மாட்டினால், அதிகபட்ச சேதமாகிவிடுவோம் என்பதை உணர்ந்த சலீம், அந்த பெரிய வீட்டை சுற்றி சுற்றி ஓடினார். விடாமல் விரட்டினார் டிஆர். ஒரு சந்தர்ப்பத்தில் மெயின் கேட்டை திறந்து கொண்டு ரோட்டில் இறங்கி ஓடினார் சலீம். என்ன செய்கிறோம் என்பதையே உணராமல், தெருவில் இறங்கி தானும் ஓட ஆரம்பித்தார் டிஆர். நானும், சக நண்பர்களும் அதிர்ச்சியோடு இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். சிங்கத்திடம் சிக்கினால் சிக்ஸ்டி ஃபைவ் ஆகிவிடுவோம் என்று அஞ்சிய சலீம், தனது பலம் முழுவதையும் திரட்டிக் கொண்டு ஓடி, கடைசியில் எஸ்கேப் ஆனார்.

தெருமுனை வரை ஓடிய டிஆர், அப்போதுதான் தன் நிலை உணர்ந்து அதிர்ச்சியடைந்திருப்பார் போலும். தலையை தொங்கப் போட்டுக் கொண்டு விறுவிறுவென்று வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார். அந்த தெரு முனையில் ஒரு ஆட்டோ ஸ்டேண்ட் இருக்கிறது. அவர்களும் இந்த முயல் சிங்க வேட்டையை திகிலோடு ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

வீட்டிற்குள் நுழைந்த டிஆர் வெட்கத்தோடு, "ஸாரி சார், கொஞ்சம் எமோஷனலாயிட்டேன்" என்று கூறியபடியே வீட்டுக்குள் போய்விட்டார். அன்று மாலை வரை கீழே இறங்கவே இல்லை. சரி, எப்போது திரும்பி வந்தார் சலீம்? சரியாக பத்து நாட்கள் கழித்து. முன்நெற்றியில் லேசாக முடி முளைக்க ஆரம்பித்திருந்த நேரத்தில்! மீண்டும் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என்று நாங்கள் அஞ்ச, அப்படி எதுவுமே நடக்காதது போல நடந்து கொண்டார்கள் இருவரும்!