Tuesday, June 30, 2009

விஜய் போட்ட முதல் உத்தரவு?!


"ரேகை தேயுற அளவுக்கு கை தட்டு. நாக்கே சுளுக்கிக்கிற அளவுக்கு விசிலடி. யாரை வேணும்னாலும் ரசி. அதுக்கு மேலே போனா வெளங்க மாட்டடா டேய்..."னு போஸ்ட் மரத்திலே முட்டுக் கொடுத்தபடி போதையில் தத்துவம் பேசிக் கொண்டிருந்தார் ஒரு 'ஆயுள் சந்தா' அறிவுஜீவி. விஜய் கட்சி ஆரம்பிக்க போறாருன்னு நியூஸ் வந்திச்சே, அப்பவுலேர்ந்து இப்படிதான்!

எவனோ விட்டுட்டு போன ஊறுகாய, தொட்டு நக்கிட்டு பேசுற டாஸ்மாக் கோவாலுங்க சொல்றதெல்லாமா ஒரு விஷயம்னு பேசிட்டு இருக்கணும்? நம்ம புத்தி இப்பிடி நாக்கை புடுங்கிற மாதிரி கேட்டாலும், பயபுள்ளைங்க பேசுறதிலேயும் ஒரு நேர்மை இருக்கதானே செய்யுது?

சில வருஷங்களுக்கு முன்னாடி ஒரு பிரஸ்மீட். அது விஜயகாந்த் நடிச்ச ஏதோ ஒரு படம். சைதாப்பேட்டை சிக்னல் அருகே இருக்கிற அரசாங்க பில்டிங்கிலே ஷ¨ட்டிங். லைட்டு வெளிச்சத்துக்கு முன்னாடி விஜயகாந்த் வசனம் பேசிக் கொண்டிருக்க, அவரு வர்ற வரைக்கும் நாங்களெல்லாம் ஒரு ஷாமியானாவுக்கு கீழே சேர் போட்டு உட்கார்ந்திருந்தோம். அந்த நேரம் பார்த்துதான் அவன் வந்தான். ஷ¨ட்டிங் நடக்கிற ஏரியாகிட்டே போனா விரட்டி விட்ருவாய்ங்கன்னு நெனச்சானோ என்னவோ, எங்க பக்கத்திலே வந்து நைசாக உட்கார்ந்தான். "சாரு, நீங்கள்ளாம் யாரு?"ன்னான் அப்பாவியாக. "ஏம்ப்பா, என்னா விஷயம்?"னாரு விக்கி. "கேப்டன்னா எனக்கு உசிரு சாரு"ன்னவன், இங்கிருந்தபடியே அங்கிருக்கும் அவரை ஏக்கமாக நக்கினான். விக்கிக்கு செம கோவம். பிரஸ்சுக்கு போட்ட சேர்லே ஒரு ரசிகன் வந்து உட்கார்ந்திட்டானேன்னுதான்.

அதோட முடிஞ்சிருந்தா பரவாயில்லை. "சாரு, நானு என் புள்ளைய து£க்கிட்டு கேப்டனோட படத்தை பார்க்க போனேன். கூட்ட நெரிசல்ல புள்ள செத்து போச்சு. அப்பவும் விடாம, படத்தை பார்த்திட்டுதான் பொணத்தோட வீட்டுக்கு போனேன்"னான். அவ்வளவுதான். அதுவரைக்கும் போனா போவுதுன்னு அவனை அனுமதிச்ச அத்தனை பேருக்கும் செம கோவம். "எந்திர்றா நாயே..."ன்னாரு விக்கி. மற்றவங்களும் சேர்ந்து கொள்ள, ஒரே தள்ளு. அடுத்த செகண்ட் ரோட்டில் இருந்தான் ரசிகன்.

சிலுக்கு கடிச்சி வச்ச ஆப்பிளை ஏகப்பட்ட ரூவாய்க்கு ஏலம் எடுத்து, உலகத்தையே ஒரு ஆப்பிளின் கீழே கொண்டு வர நினைச்ச, நவீன அலெக்ஸ்சாண்டருங்க திரியுற பூமி இது. இங்கதான் நான் பார்த்தேன் அந்த கொடூரத்தையும். ரஜினி நடிச்ச ஒரு படத்துக்கு போயிருந்தேன். படத்திலே ஒரு போலீஸ் ரஜினிய அடிக்க, பாராவுக்கு வந்திருந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருத்தரை புரட்டி எடுத்திட்டாய்ங்க சில பேரு. "எங்க தலைவரையா அடிச்சே?"ன்னு அவரை புரட்ட, "யோவ் நான் எங்கேய்யா உங்க தலைவர அடிச்சேன்?"னு ஓடிப் போனாரு தியேட்டரை விட்டே. போற வேகத்திலே அவரு பின்னாடியே விரட்டிட்டு போயி 'து££££...'ன்னு துப்பிட்டு ஓடி வந்தாரு ஒரு வெறிபிடிச்ச ரசிகரு. ஓடிப்போன போலீஸ்காரர் ஒரு படையோட திரும்பி வந்த போது, அப்பாவி ரசிகருங்கதான் மாட்னாய்ங்க. கிர்ணிப்பழமே கிழிஞ்சு தொங்குற அளவுக்கு அடிச்சி பின்னிட்டாய்ங்க. எச்சல் துப்பினவன் எஸ்கேப் ஆகிவிட, மிச்சர் தின்னவன்லாம் மாட்னான் அன்னிக்கு!

இது போன வாரத்து காமெடி. விஜய்யோட பிறந்த நாளுக்கு பிரஸ்சை கூப்பிட்டிருந்தாங்க. திரும்புற இடத்திலே எல்லாம் கொல கொலயா தலைங்க. உச்சி வெயில் வேற மண்டையிலே இறங்கி, தண்டு வடத்திலே தாளம் போடுது. எரிச்சல்ல திரண்டிருந்த ரசிகருங்க கூட்டத்தை வேற சமாளிக்க வேண்டியதா போச்சு ஒவ்வொரு நிருபருக்கும். காது பக்கத்தில வந்து கேத்தான் ஃபேன் மாதிரி காத்தடிச்சிகிட்டே கத்துறாய்ங்க தலைவா££££ன்னு! உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு உருண்டுகிட்டே போனா எப்படியிருக்கும்? அப்படி ஒரு அனுபவம் உள்ளே போவதற்குள்.

காலையிலே இருந்து விஜயோட முகம் தெரியுமான்னு காத்து கிடந்தவங்களுக்கு, ஒருத்தர் வந்து இறங்கியதும் உள்மனசெல்லாம் பல்பு எரிஞ்சுது. அது யாரு? நீங்க நினைக்கிற மாதிரி நடிகையெல்லாம் இல்லை. ஒரு ஆங்கில நாளிதழின் நிருபி. பார்க்க கொஞ்கம் ஸ்மார்ட்! வெயில் என்பதால் அன்னைக்கு பார்த்து பெரிய கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு ஒரு நடிகை ரேஞ்சுக்கு காரிலிருந்து இறங்கினார். யாரோ ஜுனியர் ஆர்ட்டிஸ்டு போலிருக்கு. விஜயை வாழ்த்த வந்திருக்காங்கன்னு நினைச்ச செக்யூரிடி, சூனியரெல்லாம் அந்த கேட்... அந்த கேட்டு...ன்னு குச்சியை வச்சுகிட்டு லொட்டு லொட்டுன்னு அந்தம்மா பக்கத்திலே தட்ட, செம டென்ஷன் அவங்களுக்கு. "ஸ்டுப்பிட்... நான் பிரஸ்"சுன்னாரு கோவமா. பதறிப்போன செக்யூரிடி "அம்மா போங்கம்மா"ன்னு வழிவிட்டாரு.

அதுக்குள்ளே எவனோ ஒருத்தன் வெந்த புண்ணிலே வெளக்கு மாவு படைச்சிட்டான். டேய்... அசினுடான்னு அவன் கத்த, அவ்வளவுதான். பண்ருட்டியிலேயிருந்து பறந்து வந்த பலாப்பழ கொசுங்க மாதிரி மொய்ச்சிட்டாய்ங்க. பண்ருட்டிகளின் தின்ருட்டி அட்டகாசம் ஆரம்பமாயிருச்சு. இடுக்காலே ஒருத்தன் கைய விட்டு இடுப்பை கிள்ள, அப்படியே ஆளாளுக்கு கையை விட ஆரம்பிச்சிட்டாய்ங்க. "ஸ்டுப்பிட்...நான்சென்ஸ்.. ஆ... கிள்ளுறானே..."ன்ன்னு ஒரே கூச்சல் இவங்ககிட்டேயிருந்து.

நல்லவேளை நாலைஞ்சு பேரு இதை கவனிச்சிட்டோம். படக்குன்னு பாஞ்சு நிருபியை (தொடாம) வளைச்சு பிடிச்சோம். அப்படியே காப்பாற்றி ஹாலுக்குள் கொண்டு வந்தோம். மேலு கையெல்லாம் ஒரே கிள்ளல் காயம். ரொம்ப நேரம் "ஸ்டுப்பிட்ஸ்..."னு முணுமுணுத்துகிட்டேயிருந்தாங்க நிருபி. நிருபர்களின் கேள்வி கணைகளுக்கு பதில் சொன்ன விஜய், இவங்க சும்மாவே இருக்கறதை கவனிச்சுட்டாரு. "என்ன மேடம். எனி கொஸ்டீன்ஸ்..."ன்னு கேட்டாரு. அவ்வளவுதான். வெறி புடிச்ச மாதிரி "நத்திங்..."ன்னுச்சு நிருபி. அவரு கிளம்புற நேரத்திலே கிட்டே போயி "என்னைய உங்க ரசிகருங்க கிள்ளிட்டாய்ங்கன்னு நிருபி சொல்ல, விஜய் போட்ட முதல் உத்தரவு, "யோவ்... இவங்களை பத்திரமா கார்லே ஏத்திவிட்ருங்க" என்பதுதான்.

வருங்கால சிஎம் போட்ட முதல் உத்தரவு இப்படியா இருக்கணும்?

Tuesday, June 23, 2009

பாருக்கு வந்த, பாவப்பட்ட நடிகை!


நயன்தாரா, த்ரிஷா ரேஞ்சுக்கு இல்லைன்னாலும், இன்றைய தேதிக்கு சுமார் எட்டு லட்சம் சம்பளம் வாங்கக்கூடிய ஹீரோயின் அவர். பெயரை சொன்னா சரியா இருக்காது. வேணும்னா ஒரு க்ளு. மூன்றெழுத்து நடிகை. கடைசி எழுத்து கா! நல்ல 'அழகி'ன்னு சொல்லலாம்.

ஏறத்தாழ மூணு நாலு வருஷத்துக்கு முன்னாடி பேட்டிக்காக போயிருந்தேன் அவரு வீட்டுக்கு. அன்னைக்கு பார்த்து வண்டி ரிப்பேர்ங்கிறதால ஆட்டோ சவாரி. பேட்டிய முடிச்சுட்டு கிளம்பும்போதுதான் அவங்க அப்பாவை பார்த்தேன். (முன்னாடியே பார்த்திருந்தா பேட்டியவே 'டிராப்' பண்ணியிருக்கலாம்) சின்ன சின்ன குவாட்டர்களா போட்டு செஞ்ச மாதிரியே இருந்தாரு மனுஷன்.

"சார், ஒங்க பொண்ணு போட்டோவ கொடுங்க"

"போட்டோவ வாங்கிட்டு போனா யாரு திருப்பி தர்றீங்க? ஏகப்பட்ட போட்டோ இப்படியே போயிருச்சு. நான் கோயமுத்து£ர் கவுண்டன்(?) என்னை யாரும் ஏமாத்த முடியாது. வேணும்னா சிடி இருக்கு. அதுவும் ஒன்னுதான் இருக்கு. காப்பி பண்ணி தரட்டுமா"ன்னாரு. கொடுங்கன்னேன். "வீட்ல கம்ப்யூட்டர் இல்லீயே? வாங்க, எங்கேயாவது காப்பி பண்ணலாம்" வண்டியை கிளப்பினார்.

வண்டிக்கும் சேர்த்து 'சரக்கு' போட்டிருப்பாரு போல, தேடி தேடி குழியிலேயே இறங்கிச்சு வண்டி. சிறிது நேரத்தில் மாட்டு வண்டிய ஓட்டுறது மாதிரியே கரடு முரடா ஓட்ட ஆரம்பிச்சாரு. "சார்... நான் வேணா நடந்தே வர்றேன். இடத்தை மட்டும் சொல்லிருங்க"ன்னேன். "ந்தா வந்திருச்சு" என்று பிரேக் அடித்து ஓரிடத்தில் நிறுத்தினார். இருவரும் உள்ளே போனோம். "சார், டிவிடி ல காப்பி பண்ண 150 ரூவா!" கடைக்காரன் சொல்ல, யோவ், நான் கோயமுத்து£ர் கவுண்டன். என்னை ஏமாத்துலாம்னு பாக்கிறீயா? வேணாம் வுடு. உட்காருங்க சார்"னு மறுபடியும் அந்த நெடும் பயணத்தை, இல்லையில்லை கொடும் பயணத்தை துவங்கினார்.

ஒவ்வொரு பள்ளத்திலும் வண்டியை விடும்போதும் எனக்கு பயங்கர சிரிப்பு. பத்திரிகை துவங்கி இது எத்தனையாவது வருடம் என்பதையும், புத்தகத்தின் எண்ணிக்கையையும் குறிக்க, மலர் ஒன்று-இதழ் முப்பத்தி ரெண்டு என்பது மாதிரி அச்சிட்டிருப்பார்கள். ஒவ்வொரு முறை அவர் பள்ளத்தில் இறக்கும்போதும், நான் 'விரை ஒன்று வீக்கம் பத்து, பதினொன்று' என்றே கணக்கிட்டு வந்தேன். அதனால்தான் அந்த பயங்கர சிரிப்பு.

"சார் விடுங்க. நான் நண்பர்கள் யாருட்டேயாவது ஸ்டில் வாங்கிக்கிறேன்"னு சொன்னதையும் பொருட்படுத்தாமல் விரைவாக வண்டியை செலுத்தி ஓரிடத்தில் நிறுத்தினார். 100 அடி ரோட்டில் உள்ள போட்டோ ஷாப். நல்லவேளையாக 50 ரூபாய் கேட்டார்கள். "தம்பி, நான் கோயமுத்து£ர் கவுண்டன். ஏமாந்திருவேனா? அவன்கிட்டே கொடுத்திருந்தா 150 ரூவா போயிருக்கும்"னவரு, "வாங்க, அவரு காப்பி பண்ணட்டும். பக்கத்திலே போயிட்டு வந்திருவோம்"னாரு. அவருக்கு ஏத்த மாதிரி பக்கத்திலேயே ஒரு டாஸ்மாக்! "ஒங்களுக்கு...?" "ஒன்னும் வேணாம் சார். சீக்கிரம் போயிரலாம்"னேன். "என்ன தம்பி நீங்க? ஒரு பீராவது குடிக்கலாம். சரி விடுங்க, ஒரே ஒரு கட்டிங்"னுட்டு போனவரு திரும்பி வரும்போது, கையிலே ரெண்டு குவாட்டர் பாட்டில்.

மொத பாட்டிலே பிரிச்சு சர சரவென்னு காலி பண்ணியவரு, ரெண்டாவது பாட்டிலை பிரிக்க திராணியில்லாம மூடி எது, கிளாஸ் எதுன்னு தெரியாத ரேஞ்சுக்கு போயிட்டாரு. இந்தாள கொண்டு போயி வீட்டுல சேர்க்கிறதா? இல்ல இப்படியே விட்டுட்டு கிளம்பிடுறதா? ஒரே குழப்பம் எனக்கு. "த...ப்ம்ம்வீ, என்..ன்ன்னன யாருழ்ம் ஏமமாழ்த்மம மொழிட்யி£து. நாழ்ன் கோழ்யமத்து£ர்ரு கழ்வுன்ன்டேன்,,..." அவ்வளவு போதையிலும் பஞ்ச் டயலாக் வேற!

கோயமுத்து£ர் கவுண்டன், இப்படி கவுன் 'டவுன்' ஆவார்னு நான் நெனச்சு கூட பார்க்கலே.

அவரு கையிலே இருந்த வண்டி சாவிய வாங்கி எப்படியாவது முன்னாடி உட்கார வச்சு வீட்டுக்கு கொண்டு போயிரலாம்னு நினைச்சா, மனுசன் சாவியை இருக்கமா பிடிச்சுகிட்டு தரவே இல்லை. நாம பிடுங்கி, அந்தாளு கத்தி, வம்பே வேணாம்! அந்த பொண்ணுக்கே போன் அடிச்சிர வேண்டியதுதான். விஷயத்தை சொன்னா, "சார் அப்படியே விட்டுட்டு போயிராதீங்க. எப்படியாவது வீட்டில கொண்டு வந்து சேர்த்திருங்க. ஒங்களுக்கு புண்ணியாப் போவும்"னுச்சு. இருதலைக் கொள்ளி எறும்பா இருந்தாலும் பரவாயில்லை. எறும்பைவிட சின்னதா இருக்கிற துரும்பாயிட்டேன் நான். அவரை ஆட்டோவிலே ஏத்தலாம்னு ட்ரை பண்ணினா, என்னை கடத்தப் பாக்கிறியான்னாரு பயங்கரமாக!

"இல்லங்க. நீங்களே ஆளு யாராவது அனுப்புங்க"ன்னு சொல்லிட்டு டாஸ்மாக் இருக்கிற இடத்தையும் அடையாளம் சொல்லிட்டேன். வேறு யாராவது வருவாங்கன்னு பார்த்தா, அந்த நடிகையே பர்தா போட்டுட்டு வந்திடுச்சு. எனக்கு பரிதாபம் ஒரு பக்கம். ஆச்சர்யம் மறுபக்கம். ஆட்டோ டிரைவர் பாருக்குள்ளே போய் அந்தாள து£க்க, அவருகிட்டேயும் அதே பிரச்சனை. பெரிய போராட்டத்திற்கு பிறகு, ஏதோ கவச குண்டலத்தோடவே பொறந்த மாதிரி அவ்வளவு போதையிலும் அந்த குவார்ட்டர் பாட்டிலை விடாம புடிச்சிகிட்டு வெளியிலே வந்தார்.

வண்டி சாவியே வாங்கி, பின்னாடியே ஓட்டிட்டு போய் வண்டிய விட்டுடலாம்னு நினைச்சு சாவியை கேட்டா, "நான் கோய..."ன்னு ஆரம்பிச்சு பஞ்ச் டயலாக்கையும் சாவியையும் விடாம இறுக்கமா பிடிச்சுகிட்டார். அங்கே இருந்து அசிங்கப்பட வேண்டாம்னு நினைச்ச நடிகை, "சரி சார் வண்டியை அப்புறமா எடுத்துக்கலாம். நீங்க கௌம்புங்க. ஸாரி ஃபார் த இன்கன்வீனியன்சு"ன்னுச்சு.

சிடியை வாங்கிகிட்டு ஆபிசுக்கு போயிட்டேன். மறுநாள் போன் பண்ணி "வண்டிய எப்போ எடுத்தீங்க?"ன்னு ஒரு பேச்சுக்கு கேட்டபோதுதான் ஷாக்கா இருந்திச்சு. இந்தாளு பண்ணிய களேபரத்திலே அந்த பொண்ணும் வண்டிய மறந்திருச்சு போல. மறுநாள்தான் போய் பார்த்திருக்காங்க. பார் வாசல்ல வண்டிய வச்சா எடுக்காம போற அளவுக்கு நல்லவங்க இருக்கானுங்களா என்ன? வண்டி அம்போ...

Sunday, June 21, 2009

நிருபரோட மடியும், நடிகையோட இடியும்?


வடக்க சூலம், தெற்க மூலம்னு பேட்டியெடுக்க போம்போதே எச்சரிக்கறதுக்கு ஒரு பொண்டாட்டி இல்லாத பேச்சுலரா இருந்த நேரம்! (அட, நான் இல்லீங்ணா... நம்ப ஃபிரண்டு)

"ஒங்களுக்கு என்னய்யா... ஜாலி? பக்கத்திலே உட்கார்ந்தமா, பல்ல இளிச்சிட்டு கேள்வி கேட்டமான்னுட்டு. எங்க பொழப்புதான் அகோரம்"னு அலுத்துக்கிட்டாரு ஒரு அரசியல் நிருபர். "கொஞ்சம் ஏடாகூடமா எழுதிட்டா கூட வீட்டுக்கு ஆட்டோ வரும் தெரியும்லே?"ன்னாரு. பாவம்தான். இவருக்காவது ஆட்டோ. நம்ம ஃபிரண்டுக்கு என்ன தெரியுமா? பி---ஷ்டம்?! பக்கத்திலேயே வந்து வசமா உட்காந்திட்டாரு அந்த நடிகை. இடுப்பு மட்டுமே இருவது கிலோ இருக்கும் அவருக்கு. அதை நம்ம நிருபரு தொட மேல வச்சு அழுத்திகிட்டு அவரு உட்காரவும், ஏரிக்கர பன மரம் வேறொடு மேலே விழுந்த கதையா, நகரவும் முடியாம, நசுங்கவும் பொறுக்காம தவியா தவிச்சு போயிட்டாரு நம்ம ஆளு. ஃபயர் இன்ஜினுக்கு போன் பண்ணி மீட்க வேண்டிய ஆள, சமர்த்தா பேசி, சாதுர்யமா மீட்டாரு எடிட்டர்.

புலியோட கூண்டுக்குள்ளே எலியாட்டம் போயி மாட்டுன நம்ம நிருபரோட கண்ணீர் கதைதான் இது. அத சொல்றதுக்கு முன்னாடி நடிகை யாருன்னு சொல்லிட்டா, நச்சுன்னு ஃபீல் பண்ணலாமே? "ஏலே லம்பர ஏலே லம்பர.."ன்னு டிஆரால அறிமுகப்படுத்தப்பட்ட கொடியிடை நாயகி நளினிதான் அவர். இப்போ எப்படியிருக்காருன்னு நான் சொல்லணுமா என்ன?

அது ஒரு வார பத்திரிகை. நடிகைகளை பற்றி எழுதும்போது மட்டும் வகை தொகையில்லாம எழுதுவாங்க. ராமராஜனை பிரிஞ்சு தனியா இருக்கிறதால சந்தேக கண்ணோடு பார்த்த எடிட்டர் இவரையும் இன்னொருத்தரையும் சேர்த்து வச்சு எழுதிட்டாரு. நாகரிகமா எழுதினா போனா போவுதுன்னு போற பெரிய மனசுதான் நளினிக்கும். ஆனா, எழுதின விதம் இருக்கே, முற்றும் துறந்த முனிவியா இருந்தாலும், அக்கினியா கொதிக்கிற மாதிரி இருந்திச்சு. புத்தகம் கடைக்கு வந்து அடுத்த வாரத்திலேயே சினிமா நிருபரை கூப்பிட்டு, "கோலங்கள் தேவயானியை ஒரு பேட்டியெடுங்களேன்"னாரு எடிட்டர்.

அட, அடிக்கிற வெயில்ல குளீர்ர்ர்னு பீரு குடிக்கிற மாதிரி அசைன்ட்மென்ட்டா இருக்கே. சரி சரின்னு சொல்லிட்டு சட்டு புட்டுன்னு கிளம்புனாரு நிருபர். ஆபிஸ் சுவத்துல செவனேன்னு ஒட்டிகிட்டு கிடக்குற பல்லிக்கு கூட விஷயம் முன் கூட்டியே தெரிஞ்சுருச்சு போல. மச்சி பத்திரம்ங்கிற மாதிரியே, இச்சு இச்சுன்னுச்சாம். (சகுனத்தை பற்றியும் பின்னாடி நிருபர் நம்மகிட்ட அதிர்ந்துகிட்டாரு)

வளசரவாக்கத்திலே ஒரு பங்களாவிலே ஷ¨ட்டிங். நேரிலே தேவயானியை பார்த்ததும், 'இவங்க தேவயானியில்லே, தேவதைகளுக்கே ராணி'ன்னு மனசுக்குள்ளே குயிலு வந்து ரயிலு ஓட்டுச்சு. பக்கத்திலேயே உட்கார்ந்து குளிர குளிர பேட்டி கொடுத்தாரு தேவயானி. கூடவே தன்னோட வீட்டிலேர்ந்து வந்திருந்த லஞ்ச்சையும் சேர்த்து கொடுத்து, நிருபரோட மனசிலே நிரந்தரமா வூடு கட்டிட்டாரு. கிளம்பும்போதுதான், பஞ்சாங்கத்திலே போட்டிருக்கிற மாதிரி, வடக்கே சூலம்ங்கிறது நிரூபணம் ஆச்சு நிருபருக்கு. "வந்தது வந்தீங்க, அப்படியே நம்ம நளிளியையும் ஒரு பேட்டி எடுத்திட்டு போயிருங்களேன். சந்தோஷப்படுவாங்க"ன்னு தேவ 'ராணி' சொல்ல, ஊ லல்லலலான்னாரு நிருபரு. போன வார கட்டுரையெல்லாம் தேவயானியோட தேன் குரலுக்கு முன்னாடி, மைண்டுக்கு வந்து மணியடிச்சாதானே?

சொன்னதோட விட்றாம கேமிராவுக்கு முன்னாடி நின்னுட்டிருந்த நளினியிடம் கூட்டிட்டு போயி, "உங்களுக்காகதான் வெயிட் பண்ணுறாரு. ஒரு பேட்டி கொடுத்திருங்க"ன்னாரு. நளினியும் சந்தோஷமா மொகத்தை வச்சிகிட்டு, "எந்த பத்திரிகை?"ன்னு கேட்டாரு. இவரு பத்திரிகை பேர சொல்ல, எவ்வித ரீயாக்ஷனும் காட்டாம "வெயிட் பண்ணுங்க. வந்திர்றேன்"னு சொல்லிட்டு ஷாட்ல மூழ்கிட்டாரு. அவசரம் அவசரமா ஷாட்டை முடிச்சிட்டு வந்தவர், "வாங்க உள்ளே போயிரலாம்"னு அழைச்சிட்டு மேக்கப் ரூமுக்கு போயிட்டாரு. அங்கே அவங்க ரெஸ்ட் எடுக்க ஒரு கட்டில் வேற. நிருபரை கட்டிலில் உட்கார சொல்லிட்டு தானும் பக்கத்தில் உட்கார்ந்தார்.

"வாங்க, உட்காருங்க"ன்னு இன்னும் பக்கத்திலே அழைத்தவர், தன்னோட இருவது கிலோ சமாச்சாரத்தை நிருபரு தொடை மேல வச்சு அழுத்திகிட்டே, "எந்த பத்திரிகை?"ன்னாரு இன்னொரு தடவ. லக்கேஜை தெரியாம எறக்கி வச்சிட்டாங்க போலிருக்குன்னு நினைச்சுகிட்டே இவரு வலிய பொறுத்துகிட்டு பத்திரிகை பேரை சொன்னாரு. அவ்வளவுதான்... "போன வாரம் என்னய பத்தி எழுதினவன் எந்த தே....£ ...யன்?" என்று ஆரம்பிச்சாரு நளினி.

அட, ஆமாம்ல... இந்தம்மாவை பற்றி போன வாரம் எழுதிபுட்டாங்களேய்யா. கொஞ்சம் முன்னாடி அது ஞாபகத்துக்கு வந்திருக்கலாமே? வல்லாரை லேகியத்தை வழிச்சு வழிச்சு சாப்பிட்டாலும், முக்கியமான நேரத்திலே முடக்கத்தான் லேகியத்தை தின்ன மாதிரி ஆயிருதே மூளைக்குன்னு ஒரே வருத்தம் நம்மாளுக்கு. ஆனாலும் சமாளிச்சுக்கிட்டு "எந்த மேட்டரு?"ன்னு இவரு திரும்பி கேட்க, "உன் புக்கை நீயே படிக்கறதில்லையா?"ன்னு ஆரம்பிச்சு, அதுக்கும் சேர்ந்தா மாதிரி அர்ச்சனைய ஆரம்பிச்சிட்டாங்க மேடம்.

"அப்படி ஒரு கட்டுரை வந்ததே எனக்கு தெரியாது. யார் யாரோ வெளியிலேந்து வந்தெல்லாம் எழுதி கொடுக்கிறாங்க. அது மட்டுமில்லீங்க. நான் வேலைக்கு சேர்ந்தே நாலு நாளுதான் ஆவுது"ன்னாரு நிருபர். பொய்யி பொய்யின்னு மனசாட்சி கூவினாலும், அந்த மனசாட்சி மேலயா இந்த இருவது கிலோ வெயிட்டும் எறங்கியிருக்கு? காலு மேல அல்லவா அத்தனை வெயிட்டும் இருக்கு? அப்பவும் ஓடிப் போயிடாம இறுக்கமா புடிச்சுகிட்டு இருந்த நளினி, "ஒங்க எடிட்டருக்கு போனை போடு"ன்னாரு. நல்ல வேளைடா, இதுக்காவது அனுமதி கொடுத்திச்சு. இனிமே எப்பிடியாவது நம்மள காப்பாத்திருவாய்ங்கங்கிற நம்பிக்கையிலே எடிட்டருக்கு போனை போட்ட நிருபரு, "சார். நான் கோலங்கள் ஷ¨ட்டிங்கிலே இருக்கேன். போன வாரம் நம்ம புக்கிலே நளினி மேடத்தை பற்றி நியூசு ஏதோ வந்திருச்சாமே? அவங்க ரொம்ப கோவமா இருக்காங்க. என்னைய ரூமுக்குள்ளே வச்சு பூட்டிட்டு விட மாட்டேங்கிறாங்க. என்ன நடந்ததுன்னு அவங்ககிட்டேயே சொல்லுங்க"ன்னாரு.

குரலை கடுமையா வச்சுகிட்ட எடிட்டர், "மேடம் நீங்க பண்ணுறது சரியில்லே, உங்களுக்கு அந்த மேட்டர்ல எதிர் கருத்து இருந்தா ஆபிசுக்கு நேரா வாங்க. பதில் சொல்றேன். இல்லைன்னா வக்கீல் நோட்டீஸ் அனுப்புங்க. கோர்ட்ல பார்க்கலாம். அதை விட்டுட்டு அப்பாவி பையனை அடைச்சு வச்சிட்டு இம்சை பண்ணினா, சும்மாயிருக்க மாட்டேன். வேற மாதிரி ஆயிரும்"னு பேச, பேச, நிருபர் தொடையிலேர்ந்து வெயிட்டை நகர்த்தி வேற இடத்திலே இறக்கி வச்சாங்க நளினி. 'அப்பா, தொட தப்பியது, தொம்பிரான் புண்ணியம்'னு எழுந்து நின்னுகிட்டாரு நிருபர். (உட்காந்தாதானே திரும்ப வப்பே?)

"சரி, நீங்க போகலாம்"னு நளினி உத்தரவு கொடுக்க, பாய்ந்தடித்து வெளியே ஓடி வந்தார் நிருபர். வாசலில் நின்று கொண்டிருந்த தேவயானி, "பேட்டி முடிஞ்சுருச்சா?"ன்னு சிரிச்சிகிட்டே கேட்க, "செம வெயிட்டான பேட்டிங்க"ன்னாரு நிருபர்.

அந்த வெயிட் என்ன வெயிட்டுன்னு தேவயானிக்கு சொல்லாமலா இருந்திருப்பாங்க நளினி?

Wednesday, June 17, 2009

நடிகை வீட்டு போன்...?


"எவ்ளோ கஷ்டப்பட்டு எழுதி, டிசைன் பண்ணி, போட்டோவெல்லாம் வச்சு புத்தகமா உருவாக்கி கடையிலே போட்டா எவன் வாங்குறான்? ஒண்ணுமே எழுதாம வெள்ளையா அரை குயர் நோட்டுன்னு கொடுக்கிறாய்ங்க, சொன்ன விலைக்கு வாங்கிட்டு போறானுங்களே..? அதுதான் ஆதங்கமா இருக்கு!" -சர்குலேஷன் சரியா இல்லேன்னு வருத்தப்பட்ட ஒரு சிறு பத்திரிகை ஓனரிடம் இப்படி சொல்லி அடிவாங்காம தப்பிச்சேன்னு வச்சுக்கோங்க! அப்படி ஒரு வாயி நமக்கு.

இப்பல்லாம் சினிமா டைரின்னு ஒரு புது ஸ்டைல் வந்திருச்சு கோடம்பாக்கத்திலே. நடிகர் நடிகைகளோட அட்ரஸ், அவங்க போட்டோன்னு கலக்கலா இருக்கும். முதல் பக்கத்தை விரிச்சா ரஜினியிலே ஆரம்பிக்கும். அப்படியே சீனியாரிடிபடி போயிட்டே இருக்கும். கொஞ்சம் நடுவாப்லே போயி பார்த்தாதான் தெரியும், பக்கெட் பக்கெட்டா ஒரே டிக்கெட்டுகளா(?) இருக்கும்! ஹ¨ம், இதெல்லாம் கலை சேவையா பண்ண வருதுங்க? நமக்கு தெரிஞ்ச நண்பர் ஒருத்தர் புதுசா வாடகைக்கு குடி போனாரு ஒரு வீட்டுக்கு. அதுக்கு முன்னாடி இந்த வீட்டிலே டிக்கெட்டு ஒண்ணு வாழ்வாங்கு வாழ்ந்திருக்கும் போல. போயி கொஞ்ச நாளுக்குள்ளே அர்த்த ராத்திரியிலே கதவை தட்டி, "அதுக்குள்ளே து£ங்கிட்டியா?"ன்னு கேட்டிருக்காய்ங்க இவர. அட பாவி மக்கா, என் வீட்டிலே வந்து எவன் எவனோ கேக்க கூடாத சங்கதியெல்லாம் கேக்குறாய்ங்களேன்னு பயந்து போயி, ஒரே மாசத்திலே வீட்டை காலி பண்ணிட்டாரு.

சமயத்துல பழைய போன் நம்பருக்கு பணத்தை கட்டாம விட்டுருவாய்ங்க. அந்த நம்பர் எங்கெங்கோ மாறி நம்ம வீட்டுக்கோ, அல்லது நம்ம ஃபிரண்டு வீட்டுக்கோ வந்து சேரும். காலப்போக்குலே நமக்கு வந்து சேர்ற இந்த நம்பர் இருக்கே, சில நேரத்திலே வயித்து போக்குலே கொண்டு போய் விட்ரும். பிஎஸ்என்எல் கனெக்ஷன்ல பி ஃபார் பினாயில், என் ஃபார் நாத்தம்னு வெடிச்சாரு நண்பரு ஒருத்தர். (ஒன்னோட ஃபிரண்டு முழுக்க இப்படி சபிக்கப்பட்டவய்ங்களான்னு கேட்டுறாதீங்க மக்களே, விதி. வேறென்னுமில்லே) இவருக்கு கிடைச்ச நம்பரு, இதயம் நல்லெண்ணை விளம்பரத்திலே வருவாங்களே, சித்ரா. அவங்களோட பழைய நம்பரு. ஒருநாளு வீட்டுக்கு போனா, வாசலிலே துண்டு துண்டா கெடக்குது ரிசீவரு. என்னய்யா?ன்னு கேட்டா, "நேத்து ராத்திரி செம கோவம் வந்திருச்சு"ன்னாரு.

நான் சொல்லப்போற இன்னொரு ஃபிரண்டு நிஜமாவே சபிக்கப்பட்டவருதான். வையாபுரிய பேட்டியெடுத்தாலே, "விஷயம் தெரியுமா மாப்ளே, வைஸ் நேத்து போன் பண்ணுச்சு. நீங்க நம்மளோட வந்து ஒரு வா(ய்) சாப்டுதான் போவணும்னு ஒரே அடம்"னு சந்தோஷப்படுவாரு. மொக்கை பிளேடுக்கே இப்படி கெக்கே புக்கேன்னு சந்தோஷப்படுறாரே, சக்கை ஃபிகரு போன் பண்ணினா என்னாவாருன்னு நெனச்சுப்பேன். திராட்சை நழுவி தேன்ல விழுந்து, அதையெடுத்து சிலுக்கு ஊட்டுனா மாதிரி சந்தோஷப்பட்டாரு ஒரு நாளு. வேறொன்னுமில்லே, கவர்ச்சி நடிகை விசித்ராவை பேட்டியெடுக்க போனாராம். "உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்களே எனக்கு மேனேஜரா இருங்களேன்"னு கேட்டுருக்கு. பசுந்தாள் உரத்தை பரவலா அடிச்சா, சும்மா சிலுத்துக்கிட்டு நிக்குமே பயிரு, அப்படி சிலுத்துகிட்டு நின்னுது அவரோட உசிரு. (நாகரீகம்?)

காலையிலே ஆபிஸ்லே போயி கையெழுத்து போட்டா, அப்படியே அசைன்ட்மென்டுன்னு போயிருவாரு குலதெய்வம் சன்னதிக்கு. வளர்ச்சி பணிகள், ஐந்தாண்டு திட்டம்னு ஒரே வகுத்தல், பெருக்கல் சமாச்சாரங்களா விவாதிப்பாங்க ரெணடு பேரும். எல்லாம் எத்தனை நாளைக்கு? ஒரே வாரம்தான். "அட, போங்க சார்... மானத்திலே சாணத்தை அடிச்சுப்புட்டாய்ங்க"ன்னு பதறியடிச்சுட்டு ஓடிவந்தார் ஒருநாளு. என்னாச்சு? என்னாச்சு?

ஒன்னுமில்லே, அவங்களை ஏதோ கடை திறப்பு விழாவுக்கு கூப்பிட்டிருக்காய்ங்க. வாங்களேன் போயிட்டு வந்திரலாம்னு நம்ம நண்பரையும் வெளியூருக்கு கூட்டிட்டு போயிட்டாங்க விசி. இந்த சேவைக்கு கடைக்காரங்க கொடுத்த தொகை பத்தாயிரம் ரூபாய். கூடவே போனவரை, இவருதான் மேனேஜருன்னு அறிமுகப்படுத்தியிருக்கு விசித்ரா. விழா களேபரத்திலே இருக்கும்போது, ஊரு பெரிய மனுஷன் ஒருத்தரு வந்து, "தம்பி... நம்ம பேரு?"ன்னு அன்பா விசாரிச்சிருக்காரு. இவரும் பேர சொல்லிட்டு பேச ஆரம்பிக்க, அவரு சில சந்தேகங்களை கேட்டிருக்காரு. அதுக்கு வெள்ளந்தியா இவரு பதில் சொன்னதுதான் சிக்கலுக்கு காரணம்.

"தம்பி, பொண்ணு எவ்ளோ வாங்குது?"ன்னு அவரு கேட்டாராம். நம்மாளு விவரம் புரியாம, ஏதோ கடை திறப்பு விழாவுக்கு வர எவ்ளோன்னு கேட்கிறாரு போலிருக்குன்னு நினைச்சுகிட்டு, "பத்தாயிரம்"னு சொல்லியிருக்காரு. "ரொம்ப சீப்பா இருக்கே?"ன்னிருக்காரு பெரிசு. ஃபிரண்டு சும்மா இல்லாம, "அவங்க ரொம்ப ஆசைப்படுற டைப் இல்லே"ன்னு சர்டிபிகேட் கொடுத்திருக்காரு. இப்படியே பேசிட்டே வந்த பெரிசு, "ரூம் நம்ம போட்டுக்கணுமா, அந்த பத்தாயிரத்திலேயே வந்திருமா?"ன்னு கேட்க, அப்பதான் புரிஞ்சிருக்கு. "அட கருமம் புடிச்சவய்ங்களா? டபுள் எம்.ஏ படிக்கணும்னு ஆசப்பட்டவன்டா நான். படிக்காமலேயே சர்டிபிகேட் வாங்க வச்சிட்டீங்களேடா"ன்னு கோ கொலேன்னு மூக்கை சிந்திட்டு, பஸ் ஏறிட்டாரு.

வாங்க கார்லேயே போகலாம்னு 'விதி'த்திரா கூப்பிட, "பக்கத்து ஊர்லே சித்தி இருக்காங்க. பார்த்திட்டு வர்றேன்"னு கிளம்புனாராம். நேரா ரூம்லேதான் வந்து விழுந்தாரு. இப்போ கூட விசித்ராவோட படம் டி.வி ல வந்தா முதல்ல ரிமோட்ட எடுத்து ஆஃப் பண்ணிடுறாராம். "ஏண்ணே அப்படி கோவப்படுறாரு?"ன்னு அவரு பொண்டாட்டி கேக்குது. நான் என்னன்னு சொல்றது?

பின்குறிப்பு- அந்த சினிமா டைரிய வாங்கி அனுப்பு. டாலர்லே பணம் அனுப்புறேன்னு மட்டும் பின்னு£ட்டம் போட்றாதீங்க சனங்களா... நல்லாயிருப்பீங்க!

Sunday, June 14, 2009

சினேகாவின் 'தங்கமான' சிரிப்பு


உழவனா இருந்தாலும் சரி, ஓரடி கூட நகர முடியாத கிழவனா இருந்தாலும் சரி, சினேகாவோட சிரிப்பை 'சிரப்' மாதிரி குடிச்சிட்டு காலந்தள்ளுற ரொம்ப பேரை நானறிவேன். டெவிலுக்கெல்லாம் கோவில் கட்றாய்ங்க, தேவதைக்கு ஒரு செங்கல்லை கூட வைக்க மாட்றாங்களே?ன்னு இவய்ங்க தவிக்கிற தவிப்பு இருக்கே, ரொம்ப பரிதாபம். விட்டா அறநிலைய துறைக்கு ரத்த கையெழுத்து போட்டு மகஜர் அனுப்புவாய்ங்க போலிருக்கு.

பண்ருட்டிய கடக்கும் போதெல்லாம் "சினேகா பொறந்த ஊருடோய்..."னு கூச்சல் போட்டு, பலாப்பழ முள்ளாள இடி வாங்குன இளைஞ்சருங்களுக்கு ஒரு தகவல். பருவ வயசிலே பல ஊரு சுத்துனாலும், இறுதி காலத்திலே இங்கதான் இருக்கணும்ங்கிறதுதான் சினேகாவோட கொள்ளை ஆசையாம். (இனிமே பண்ருட்டியிலே ரியல் எஸ்டேட் தொழில் பிச்சுக்கும்)

சினேகா நடிச்ச ஒரு படத்துக்கு போயிருந்தோம் நாங்க. (.சூ, சக்தி, அம்முலுன்னு...) படத்தோட டைரக்டரு திடீர்னு பக்கத்திலே வந்து, சார் ஏதாவது வேணுமான்னாரு. 'கேண்டீன்லேர்ந்து'ங்கிற வார்த்தைய அவரு சேர்க்காம போனதால வந்த வினை, உற்சாகமாயிட்டாரு .சூ. "சார், கேட்டா கண்டிப்பா கொடுப்பீங்களா?" கேளுங்க சார்.. -இது அவரு! "கோவிச்சுக்க கூடாது" -இது நம்ம ஆளு. சஸ்பென்சை இன்னும் நீடிக்க விடக்கூடாதுன்னு நினைச்ச டைரக்டரு, "சீக்கிரம் சொல்லுங்க. அஞ்சு நிமிஷத்திலே உங்க கையிலே இருக்கும்"னாரு. .சூ.கேட்டாரே ஒரு பரிசு...

"சார், சினேகாவோட முடியிலே ஒண்ணே ஒன்ணு. போதும். நான் பர்சிலே பத்திரமா வச்சுப்பேன்...!" அவ்வளவுதான், இடைவேளையிலே எங்களை பார்த்து பக்குவமா விசாரிச்ச டைரக்டரு, படம் முடிஞ்ச பிறகும் பக்கத்திலேயே வரலே. எங்களுக்கெல்லாம் அப்படி ஒரு ஈர்ப்பு இருந்திச்சு சினேகாவோட (ஆரம்ப கால) அழகில். ஒரு பிரஸ்மீட்லே இதை அப்படியே போயி ஒரு நிருபர் சினேகாவிடம் சொல்ல, அவங்க வெட்கமா சிரிச்சது இப்பவும் கண்ணுலேயே இருக்கு.

பக்கத்து பக்கத்திலே நின்று பல முறை பார்க்கிற வாய்ப்பு வந்தும், மணிக்கணக்காக ஒரே இடத்திலே இருக்கிற சூழ்நிலை அமைஞ்சும் அவங்களும் பேசாம, நானும் பேசாம போனதுக்கு ஒரு காரணம் இருந்திச்சு. நான் அவங்ககிட்டே எடுத்த ஒரு பேட்டி. விரும்புகிறேன் ரிலீஸ் ஆகாம முடங்கி கிடந்த நேரம். அது அவங்களோட முதல் படம். 'விரும்புகிறேன்' பற்றி பேச போய், நொறுங்குகிறேன்னு ஆயிட்டாங்க.

படத்தின் இயக்குனர் சுசி கணேசன் தனக்கு டார்ச்சர் கொடுத்தாருன்னு ஆரம்பிச்சு ஒரே கம்ப்ளைன்ட் அவரு மேலே. இறுதியா "என்னை கொல பண்ண ட்ரை பண்ணினாரு தெரியுமா?"ன்னு அவங்க சொல்ல, கிடைச்சுதுடா ஒரு கவர் ஸ்டோரின்னு ஜில்லாயிட்டேன். சைலன்ட்டா எழுந்து வந்து சுசிக்கு போன் போட்டு, "சினேகாவை கொல்ல முயற்சி செஞ்சீங்களாமே?"ன்னு கேட்க, முதலாம் பானிப்பட்டு போரை விட மோசமான போர் ஆரம்பம் ஆச்சு. சினேகாவுக்கு போனை போட்டு அவரு திட்ட, "அந்த நியூசை போடாதீங்க சாரு"ன்னு அவங்க என்னை விரட்ட, ஒரே பிடிவாதமா செய்தியை போட்டுட்டுதான் ஓய்ந்தேன்.

'என்னை கொல்ல சதி. டைரக்டர் மீது சினேகா பரபரப்பு குற்றச்சாட்டு'ன்னு போஸ்டர் சென்னையை அலங்கரிக்க, அலங்காநல்லு£ர் காளை போனில் வந்து கொக்கரித்தது. அதுதான் சினேகா கடைசியா என்னோட பேசுனது. அதுக்கு பிறகு ஸ்ரீகாந்த் படங்களின் ஷ¨ட்டிங் ஸ்பாட்டில் அவரை பார்ப்பேன். ஏப்ரல் மாதத்தில், போஸ், பார்த்திபன் கனவுன்னு பல படங்களில் சேர்ந்து நடிச்சாங்க. அவரும் என்னை பார்ப்பார். ஆனால் பேசிக் கொண்டதே இல்லை. அவருக்கே தெரியாமல் அவரோட வாழ்க்கையில் விளையாடியிருக்கிறேன். (இப்போ விரிவா சொல்ல முடியலேன்னாலும், சந்தர்ப்பம் வரும்போது...)

சில மாதங்களுக்கு முன் ஒரு பிரஸ்மீட். சற்று லேட்டாக போனதால் பிரஸ்மீட் முடிந்து அவர் வெளியே வரும்போது நேருக்கு நேர் பார்க்கும்படி ஆனது. "நல்லாயிருக்கீங்களா?" என்றார் அதே பசுமை மாறாத சிரிப்போடு. அந்த சிரிப்பு இருக்கே, அது எதிரியாக இருந்தாலும், ஒரேயடியாக சாய்த்துவிடுகிற 'தங்கமான' சிரிப்பு.

Tuesday, June 9, 2009

நடுங்க வைத்த, நடிகையின் சேசிங்...


விருகம்பாக் கம், வளசரவாக் கம், கொட்டிவாக் கம்... கொஞ்சம் கூர்ந்து கவனிச்சிட்டீங்களா? இந்த 'கம்' எல்லாம் எந்த கம் னு நெனைக்கிறீங்க? அவசரப்பட்டு தப்பா யோசிச்சிராதீங்க. இது வேற கம். "படப்பிடிப்புக்கு பங்களா இருக்கு. வர்றீங்களா"ன்னு அழைக்கிற வணக் கம்!

முன்னொரு காலத்திலே 'மேய்ச்சல்' நிலமா இருந்த இடத்தையெல்லாம் வளைச்சு போட்டு, நீச்சல் குளத்ததோட வீட்டை கட்டியிருக்காய்ங்க பல பேரு. அதிலே பல பங்களாக்களில் நடக்கிற இரண்டாவது விஷயம் ஷ¨ட்டிங். (முதல் விஷயம் என்னாங்கறது நமக்கெதுக்கு?) அப்படி ஒரு பங்களாவை கட்டி வாடகைக்கு விட்டிருக்கிற ஒரு நடிகையை பற்றிய விஷயம்தான் நான் சொல்லப் போறது. டிவிலே பேசுற பல பேரோட தமிழை கேட்டா அது உச்சரிப்பா, நச்சரிப்பான்னே தெரியாதளவுக்கு நசுங்கிப் போவுது லாங்குவேஜ். அப்படிப்பட்ட 'வரட்டு வால்' தொகுப்பாளினிகளுக்கு நடுவே, நம்ம நடிகை பேசுற தமிழ் இருக்கே... அது தித்திப்பான திரட்டுப்பால்! இப்பவும் தொலைக்காட்சியிலே அவங்க வந்தா, காதிலே ஒரு டிசம்பர் கச்சேரியே நடக்கும்.

போன வாரம் கூட ஒரு நிகழ்ச்சியிலே பார்த்தேன். மைக்குக்கு வலிக்காம, மனசுக்கு சுளுக்காம, குளுக்கோச காதிலே கொட்டின மாதிரி அப்படி ஒரு அழகான தொகுப்புரை. மொத்த சனமும் குத்த வச்சு உட்கார்ந்து குளுகுளுன்னு ரசிச்சிட்டு போச்சு. இவ்வளவு ரசனையும் எதுவரைக்கும்?

முகம் வரைக்கும்தான். அப்படியே கேமிராவை கீழே இறக்கினால், வைட் லென்ஸ்லேதான் அடங்குவாங்க. அப்படி ஒரு சைஸ்! ஃபங்ஷன்லே பி-ரோவில் உட்கார்ந்து பார்த்தாலும் சரி, பின்ன்ன்ன்ன்ன்ன்னாடி ரோவில் இருந்து பார்த்தாலும் சரி. பளிச்சென்னு தெரிகிற பீரோ அவங்க! அம்மா, அக்கா கேரக்டர்னு சின்னத்திரையிலேயும், பெரிய திரையிலேயும் வூடு கட்டி அடிக்கிறாங்க.

இவ்வளவு சொல்லியும் யூகிக்க முடியலைன்னா, தெரிஞ்சிட்டுதான் போங்களேன். நம்ம ஃபாத்திமா பாபு. தேவாரத்தையும் திருக்குறளையும் சொல்ற விபூதி வாத்தியாரு, சமயத்திலே பிரம்பெடுத்து பின்னுற மாதிரி, இவங்களுக்குள்ளேயும் ஒரு காட்ஸில்லா வந்து கர்புர்னுச்சு. சும்மாவா பின்னே? வயித்தை கட்டி, வாய கட்டி(?) சேர்த்து வச்ச காசிலே ஒரு வூட்டை கட்டினா, ஓசியிலே உப்புமா கிண்டுறேன். கொஞ்சம் சட்டி தர்றீங்களான்னு கேட்டா சாமி வந்து ஆடாது? ஆடுச்சுய்யா ஒரு நாளு...

ஒரு சீரியலுக்காக தனது பங்களா வீட்டை வாடகைக்கு விட்டிருந்தாங்க ஃபாத்திமா. சீரியல் தயாரிப்பாளர் யாரு தெரியுமா? ஒரே நேரத்திலே பத்து படத்துக்கு பூஜைய போட்டு இன்டஸ்ட்ரியவே கிலி பிடிக்க வச்ச பெரிய்ய்ய்ய்ய்ய கம்பெனி. புரடக்ஷன் மேனேஜரு வீட்ட சுத்தி சுத்தி வந்தாரு. "இங்கே இது இருந்திருக்கணும். அங்கே அது இருந்திருக்கணும். ஆனாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன். ரேட் எவ்வளவு?"ன்னாரு மொத்த வீட்டுக்கும். ஏதோ விலைக்கே வாங்குற மாதிரி கேட்டாலும், நாலே நாளு ஷ§ட்டிங்கிற்குதான் இத்தனை கேள்வி மற்றும் ஆலோசனைகள்! ஒருவழியா நாலு நாளைக்கும் சேர்த்து இருபத்தஞ்சாயிரம் பேசி ஒரு சிறு தொகையை அட்வான்சா வாங்கிட்டு ஏதோ ஒரு சேனலுக்கு 'நியூஸ் வாசிக்க' போயிட்டாங்க ஃபாத்திமா. வீட்டுக்கு மேலேயே அவங்க குடியிருக்காங்க. கீழ் போர்ஷனைதான் வாடகைக்கு விட்டிருந்தாங்க.

கடைசி நாளு ஷ§ட்டிங் முடியுற நேரத்திலேயாவது பணம் வந்திரும்னு காத்திருந்தா, லைட்டு, செட் பிராப்பர்ட்டின்னு எல்லாத்தையும் எடுத்து வேன்லே ஏத்திட்டு இருக்காய்ங்க. போட்டிருந்த நைட்டியோடு கீழே வந்த ஃபாத்திமா "நம்ம பேமென்ட் வரலே. அதுக்குள்ளே எல்லாத்தையும் ஏத்துறீங்களே"ன்னாரு. "வரும், வந்திரும்"னு ரெண்டே வார்த்தை பேசிட்டு, ஏத்துறதிலேயே குறியா இருந்தா பு.மே!

சரி வந்திரும்னு பொறுமையா இருந்த ஃபாத்திமாவுக்கு அடுத்து நடந்ததுதான் சுர்ர்ர்ர்ர்... மெல்ல தனது காரிலே ஏறிக்கிட்ட புரடக்ஷன் மேனேஜரு, "நாளைக்கு யாருகிட்டேயாவது குடுத்தனுப்புறேன். இப்போ கையிலே பணம் இல்லே"ன்னுட்டு வேகமா வண்டிய கிளப்பிட்டாரு. தன்னோட பதிலை கூட கேட்காம இப்படி விருட்டுன்னு வண்டிய கிளப்பிட்டு போனதிலே பயங்கர அப்செட் ஆன ஃபாத்திமா, போட்டிருந்த நைட்டியோடு தனது காரை கிளப்பிகிட்டு புரடக்ஷன் மேனேஜரு வண்டிய விரட்ட, வளசரவாக்கத்திலே ஆரம்பிச்சிது அந்த சேசிங்!

பின்னாடி இவங்க விரட்டுறதை பார்த்திட்ட மேனேஜரு, மாட்னா நாம மேனேஜரு இல்லே, டேமேஜருதான்னு நினைச்சிட்டாரு. ஆக்சிலேட்டர அழுத்தி டிராபிக்கை கதி கலங்க அடிச்சாரு. இவங்க மட்டும் லேசுபட்டவங்களா என்ன? சோழவரம் ரேசுல, மூணு தடவ கப்பு வாங்குன ரேஞ்சுக்கு வண்டிய விரட்ட, போற வர்றவன்லாம் பொம்பளையா இது?ன்னு திட்ட ஆரம்பிச்சிட்டாய்ங்க. ஃபார்த்தும்மான்னு சொன்னாலும் கேட்கிற நிலைமையிலா இருக்காங்க ஃபாத்திமா? சர்ருபுர்ருன்னு பறக்குது வண்டி.

ஒரு வழியா ராம் தியேட்டருகிட்டே மடக்கிட்டாங்க புரடக்ஷன் மேனேஜரு வண்டிய. முன்னாடி போயி சடர்ன் பிரேக் அடிச்சு குறுக்கால வண்டிய நிறுத்த, முகமெல்லாம் வேர்க்க விறுவிறுக்க இறங்கினாரு புரடக்ஷன் மேனேஜரு. அவரு சர்வீஸ்லே இப்படி ஒரு அவமானத்தை பார்த்தே இருக்க மாட்டாரு. "ஏம்மா, நான்தானே தர்றேன்னு சொன்னேன்ல. இப்படி வண்டிய குறுக்க விட்டுட்டீங்களே, மொதல்ல வண்டிய எடுங்க"ன்னாரு. "ஓஹோ, தரமாட்டேன்னு வேற சொல்லுவியா"ன்னு கீழே இறங்கிய ஃபாத்திமாவ பார்த்திட்டு ஒரே கூட்டம். அவ்வளவு கூட்டத்திலேயும் ஆட்டோகிராப் ப்ளீஸ்னு ஒரு அசமஞ்சம், தாளு ஒன்னை எடுத்து நீட்ட, "அட போய்யா அந்தப்பக்கம்"னு தள்ளிவிட்டாங்க பாத்திமா. "பணத்தை எண்ணி வச்சுட்டு வண்டிய எடு"ன்னு ஒரே கெரகம். நைட்டியோட நின்ன இவங்களை பார்த்திட்டு ஷ¨ட்டிங் போலிருக்குன்னு இன்னும் கூட்டம் கூட, தன்னை ஜகதல பிரதாபன்னு நினைச்சு வண்டிய விரட்டிட்டு வந்தவரு தர்மசங்கடலிங்கமாயிட்டாரு.

அங்கிருந்தபடியே யார் யாருக்கோ போன் போட்டு பணத்தை வரவழைச்சாரு. நட்ட நடுரோட்டில் பட்டுவாடா ஆச்சு பணம். மறக்காம வவுச்சர்லே கையெழுத்தும் வாங்கினாரு ஸ்பாட்லேயே வச்சு! அன்னைக்கு நைட் அவங்க சேனல்லே செய்தி வாசிக்கும் போது இந்த செய்தியும் சொல்லுவாங்களோங்கிற அச்சம் அந்த புரடக்ஷன் மேனேஜருக்கு இருந்திருக்குமோ என்னவோ? நேர்லே பார்த்தா கேட்கணும்!

Sunday, June 7, 2009

குப்புற படுத்துகிட்டு என்ன பண்றீங்க?


....ண்ணே, மதுர திமிருங்கிற படத்துல ஒரு பாட்டெழுதியிருக்கேன். உங்க வெப்சைட்டுல ஒரு நியூச போட்டூட்ருங்கன்னு பால பாரதி கேட்டப்போ, சந்தோஷமா இருந்திச்சு. 'பாட்டு வாங்குன' ஒரு ஆளு பாட்டு எழுதினா சந்தோஷந்தானே பாலியல் பாரதி?ன்னேன்! பால பாரதிய நான் செல்லமா கூப்பிடுறது அப்படிதான். அவரும் புரிஞ்சிகிட்டு, "அண்ணே நானே அதை மறந்திட்டேன்"னாரு மறக்காம! ஆனா மறக்கக்கூடிய சமாச்சாரமா அது?

பேட்டிக்காக போற இடத்திலே என்ன கேட்கிறோம்னே தெரியாம எதையாவது கேட்டுட்டு, கண்ணு மண்ணு தெரியாம புண்ணாகிப்போயி வருவாய்ங்க சில பேரு. நம்மாளும் அப்படிதான். அன்னைக்கு நடந்த சம்பவம்...? அத சொல்றதுக்கு முன்னாடி கண்ணு, மண்ணு, புண்ணுன்னு அடுக்கு மொழியிலே சொல்லிட்டு அத பற்றி எழுதாம போனா, எழுதுற பேனாவுக்கே அழகில்லே! அதனால சொல்லிடுறேன்.

ஒரு பிரபல வார இதழில் அப்பதான் வேலைக்கு சேர்ந்திருந்தாரு அந்த 'சொட்டை தலை' நிருபர். லொட லொட ஆசாமிதான் இவரும். வந்த புதுசில்லையா? ஆர்வத்தை பேனாவிலே நிரப்பினாலும், அடக்கத்தை உரல்ல போட்டு குத்தோ குத்துன்னு குத்திட்டு இருந்தாரு. அமெரிக்காவ பற்றி ஒரு டவுட்டுன்னு வைங்க. "டேய், கிளின்டனுக்கு போன போடு. கேட்ருவோம்"ங்கிற அளவுக்கு இவரோட ஆர்வம் ஆர்ட்டீஷியன் லெவலுக்கு பொங்கி பிரவாகம் எடுத்து ஓடியது ஆபிஸ் எங்கும். முனிஸ்வரன் வந்தாலே முட்ட பரோட்டாவ குடுத்து சமாளிக்கிறவய்ங்க, சொட்டையோட வேகம் தாங்காம துடிச்சு போயிட்டாய்ங்க. இவரோட அழும்புக்கு தழுப்பு ஏற்படுத்தணும்ங்கிற முடிவுக்கு வந்திட்டாய்ங்க. ஒரு பெண் போலீஸ் ஆபிசர் பேர சொல்லி, அவங்ககிட்ட ஒரு பேட்டிய எடுத்திட்டு வந்திருங்கன்னாய்ங்க விவரமா.

அடுத்த செகன்ட் அந்த ஆபிசரு வீட்டுக்கு போன போட்டுட்டாரு நம்மாளு. நைட் ட்யூட்டி பார்த்திட்டு வந்த களைப்போ, என்னவோ, அந்தம்மா நல்லா து£ங்கிட்டு இருந்தாங்க. இருப்பு கொள்ளாம போனை அடிச்சிகிட்டே இருந்தாரு சொட்டை. கொஞ்சம் லேட்டா, வேலைக்காரி போனை எடுத்து "அம்மா து£ங்குறாங்க"ன்னு சொல்ல, "நான் இன்ன பத்திரிகையிலேர்ந்து பேசுறேன். எழுப்பு"ன்னுட்டாரு நம்ம ஆளு. அட, இதையாவது சகிச்சுக்கலாம். து£க்க கலக்கத்தோட எழுந்து ரிசீவரை எடுத்த அந்தம்மாவிடம், மணி பத்தாவது. இந்நேரத்திலே குப்புற படுத்துகிட்டு என்ன பண்றீங்கன்னுட்டாரு! (வேறொன்னுமில்லே, வாயி..) "ஹே, ஹ¨ ஆர் யூ"ன்னு அந்தம்மா போன்லேயே லட்டியை சுழற்ற, மொத மொதலா ஈரக்கொலையிலே தாரு ஊத்துன வலி ஏற்பட்டுச்சு சொட்டைக்கு. தப்பா கேட்டுட்டோமோ? இதிலே மணி பத்தாவுது. இன்னும் து£க்கமான்னு கேட்ட வரைக்கும் ஓ.கே. அதுக்கு பிறகு குப்புறப்படுத்து.... ஆங் அங்கதான் தப்பு பண்ணிட்டோம் போலருக்குன்னு வினாடிய நு£றா பிரிச்சு அதுக்குள்ளே யோசிச்சிட்டாரு மனுஷன்.

"மேடம், நான் வந்து... வந்து... இந்த பத்திரிகையிலேர்ந்து... ஒரு பேட்டின்னு..." குளறி குளறி சொல்லி முடிச்சதும் "போனை வைங்க. நானே கூப்பிடுறேன்"னாங்க அந்தம்மா. அடுத்த செகன்ட் எடிட்டருக்கு போன் பறந்தது. "யாருங்க அவன்? இப்படி கேட்கிறான்"னு அவங்க சொல்ல, ரிசீவரை சாத்திய அடுத்த வினாடி எடிட்டர் டேபுளுக்கு முன்னாடி நின்னாரு சொட்டை. அவரு மனசுக்குள்ளே போட்டிருந்த தோட்டாதரணி 'செட்டை' பிரிச்சு எடுத்திட்டாரு எடிட்டர். (எல்லாமே கிசுகிசு பாணியிலே இருந்தாலும், சம்பந்தப்பட்ட நாலைஞ்சு பேருக்கு இது தெரியும்)

ஹ¨ம், திரும்பவும் நம்ம பாலபாரதி மேட்டருக்கு வருவோம். 'போலீஸ் செய்தி' என்ற புலனாய்வு பத்திரிகையிலே சினிமா நியூஸ் எழுதிட்டிருந்தாரு பால பாரதி. பிளேடு பக்கிரி, பிச்சுவா பரமன்கிற மாதிரி, இவரு ஸ்பீக்கர் பாரதி. ரொம்ப பேசுவாரு. பிரஸ்மீட்லே ஹீரோ ஒரு பதில சொன்னா, காதோரமா வந்து "என்ன இப்பிடி சொல்றான்? இவன பத்தி தெரியதா?"ம்பாரு ஆம்புலன்ஸ் அவசரத்தோடு. "பிரஸ்மீட் முடிஞ்சு போம்போது இவன தனியா பார்த்து நான் குடுக்கிறேன் பாருங்க நக்கலுன்"னு அவரு சவால் விடுறதை பார்த்தா, நாளைய தந்தியிலே இதுதான் தலைப்பு செய்தியா வரும் போலங்கிற அளவுக்கு இருக்கும். ஆனா இவரு போயி அவருகிட்ட தனியா பேசுறதை கேட்டாதான் தெரியும். அது நக்கலு இல்லே, ஹீரோவோட 'நெஞ்ச நக்கலுன்னு!'

ஒரு முறை டிஆரை பேட்டி எடுக்க வந்திருந்தாரு பால பாரதி. நாங்கள்ளாம் வெளியே பேசிட்டு இருந்தோம். அண்ணன் வரச்சொல்லியிருக்காருன்னு எங்ககிட்ட சொல்லிட்டு உள்ளே போனாரு. பேட்டி நல்லா ஸ்மூத்தாதான் போயிட்டு இருந்திச்சு. திடீர்னு உள்ளேயிருந்து ஒரே சத்தம். "டேய், கதவை இழுத்து மூட்றா. இவனை கட்டிப்போடு. ங்கொ....ள யாருகிட்டே கேக்கிறே"ன்னு ஒரே சத்தம். ஆஹா, டிஆரோட பசிக்கு நம்மாளு பிரியாணி ஆயிட்டாரேன்னு நாங்க பதற ஆரம்பிச்சிட்டோம்.

பதினைந்து நிமிஷம் காட்டுக்கூச்சல் உள்ளேயிருந்து. டிஆரோட கோவத்தை பார்த்தா, இன்னிக்கு பால பாரதிய பார்சல் கட்டிதான் வெளியே கொண்டு வரணும் போலங்கிற அளவுக்கு ஆயிருச்சு. கதவை திறந்திட்டு வெளியே வந்த டிஆர், "போடுய்யா அவங்க ஆபிசுக்கு போனை" என்றார். நாங்க மெல்ல பஞ்சாயித்திலே என்டர் ஆகி "என்னாச்சுண்ணே?" என்றோம். "இல்லய்யா, சிம்புவை நடிக்க வச்சு அதுல வர்ற வருமானத்திலேதான் நீங்க வாழுறீங்களாமேன்னு கேக்கிறான்யா"ன்னாரு அழாத குறையாக!

பிறகு மெல்ல பால பாரதிய காப்பாற்றி வெளியே கொண்டு வந்து விட்டோம். பாதி கேட் தாண்டுறதுக்குள்ளே திரும்பவும் கூப்பிட்டாரு டிஆர். "தம்பி கோவிச்சுக்காதீங்க. எமோஷனலாயிட்டேன். அப்படியெல்லாம் அண்ணன்கிட்டே கேட்க கூடாது, தெரியுமா?"ன்னு அன்பா தோளிலே கையை போட்டு, ஆறுதலா பேசியும் அனுப்பினாரு. இப்போ கூட டி.ஆர் பிரஸ்மீட்லே பால பாரதியை பேச சொல்லுங்க பார்ப்போம். ம்ஹ¨ம்...!

Friday, June 5, 2009

ஃபேஸ்புக்கில் வந்த நோஸ்கட்!


ஆஹா...ஹ்! நான் என்ன எழுதப்போறேன்னு தெரியாமலேயே இப்படி குமுறிட்டீங்களே சாருங்களா? விட்டா பாக்கெட்ல கைய விட்டு, இவர திட்ட சொல்லி 'அவரு' கொடுத்ததா?ன்னு கூட கேட்டிருப்பீங்க போலிருக்கு. பத்திரிகையிலே வந்தது... பாதி காதுல கேட்டது...ன்னு இல்லாம, கொஞ்சம் நிஜமாவே எழுதலாம்னு நினைச்சேன். அவரு சாப்பிடுற கொஞ்சூண்டு டிபன்லேர்ந்து, நெஞ்சார படிக்கிற புத்தகம், அப்புறம் வீட்டிலே நடக்கிற கிருஷ்ணன் பூஜை வரைக்கும் அதிலே அடக்கம். அதுக்குள்ளே இப்படியா? மை டியர் அண்ணாஸ்... இந்த ஆட்டத்திலேர்ந்து நான் அன்போட கழண்டுக்கிறேன். ஏன்னா, எனது நோக்கம் ஜாலியா படிக்கணும். சகஜமா சிரிக்கணும். இந்த பதிவு ரெண்டுக்கும் குண்டு வைச்சிருக்கும்னு நினைக்கிறேன். ஆனா ஒன்று மட்டும் புரியுது. அவது£று பரப்பறதுல நீங்கள்ளாம் கிசுகிசு கிங்கரர்களோட ஒன்ணு விட்ட சித்தப்பாங்களா இருப்பீங்கங்கறது மட்டும்! ஓக்கே, வேற பதிவுக்கு போவலாமா?

ஆர்குட் ஒரு பக்கமும், ஃபேஸ் புக் மறுபக்கமும் வந்ததிலேர்ந்து, கன்னித்தீவு கதையிலே வர்ற கண்ணாடி மாதிரி ஆயிடுச்சு வாழ்க்கை. (எனக்கில்லே சாமீ) பக்கத்து பக்கத்து டேபிள்ளே உட்கார்ந்திருந்தாலும் ஃபேஸ் புக்லேயே பேஸ்சிக்கிறாய்ங்க ரொம்ப பேரு. நான் சொல்லப் போற நண்பருக்கு ஏராளமான நண்பர்கள். பாதி பேரு இப்படி ஃபேஸ்புக்லே வந்தவங்கதான். கம்ப்யூட்டர்லே வலைய வீசுவாரு. சுறா கிடைச்சாலும் சரி, சுள்ளான் கிடைச்சாலும் சரி. ரெண்டுமே லாபம்தான் அவர பொருத்தவரை. ஏன்னா தனது பிசினசை அது மூலம் பெருக்க என்ன வழின்னு யோசிக்கிற ஆளு அவரு.

ஷ§ட்டிங்கிலே கேரவேன் கேரவேன்னு ஒரு ஐட்டம் இருக்கே? அதுதான் நம்ம ஆளோட பிசினஸ். ஆர்குட்லேயே ஆர்ட்டிஸ்டுகளை பிடிச்சு கலகலப்பா பேசுவாரு. அவங்க நல்ல பிரண்டானதும் ஷ§ட்டிங்கிற்கு கேரவேனை தள்ளி விட்ருவாரு. இப்படி அவரு வச்சிருக்கிற கேரவேன்கள் மாதத்திற்கு ஒரு குட்டிய போட்டு, (ஐ மீன் பல்கி பெருகி) இன்னைக்கு அவரு கையிலே அரை டஜன் கேரவேன்கள் ஓடிட்டு இருக்கு.

நாலு வாரத்துக்கு முன்னாடி, ஃபேஸ்புக்லே ஒரு யங் ஹீரோவோட பேர போட்டு 'சர்ச்' பண்ணியிருக்காரு மனுஷன். இவரு கெட்ட நேரம் போட்டவுடனேயே கிடைச்சிட்டாரு அவரும்.

சார்ட்டிங்லே, "ஹலோ சார் குட் மார்னிங்..."னு டைப் பண்ணிட்டு வெயிட் பண்ணிய நேரத்தில் இருப்பு கொள்ளாம நகத்தை கடிச்சிட்டு இருக்கும்போதே, எதிர்முனையிலிருந்து பளிச்சென்று வந்துச்சு பதில். "...மார்னிங்!"

அவ்ளோதான். சந்தோஷத்தில் பயங்கரமா மிதக்க ஆரம்பிச்சாரு பிரண்டு. பின்னே...? இவரு ட்ரை பண்ணிய அந்த யங் ஹீரோ பயங்கர மன்மதன். அவரு யாரையும் மதிக்க மாட்டாரு. நமக்கெல்லாம் அவரு ஃபிரண்டாவறதே கஷ்டம்னெல்லாம் உரைப்பு சட்டினியை உள் மனசிலே தடவி வச்சிருந்தாய்ங்க இவரோட பிரண்ட்ஸ். இந்த நிலைமையிலே ஹீரோவிடமிருந்து உடனே ஒரு குட் மார்னிங் வந்தால்? ஆடிப்போயிட்டாரு மனுஷன்.

தேங்க்ஸ்... அப்பிடின்னு டைப் பண்ணி அனுப்பிட்டு மறுபடியும் விட்டுப் போன விரலை எடுத்து நுனிப்பல்லிலே வச்சு நகத்தை கடிச்சிட்டு இருந்தாரு. அடுத்த செகன்ட் மறுமுனையிலிருந்து மன்மத ரிப்ளை! "ஓக்கே..." இப்போ மறுபடியும் கீ போர்டில் கபடி ஆட ஆரம்பிச்சாரு ஃபிரண்டு. "சார், நான் ஸோ அண் ஸோ. என்னோட பிசினஸ் இன்னது. உங்களுக்கு கேரவேன் வேணும்னா சொல்லுங்க. பிரமாதமா உங்களுக்காகவே டிசைன் பண்ணி தர்றேன்"னு இவரு டைப் பண்ணி என்ட்டர் கொடுத்திட்டு வெயிட் பண்ணினார். "எங்கே மீட் பண்ணலாம். எப்போ வர்றீங்க?"ன்னு அடுத்தடுத்து பதிலா வரப்போவுதுன்னு இவரு கற்பனையிலே மிதக்க, எதிர்முனையிலிருந்து வந்தது பதில்!

என்னன்னு? அதை எப்படி சொல்றது? வந்தது மூன்றெழுத்தில் அமைந்த சரியான கெட்ட வார்த்தை. அட, சு....க்கு நு£றாக்கிட்டியேடா என்னோட இமேஜைன்னு நொறுங்கிப் போன நண்பர், சிஸ்டத்தை குளோஸ் பண்ணினாரு. அன்னையிலேர்ந்து இந்த மாதிரி 'சிஸ்டத்தை' அவரு ஃபாலோ பண்றதே இல்லைங்கிறதை நான் சொல்லணுமா என்ன?

Thursday, June 4, 2009

ரஜினி, நல்லவரா? கெட்டவரா?


ரஜினி கலந்துகிட்ட பங்ஷன்... முன்வரிசையில் அவரு வந்து உட்கார்ந்ததும், டிரான்ஸ்பார்மர் வெடிச்சா ஒரு வெளிச்ச மழை விழுமே, அப்படி விழுந்தன பிளாஷ்கள்! இட்லி மாவுல, பரோட்டா சுட்ட மாதிரி எகனை மொகனையா சுத்திகிட்டு நிக்கிறாங்க ஆளுங்க. "ஒழுங்கா நின்னு படம் எடுங்க. இல்லே ஓரமா நின்னு வழிவிடுங்க"ன்னு விவிஐபிங்க கோவிச்சுகிட்டாலும், 'அண்ணாமலைக்கு முன்னாடி நீங்கள்ளாம் யாருடா சுண்ணாம்பு கட்டிங்க?'ன்னு சுர்ர்ர்றாவுறாய்ங்க நம்ம போட்டோகிராபர்ஸ்.

"வாங்க அப்படியே போயி அங்க உட்கார்ந்திரலாம்"னு நான் ஒரு கணக்கு போட்டு நண்பனை அழைத்தேன். (பேரு அவசியமா?) "வேணாம்ங்க, முன்னாடி ரஜினி சார் இருக்காரு. இப்படியே போயிரலாம்"னு கழுத்தை சுத்தி காதோரத்துக்கு வழி சொன்னாரு நண்பர். "ஏங்க குறுக்கால போறது எப்படி? நீங்க வேற எங்கேயோ வழி சொல்றீங்களே"ன்னு நான் சொல்லிட்டு இருக்கும்போதே நான் போக நினைத்த அந்த இடத்தில் நாலு சீட்டு ஃபுல். "அட வாங்க"ன்னு அவரை கையை பிடிச்சு இழுக்கும்போது அவரு சொன்னாரு, "அவர பார்த்தா அந்த பழைய பயம் இப்பவும் வந்து தொலையுதுங்க"ன்னாரு. "எந்த பயங்ம்க"ன்னு நான் கேட்க முடியாது. ஏன்னா, அது நடந்த ரெண்டாவது நாளு எங்கிட்ட சொல்லி ஒரு லிட்டர் வேர்த்திருந்தாரு அந்த நண்பர். சரி விடுங்கன்னு நானும் அவரும் கூட்டத்திலே பஞ்சாமிர்தம் ஆகி, சீட்லே உட்காரும்போது எனக்கும் ஒரு லிட்டர் வேர்வை காலி.

அது என்னா சம்பவம்? நண்பர் ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர். ரஜினி படம் ஒன்றில் அசிஸ்டென்ட் டைரக்டரா வேலை பார்த்தார். பத்திரிகையிலேர்ந்து போயி அந்த படத்திலே வேலை பார்த்தது இவரு மட்டும்தான். வேலைக்கு சேர்ந்த மொத நாளே, பத்திரிகைகாரன்ங்கிற அந்த படவா ராஸ்கோலை மனசுக்குள்ளே போட்டு புதைச்சுட்டு சேலம் குட்டி சாமியாரு மாதிரி முகம் மனசெல்லாம் தேஜஸ் வழிய மாறிட்டாரு நம்ம ஆளு.

பேரீச்சம் பழ கொட்டையா இருந்தாலும் எலி புழுக்கையா இருக்குமோன்னு பார்க்கிற ஜாதியல்லவா? எலி புழுக்கையே மேட்டரா கிடைச்சிருச்சு ஒரு முறை. பிரிச்சு நெளிச்சு பேரீச்சம் பழம் ஆக்கிட்டாய்ங்க. ஏதோ ஒரு பத்திரிகையிலே என்னமோ மாதிரி எழுதிட்டாய்ங்க. எல்லா பத்திரிகையும் ஒன்னு விடாம படிக்கிற ஆளு போலருக்கு ரஜினி. அதையும் படிச்சு தொலைச்சிட்டாரு. "அசிஸ்டென்ட்டுகளை வரச்சொல்லுங்க. விசாரிக்கணும்"னு சொல்லிட்டாராம். அருணாசலா கெஸ்ட் ஹவுஸ். ராத்திரி எட்டு மணி.

ஊட்டி ஏரியிலே ஜட்டிய கழட்டிட்டு எறக்கிவிட்ட மாதிரி வெட வெடன்னு நிக்கிறாய்ங்க அஞ்சு பேரும். அப்படியே மேல கீழ அவங்களை பார்த்த ரஜினி, "இதிலே யாரோ ஒருத்தன்தான் அந்த வேலைய செஞ்சிருக்கணும். நான் அவன மட்டும்தான் திட்டுறேன். எவன் தப்பு பண்ணினானோ, அது அவனுக்கே போகட்டும்"னு திட்ட ஆரம்பிச்சாராம்.

யானை வயித்திலே திருவோடு செஞ்சு, அதிலே எருமாட்டு கருவாட்ட போட்டு தாளிச்ச மாதிரி, மணக்க மணக்க வாசம். காது ரெண்டையும் குப்புன்னு அடைச்ச அந்த வாசத்தை கை நீட்டி பொத்திக்கவும் முடியாம, அட கருமம் புடிச்சவய்ங்களா, ஏண்டா எழுதி தொலைச்சீங்க? நான் மேட்டரை சொல்லியிருந்தா கூட ஆறிருக்கும். ஆனா சொல்லாத விஷயத்துக்கு வெஷம் கக்கி வீசுறாரேங்கிற வேதனை நண்பருக்கு. பதினைஞ்சு நிமிஷம் பொழிஞ்ச மழையிலே தொப்பலா நனைஞ்சு உத்தரவுக்காக நிக்கிறாய்ங்க மறுபடியும். "போவலாம் நீங்க. இப்பவும் சொல்றேன். இது யாரு போயி பத்திரிகையிலே சொன்னானோ, அவனுக்கு மட்டும்தான்"னாராம் ரஜினி. அந்த பத்திரிகை நண்பரோடதான் அந்த விழாவுக்கு போயிருந்தேன். படம் முழுக்க இந்த பயத்தோடதான் வேலை பார்த்தாராம் நண்பர். நல்லவேளையா அதே வீரியத்தோட வேற மேட்டர்கள் வரலே. வந்திருந்தா பயபுள்ள 'பஸ்ப்பம்' ஆயிருப்பாரு.

ஹே, தலைவனோட சீப்பு, ஆ... தலைவனோட பவுடருன்னு எல்லாத்தையும் எடுத்து கோக்கு மாக்கா யூஸ் பண்ணிட்டு ரஜினி ரூம்லேயே "ஆஹ்ஹா தலைவனோட சேரு"ன்னு அதிலே உட்கார்ந்து சந்தோஷப்பட்ட வெங்கடேஷை, அப்போதான் ரூமுக்குள்ளே வந்த மாதிரி கண்டும் காணாம இருந்தவருதான் ரஜினி. அது நடந்து இருபது வருஷம் இருக்கும். பணக்காரன் படத்தப்போ நானும் வெங்கடேஷ§ம் ரஜினிய பார்க்க போயிருந்தப்போ நடந்த சம்பவம் அது. 'திரைச்சிற்பி ரஜினி' என்ற பத்திரிகையை ரஜினிக்காகவே பிரத்யேகமாக நடத்திட்டு இருந்தாங்க. அதிலே வெங்கடேஷ் பொறுப்பாசிரியர். அடியேன் டிசைனர்.

ரஜினி கதைகள் நிறைய கேட்டிருக்கேன். சிலவற்றை கேட்க கேட்க சுகம். சிலவற்றை கேட்க கேட்க, --------? இந்த இருபது வருஷத்திலே நான் அவதானித்த ரஜினியின் இன்னொரு பக்கம் எப்படி? சொல்லட்டுமா?

எதுக்கும் தயாரா சில பொக்கேக்களையும், சில செங்கற்களையும் வைச்சுக்கோங்க. பாசமா கையிலே தர ஒன்ணு. ரோசமா நெஞ்சிலே வீச ஒன்ணு. இனி பதிவுகளின் இடையிடையே ரஜினியும் வருவார்...

Wednesday, June 3, 2009

கிளிய வளர்த்து மிக்சியிலே போட்டு ஆட்டிட்டாய்ங்களே...


ஒட்டுமொத்த சனத்தையும் ஒன்னா நிக்க வச்சி, "எவ்வளவு அடிச்சாலும் தாங்கிறீயே, உம் பேரு கட்டப்புள்ளையா"ன்னு கேளுங்க! "ஆமா"ன்னு சொல்ற கெட்டப்புள்ள வர்கம்யா இது...! ஒரு படத்தோட ப்ரீவியூவுக்கு வந்திருந்த பிலிம் நியூஸ் ஆனந்தன், "இப்பிடி ஒரு மூஞ்சை ஹீரோவா போட்டிருக்காங்களே, இதுக்கு ஒரு கோடி ரூவாய்க்கு பிலிம்மை வாங்கி பிரிச்சு பிரிச்சு போட்டு வெளையாடியிருக்கலாமே"ன்னாரு வேதனையோட.

எம்ஜிஆரு, சிவாஜி, எஸ்எஸ்ஆரு, முத்துராமன்னு அழகனுங்களா பார்த்த அவரு கண்ணுக்கு இப்போ வர்ற மூஞ்சுங்க எல்லாம், மூஞ்சூறு மாதிரி தெரிஞ்சாலும் ஆச்சர்யமில்லே. எனக்கு தெரிஞ்சு, கண்ணுக்குள்ளே இரண்டு 'டாஸ்மாக்' கடையையே தெறந்து வச்சுகிட்டு இருக்கிற நடுவயசு ஆளுங்க சிலர், "நேத்து கூட ஒரு கம்பெனியில பேசிட்டு வந்திருக்கேன். இந்த ஜப்ஜெட்டுக்கு(?) நீதான்யா பொருத்தமான ஹீரோன்னு சொன்னாங்க"ன்னு மனசாட்சி மேல மண்ணெண்ணைய ஊத்திக்கிட்டு பேசுவாய்ங்க. ஒனக்கென்னடா ராசா, கொஞ்சம் முன்னாடி மெட்ராசுக்கு வந்திருந்தா இந்நேரம் ஒனக்கும் ஆயிரம் மன்றம் திறந்திருப்பானுங்கல்ல...ன்னு அதிலே நெருப்புக்குச்சியை கிழிச்சு வைப்பான் உற்ற தோழன். எல்லாம் ஒரு 'சியர்ஸ்' செய்யுற மாயம்.

இன்னும் சில பேரு, மஞ்ச மஞ்சேர்னு சட்டைய போட்டுகிட்டு, மாரு, கையின்னு வெளிச்சம் படுற இடத்திலே எல்லாம் ரோஸ் பவுடரை அப்பிகிட்டு வாய்ப்புக்காக நிக்கிறதையும் பார்த்திருக்கேன். "ஒரு சீன்லே வந்திட்டு போற மாதிரி ஒரு ரோல் இருக்கு. பண்றீங்களா?"ன்னு கேட்டு பாருங்க. இருட்டுற வரைக்கும் வெயிட் பண்ணி நாம போகும் போது சந்திலே இருந்து கல்லை விட்டு எறிஞ்சிருவாய்ங்க! நாகேஷ¨ சிரிப்பு, நம்பியாரு மொரைப்பு மாதிரி, இவங்க கூடவே பொறந்தது இந்த ஹீரோ மிதப்பு.

கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன், பாடல், இசை, நடிப்புன்னு வரிசை கட்டி அடிக்கிற வெறியோட திரிவாய்ங்க பல பேரு. எல்லாத்தையும் ஒரு பேப்பரில் எழுதி வச்சுகிட்டு வர்ற இவங்களிடம், "இந்த சைக்கிள் டோக்கன், டீ டோக்கன் ரெண்டுத்தையும் விட்டுட்டீங்களே"ன்னு வெறுப்பேத்தி அனுப்புற புரடக்ஷன் மேனேஜருங்களையும் பார்த்திருக்கேன்.

சில வாரங்களுக்கு முன்னாடி நான் பார்த்த போஸ்டரில் இருந்த நபர், ஒருவேளை ஜெயிக்கலாம். வெற்றிகரமான கதையோடு வந்திருக்கலாம். ஆனால், எடுத்த எடுப்பிலேயே "எதுக்குய்யா இப்பிடி சோதிக்கிறாரு?"ன்னு கேட்டவங்கதான் அதிகம். 'மாக்கான்'ங்கிற படத்தோட போஸ்டர்தான் அது. கதைக்காகதான் ஹீரோ, ஹீரோவுக்காக கதை இல்லைங்கிற கொள்கையிலே நம்பிக்கை உள்ளவன் நான். ஒருவேளை இந்த கதைக்கு அவரு பொருத்தமா இருப்பாரோ என்னவோ? ஆனா இந்த படம் ஓடிட்டா அவரோட அடுத்த படம் என்னவா இருக்கும்? எப்பிடி இருக்கும்? ஃபாரின்லே போயி டூயட்டெல்லாம் ஆடுவாரோங்கிற பயம் தன்னால வர்றது இயற்கைதானே?

"ஃபாரினுக்கு போயி ஆடுறதுக்கே வெட்கமா இருக்குங்க. அந்த ஊரு சினிமாவிலே இந்த மாதிரி ஆடறதையெல்லாம் அவங்க பார்த்திருக்க மாட்டாங்களா? நம்மளையே உத்து உத்து பார்க்கிறப்போ, ரொம்ப சங்கோஜமா இருக்கும்"னு ஒரு தடவ சொன்னாரு சத்யராஜ். ஒரு படத்திலே ஃபாரின்லே போயி 'போர்ட்டர்'கள் போடுற சிவப்பு கலர் டிரஸ்சோட ஆடுவாரு விஜய். அவர கவனிக்கறதை விட்டுட்டு அங்க வேடிக்கை பார்க்கிற ஜனங்களோட ரீயாக்ஷனை கவனிச்சவங்களுக்கு தெரியும். நம்மள்ளாம் அவங்க கண்ணுக்கு எவ்ளோ பெரிய ஜோக்கர்ஸ் என்று. ஏதுக்குய்யா இந்த கொல வெறின்னு கேட்டா, அந்நிய செலவாணி, அது இதுன்னு புரியாத லாங்குவேஜ்லே சமாளிக்கிறாய்ங்க. இந்த விஷயத்திலே நாமெல்லாம் அன்னிய 'கொலை'வாணிங்கன்னா சரியா இருக்குமோ?!

கவுண்டமணி ஹீரோவா நடிச்ச ஒரு படத்துக்காக வெளிநாட்டுக்கு போயிருந்தாங்க. ஷ¨ட்டிங் எடுக்கிறாங்கன்னு தெரிஞ்சதும் ஜனங்க கூடிட்டாங்க. அவங்களுக்கு பயங்கர ஆர்வம். ஹீரோ வந்ததும் அவரை பார்க்கணும். ஆட்டோகிராஃப் வாங்கணும் என்று. அடிக்கடி "ஹீரோ வந்திட்டாரா?"ன்னு கேட்டுக்கிட்டே இருந்தாங்களாம். திடீர்னு வந்து நின்னாரு கவுண்டர். "இவருதான் ஹீரோ"ன்னு ஜனங்களுக்கு அறிமுகப்படுத்த, காத்திருந்தவங்கள்ளாம் இங்கிலீஷ்லேயே காறித்துப்பிட்டு போனதா சொல்லி சிரிச்சாரு அந்த பட கம்பெனிக்கு ரொம்ப வேண்டியவரு ஒருத்தரு.

சரி, மாக்கான் விஷயத்துக்கு வருவோம். ராஜ்கிரணுக்கு ஜோடி மீனாவான்னு கேட்டு முள்ளம்பன்றி சூப்பை குடிச்ச அதே சனங்க, அந்த படத்தை மாங்கு மாங்குன்னு பார்த்து ரசிச்சதை 'மாக்கான்' விஷயத்துக்கு முன்னோடியா சொல்றாங்க. நல்லதாவே நடக்கட்டும். ஒரே வருத்தம்னா அது இதுதான். ரிப்போர்ட்டருங்களை அண்ணான்னு பாசமா கூப்பிடுற கீர்த்தி சாவ்லாதான் திருமதி மாக்கானாம்.

கிளிய வளர்த்து கூண்டுல அடைச்சாலும் பரவால்ல, மிக்சியிலே போட்டு ஆட்டிட்டீங்களேய்யா....?

Monday, June 1, 2009

சாக்ரட்டீஸ்களின் சந்தைக் கடை!


வடபழனி சூர்யா ஆஸ்பிடல் ஓரமா நின்னு வேடிக்கை பார்த்தா, ஃப்ளாப் கொடுத்த நேற்றைய இயக்குனருலேர்ந்து, 'கிளாப்' அடிக்கிற இன்றைய துணை இயக்குனர் வரைக்கும் பார்க்கலாம். பக்கத்திலேயே ஒரு டாஸ்மாக் பார்! பொய்யெல்லாம் அவுத்து எறிஞ்சிட்டு வெள்ளந்தியா பேசுற அந்த கடை, சத்தியமா சொல்றேன்... சாக்ரடீஸ்கள் கூடுற சந்தைக் கடை!

"மாப்ளே, ஒரு கதை சொல்றேன் கேளு"ன்னு அந்த போதையிலும், ரீரெக்கார்டிங்கோட சொல்ற, ஷங்கர் மணிரத்னத்தையெல்லாம் அங்கே ஏராளமா பார்க்கலாம்.

ஒரு 'நாட்' மட்டும் சொல்றேன். கேளுங்கன்னு ஆரம்பிச்சு, ஒரு குயர் 'நோட்' அளவுக்கு 'நாட்'டை மட்டுமே சொல்ற நண்பர்களோடுதான் இப்பவும் பழகுறேன். "ஏண்ணே, இரண்டரை மணி நேர படத்துக்கு நாலு மணி நேரம் கதை சொல்றீங்களே, வெளங்குமா இது?"ன்னு கேட்க ஆசைப்பட்டாலும், அதுக்கு ஒரு பதில சொல்றேன்னு இன்னும் ஒரு மணி நேரத்தை காலி பண்ணினா என்னாவறது? "சூப்பர்..."னு ஒரு வார்த்தைய சொல்லிட்டு ஓடிப்போன நாளு நிறைய.

நடந்தாதான் கதை சொல்ல வரும்னு நடந்துகிட்டே கதை சொல்வாரு ஒருத்தர். ஆக்ஷன் சீன் சொல்லும்போது மேலே பாஞ்சு பிராண்டிட்டு 'ஸாரி'ன்னு ஒரு வார்த்தையை எடுத்து பிராண்டின இடத்திலே தடவிட்டு போவாரு இன்னொருத்தர். அழுகாச்சி சீன்லே மூக்கை சிந்தி, நம்ம சட்டையிலேயே தொடச்சுட்டு "நல்லா 'சிந்தி'ச்சு சொல்லுங்க, நல்லாயிருக்கா இல்லியா?"ம்பாரு வேறொருத்தர். இப்படி நடமாடும் தியேட்டர்களை என் தோளில் தொங்கவிட்டுட்டு இருக்கிற தங்கமான புள்ள நான்.

உலகத்திலேயே கொடுமை என்னான்னா குடிகாரன் பேச்சை குடிக்காம கேட்கிறதுதான். அதைவிட கொடுமை சினிமா கதை கேட்கிறதுதான்! இது என்னோட தாழ்மையான அபிப்பிராயம். ஆனா கதை சொல்லும்போதே நமது விரலையும் பிடிச்சு இழுத்திட்டு போயி கதைக்குள்ளே கரைய வைக்கிற ஏராளமான நண்பர்களையும் பார்த்திருக்கேன். அப்படி கதை சொல்ற அற்புதமான ஆளுதான் 'தினந்தோறும்' நாகராஜ்.

முரளி-சுவலட்சுமி நடிச்ச 'தினந்தோறும்' என்ற வெற்றிப்படத்தின் இயக்குனர். தமிழ்சினிமாவிலே ஒரு விடிவெள்ளின்னு பத்திரிகையாளர்களும் ரசிகர்களும் சந்தோஷப்பட்டுட்டு இருந்தப்போ, 'குடி' கொள்ளின்னு பேரு வாங்கிட்டாரு மனுஷன். ஒரே படத்தின் மூலம் வந்த வெற்றி தலைகால் புரியாம அவரை ஆட வச்சுது. காலை அரும்பி பகலெல்லாம் ஃபுல்லாகி பாழாப் போனாரு மனுஷன். ஒருநாள் இதே சூர்யா ஆஸ்பிடல் வாசல் பக்கமா நின்னு வேடிக்கை பார்த்தப்போதான் அந்த அதிர்ச்சி! ஆறேழு ஃபுல் பாட்டிலை அந்தரத்திலே நிக்க வைச்ச மாதிரி ஒரு ஆளு. வேற யாருமில்லே, நம்ம நாகராஜ்தான் அது.

கையிலே ஒரு கிளாசை வச்சிகிட்டு பக்கத்திலே நின்ன பையனோட உச்சந்தலையை பிடிச்சு பக்கத்திலே இழுத்தாரு. ஐயோ பாவம், அந்த பையன் ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் போலிருக்கு. வலியை பொறுத்திக்கிட்டு அவரு பக்கத்திலே தலையை கொண்டு போனாரு. அதுவரைக்கும் எனக்கு தெரியாது, அந்த அசிஸ்டென்ட் டைரக்டருதான் நாகராஜோடே மெயின் டிஷ்ஷ§க்கு, சைட் டிஷ்ஷ¨ன்னு! மூச்சை வேகமா உள்ளே இழுத்து உச்சந்தலையை முகர்ந்தார். அந்த வாசனை போறதுக்குள்ளே ஒரே கல்ப்பா உள்ளே இறக்குனாரு அந்த சரக்கை! இப்படி சரக்குள்ள ஒரு இயக்குனர் கையிலே 'சரக்கை' கொடுத்தே சாய்ச்சுது விதி.

"காலையிலே வாங்க, ஈவினிங் வரைக்கும் இருந்து சீன் சொல்லுங்க, போம்போது ஒரு ஃபுல் தர்றேன்"னு சொல்லியே நாகராஜை 'கல்ப்பா' அடிச்சுது தமிழ்சினிமா. எத்தனையோ வெற்றிப்படங்களின் நல்ல நல்ல சீன்கள் நாகராஜுடையதாகவும் இருக்கலாம். எல்லாவற்றின் விலையும் சில பல ஃபுல்கள் மட்டுமே!

இப்போ சமீபத்திலே ஒரு சினிமா கம்பெனியிலே நாகராஜை பார்த்தேன். இளைத்து பென்சில் போல இருந்தார். "எல்லாத்தையும் விட்டுட்டேன். இப்போ பல மணி நேரம் நிக்கணும்னு நினைச்சாலும் நிக்க முடியலே. ஆனா, எப்படியாவது பழையபடி நின்னு காட்டணும்னு ஆசையும் வெறியும் இருக்கு"ன்னாரு அடங்காத தாகத்தோடு.

இந்த தாகம், 'அந்த' தாகம் இல்லேங்கிறது மட்டும்தான் நிறைவான நிம்மதி!