Thursday, April 30, 2009

ஒரு நடிகை பேட்டி கொடுக்கிறா....

நெஞ்செலும்பு தெரியுற நோஞ்சான் தோளு, நிமிர்ந்து நிக்கிற பாட்ஷா தோளு, ஜிம்முக்கு போன 'கும் கும்' தோளுன்னு விதவிதமான 'தோள'ர்கள் அந்த அபார்ட்மென்ட்டுக்கு கீழே அடிக்கடி ரவுண்டு கட்ட ஆரம்பிச்சது அப்போதுதான். ஏன்னா ஷமீதா அந்த அபார்ட்மென்ட்டுக்கு குடி வந்த புதுசு அப்போ! வீடு மட்டுமில்லே, படமும் வந்த வந்த புதுசு.

'பாண்டவர் பூமியில் தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கிறேன்'னு பாடினாலும் பாடினாரு. தோள் கொடுக்க வந்த 'தோள'ர்கள்தான் இவங்கள்ளாம். சுண்டுனா ரத்தம் வர்ற செவப்பு (ஏண்டா சுண்டுறீங்க?) பேசுனா பச்சைக்கிளி பாஷை (தமிழ் அவ்ளோ தகராறா?) நடந்தா தென்றல் (வீட்டுக்கு ஏசி இல்லாம இருந்திருவாங்களாக்கும்) இத்தனை பெருமைகள் கொண்ட சந்தன ஷமீதாவை பக்கத்திலே இருந்து பாக்கணும்னு ஆச வந்திருச்சு இந்த சாதாரண பேனாக்காரனுக்கு.

இப்போ ஏண்டா உனக்கு அந்த நினைப்புன்னு கேட்கிற வயிற்றெரிச்சல் பார்ட்டிகளுக்கு... நேற்றுதான் படிச்சேன். ஷமீதாவுக்கு கல்யாணமாம்! லவ்வுல விழுந்து 'லங்ஸ்' வரைக்கும் காதல ஏத்தியிருக்கும் போல. பிடிவாதமா இருந்து பிறந்த வீட்டை கரெக்ட் பண்ணுச்சுன்னு கேள்விப்பட்டேன். வாழ்த்துக்கள்மா...! சரி, கதைக்கு வருவோம்.

சேரனிடம், "சார் உங்க படத்தை பார்த்த பிறகு ஷமீதாவோட பேட்டி போடணும்னு நினைக்கிறேன். நம்பர் கொடுங்களேன்"னு கேட்டதும், "ஒரு நிமிசம் இருங்க"ன்னு அங்கனையே டைரிய புரட்டி நம்பரை கொடுத்தாரு. (மைண்ட்லே வச்சுக்க வேணாமா இதையெல்லாம்?) நல்ல மனுசன் சேரன். "பேசினா, நான் சொன்னேன்னு சொல்லுங்க"ன்னு ஒரு பிட்டையும் போட்டாரு. அது ஸ்மால் சைஸ் பிட்டுன்னு நினைச்சேன். பிறகுதான் தெரிஞ்சுது அது பிட்டு இல்லே, என் தன்மானத்துக்கு விழப்போற வெட்டுன்னு!

சரக்கு ரயிலும் சரக்கு ரயிலும் கிராஸ் பண்ணினா தடால் புடால்னு ஒரு சத்தம் கேட்குமே, அந்த தவிப்போட மனசை ஒரு கையிலே புடிச்சிகிட்டு இன்னொரு கையால நம்பரை போட்டேன். ஏன்னா 'அவ்வ்வ்வ்வ்ளோவ்' து£ரம் ரசிச்சிட்டேன் அந்த கேரக்டரை! எதிர்முனையிலே புல்லாங்குழலோ, வயலினோ எடுத்து 'ஹல்ல்ல்லோ'ன்னு சொல்லப்போற கனவோட காத்திருந்தா, விழுந்திச்சு ஒரு தண்டோரா சத்தம். "யாருங்க...?" நான், "இன்னாரு.... இன்ன பத்திரிகையிலேர்ந்து பேசுறேன். சேரன் சாருதான் நம்பர் கொடுத்தாரு. ஷமீதாட்ட சொல்ல சொன்னாரு. மேடம் இருக்காங்களா?"ன்னு ஒரே மூச்சில ஒப்பிச்சுட்டு புல்லாங்குழலுக்காக காத்திருக்க, மறுபடியும் தவிலுதான் லைனுக்கு வந்தது.

"அலோ, ஒங்களுக்கு பேட்டி வேணும்னா கேளுங்க. அத விட்டுட்டு எவன் எவன் பேரையோ சொன்னா நாங்க எதுக்கு பேட்டி தரணும்? போனை வைங்க"ன்னுச்சு தவிலு. அடப்பாவிகளா, உங்களோட உட்கட்சி பூசலுக்கு என் அண்ட்ராயரை கிழிச்சிட்டீங்களேப்பான்னு நினைச்சுகிட்டேன். அதே நேரத்திலே வாய்ப்பு கொடுத்த ஒரு டைரக்டரை தப்பு தப்பா பேசுற இந்த தவிலை கிழிச்சுடுறதுன்னு முடிவு பண்ணிட்டு, "அல்ல்ல்ல்ல்லோ... கொஞ்சம் நிறுத்திறீங்களா"ன்னு வால்யூமை கூட்டவும், எதிர் முனை "சொல்லுங்க" என்று சுருதி குறைத்தது. "நீங்க யாரு?ன்னேன் இப்போது. "ஷமீதாவோட அக்கா"ன்னுச்சு தவிலு. "ஏங்க? உங்க தங்கச்சியை வச்சு ஒரு மனுஷன் நல்ல படம் கொடுத்திருக்காரு. உங்களுக்கும் அவருக்கும் ஆயிரம் பிரச்சனை இருக்கும். அதை விட்டுட்டு அவரை போயி இப்படி திட்றீங்களே, அதுவும் ஒரு பத்திரிகைகாரனிடம். உருப்புடுவீங்களா நீங்க? என்றேன் படார் திடீர்னு. அவ்வளவுதான். எதிர்முனையிலும் சூடு பற்றிக் கொண்டது. அவர் பேச நான் பேச, இறுதியாக நடந்த கூட்டு பஞ்சாயத்தில், "உங்களுக்கு பேட்டி தர மாட்டா என் தங்கச்சி" என்றார். "ரொம்ப நல்லது. வர்ற வாரம் புக்கை பாருங்க"ன்னு போனை வச்சிட்டேன்.

நடந்த விஷயத்தை சேரனிடம் கூட சொல்லாமல் நடந்தது என்னன்னு அப்படியே எழுதி வைக்க, புக்கை பார்த்திட்டு பதறி அடிச்சுட்டு போன் பண்ணினாரு சேரன். அந்தணன், எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே? அப்படியே போனை வைங்க. அவளே கூப்பிடுவா உங்களைன்னாரு. அடுத்த அரை மணி நேரத்தில் நான் எதிர்பார்த்த அந்த புல்லாங்குழல் வந்தது லைனில். சார், கொஞ்சம் தப்பு நடந்திருச்சு. வீட்டுக்கு வாங்களேன். நான்தான் ஷமீதான்னாரு. கூவின பூங்குயில், குருகுகள் இயம்பின... வண்டிய கிளப்பி ஷமீதா வீட்டு வாசலுக்கு போனா, நம்ம 'தோள'ர்கள்?!

"ஷமீதா வீடு எதுப்பா?" 'பிரஸ்' என்ற வண்டிய பார்த்ததும், "பேட்டியா? நானும் வர்றேன் சார்"னான் விடலைத் தோளன். தம்பி, இங்கனதான இருக்கீங்க. வரும்போதும், போம்போதும் பார்த்துக்க வேண்டியதுதானேன்னு சொல்லிட்டு லிப்ட்டில் ஏறினேன். (நொங்கை பங்கு பிரிக்கலாம். ரோசாப்பூவை முடியுமா? கவித கவித...)

"சார், நான் கொஞ்சம் கூச்ச சுபாவம். அதான் பேட்டி வேணாம்னு அக்கா சொல்லியிருந்தாங்க. என்னவோ தப்பு நடந்திருச்சு. சாரி, கேளுங்க" என்றார். நான் அவரிடம் பேசிக் கொண்டே தவுலு இருக்கான்னு தேடினேன். புரிந்து கொண்டவர் போல, "நீங்க வர்றதால அக்கா வெளியே போயிட்டாங்க. திரும்பி வர இரண்டு மணி நேரம் ஆகும். பேசுங்க"ன்னாரு ஷமீதா. குயிலு குப்பத்தில் மயிலு வளர்த்த கதையா, அப்படி ஒரு பொறுமை. நிதானம். "உங்களுக்கு எப்படி இப்படி ஒரு அக்கா?"ன்னு கேட்டே விட்டேன். "ஸாரி சார். மறுபடியும் எதுக்கு, அந்த பேச்சு?" என்றவர் பெரிய பேட்டியாக கொடுக்க, சந்தோஷமாக வெளியே வந்தேன்.

"அட பாவி தோளருங்களா?" வண்டியிலே இருந்த காத்த பிடுங்கிவிட்டுருந்தானுங்க. அதுவரைக்கும் என் மனசுக்குள்ளேயே வீசுன ஷமீதா வாசனை, வண்டிய தள்ளுனதிலே வேர்வையா வெளியேற, பேத்தாஸ் மூடுக்கு போயிருந்தேன். என்ன செய்வது? சில நேரங்களில் வண்டிக்கு காத்த பிடுங்கி விட்ட மாதிரி எவனாவது நம்ம லைப்லே கிராஸ் பண்ணிடுறானுங்க. ஹ§ம்....!

Tuesday, April 28, 2009

ராஜன் பே..., சுரதா பே..., முனுசாமி பே..., மைக் பே...?!

"சாரு பெரிய கவிஞ்சரு"ன்னு மாசத்துக்கு ஒருத்தரையாவது எங்கிட்ட அறிமுகப்படுத்துவாங்க யாராவது. வாத்தியாருன்னா இப்படி, வாட்ச்மேன்னா இப்படி, அதே மாதிரி கவிஞ்சருன்னா இப்படி இருக்கணும்னு யாரு சொல்லி வச்சாங்களோ? நான் பார்த்த அநேக கவிஞ்சருங்க, நிக்க வச்சு 'அயர்ன்' பண்ணிய மாதிரியே இருப்பாங்க. பா.விஜய், நா.முத்துக்குமார், யுகபாரதின்னு நல்லா எழுதுறவங்கள்ளாம் நிகழ்காலத்துக்கு ஏத்த மாதிரி இருக்கும்போது, ஏ.தமிழா....ன்னு இனிஷியல் போட்டு எழுதுற ஆளுங்களோட அட்டகாசம் இருக்கே, ரொம்ப கொடுமை சார்.

அனலேந்தின்னு ஒருத்தர். இவரு இயற்பெயர் பிச்சாண்டியோ என்னவோ? (ரொம்ப பேரு பேர மாத்திக்கிறதுக்காகவே கவிதை எழுதுறாய்ங்களோ?) வாரா வாரம் அவரு கவிதை தபால்ல வந்திரும். ஒரு முறை பிரசுரித்தால் அதற்கு தண்டனையாக மறுநாளே பத்து கவிதை அனுப்புவாரு! 'ஏ தமிழா, நீ கை நீட்டினால் இலங்கை ஒரு சாண்...' அப்பிடின்னு எழுதியிருந்தாரு. நேர்ல வந்தா, "எங்கே அளந்து காட்டு"ன்னு கேட்கலாமான்னு கோவம் வரும். இந்த மாதிரி ஆளுங்களுக்கு மத்தியிலே நான் வியக்கிற நல்ல கவிஞர்களும் இருந்தாங்க. இருக்காங்க.

ராஜன் பே! (பயப்படாதீங்க. இந்த பே அவரோட இனிஷியல். என்ன சவுரியத்துக்காகவோ அதை து£க்கி பின்னாடி போட்டிருக்காரு. அவ்வளவுதான்) இவரு ஒரு உதவி இயக்குனரு. எனக்கு தெரிஞ்சு சரத்குமார் பீக்லே இருக்கும் போது அவருக்கு கதை சொல்ல கிளம்பி, இப்போ வெண்ணிலா கபடிக்குழு ஹீரோ வரைக்கும் வந்திட்டாரு. "கதையை கேட்டு கரகரன்னு அழுதிட்டான் மனுஷன்னுவாரு..." ஆனா, கால்ஷீட்டுதான் ஒருத்தருமே கொடுக்கலே. (எதுக்காக அழுதாய்ங்களோ?) "நான் காத்து மாதிரி. இந்த உலகமே அழிஞ்சாலும் நான் இருப்பேன். சலிக்காம கதை சொல்லிகிட்டே இருப்பேன்"னுவாரு. உலகமே அழிஞ்ச பிறகு யாருக்குய்யா கதை சொல்வேன்னு கேட்டு அவரு மனசை புண்படுத்துவானேன்?

இவரும் ஒருநாளு கவிஞ்சராயிட்டாரு. ஏதோ சைக்கிள் பஞ்சராயிட்டுன்னு சொல்ற மாதிரி சொல்றீயேன்னுதானே கேட்கிறீங்க? அந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தா தெரிஞ்சுருக்கும்டீ உங்களுக்கு. அமரர் ஆகிவிட்ட உவமைக்கவிஞர் சுரதாதான் இந்த புத்தகத்தை வெளியிட வந்திருந்தார்.

பெருங்கூட்டம். சாயங்கால நேரத்திலே இந்த மாதிரி நிகழ்ச்சி எங்கே நடக்கும்னே அலையுற சக புலவர் பெருமக்களும் இந்த நாட்டில் இருக்கதானே செய்யுறாங்க? இந்த கூட்டத்திலே முல்லை பாண்டியன்னு ஒருத்தரும் வந்திருந்தாரு. "கவிஞர் வந்திட்டாரா?"ன்னு அடிக்கடி கேட்டுக்கிட்டேயிருந்தாரு. ரொம்ப து£ரத்திலேயிருந்து பஸ் பிடிச்சு வந்திருந்தாரு. சுரதாவுக்கும் இவருக்கும் ஒரு பிசிராந்தையார் பிரண்ட்ஷிப் இருந்திருக்கும் போல. அதாவது இரண்டு பேரும் நேருக்கு நேர் சந்திக்காமலே பிரண்ட்ஷிப் வச்சிருந்தாங்க. இவருக்கு அவரு கடிதம் எழுதறதும், அவருக்கு இவரு கடிதம் எழுதுறதும், தபால் துறையே வியக்கிற அளவுக்கு இருந்திருக்கிறது. இம்புட்டு வெவரத்தையும் முல்லை பாண்டியனே சொன்னாரு.

கவிஞர் சுரதா வந்ததும், ஆளாளுக்கு பாய்ந்து சென்று அவரை வரவேற்றார்கள். இந்த கூட்டத்தில் இடித்து பிடித்துக்கொண்டு முன்னால் வந்த முல்லை பாண்டியன், சுரதாவின் கையை பிடித்துக் கொண்டு "நான்தான் முல்லை பாண்டியன்" என்றார் நெகிழ்ச்சியோடு. அதற்கு சுரதா சொன்ன பதில் இருக்கே, பயங்கரம். "இருந்திட்டு போ, அதுக்கென்னா இப்போ?"ன்னாரு கொஞ்சம் கூட இரக்கமில்லாமல்! அப்பவே தெரிஞ்சுருச்சு. இந்த விழா சூப்பரா இருக்கும்டான்னு.

வரவேற்புகள், பொன்னாடை போர்த்துதல்னு ஒரே ஃபார்மாலிட்டிஸ். ஒரு வழியாக முடிந்து புத்தகத்தை வெளியிட்டார் சுரதா. வாழ்த்தி பேசணுமே? கண்ணாடியை போட்டுக்கொண்டு முதல் பக்கத்தை பிரித்தார். புத்தகத்தின் தலைப்பை படிச்சுட்டு, எழுதுனவன் பேரு என்னய்யான்னு முணுமுணுத்துக் கொண்டே, "ஆங்... ராஜன் பே" என்றார். "என்னாய்யா ராஜன் பே? நான் கூடதான் சுரதா பே. அவன் கூடதான் முனுசாமி பே. ...தோ இது கூடதான் மைக் பே. ராஜன் பேயாம். சரி போ. என்ன எழுதியிருக்கே?" என்றவர், முதல் கவிதையை ரொம்ப கஷ்டப்பட்டு வாசித்தார்.

"அடேய்... வரிய மடக்கி மடக்கி போட்டு கவிதைன்னு சொல்றே? சொல்லிட்டு போ. பிரஸ்சுக்கு பணத்தை கொடுத்திட்டீயா"ன்னாரு. இதற்குள் வெட்கம் பிடுங்கி திங்க, ஒரமாக நின்றிருந்த ராஜன் பே, "கொடுத்தாச்சு" என்றார் அங்கிருந்தபடியே. "என்னாத்த கொடுத்தே? வீட்டுலே இருக்கிற வெத நெல்லை வித்து கொடுத்திருப்பே? ங்கொப்பனை கேட்டா தெரியும். நீயெல்லாம் கவிதை எழுதனுமா?" என்றார் ஒரேயடியாக! "சரி போ என்னை கூப்பிட்டுட்டே. நல்லாயிருக்குன்னு சொல்ல முடியலேன்னாலும் போம்போது ஆளுக்கொன்னு வாங்கிட்டு போங்கப்பா. பாவம் வெத நெல்லெல்லாம் வித்துட்டு புத்தகம் போட்டிருக்கான்"னு சொல்லிவிட்டு மேடையை விட்டு கீழிறங்கினார்.

நானும் ஒரு புத்தகம் வாங்கிட்டு வந்தேன். படிச்சு முடிச்சுட்டு சுரதா இருக்கிற திசை நோக்கி மானசீகமா வணங்கினேன். இன்னும் கொஞ்சநாள் நீங்க இருந்திருந்தா, கொசுக்கடி குறைஞ்சுருக்குமேய்யா....!

Sunday, April 26, 2009

நடிகை செருப்பு, நானா பொறுப்பு?

நடுவிலே சுருட்டிகிட்ட மாராப்பாலேயும், நச்சுன்னு வர்ற வீராப்பாலேயும் ஒரு பயனும் இல! இதையெல்லாமா சொல்லுவாரு திருவள்ளுவரு? நான் ரோட்டிலே அகஸ்மாத்தா சந்திச்ச தெரு வள்ளுவருதான் இப்பிடி சொன்னாரு. "அப்புறம் எப்பிடி போவுது பொழப்பு?" நான் கேட்கிறதுக்காகவே காத்திருந்த மாதிரி, "நல்லா கேட்டீங்க தலைவா? இது வேலையா? பொழப்பான்னே தெரியலே. டீசண்டா கேட்டா வேலை, கோக்கு மாக்கா கேட்டா பொழப்பு. உங்களுக்கு தெரியாதா, நீங்கதான் பார்த்தீங்களேன்"னாரு. அது நடந்து வருஷமாயிருக்கும். மனுஷன் இன்னும் அந்த அவமானத்திலே இருந்து மீளலே போலிருக்கு.

"அன்னைக்கு மட்டும் வீராப்பா கோவிச்சுட்டு போகாம இருந்திருந்தா, இன்னைக்கு யாரையாவது புடிச்சு ஒரு படத்தை பண்ணியிருப்பேன் தலைவா. இடையிலே பிரேக் விட்டுட்டேனா? மறுபடியும் ஒரு டைரக்டரை பிடிச்சு சேர்றதுக்குள்ளே தாவு தீர்ந்து, 'தைஸ்' இளைச்சுருச்சு. ஒருவழியா ஒரு இடத்திலே சேர்ந்து, விட்ட இடத்திலேர்ந்து வேலைய தொடர்றேன். சீக்கிரம் ஒரு படம் பண்ணனும்" என்றார் நம்பிக்கையோடு. இந்த நம்பிக்கைதான் பல உதவி இயக்குனர்களுக்கு ஆக்சிஜன், அனாசின், நோவால்ஜின் எல்லாம்....!

நான் நீண்டகாலம் கழித்து சந்தித்த அந்த நண்பர், சில வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தில் உதவி இயக்குனராக இருந்தார். அந்த படத்தில் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருந்ததால் அடிக்கடி நானும் அங்கே விசிட் அடிப்பேன். படத்தின் நாயகி ஆர்த்தி அகர்வால். ஆந்திராவில் கொடி கட்டி பறக்கிறார் என்பதற்காக இங்கே அழைத்து வந்திருந்தார்கள்.

அவரு கொடி உசரத்திலே பறந்தாலும், இங்கே இருந்த ஒவ்வொரு நாளும் அது நாகரீகமான கொடியா, நாறிப்போன கோவணமான்னே தெரியாத அளவுக்கு ரவுசு பண்ணுச்சு பொண்ணு. நம்ம அசிஸ்டென்ட் டைரக்டர்தான் பக்கத்திலே போய் சீனுக்கான டயலாக்கை சொல்லனும். ஷாட் பிரேக்கில் அன்புமணியின் எதிரியை விரலுக்குள் பிடித்து ஒய்யாரமாக புகை விட்டுக் கொண்டிருப்பார் நடிகை. "ஹே, கேரி ஆன்... நீ சொல்லுப்பா"ன்னு சொல்லிட்டு வேறு பக்கம் திருப்பிக் கொண்டு குப் குப்புன்னு புகையை விட, இந்த பக்கம் லொக் லொக்குன்னு இருமிகிட்டே டயலாக்கை சொல்லிக் கொடுப்பார் நம்ம நண்பர். இதுவாவது பரவாயில்லே. அவரோட அப்பா அவ்வப்போது ஃபிளைட்டை புடிச்சு சென்னைக்கு வந்து இறங்கிட்டா, இரண்டு மத்தாளமாயிடும் அசிஸ்டென்ட் பொழப்பு.

ஷாட் ஓக்கேன்னதும் ஓடிப்போய் அப்பா மடியிலே உட்காந்துக்கும் பொண்ணு. அதுவும் எப்படி? பொண்ணு முதுகும் அப்பா வயிறும் ஒண்ணா ஒட்டுற மாதிரி உட்கார்ந்தா பரவாயில்லே. இரண்டு பேரு வயிறும் ஒன்னா ஒட்டியிருக்கிற மாதிரி ஒட்காந்துக்கும். (என்ன பாசமோ? கண்றாவி!) இப்போ போயி அந்த பொண்ணுக்கு டயலாக் சொல்லிக் கொடுன்னா...? இப்படியே நாளை கழிச்சு, நங்கூரத்தை தள்ளினாரு உதவி இயக்குனர்.

கடைசி நாள் ஷ¨ட்டிங். அடுத்த ஷெட்யூல் வேற ஏதோ ஒரு ஊர்லே. வடபழனியில் உள்ள ஒரு பெரிய ஹோட்டலில் ரூம் போட்டு கொடுத்திருந்தாங்க பொண்ணுக்கு. கடைசி நாள் என்பதாலே ரூமை காலி பண்ணிட்டு வந்திருச்சு. சாயங்காலம் அஞ்சு மணி இருக்கும். திடீர்னு ஒரே கூச்சல். "என்னோட செருப்பை ரூமிலேயே விட்டுட்டு வந்திட்டேன். ரொம்ப சென்ட்டிமென்ட் அந்த செருப்பு மேல நான் வச்சுருக்கு. அதனால அது வேணும்"

நம்ம ஆளதான் செருப்பு கொண்டு வர அனுப்பினாங்க. ரிசப்ஷன்லே போயி, "சார்... நான் --------- கம்பெனியிலேர்ந்து வர்றேன். இங்கே தங்கியிருந்த ஆர்த்தி அகர்வால் அவங்க செருப்பை விட்டுட்டு போயிட்டாங்களாம். என்னை எடுத்திட்டு வரச்சொன்னாங்க. கொடுத்திங்கன்னா நல்லாயிருக்கும்"னாரு.

"யாராவது வருவீங்கன்னுதான் தேடிட்டு இருந்தோம். நல்லவேளை, வந்திட்டீங்க. அப்படி ஓரமா உட்காருங்க. ஒங்க ஆபிசுக்கு போன் பண்ணி இருபதாயிரம் ரூவாய கட்டிட்டு உங்களை கூட்டிட்டு போக சொல்லுங்க" என்று சொல்ல, அதிர்ந்தே போனார் அசிஸ்டென்ட் டைரக்டர். "சார் என்னாச்சு சார்?"னாரு பதறிப் போயி. "யோவ்... அந்த பொம்பளையால ஹோட்டலே எரிஞ்சு போயிருக்கும்யா. சிகரெட்டை குடிச்சு பெட் மேலே போட்டுட்டு போயிருச்சு. உள்ளேயிருந்து ஒரே புகை. கதவை ஒடைச்சு பார்த்தா, காஸ்ட்லியான அந்த மெத்தை எரிஞ்சு போச்சு. இருவதாயிரம் இருந்தா நீயே கொடுத்திட்டு போ. இல்லைன்னா எடுத்திட்டு வரச்சொல்லு. செருப்பு வேணுமாம்ல செருப்பு"ன்னு வெறுப்பை உழிழ, அங்கேயிருந்து போனை போட்டார் அசிஸ்டெண்ட். அன்றைய பட்ஜெட்டில் எதிர்பாராம இருபதாயிரம் ரூபாய் செலவு.

"சார், நல்ல கம்பெனி சார் அது. வந்து கொடுப்பாங்க. என்னைய விடுங்க"ன்னு இவரு கேட்டும் ஓட்டல் ஆளுங்க விடலே. அவமானம் ஒரு பக்கம். சிங்கிள், டபுளுக்கு கூட போக விடாம கண்காணிப்பு. வெறுத்தே போயிட்டாரு அசிஸ்டென்ட் டைரக்டர். அவங்களும் பணம் புரட்ட என்ன கஷ்டமோ, இரவு பத்து மணி வரைக்கும் வரவேயில்லை. நல்லவேளையாக அந்த நேரத்திற்கு பிறகு வந்து பணத்தை கொடுத்து மீட்டார்கள்.

அன்னைக்கு கோவிச்சுக்கிட்டு போனவர்தான். பல மாதங்களுக்கு பிறகு சமீபத்தில்தான் சந்தித்தேன் அவரை. "இப்போல்லாம் கோவம் வருதா?" என்றேன். "படைப்பாளிக்கு அது இல்லேன்னா எப்பிடி சார்?"னாரு. "அப்போ தம்பி படம் பண்ண இன்னும் பத்து வருஷம் ஆவும்னு சொல்லுங்க"ன்னு நான் அடிச்ச கமெண்ட்டை அவரு அவ்வளவா ரசிச்சதா தெரியலே!

Saturday, April 25, 2009

டெலிபோனில் சீறிய கமல்ஹாசன்!

எப்போதாவது ஜெயலலிதா பிரஸ் மீட்டை டிவியிலே பார்த்தவங்களுக்கு, அட... இந்தாளு இங்கேயும் இருக்காரேன்னு தோணும். ஏன்னா, இவரு இரண்டு நாளைக்கு முன்னாடி விஜயகாந்த் பிரஸ்மீட்ல இருந்திருப்பாரு. அப்படியே நாலு நாளைக்கு முன்னாடி ரிவர்சிலே போய் வைகோ பிரஸ் மீட்ட மனசில ஓடவிட்டா, முன் வரிசையிலே உட்கார்ந்து முணுமுணுன் னு பார்த்திட்டு இருந்திருப்பாரு.

அரசியல் களத்திலே தம்பி ஒரு போர்வாள்னு நினைச்சு புல்லரிச்சா, திடீர்னு நமீதா பிரஸ்மீட்லே முன்னாடி உட்கார்ந்து "நீங்க யாரை லவ் பண்றீங்க?"ன்னு ஒரு குறுவாளை வீசி கொலையா கொல்லுவாரு. எதுக்கும் அசராத அந்த ஆறடி தாஜ்மஹாலே அலேக்கா குலுங்கும்!

எல்லாத்தையும் 'நாளிதழ்'னு அழைச்சா, இவருக்கு வேலை கொடுத்த நாளிதழை மட்டும் 'ஒரே ஒரு ஆளிதழ்'னு அழைப்பது பொருத்தம்! ஏன்னா அந்த நாளிதழை பொருத்தவரை இவருதான் ஆல் இன் ஆல் 'பழகு' ராஜா. அப்படி பழகுவாரு எல்லாருகிட்டேயும். அந்த பேப்பரா? நம்ம தம்பி கமல வரச்சொல்லுங்கன்னு தலைவர்களும் சரி, சினிமாக்காரர்களும் சரி, வரச்சொல்லுவாங்க. ஏன்னா இவரு கேட்கிற அத்தனை கேள்வியும் மொன மழுங்கிப் போன மொக்க கேள்விகள்தான். உலக விஷயங்களை கிளறி கேட்கிற அளவுக்கு நாலெட்ஜ் இருந்தாலும், யாரு மனசுக்கும் பேண்டேஜ் போடனும்னு நினைக்காத மனுஷன்!

அதனால வலிய கேட்டாலும் வலிகாம கேட்பாருங்கிற நம்பிக்கையை இவரு மேல வச்சிருந்தாங்க எல்லாரும். அப்படிப்பட்ட அப்பாவிதான் ஆணானப்பட்ட கமல்ஹாசனுக்கே 'அல்சர்' வரவழைச்சுட்டாரு ஒரு தடவை.

இப்போது கமல்ஹாசனின் பிஆர்ஓ நிகில் முருகன். ஆனால் சில வருஷங்களுக்கு முன்னே கிளாமர் கிருஷ்ணமூர்த்தி இருந்தார். திரையுலகத்தின் மிக மூத்த மக்கள் தொடர்பாளர் இவர். இவரோடு பேசணும்னா கமல்ஹாசனே நேரடியாக இவரு லைனுக்கு வந்திருவாரு. என்ன தேவையோ, அதை நேரடியாக சொல்கிற அளவுக்கு இவரும் அவரும் 'இப்பிடி' (இந்த இடத்தில் விஷ§வலாக இரண்டு கை விரல்களையும் இறுக கோர்க்கவும். எல்லாம் ஒரு ஃபீலிங்குக்காகதான்)

அப்போது கமல்ஹாசன் பட ஸ்டில்களை வாங்கவும், அவரு தொடர்பான செய்திகளுக்காகவும், கிளாமரைதான் காண்டாக்ட் பண்ணனும். திடீர்னு கிளாமரோட லைனுக்கு வரும் ரிப்போர்ட்டர் கமல், "கிளாமர்... நான் கமல் பேசுறேன்"னு ஆரம்பிப்பார். அவரும் ஏதோ கமல்ஹாசன்தான் பேசுறதா நினைச்சுக்கிட்டு, "ஸார்... சொல்லுங்க ஸார். ஆபிசுக்கு நேரடியா வந்திரட்டுங்களா"ன்னு பவ்யமா கேட்பாரு. ஆனா எதிர்முனையிலே இருக்கிற நம்ம ரிப்போர்ட்டர் கமல், "பதறாதீங்க கிளாமர். நான் உங்க கமல் இல்லே. ரிப்போர்ட்டர்" என்பார் சாவகாசமாக!

"ஏய்... ஒங்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன் உன் முழு பேரான கமலநாதன்னு சொல்லு. இப்படி ஒவ்வொரு தடவையும் போன் பண்ணி கமல் கமல்னு சொல்லி என்னை பதற வைக்காதேன்னு. இன்னியோட இந்த வேலையை நிறுத்திக்கோ" என்று பொருமி தள்ளிட்டாரு. ஆனாலும், அம்பி அடங்கறதா இல்லை. கிளாமரோட பதட்டத்தை ரசிக்க ஆரம்பிச்சிட்டாரு கமல். அட நீங்களுமாங்காதீங்க, முழு பேரையும் சொல்லிடுறேன். கமலநாதன்!

ஒருநாள் அதிகாலை ஆறு மணி. ட்ரிங்...ட்ரிங்... ரிசீவரை எடுத்து காதில் வைத்தார் கிளாமர். "நான் கமல் பேசுறேன்..." எதிர்முனையிலிருந்து நிதானமாக உரையாடல் ஆரம்பித்தது. அவ்வளவுதான். கடும் கோபத்தோடு சீற ஆரம்பித்தார் கிளாமர். "ஏண்டா, ஒனக்கு எத்தனை தடவ சொன்னாலும் புரியாதா? இப்படி டென்ஷன் ஏத்துறியே?" என்று தாட் பூட்டென்று குதிக்க, எதிர்முனை டொக்! அடுத்த வினாடியே இன்னொருவர் பேசினார். "என்ன கிளாமர். போன்லே கமல் சாரு பேசினாராம். கண்டபடி ஏசுறீங்களாமே? சாரு ரொம்ப கோவத்திலே இருக்காரு. உடனே ஆபிசுக்கு வாங்க!" இது கமல்ஹாசனின் மேனேஜரோட குரல்.

இப்போது கிளாமரின் நெஞ்சுக்குள் ரயில்வே டிராக் சவுண்டு! போன் லயனில் கால் வரலாம். இப்படி தலையை சிலுப்பிகிட்டு 'லயன்' வரலாமா? அட, ரிப்போர்ட்டர் கமல்னு நினைச்சு கத்தினா, நிஜ கமலே வந்திட்டாரே. இப்போ என்ன பண்ணுறது? ஆபிசுக்கு ஓடினார். கடந்த பல மாதங்களாக போன் லைனில் ஒரு பாவி தன்னை வறு கடலையாக்குவதை விவரித்தார்.

கமல் அறிவாளியாச்சே? நடந்ததை கிரகித்துக் கொண்டவர், "உங்க மேல தப்பு இல்லே கிளாமர். உங்க மேல எனக்கு கோவமும் இல்லை"ன்னு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்து ஆறுதல் படுத்திட்டு, "அப்படியே போனை போட்டு அந்த கமலை வரச்சொல்லுங்களேன்"னாரு. அங்கிருந்தபடியே "கமல் சாரு உன்னை பார்க்கணுமாம். உடனே வா"ன்னாரு கிளாமர்.

அடுத்த சில நிமிஷங்களில் ஸ்பாட்டில் ஆஜர் ஆனார் கமலநாதன். அவரிடம், கமல்ஹாசன் ஒரு யோசனை சொன்னார். "இனிமே நீங்க கிளாமருக்கு போன் பண்ணும்போது மட்டுமாவது கமலநாதன்னு உங்க முழு பேரை சொல்லுங்க. ஆனா எப்பவுமே உங்க முழு பேரை சொன்னா எல்லாரையும் விட நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்"னாரு. அதுக்கு பிறகு நம்மாளு அப்படியே செய்யுறாருன்னு பொய் சொல்ல நான் தயாரா இல்லைப்பா!

Friday, April 24, 2009

பக்கத்தில் நடிகை, பாக்கெட்டில் சாமி!

"தம்பி, என்னென்னவோ எழுதிறீங்களாமே, இதையும்தான் எழுதுங்களேன்"னாரு 'அந்தகால' நிருபர் ஒருத்தர். சவசவன்னு எதையோ சொல்லப் போறாருன்னு நினைச்சு, காத அவருகிட்டேயும், கண்ணை வேற எடத்திலேயும் தவற விட்டுட்டு நின்னேன். பெருசு சொன்ன கதை...? சும்மா சொல்லக்கூடாது. இந்த மாதிரி கதை இருந்தா, இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன்னு அவரு பின்னாடியே போற அளவுக்கு ஜோக் பிஸ்கட்டை வழி நெடுக து£வி விட்டுட்டாரு மனுசன்.

பெரிய நடிகர் அவரு. வில்லன்னா அவருதான்னு சொல்ற அளவுக்கு! அதே நேரத்திலே ஒழுக்கசீலன். ஆனால் வாயை திறந்தா கொஞ்சம் 'ஏ'சகு பிசகாதான் பேசுவாரு. அவுட்டோர் படப்பிடிப்பு. சேரை போட்டுட்டு ஓரமா உட்காந்திருந்தாரு வில்லன். படத்தின் ஹீரோ யாரு தெரியுமா? அந்த காலத்திலே மட்டுமில்லே, இறந்த பிறகும் மக்களோட மனசில வாழ்ந்துகிட்டு இருக்கிற அழகன்தான் ஹீரோ.

அந்த படத்திற்கு வஞ்சனை இல்லாமல் இரண்டு ஹீரோயின்கள். இரண்டு பேரும் நம்ம வில்லன் நடிகரு பக்கத்திலே வந்து உட்கார்ந்தாங்க. அவங்க பார்க்கிற மாதிரி, பையிலே இருந்து ஏதோ ஒரு படத்தை எடுத்து கண்ணிலே ஒத்திக்கிட்டு திரும்ப பாக்கெட்லயே வச்சுகிட்டாரு வில்லன். இரண்டு பேருக்கும் ஆர்வம் தாங்கலே. "சார், அது என்னது?" என்று கேட்டாங்க. அவரு, "இது ரொம்ப புனிதமான படம். இதை பார்த்திட்டு எதையாவது வேண்டிகிட்டா உடனே நடந்திரும். எனக்கு முக்கியமான விஷயம் ஏதாவது நடக்கனும்னா இதை பார்த்து வணங்கிட்டு பாக்கெட்ல வச்சிருவேன். சரியா ஒரு மணி நேரத்துக்குள்ளே அந்த விஷயம் நடந்திருக்கும். ரொம்ப பயபக்தியா இதை வணங்கிட்டு வர்றேன். என்னுடைய பல வருஷ கடவுள் இது"ன்னு சொல்ல, ஆர்வம் தாங்கவில்லை இரண்டு பேருக்கும்.

"எங்களுக்கும் கொஞ்சம் காட்டுங்களேன்"னு ஒரே அடம். அவர்களின் கெஞ்சல் தாங்க முடியாம போனதால ஒரு கண்டிஷன் போட்டாரு வில்லன். "இதை பார்க்கணும்னா அதுக்கு சில முறைகள் இருக்கு. குளிச்சுட்டு சுத்த பத்தமா இருக்கணும். வேற கெட்ட விஷயங்களோ, தப்பு தண்டாவோ பண்ணியிருக்க கூடாது. 24 மணி நேரம் இதையெல்லாம் ஸ்ட்ரிக்டா ஃபாலோ பண்ணினா இந்த போட்டோவை காட்டுறேன். நீங்களும் கும்பிடுங்க. அருளை அள்ளுங்க. இன்னைக்கு நீங்க ஒழுக்கமா இருக்கறதை வச்சுதான் நாளைக்கு நான் இதை உங்களுக்கு காமிக்க முடியும்"னாரு. அட, இந்த அற்புதத்தை நம்மால் உடனே பார்க்க முடியலையேங்கிற வருத்தம் ரெண்டு பேருக்கும். ஆனாலும், நாளைக்காவது இதை பார்த்திடணும்ங்கிற வெறியோடும், பக்தியோடும் ஷ¨ட்டிங்கை முடிச்சுட்டு ரெண்டு பேரும் ரூமுக்கு வந்திட்டாங்க.

ரொம்ப பயபக்தியா இருந்தவங்களுக்கு கொஞ்சம் இருள் கவிழ்ந்ததும் முக்கியமான இடத்திலே இருந்து அழைப்பு. ஆனாலும், போகாமல் தட்டிக் கழித்தார்கள் இருவரும். அடிக்கடி வந்த அழைப்புகளுக்கு வேறு எதையோ காரணத்தை சொல்லிக் கொண்டே இருந்தாங்க. ஏன்னா, "இந்த விஷயத்தை யாரிடம் சொல்லக் கூடாது"ன்னும் சொல்லியிருந்தாரு வில்லன். அதனால் பக்தி காரியம்னு கூட சொல்ல முடியாம தத்தளிச்ச இரண்டு பேரும் எப்படியோ விடியிற வரைக்கும் சமாளிச்சாங்க.

காலையிலே எழுந்து பயபக்தியா குளிச்சாங்க. மேக்கப் போட்டுக் கொண்டு ஷ¨ட்டிங் ஸ்பாட்டுக்கு போயிட்டாங்க. வில்லன் நடிகரும் வந்திட்டாரு. ஷாட் பிரேக்லே ரொம்ப ஆவலா அவரு பக்கத்திலே சேரை இழுத்து போட்டுக் கொண்டு உட்கார்ந்தாங்க ரெண்டு பேரும். "காட்டுங்க" என்று கோரசாக கேட்க, வில்லன் கேட்டாரு. "நீங்க ரெண்டு பேரும் ரொம்ப கவனமா இருந்தீங்களா நேத்திக்கு?" உடனே அவங்க "ஆமாம் ஆமாம்"னு தலையாட்டினாங்க. "ஒன்னும் தப்பு தண்டா பண்ணலையே?" "இல்லையே"ன்னாங்க மறுபடியும் கோரசாக!

"சரி, ஓக்கே" என்றபடியே அவரு பாக்கெட்ல இருந்த அந்த போட்டோவை எடுத்து அவங்களிடம் காட்டினாரு. அந்த போட்டோவில் இருந்தது...? இரண்டு யானைகள் இனவிருத்திக்கு ட்ரை பண்ணிக் கொண்டிருந்த காட்சி. பச்சையா சொல்லனும்னா பஜனை! ஒரு கணம் திகைத்துப் போன ரெண்டு பேரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். "போங்க சார்... இப்பிடி தவிக்க விட்டுட்டீங்களே" என்று அந்த இடத்தை விட்டே ஓடினார்கள்.

கொஞ்ச நேரம் கழித்து ஹீரோவை அழைத்த வில்லன், "பார்த்தியா... நேத்து நீ கூப்பிட்டா அவங்க ரெண்டு பேரும் வர முடியாதபடி செய்யுறேன்னு சொன்னேன்ல. போட்டியிலே நான்தான் ஜெயிச்சேன். பணத்தை வை"ன்னு கேட்டு வாங்கிக் கொண்டார்.

அட, இவ்வளவு மேட்டரும் பந்தயத்துக்குதானா? அந்த காலத்திலே எப்படியெல்லாம் ஜோவியலா இருந்திருக்காங்க, ஆச்சர்யம்தான்!

Thursday, April 23, 2009

ஈழத்தில் போர் நிறுத்தம்? தாமரையின் அனல் பேச்சு!

ம்ஹ§ம், இன்னைக்கு நாம சிரிக்க போறதில்லே!

காரணம், இலங்கை பிரச்சனை. இயக்குனர் இமயம் பாரதிராஜா தலைமையிலே நடந்த உணர்ச்சி பூர்வமான ஆர்ப்பாட்டத்திற்கு போயிருந்தேன். ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்படும் கொடூர தாக்குதல்களை கண்டு தவிக்கும் மக்களின் ஆதங்கத்தையும், வேதனையையும், கோபத்தையும் அப்படியே தட்டி எழுப்பியது சிலரது பேச்சு. முக்கியமாக பாடலாசிரியர் தாமரையின் பேச்சு.

அவர் மேடைக்கு வரும்போது சிலர் உட்கார்ந்தவாறே வணக்கம் தெரிவிக்க, எழுந்து நின்று வணக்கம் சொன்னார் சத்யராஜ். இன்னைக்கு தாமரையின் பேச்சு பேரெழுச்சியை ஏற்படுத்தும்ங்கிறதை முன் கூட்டியே தெரிஞ்சு வச்சுருந்தாரோ என்னவோ?

மதியம் இரண்டு மணி இருக்கும். தாமரை பேசுவார்னு மேடையிலே அறிவித்தார்கள். "இன்றைக்கு நான் நிறைய பேசப் போறேன்" என்றபடியே மைக்கை பிடித்தார் தாமரை. பேச்சில் அனல் தெறித்தது. "ஏற்கனவே ஃபெப்சி மீட்டிங்கிலே நான் பேச வந்தேன். அப்போ என்னை பேசக் கூடாதுன்னு தடுத்திட்டாங்க. ஆனா, இப்போ என்னை தடுக்காதீங்க" என்று ஆரம்பித்தவர், பிடி பிடியென்று தமிழக தலைவர்களை பிடித்தார். இடையிலே "அப்படி பேச வேண்டாம்" என்று பாரதிராஜா இருக்கையை விட்டு எழுந்து வந்து தடுக்க, பார்வையாளர்கள் "தடுக்காதே, பேசட்டும்" என்று கூச்சலிட்டார்கள்.

"மத்தியிலே ஆளுற காங்கிரஸ் அரசு முதலாளியாகவும், தமிழகத்தை ஆளுற திமுக அரசு கூலி வாங்குகிற வேலைக்காரனாகவும் இருக்கு. உலக தமிழர்களோட தலைவர்னு சொல்லிகிறீங்க. உங்களால இந்த இனப்படுகொலையை தடுக்கும்படி மத்திய அரசை வற்புறுத்த முடியலேன்னா எதுக்கு பதவியிலே இருக்கீங்க? ராஜினாமா பண்ணிட்டு போக வேண்டியதுதானே? ஜெயலலிதா அரசு இருந்தா இப்படி நீங்க பேச முடியாதுன்னு சொல்றீங்க. ஜெ ஆட்சியிலேயும் பேசினா கைது பண்ணி உள்ளே போடுறாங்க. உங்க ஆட்சியிலேயும் கைது பண்ணி உள்ளே போடுறீங்க. திமுக வும், அதிமுகவும் இல்லேன்னா தனிஈழம் என்னைக்கோ அமைஞ்சிருக்கும்"

"தமிழன்ங்கிறது ஒரு இனம். மலையாளிங்கிறது ஒரு இனம். ஆனால், இந்தியன்ங்கிறது ஒரு இனம் இல்லையே? இதை சொன்னா இறையாண்மைக்கு எதிரா பேசியதா சொல்றீங்க? தேசிய பாதுகாப்பு சட்டத்திலே எங்க டைரக்டரை உள்ளே போட்டீங்க. ஆனா உயர்நீதிமன்றம் என்ன சொல்லுச்சு? உங்களால என்ன பண்ண முடிஞ்சுது?" இப்படி அடுக்கடுக்காக கேள்விகள் கேட்ட தாமரையை "பேசியது போதும்"னு மறுபடியும் இடை மறித்தார் பாரதிராஜா.

மீண்டும் பார்வையாளர்கள், "அவங்களை பேச விடுங்க" என்று கோஷம் போட்டார்கள். தொடர்ந்தார் தாமரை. "கலைஞர் சொல்றாரு... ஈழத்தந்தை செல்வா தந்தை பெரியாரை பார்த்து ஈழத்திலே நடக்கிற பிரச்சனை பற்றி சொன்னாராம். அப்போ பெரியார், 'ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்?'னாராம். 'பெரியாரே அப்படி சொன்னார்'னு ஒரு பதிலை சொல்றீங்களே, நாற்பது வருஷமா தமிழனோட நிலைமை அப்படியே இருக்குன்னு சொல்றதுக்கு நீங்க எதுக்கு தமிழின தலைவர்னு சொல்லிக்கணும்?" என்றார் ஆக்ரோஷமாக!

இந்த முறை வலுக்கட்டாயமாக அவரை அமர வைத்தார்கள் பாரதிராஜாவும், வீ.சேகரும். ஆற்றாமையும், சோகமும் தாக்க கவலையோடு அமர்ந்தார் தாமரை. மாலை ஆறரை மணிவரை நீடித்த கண்டன கூட்டத்தில், தனது பத்மஸ்ரீ விருதை திரும்ப மத்திய அரசிடமே திருப்பி கொடுப்பதாக அறிவித்தார் இயக்குனர் இமயம் பாரதிராஜா. 2004 ம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்ட விருது இது.

"இந்த விருதை வீட்டிலே மாட்டியிருக்கும்போது பார்க்கிறேன். ஏதோ சிரங்கை பார்ப்பது போல அருவருப்பாக இருக்கிறது. இதை து£க்கி எறியவா? அல்லது உடைக்கவா?" என்றார் பார்வையாளர்களை பார்த்து! நல்லவேளையாக அமீர் இடையில் நுழைந்து "இதை முறைப்படி மத்திய அரசிடம் ஒப்படைப்போம். உடைப்பது தவறு" என்று பார்வையாளர்களையும், பாரதிராஜாவையும் ஆசுவாசப்படுத்தினார்.

Wednesday, April 22, 2009

வேட்பாளர் கார்த்திக்கும், வேர்க்கடலை முட்டாயும்...

பிஷ்வாஷ்கிட்டேயிருந்து பிச்சுகிட்டு வந்ததிலிருந்தே கார்த்திக் ஒரு 'ஹாயான' அரசியல்வாதியாயிட்டாரு. அவரோட கட்சி இந்த தேர்தலில் போட்டியிடப் போவுதுன்னு அறிவிச்சு சில நாள் கழிச்சு, வேட்பாளர்களை பிரஸ்சுக்கு அறிமுகப்படுத்த வந்திருந்தாரு. ரொம்ப 'பிரஸ்' பண்ணி கேட்டுக் கொண்டதால, பத்தே பிரஸ்தான் வந்திருந்தாங்க. ஏன்னா, அவருக்கு கடந்த முப்பது வருசமா 'கேன்சலோபோஃபிபியா' இருக்கிறது பிரஸ்சுக்கு நல்லாவே தெரியும். அதனால தப்பிச்சோம்னு போனவங்க பாதி. கேட்டதை அப்பிடியே போயி ஆபிஸ்ல, ஒப்பிப்போம்னு வந்தவங்க மீதி.

அவரோட 'கேன்சலோபோஃபியா' பற்றி பேசுனோம்ல, வசனம் பேசிட்டு இருக்கும்போதே திடீர்னு வயித்தை பிடிச்சுகிட்டு, "ஹே, கொஞ்சம் ரெஸ்ட் வேணும்யா"னு சொல்லுவாரு. சரி, கொஞ்ச நேரம் ரூமுக்கு போயிட்டு வந்திருவாருன்னு யூனிட்டே வெயிட் பண்ணும். ஆனா மனுஷன் காரை எடுத்துகிட்டு கண்காணாத இடத்துக்கு போயிருவாரு. மறுபடியும் அவரு ஷ¨ட்டிங் வரணும்னா பச்ச புள்ளங்களுக்கு முட்டாயி காட்டுறா மாதிரி அவருக்கு வேறொன்னுத்த காட்டணும். (ஆங்... ஒன்னுமே தெரியாத மாதிரி, அது எந்த முட்டாயிம்பீங்களே?) இப்பல்லாம் கடலை முட்டாயி பழக்கம் இருக்க வாய்ப்பில்லேன்னாலும், 'கேன்சலோபோஃபியா' மட்டும் போகவே இல்லே அவரை விட்டு. ஷ¨ட்டிங் மாதிரியே கடைசி நேரத்திலே பொதுக்கூட்டத்தையும் கேன்சல் பண்ணுற அட்டகாசமெல்லாம் நம்ம கார்த்திக்குக்கு மட்டுமே சாத்தியம். அப்படி பிரஸ்மீட்டும் பலமுறை கேன்சல் ஆகியிருப்பதால பலருக்கு நம்பிக்கையே இல்லை. ஆனாலும், நன்னம்பிக்கை முனையிலே இருந்து வந்த தன்னம்பிக்கை திலகங்கள் ஒரு பத்து பேரு வந்திருந்தாங்க.

என்ன ஆச்சர்யம்? சொன்ன நேரத்துக்கு சரியா வந்திட்டாரு கார்த்திக். முன்னதாக "அண்ணன் வாழ்க"ன்னு கோஷம் போட்ட தொண்டர் ஒருத்தரை ஒருவிரல் காட்டி உஷ்ஷ¨ன்னு அடக்கினாரு. அப்படியே சிரிச்சுகிட்டே "ஹே, எங்க எல்லாரும்?"னாரு, ஏதோ எல்லாரும் டிபன் சாப்பிட போயிட்டது மாதிரி. வந்திருக்கிறதே அவ்ளோதான்னு யாரு சொல்றது? நல்லவேளை, சொல்லாமலே புரிஞ்சிகிட்டாரு போல. "பேட்டிய ஆரம்பிக்கலாமா?"ன்னாரு.

டிவி கேமிராமேன்கள் லைட்டை ஆன் பண்ணி கேமிராவை ஓடவிட்டாங்க. பெரிசா குறிப்பெடுக்க தயாராக பேனாவை திறந்து வச்சிட்டாங்க நிருபருங்க. ஆனா, படார்னு வாய தொறந்து படீர்னு பேச வேண்டிய தலைவரு என்ன சொல்ல வந்தோம்கிறதையே மறந்திட்டு ரொம்ப நேரமா யோசிச்சிட்டு இருந்தாரு. வந்திருந்த ஒன்னு ரெண்டு தொண்டருங்க அவருக்கு பின்னாடி நின்னுகிட்டு இருந்தது வசதியா போச்சு. (அவங்க நின்னது டிவியிலே தெரிவோம்னுதான்) ஒருத்தரு குனிஞ்சு, "வேட்பாளர் அறிவிப்பு"ன்னு எடுத்துக் கொடுக்க, "ஆங்... வேட்பாளர் ஹே, அறிவிக்கனுமில்லே... அதான்... எப்பிடி...?" என்றார் சிந்தனைச் செல்வனைப்போல.

"உங்களுக்கெல்லாம் நல்லா அறிமுகமான ஒருத்தரைதான் முதல்ல அறிவிக்க போறேன். அவரு கடந்த 29 வருசமா ஒங்களுக்கு தெரிஞ்சவருதான்"னாரு புதிர் போடுற மாதிரி. நான்தான் அதுன்னு நேரா சொல்லிச் தொலைச்சிருக்கலாம். "விருதுநகர்லே போட்டியிடப் போறவரு..." சற்று இடைவெளி விட்டு, "எம்.கார்த்திக்" என்றார்! கொஞ்சமே கொஞ்சம் புன்னகையோடு அவர் சொல்லி முடிக்க, ஒரு டிவி நிருபர், "யாரு சார் அவரு? இங்க வந்திருக்காரா? ஒரு பைட் எடுக்கணும்" என்றார் அவரு சொன்ன கார்த்திக் இவருதான்ங்கிற உண்மை தெரியாமலே!

இந்த பேரதிர்ச்சியை தாங்கி கொள்ளவே முடியவில்லை கார்த்திக்கால். "சார், ஹே... நீங்க எந்த டிவி?"ன்னாரு அடக்கவே முடியாமல். அந்த கலந்துரையாடல் முடிவில் "நான்தான் அந்த எம்.கார்த்திக்"னு அவரே விளக்க வேண்டியதா போச்சு!

"இன்னொரு வேட்பாளரு..."ன்னு மறுபடியும் கார்த்திக் யோசனைக்கு போக, "பார்வதி"ன்னு பின்னாடி ஒருத்தர் எடுத்துக் கொடுத்தாரு. "ஆங்... பார்வதி. அவங்க.. ஹே... இப்போ இங்க இல்லை. வந்திட்டு பிளைட் பிடிச்சு... அவங்க... அங்கேயிருந்து"ன்னு சொல்லி முடிப்பதற்குள், "வந்திட்டு இருக்காங்களா?"ன்னாரு நிருபர் ஒருத்தரு. "ஆமாம், ஆமாம். வேணும்னா இவரை அவங்களா நினைச்சுக்கோங்களேன். ஆனா இவரு பேண்ட் சர்ட் போட்டிருக்காரு. அவங்க புடவை கட்டியிருப்பாங்க"ன்னு சொல்லி கடகடவென்று அவரே சிரிக்க, அந்த பேண்ட் ஆசாமி, பெரும் பேறு அடைந்தவர் மாதிரி ஒரு லுக் விட்டார் எங்களை!

சும்மாயில்லாத நிருபர் பரத், பக்கத்திலே உட்கார்ந்து பீதி கிளப்புகிற ஜோக்குகளை அள்ளிவிட, நான் வயிற்றை இறுக்கி பிடிச்சுட்டு உட்கார்ந்திருந்தேன். என்ன நினைத்தாரோ, திடீர்னு எழுந்த பரத், "நீங்க விருது நகர்லே நிக்கறதால அந்த தொகுதிக்கு நட்சத்திர அந்தஸ்து வந்திருச்சு" என்றார். இவ்வளவு நேரம் இந்த குளுக்கோஸ் பாக்கெட்டுக்காகவே காத்திருந்தவர் போல், பாய்ந்து பரத்தின் கைகளை பிடித்துக் கொண்டார் கார்த்திக். "ஹே... அப்பிடியா? நீங்க அவசியம் எலக்ஷன் கவரேஜ் பண்ண விருதுநகர் வரணும். என்ன ஹே, எப்பிடி... நம்ம கூடவே வந்திடுறீங்களா"னு விடாமல் இறுக்க, "மாட்னாண்டா மாப்ளே"ன்னு வெளியே பாய்ஞ்சேன் நான். அதுக்கு பிறகு பரத் 'கால்' பண்ணி, "ஒரே ஒரு கேள்வி கேட்டேன். அதுக்கு எவ்ளோ பெரிய தண்டனை?"ன்னு சொல்லிட்டு கெக்கக்கேன்னு சிரிச்சாரு.

பரத்து... மறுபடியும் போவே அந்தப் பக்கம்?

பின் குறிப்பு - நடுவாப்ல ஸோல்டர் பேக்கோட நிக்குற கண்ணாடிதான் நம்ம பரத்!

Monday, April 20, 2009

அன்புக்கும் உண்டு அவிச்ச முட்டை!

'அழுக்கு போக சோப்பு, சோப்பு டப்பா அழுக்கு!' இது அன்பு வேலாயுதத்தோட கவிதை. நாங்கள்ளாம் "அன்பேய்..."ம்போம் அவரை!

"கொரு... (குரு என்பதாக கொள்க) செல நேரம் ட்ரெயின் வீட்டிலேந்து வந்திட்டு இருக்கா, இல்லே நாமதான் வீட்டுக்கு போயிட்டு இருக்கோமான்னே தெரியலையே கொரு..."ம்பாரு. சென்னையிலிருந்து சுமார் 200 கி.மீ து£ரத்திலிருந்து தினமும் இங்க வந்து வேலை பார்த்திட்டு போன மகானுபவசாலி இந்த அன்பு. "நீங்க திருவள்ளுவர் இல்லே, ஆனா தங்கச்சி வாசுகியாதான் இருக்கணும்" என்பேன் நான். நாலு மணிக்கெல்லாம் அவரது மனைவி எழுந்து, சாம்பார், ரசம், பொறியல், கூட்டு, வற்றல், ஊறுகாய், மற்றும் தயிருடன்தான் அனுப்புவார் இவரை. இவற்றுடன், மறக்காமல் ஒரு அவிச்ச முட்டையும் இருக்கும் அன்புவின் டிபன் கேரியரில்! "அன்பேய்... எப்பிடிங்க இதெல்லாம்?"னு கேட்காதவங்க ட்ரெயின்லே இவருகிட்ட பிச்சையெடுக்கிற சமானியர்கள் மட்டும்தான்! மற்றபடி எல்லாரும்.

கொஞ்சம் கூட சிரிக்காம தீக்குச்சிய கிழிச்சு சீட்டுக்கு கீழே வச்சுட்டு, நம்பளையே கவனிக்கிற குசும்பன் இந்த மனுஷன். ஒருமுறை டிஆர் கேட்டார். "ஏன்யா, நம்ம தலையங்கத்தை பற்றி என்னய்யா பேசிக்கிறாங்க வெளியிலே? ஏன்னா நான் உங்களை மாதிரி டீக்கடையிலோ, பஸ் ஸ்டான்டிலோ நின்னு அவங்க பேசிக்கறதை கேட்க முடியாதில்லையா? அதான் கேட்டேன்"னாரு.

இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு தகவல். இதழில், தலையங்கம் முடிகிற இடத்தில், இன் பிரிண்ட் என்று சொல்லப்படுகிற அச்சக விபரங்கள், மற்றும் ஆசிரியர் குழு விபரங்களை அச்சிட்டு வந்தார்கள். வாரம் தவறாமல் இது அந்த இடத்திலேயே வந்து கொண்டிருந்தது.

அன்பு சொன்னாரு. "அண்ணே, எல்லாம் பிரமாதம்னு சொல்றாங்க. ஆனா, தலையங்கத்தை முடிக்கும்போது மட்டும் ஏன் ஒரே மாதிரியா முடிக்கிறாருன்னு பேசிங்கிறாங்கண்ணா" என்றார் சிரிக்காமல்! அவரும் அன்பு என்ன சொல்றாருன்னு புரியாமலேயே, "இல்லீயே... நாம எங்கய்யா ஒரே மாதிரி முடிக்கிறோம்"னாரு. "இல்லேண்ணே, எல்லா தலையங்கத்தையும் முடிக்கும்போதும், கதைகளில் வரும் சம்பவங்கள், பெயர்கள் யாவும் கற்பனையே. அச்சிட்டு வெளியிடுபவர் டி.ராஜேந்தர்னே வருதே, அதான் ஏன்னு கேட்கிறாங்க?" என்று சொல்ல, விழுந்து சிரித்தாரே பார்க்கலாம் டிஆர். "யோவ், பயங்கர குசும்பன்யா நீ" ன்னாரு சிரிச்சுக்கிட்டே!

அப்போது டாக்டர்களின் பேட்டிகள் அன்புவின் பொறுப்பில்தான். தினமும் சென்னைக்கு 200 கி.மீ து£ரத்திலிருந்து வருவதால், மருத்துவர்களை வாரா வாரம் சந்தித்து எழுதுவதில் கொஞ்சம் சிரமம் இருந்தது அன்புவுக்கு. ஆனாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சொன்ன வேலையை மெனக்கட்டு செய்து வந்தார். "கொரு, இந்த வாரத்துக்கு ஒருத்தரும் சிக்கலையே? ஒரு ஆளுகிட்டே பேசினேன். ஏழு மணிக்கு வாங்கிறாரு. அந்த நேரத்திலே நான் போற ரயிலு எந்த ஸ்டேஷன்லே நிக்குதோ, யாரு கண்டா?" என்று அலுத்துக் கொண்டார். பேசிக்கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த போதுதான் அன்புவின் கண்களில் அந்த போர்டு சிக்கியது.

பெரிய திருமண மண்டபத்தின் வாசலில், 'மருத்துவர்கள் மாநாடு' என்று பெரிய பேனர் தொங்கிக் கொண்டிருந்தது. வாசலில் தட புடலான அலங்காரங்கள். "கொரு... இன்னும் கொஞ்ச நாளைக்கு அலைய வேண்டிய அவசியமே இல்ல. மொத்த டாக்டருங்களையும் இங்கேயே புடிக்கிறோம். வாரம் ஒரு கட்டுரை"ன்னு உற்சாகமா வண்டிய விட்டு குதித்தே விட்டார் அன்பு.

நான் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே போவதற்குள், போன வேகத்தில் கெக்கேக்கேன்னு சிரிச்சுகிட்டே ஓடிவந்தாரு! "கொரு... கொரேய்... ஏமாந்துட்டோம் கொரேய்"னாரு, கண்களில் இரண்டு சொட்டு கண்ணீர் வெளியே வர! நான் தயக்கத்தோடு உள்ளே நோக்க, அது முடி திருத்துபகிற சகோதரர்களின் மாநாடு. பாரம்பரியமாக அவர்கள் மருத்துவர்கள் என்பதால், வாசலில் அப்படி ஒரு போர்டு. ஆனாலும் விடாப்பிடியாக உள்ளே நுழைந்தோம் இருவரும். அங்குதான் அன்புவுக்கு கிடைத்தது நெகிழ்ச்சியான அந்த சந்திப்பு. அவருடைய பால்ய கால நண்பர் ஒருவர் அந்த மாநாட்டில் இருந்தார். வெகு காலம் கழித்து இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். சென்னையில் மிகப்பெரிய சலு£ன் ஒன்றை வைத்து நடத்துகிறார் அவர். கட்டிப்பிடித்துக் கொண்டு ஆனந்த கண்ணீர் வடித்தார்கள் இருவரும்.

ஊரிலேயே செட்டில் ஆகிவிட்டார் அன்பு. ஆனால், இப்போதும் முடி திருத்த, திருத்தணியில் இருந்து சென்னைக்குதான் வருகிறார். வேறொன்றுமில்லை, அதற்கு காரணம் வார்த்தைகளில் அடங்காத ஒரு உணர்வு இருக்கிறதே... அதுதான், அன்பு!

Sunday, April 19, 2009

த்ரிஷாவும், சில கெட்டவார்த்தைகளும்...

'குப்புற கெடக்குது வீண, குனிஞ்சு பாருய்யா கேன'ன்னு யாரோ உசுப்பி விட்டுருக்கணும். இல்லேன்னா, சாதாரண 'ரிச் கேர்ள்' ஆக இருந்த த்ரிஷா, ரசிகர்களின் 'ரிசர்ச்' கேர்ள் ஆக மாறுவாரா? மௌனம் பேசியதே படத்தில் த்ரிஷாவை பார்த்தப்போ, விளம்பரத்தில் வந்த இந்த ஹார்லிக்ஸ் அம்மா, தமிழ்சினிமாவின் ஊட்டச்சத்தாக மாறுவார்னு நினைக்கவே இல்லே. விமர்சனம் எழுதறப்போ, பேனா முனையை 'நல்லா அழுத்தி' த்ரிஷாவுக்கு வலிக்கிற மாதிரி எழுதி தொலைச்சுட்டேன். தமிழை பொறுத்தவரைக்கும் அவர்தான் சாலமன் பாப்பியாச்சே? அதனால், (நான் நினைச்சா மாதிரியே) அவரு அதை படிக்கலே! ஆனா அமீர் படிச்சிட்டாரு. தினமும் ஒரு தடவையாவது போன் அடிக்கிற முத்துராமலிங்கம், நான் போன் அடிச்சா கூட, "ம்... ம்ஹ§ம்..."னு ஓரெழுத்திலேயே பேசிட்டு இருந்தாரு. ஏன்னா, இவரும் அமீரும் திக் பிரண்ட்ஸ். விஷயம் புரிஞ்சுது எனக்கு. "படத்தை நல்லா எழுதிட்டேன். த்ரிஷாவ எழுதுனா அமீருக்கு ஏன் கோவம் வரணும்"னேன் மு.ராவிடம்.

"அதில்லே பிரதர், படம் ரிலீஸ் ஆனதும் வர்ற முதல் விமர்சனம். என்னா எழுதியிருக்காங்கன்னு ஆவலா இன்டர்நெட்டை ஓப்பன் பண்ணியிருக்கார். பயங்கர அப்செட்"டுன்னார் மு.ரா! படத்தோட தயாரிப்பாளர் ரகு, அமெரிக்கவாசிங்கிறதால அவரும் தமிழ்.சினிமா.காம் பார்த்திட்டு அமீரிடம் சொல்ல, இரட்டை வருத்தம் டைரக்டருக்கு! அப்படியே வருஷம் நிமிஷமா ஒடிருச்சு.

ராம் ரிலீசுக்கு பின்னே பருத்தி வீரனுக்காக சூர்யாவிடம் கதை சொல்ல நேரம் கேட்டாராம் அமீர். நான் பெரிய பேனருக்குதான் படம் பண்ணுற ஐடியாவில் இருக்கேன்னு அவரு சொல்ல, ஸ்ரீகாந்திடம் வந்தார். அதுவரைக்கும் ராம் பார்த்திருக்கவில்லை ஸ்ரீ. படத்தை காட்டவும் ரெடியாக இருந்தார் அமீர். பிரசாத் லேப் தியேட்டர். ஸ்ரீகாந்த் படம் பார்த்துக் கொண்டிருக்க, நாங்க வெளியே நின்றிருந்தோம். இவரு அந்தணன்னு மு.ரா நினைவுபடுத்த சரக்கென்று ஃபிளாஷ்பேக் அடிச்சார் அமீர். "த்ரிஷாவ பற்றி அப்பிடி எழுதினீங்களே, இன்னைக்கு அவங்க லெவல் தெரியுமா?"ன்னாரு பழைய கோபம் முகத்தில் கொப்பளிக்க!

இடையிலேயே த்ரிஷாவ நான் அடிக்கடி சந்திக்க வேண்டியிருந்துச்சு. 'மனசெல்லாம்' ஷ§ட்டிங் ஸ்பாட்லேதான். நான் ஸ்ரீ யை பார்க்க போவேன். மெல்லிசா ஒரு புன்னகையை அனுப்பிவிட்டு புத்தகம் வாசிச்சுட்டு இருப்பாரு த்ரிஷா. (அவரு படிச்ச படிப்புக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்செல்லாம் கூட பாஸ் பண்ணியிருக்கலாம். எந்நேரமும் புத்தகமும் பொய்யுமாவே இருப்பாரு ஷ¨ட்டிங் ஸ்பாட்ல) இவரும் ஸ்ரீ யும் ஏற்கனவே பிரண்ட்ஸ்சுங்கறதால, என்னையும் வச்சுகிட்டு ஸ்ரீ அடிக்கிற கமெண்ட்டுக்கு த்ரிஷாவ தவிர யாரா இருந்தாலும், பத்ரகாளி டான்ஸ் ஆடியிருப்பாங்க. ஆனா, த்ரிஷாவின் பேலன்ஸ் ஷீட்டில், வட்டியும், நட்டமும் சிரிப்பை தவிர வேறில்லை.

'த்ரிஷாவும் சில கெட்ட வார்த்தைகளும்'னு தலைப்பை போட்டுட்டு இப்படி மொக்கை போடுறீயேன்னு நீங்க மூச்சு வாங்க, என்னை காய்ச்ச ரெடியாவறது கேக்குது ஃபிரண்ட்ஸ். ...ந்தா வந்திட்டேன்... (தொடர்ந்து படிக்கறதுக்கு முன்னால பதினெட்டு வயசுக்கு கீழே இருப்பவங்க இந்த பக்கத்தை குளோஸ் பண்ணிட்டா, உங்களை கெடுத்தேங்கிற பாவத்திலேர்ந்து விடுதலை கிடைக்கும்)

ஒரு இளம் ஹீரோவுடன் பேசிட்டு இருந்தேன். த்ரிஷாவ பற்றியும் பேச்சு வந்திச்சு. "ரொம்ப நல்ல பொண்ணுங்க. வெகுளி"ன்னாரு. எப்படியாம்? இவரு ஒருநாள் ஜென்ஸ் பாத்ரூம்லே ஒன்னாம் நம்பர் போயிட்டு இருக்கும்போது, ரூம் மாத்தி உள்ளே வந்திருச்சாம் பொண்ணு. பதறிப் போய் இவரு ஜிப்பை மூட, "யேய்... ஒன்னுத பார்த்திட்டேனே"ன்னு சிரிச்சிட்டே ஓடுச்சாம் வெளியிலே! அப்படி ஒரு வெகுளின்னாரு. (இதுக்கு பேரு வெகுளியாம்ல?)

படம் பெயர் நினைவில் இல்லை. இப்போ இருக்கிற அளவுக்கு உச்சாணி கொம்பிலே இல்லை த்ரிஷா. ஷ§ட்டிங் ஸ்பாட்டில் பிரஸ்மீட். மரத்தடியிலே டீச்சரை சுத்தி பசங்க உட்கார்ந்து பாடம் கேட்குமே? அப்படி உட்கார்ந்திருந்தோம் த்ரிஷாவ சுத்தி. அதிகம் பேரு இல்லே. வெறும் பத்தே பேர் மட்டும்தான். நிருபர் ஜெயச்சந்திரனும் த்ரிஷாவும் பேசிகிட்டாங்க. ஒரு வெகுளி பொண்ணுகிட்டே எப்பிடியெல்லாம் பேசுறாங்கப்பா. சேச்சே...

அப்புறம் சொல்லுங்க த்ரிஷா, ஸாங்குக்கு அவுட்டோர் போனீங்களே எப்படியிருந்திச்சு?

அதையேன் கேட்கிறீங்க? ஃபாரஸ்ட் ஏரியாங்கறதால ஒரே அட்டை பூச்சி தொந்தரவு. ரொம்ப கஷ்டமாயிருச்சு.

ஐயய்யோ, அட்டை கடிச்சிருச்சா என்ன?

கடிக்கலே, கடிக்கறதுக்கு முன்னாடியே நசுக்கிட்டேன்னு சொன்னவரு அட்டை ஏறுன விஷயத்தை விவரிக்க ஆரம்பிச்சாரு. நான் பாட்டுக்கு புக் படிச்சிட்டே உட்கார்ந்திருந்தேன். திடீர்னு ஊர்ற மாதிரி இருந்திச்சு. (இடையிலே குறுக்கிட்ட ஜெயச்சந்திரன்) எந்த இடத்திலேன்னாரு. இப்போ த்ரிஷா கை காட்டிய இடம், 'கிட்டதட்ட' அபாயகரமானது. ஐயய்யோன்னு தவிச்ச ஜெ.ச "ம்ம்... அப்புறம்"னாரு நாக்கை சப்புக் கொட்டிகிட்டே!

என்னடா ஊர்ற மாதிரி இருக்கேன்னு கையை வச்சு பார்த்தேன். ஏதோ நீளமா கொஞ்சம் உருண்டையா தென்பட்டுச்சு. (இந்த இடத்தில் மறுபடியும் குறுக்கிட்ட ஜெ.ச "இவ்வளவு நீளம் இருக்குமா?"ன்னு விரலை நீட்டி ஒரு அளவை காட்டினார்) "ம்ஹ§ம் இன்னும் கொஞ்சம் பெரிசு. இவ்வளவு பெரிசு இருக்கும்"னு விரலை நீட்டி த்ரிஷா ஒரு அளவை காட்டினார். "பயங்கர கருப்பா இருந்திருக்குமேன்"னாரு ஜெ.ச. "நல்லவேளை, தொட்டு பார்த்ததோடு சரி. அது எப்படியிருக்கும்னு பார்க்கலையே"ன்னாரு த்ரிஷா. நாங்களெல்லாம் பேட்டி போற ரூட்டே சரியில்லையேங்கிற பயத்தோட கவனிக்க ஆரம்பித்தோம். ஆனாலும் ஒருத்தராவது இடையிலே குறுக்கிடனுமே? பயங்கர ஆர்வம் எல்லாருக்கும்.

"அப்புறம் உருண்டையா இருந்த அதை பிடிச்சு வெளியே விட்டுட்டீங்களா?"ன்னாரு ஜெ.ச. "இல்லையில்லே, அதை கையால தொடவே கொஞ்சம் அசூசையா இருந்திச்சு. அதனால் ஸ்கர்ட்டுக்கு உள்ளேயே வச்சு நசுக்கிட்டேன்"னாரு த்ரிஷா.

"ஐயய்யோ, ஸ்கர்ட்டெல்லாம் ரத்தமாயிருக்குமே?" இவரு கவலை இது. "ஆமாம், அப்படியே எழுந்து ரூமுக்கு போயிட்டேன். அப்புறம் வேற ஸ்கர்ட் கொடுத்தாங்க"ன்னு அந்த எபிசோடுக்கு முற்றுப்புள்ளி வைச்சாரு த்ரிஷா.

இந்த உரையாடலின்போது எந்த இடத்திலும் அவரு சிரிக்கவோ, அல்லது குறுகுறுக்கவோ இல்லை. ஒருவேளை அந்த ஹீரோ சொன்ன மாதிரி, த்ரிஷா ஒரு வெகுளி பொண்ணுதானோ?

அன்புச்செல்வன், பாலா, வண்ணத்துப் பூச்சியார், ஜோ, ராஜ், விஜயசாரதி உள்ளிட்ட பின்னு£ட்ட சமூகத்திற்கு, த்ரிஷா மேட்டருக்கு ஞாயிற்று கிழமை வரைக்கும் காத்திருக்க சொன்னேனே... திருப்திதானே?

Friday, April 17, 2009

அர்த்த ராத்திரியில் அல்டிமேட் ஸ்டார்...


கடைவாயிலே தள்ளி, 'தொட' கறிய ருசிக்கிற வரைக்கும் கூட நெனச்சேன், இந்த சந்திப்பு நமக்கு நிறைய சங்கதியை தரும்னு. ஆனா, ஏகன் மாதிரியே 'போங்கடிச்சிட்டாரு' அந்த ஏகனோட ஃபிரண்டு! விக்ரமாதித்யன் வேதாளத்துக்கு கதை சொன்ன மாதிரி, ஓரம் எது? உட்புறம் எதுன்னே புரியாம ஒரு விஷயத்தை சொல்ல ஆரம்பிச்சிட்டேன்ல, ஸாரி பிரண்ட்ஸ். இது அல்டிமேட் ஸ்டார் பற்றிய ஒரு அல்டிமேட்டான விஷயம்!

ரொம்ப நாளாவே அஜீத்தை பற்றி ஒரு புத்தகம் எழுதனும்னு ஆச எனக்கு. அவரிடம் கேட்டா, "வேணாம் பாஸ். நான் அவ்வளவு பெரிய ஆளு இல்லே(?)ம்"பாரு. அதனால அவருக்கு நெருக்கமான ஆளுங்களை பிடிச்சு விஷயத்தை கறந்திரலாம்னு ஐடியா. இந்த பதிவு முழுக்க முழுக்க சினிமாவுக்கு அப்பாற்பட்டதா இருக்கணும்னு நினைச்சதாலே, அவரோட மேனேஜர் சுரேஷ் சந்திரா, பிஆர்ஓ வி.கே.சுந்தர் ரெண்டு பேரையும் விட்டுட்டு மூணாவதா ஒரு ஆளை பிடிச்சேன். பிரதாப்!

அஜீத் நாயர்னா, பிரதாப் டீக்கடை! அஜீத் ரகசியான்னா, பிரதாப் பிட்டு துணி! இப்படி ரெண்டு பேரோட நெருக்கம், ரொம்ப சுருக்கமானது. பிரதாப்பை நேரடியா மீட் பண்ணிடலாம். ஆனா மனுசன் பேசணுமே? அந்த நேரத்திலேதான் செந்தில் சொன்னாரு. "ஏங்க, அவனும் நானும் ஒன்னா படிச்சவன்ய்ங்க தெரியுமா? வாங்க, நான் கூட்டிட்டு போறேன்..." சைட் அடிக்க போன பிகர், சந்துக்குள்ளே சிக்குனா எப்படியிருக்குமோ, அப்பிடியிருந்துச்சு எனக்கு!

சாப்டுகிட்டே பேசலாம்னாரு பிரதாப். வந்தது சிக்கன் பிரியாணி. கடைவாயிலே தள்ளி, 'தொட' கறிய ருசிக்கிற வரைக்கும் கூட நெனச்சேன், இந்த சந்திப்பு நமக்கு நிறைய சங்கதியை தரும்னு.

"பிரதாப், ஒன்னுமில்லே. அஜீத் சார பற்றி ஒரு புத்தகம் எழுதலாம்னு. அவரை பற்றி நிறைய விஷயங்களை, ஜனங்களுக்கு தெரியாத இன்னொரு ஏரியாவ சொல்லணும். மொதல்ல அவரு எப்படிப்பட்ட டைப்? பொதுவா சினிமா ஹீரோங்க வெளியே நடிப்பாங்க. உள்ளே பார்த்தா வேற மாதிரி இருப்பாங்க. சொல்லுங்க"ன்னேன்.

"அவர பத்தி என்னத்த சொல்றது. அவரு இதெல்லாம் லைக் பண்ண மாட்டாரே? அவரு உண்டு அவரு வேல உண்டுன்னு இருப்பாரு"

அப்புறம்...?

"அப்புறம் அவருக்கு இதெல்லாம் பிடிக்காதே, ம்ம்ம்... வேற விஷயங்களுக்கு போக மாட்டாரு. ஷ§ட்டிங் முடிஞ்சா வீட்டுக்கு வந்திருவாரு. அப்புறம்ம்ம்ம்ம்ம்ம்... ம் என்னத்தை சொல்றது? அவருக்கு இதெல்லாம் பிடிக்காதே" இதை பிரதாப் சொல்லி முடிப்பதற்குள் நான் பாதி பிளேட் பிரியாணியை காலி பண்ணியிருந்தேன். மனுஷன்கிட்டே ஒன்னுமே பேராது போலிருக்கேன்னு நினைச்சுகிட்டே, அவருக்கு ஏராளமான ரசிகருங்க இருக்காங்க. அவங்களோட அன்பையும் வெறித்தனமான காதலையும் வேற மாதிரி யூஸ் பண்ற ஐடியா இருக்கா தலைவருக்கு? "வேற மாரின்னா...?" அதாங்க, அரசியல் அப்பிடி இப்பிடின்னு... "அப்பிடியா, இது பத்தி நான் என்னத்தை சொல்றது? அவரு மனசிலே... இப்ப எதுவும்... டேய், செந்திலு. சாரு என்னடா என்னென்னவோ கேக்குறாரு?" ஒரே மூச்சில் ஒரு பாட்டில் ஐஸ் வாட்டரை காலி பண்ணியது பார்ட்டி!

"சரி, விடுங்க. உங்களுக்கே நான் எழுதற மாதிரி ஏதாவது தோணும் இல்லையா? அத சொல்லுங்க போதும்"னேன். இப்போ கொஞ்சம் உயிர் வந்திச்சு பிரதாப்புக்கு. "இல்லைங்க, அவருக்கு? எதுக்கு சொல்றேன்னா? அது வந்து"ன்னு ஆரம்பிச்சவரு, எழுத்துக்கூட்டி இன்சால்மென்ட்லே சொன்னதை, ஒரே மூச்சில் எழுதிடறேன். நிஜமாகவே அல்டிமேட் அல்டிமேட்தான்!

"அஜீத் சார் பென்ஸ் காரே வச்சிருந்தாலும், என் கார்லதான் வர ஆசைப்படுவார். (டாடா இன்டிகாம்) ஏன்னா, என் கார்ல டேப் இல்லை. அத பிரிச்சு போட சொன்னதே அவருதான். கார்லே போகும் போது அமைதியா போகணும். அதுதான் பிடிக்கும் அவருக்கு. அது மட்டுமில்லே, காரை நான் ஓட்ட ஜன்னல் வழியா இந்த ஊரு உலகத்தை, கடைத் தெருவை ஒரு குழந்தை மாதிரி ரசிச்சிட்டு வருவார். அப்படி ஒருமுறை ராத்திரி பதினொரு மணி இருக்கும். கிளம்பிட்டோம். ஈசிஆர்ல இருக்கிற அவரு வீட்டுல இருந்து பாண்டி பஜார் நோக்கி வந்திட்டு இருந்தோம். அன்னிக்கு பார்த்து செம ஜாலி மூடு அவருக்கு. நள்ளிரவு பனிரெண்டு தாண்டிருச்சு. அப்படியே வள்ளுவர் கோட்டம் வழியா பீச் ரோடை புடிச்சு வீட்டுக்கு போயிரலாமான்னாரு. சரின்னு சொல்லி வண்டியை கண்ணதாசன் சிலைகிட்டே திருப்பினேன்... வண்டி ஆஃப்!"

"சாவியை திருப்பி திருப்பி போட்டாலும், ஒரு இன்ஞ் நகலே வண்டி. பெட்ரோல் இருக்கான்னு கூட பார்க்காம வண்டியை கிளப்பியிருக்கேன். இப்போ என்னா பண்றது? "வண்டியிலேயே இருக்கீங்களா, போய் ஏதாவது காலி கேன்லே பெட்ரோல் வாங்கிட்டு வந்திர்றேன்"னு கேட்க, "அட, விட்றா. இப்போ பாரு"ன்னு காரிலேர்ந்து கீழே இறங்குனாரு. ஸ்டியரிங்கை புடின்னு சொல்லிட்டு அப்படியே வண்டிய தள்ள ஆரம்பிச்சாரு. பதறி போன நான், "அட இதென்ன வேண்டாத வேலை. நான் தள்றேன். நீங்க ஸ்டியரிங்கை புடிங்க"ன்னேன். "அட விட்றா. இப்படி வண்டிய தள்ளி ரொம்ப நாளாச்சு"ன்னவரு, அங்கிருந்து வாணி மஹால் வரைக்கும் தள்ளிகிட்டே வந்தாரு. (சுமார் அரை கி.மீ) நல்லவேளை, அவரு குனிஞ்சுகிட்டே வண்டிய தள்ளியதாலே கிராஸ் பண்ணி முன்னாடி போன யாரும் கண்டுக்கலே"

"வீட்லே வந்து போட்டு குடுத்திருவாரோன்னு பயம். ஏன்னா, அவர போயி வண்டிய தள்ள விட்டியான்னு எனக்குதானே டோஸ் கொடுப்பாங்க மேடம்? சொல்லவே இல்லை அவரு. இப்போ நீங்க எழுதி, "ஆமா... புக் எப்போ வருது?"ன்னாரு பிரதாப்!

"இது மாதிரி இன்னும் நிறைய சொல்லுங்க. அப்புறம் எல்லாத்தையும் சேர்த்து ஒன்னா போடலாம்"னேன். "அப்பிடியா... நான் என்னத்தை சொல்றது?"ன்னு வேதாளம் முருங்கை மரத்தை பார்க்க, "யோசிச்சு வைங்க. வர்றேன்"னு கிளம்பினேன். ஆறு மாசம் விடாம அலைஞ்சா, தல பற்றி ஒரு புக் தேறும்னு நினைக்கிறேன்.

தேறுங்ம்கிறீங்க...?

Thursday, April 16, 2009

இன்டர்காமில் ஒரு பெண் குரல்...

பெரிய ஜோதிட சாம்ராட்டுன்னு நினைப்பு உலகநாதனுக்கு! ஏதாவது கேட்டால், அவரது காதுக்குள் இறங்கி இரண்டு முறை டொக் டொக்குன்னு தட்டணும். ஆங்... என்று விழித்துக் கொண்டு, என்னா கேட்டீங்க? என்பார் கொட்டாவிக்கும் கோவத்துக்கும் நடுவாந்திரமாக வாயை வைத்துக் கொண்டு. இத்தனைக்கும் வாரா வாரம் வரும் ராசி பலனில் 'கணித்தவர்- உலகநாதன்' என்று எங்காவது அச்சிட்டிருக்க வேண்டுமே? ம்ஹ§ம்... பேர் வராமல் எழுதும்போதே இத்தனை மிதப்பு.

மண்டையில் முக்கால்வாசி ஸ்ரீபெரும்புது£ர் மாதிரியே திடலாக கிடக்கும் அவருக்கு. நாமக்கல் கோழிமுட்டையை நாலா சுருக்கி நெத்திக்கு கீழே ஒட்ட வச்சா அவரோட கண்ணு! எல்லா விரல்களையும் பிரித்து வைத்துக் கொண்டு எந்நேரமும் கணக்கு போட்டுக் கொண்டிருப்பார். "டேய், ஒலகநாதா.... குருவோட அஞ்சாம் பார்வை இன்னைக்கு எங்கடா விழுது?"ன்னு எங்களையெல்லாம் வச்சிகிட்டு கேட்பாரு டிஆர். மறுபடியும் விரல்களை பிரித்து இவர் கணக்கு போடுவதற்குள், "அட, ங்கோ..." ன்னு ஏசிட்டு கணக்கை சட்டுபுட்டுன்னு போட்டு, ஒலகநாதனை ஒதவாத நாதனாக்கிவிட்ட சந்தோஷத்தில் எங்களையெல்லாம் பார்த்து புன்முறுவல் பூப்பார் டிஆர்.

உஷா பத்திரிகையில் வரும் இரண்டு பக்க ஜோதிடத்தை கணிக்கிறேன் பேர்வழி என்று, ஒரு மினி கருத்தரங்கமே நடத்துவார்கள் இருவரும். அதற்குள் உலகம் ஒரு சுற்று அநாவசியமாக சுற்றி முடித்திருக்கும்! "யோவ்..." ம்பாரு ஒலகநாதன் சில நேரம் எங்களில் யாரையாவது. அண்ணன் சொல்றாருன்னா அது வேற, இந்தாளு எதுக்கு யோவ்னு நம்மளை கூப்பிடணும்? முரட்டு ஈகோ மூக்குக்கு மேலே வர, வச்சுக்கிறேன் இருடான்னு காத்திட்டு இருந்தோம் மொத்த பேரும். அதுக்கு தோதாக வந்திச்சு (நல்ல)நேரம். அது ஒலகநாதனுக்கு என்ன நேரம்ங்கிறதை கீழே படிச்சுட்டு சொல்லுங்க...

இன்டர்காம் வந்த புதுசு. டிஆர் வீட்லே எல்லா ரூம்லேயும் பொருத்திட்டாங்க. ஒலகநாதன் ரூமுக்கும் ஒன்னு. எங்களோட ரூம், கம்யூட்டர் ரூம், லே அவுட் ரூம், அப்படி இப்படின்னு பாத்ரூம் டாய்லெட்டை தவிர எல்லா இடத்திலேயும் இன்டர்காம்!

பெண் குரலில் இன்டர்காமை தட்டினார் நெல்லை பாரதி. ஒலகநாதன் ரூமுக்குதான்! "சார், நாங்க அடையார்லே இருந்து பேசுறோம். உங்க பத்திரிகையிலே வர்ற ஜோதிட பகுதிய ரெகுலரா படிக்கிறோம். எப்பிடிதான் இவ்வளவு கரெக்டா எழுதிறீங்களோ போங்க. அப்படி அப்படியே நடக்குது. எங்க வீட்லே எல்லாரும் ஒங்களோட ஃபேன்தான். ஒரு பத்து உருப்படிகிட்ட ஒங்ககிட்டேதான் ஜாதகத்தை காட்டணும்னு தவியா தவிக்கிறோம். ஒரு எட்டு வந்திட்டு போங்களேன்"னு சொல்வார். அவ்வளவுதான் ஒலகநாதனுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்திரும். அஹ்ஹ்ஹ்...னு சிரிச்சிகிட்டே, "நம்மகிட்ட என்ன இருக்கு. எல்லாம் அவனோட அருள். எங்க, ஒங்க அட்ரசை சொல்லுங்க, வர்றேன்"னு பேனாவை எடுத்து பரக்க பரக்க குறிப்பார். திருவள்ளுவர் தெரு, துபாய் குறுக்கு சந்துங்கிற ரேஞ்சில் ஏதாவது ஒரு நம்பரையும் தெருவையும் நெல்லை பாரதி எடுத்துவிட, எல்லாரும் ஆர்வமாக ஒலகநாதன் ரூமையே வாட்ச் பண்ணுவோம்.

கொஞ்ச நேரத்திலே பவுடரை அப்பிகிட்டு பக்காவாக கிளம்பும் ஜென்மம். ஏதோ பொண்ணு பார்க்க கௌம்புறது மாதிரி அத்தனை ஜோடனை இருக்கும் அந்த முகத்திலே. கம்பீரமா ஹேண்ட் பேக்கை கக்கத்திலே செருகிட்டு போவாரு. அவர் போயிட்டாரான்னு பார்த்து கன்பாஃர்ம் பண்ணிக்கொண்டு விழுந்து விழுந்து சிரிச்சிருக்கோம். ஆனா போன மனுஷன் திரும்பி வர்ற வரைக்கும் இருந்து ரசிக்கனும்னே சில நேரங்களில் ஓவர் டைம் பார்த்திருக்கோம். ஆஞ்சு ஓஞ்சு போய் அக்கடான்னு சேர்ல வந்து சாய்வார். நிறைய சுத்தியிருப்பாரு போலிருக்கு, அட்ரசை தேடி. ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல.

ஒரு வாரம் முழுக்க இப்படியே அலைய விட்டோம். ஆனா, அப்பிராணி மனுஷன், நேத்துதான் அலைஞ்சமே? இன்னைக்கு மடிப்பாக்கம், நேத்துக்கு முந்தின நாள் கோடம்பாக்கம்னு அலைஞ்சு எல்லா அட்ரசுமே தப்பாயிருக்கேன்னு ஒரு நாளாவது நினைக்கணுமே? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சந்தோஷத்தோடவே கிளம்புனாரு ஒலகு. நாங்களே போனா போவுதுன்னு இந்த அலைகழிப்பை நிறுத்தினோம் அப்புறம்.

போன மாசம், வள்ளுவர் கோட்டம் ஏரியாவிலே பைக்லே வேகமா போயிட்டு இருந்தேன். எதிர்ப்பக்கம் பார்த்தால்.. அட நம்ம ஒலகநாதன்! எந்த அட்ரசை தேடி இந்த நெடும் பயணமோ?

சோசியனுங்களுக்கு, கெரகம் தெரியுற அளவுக்கு வெவரம் தெரிய மாட்டேங்குதுப்பா...!

Wednesday, April 15, 2009

கவிஞரும், காண்டமும்!

(பின்னு£ட்டத்தில்) யுனானிமஸ்சா இல்லைன்னாலும், அநானிமஸ்சா கேட்டுகிட்டேயிருக்காரு ஒருத்தர், "அந்த விக்ரமாதித்யனை எங்க பார்த்தீங்க? சொல்லவே இல்லையே"ன்னு! (குழம்புபவர்கள் 'அவரு ஒரு நீர் வாழ் தாவரம்'ங்கிற மேட்டரை இன்னொரு முறை படிக்கவும்)

பார்ப்பதற்கு வேதாந்திரி மகரிஷி மாதிரி இருந்தாலும், அவரு ஒரு 'போதாந்திரி ஃபிகரிஷி'! பெரும் கவிஞர். ஒருகாலத்தில் கவர்ன்மென்ட்டையே ஆட வைத்த பத்திரிகையாளர். இன்னும்... இன்னும்...! ஆங், எங்கே பார்த்தேன் அவரை? அதுக்கு முன்னாடி விக்ரமாதித்யன் பற்றி ஒரு சின்ன சுவாரஸ்யமான சம்பவத்தை சொல்றேன். கொஞ்சம் சிரிச்சுட்டுதான் போங்களேன்.

பல வருடங்களுக்கு முன் முன்னணி புலனாய்வு இதழான நக்கீரனில் வேலை செஞ்சுட்டு இருந்தார் நம்ம கவிஞர். கோபாலண்ணனுக்கு யாரு தண்ணியடிச்சாலும் பிடிக்காது. அதிலும் பெரியவருங்கிறதால கவிஞருக்கு மட்டும் விதிவிலக்கு. கண்டும் காணாமலே இருந்தார். ஆனால் போக போக கவிஞரின் 'பாட்டில்' மோகம் அதிகரிக்க பொறுமை இழந்திட்டார். "அண்ணே, தண்ணியடிச்சுட்டு ஆபிசுக்கு வராதீங்க. குடிக்கணுமா, சாயங்காலம் வேலைய முடிச்சுட்டு போகும்போது குடிங்க! நான் கேட்கவே மாட்டேன்"னு சொல்லிட்டாரு. ஆனாலும், விட்டு விலகிற 'ஸ்மால்' பந்தமா அது? தொட்டு தொடர்கிற 'ஃபுல்' அன்பாச்சே? தினந்தோறும் தண்ணீர் லாரி, ஆபிசுக்குள் புகுந்தது மாதிரியே புகுந்தார் கவிஞர். அண்ணன் ஒருநாள் கண்ணை காட்ட, அலுவலக நண்பர்கள் இருவர், "அண்ணே வாங்க. ஒரு சின்ன வேலை, போயிட்டு வந்திரலாம்"னு அழைச்சிட்டு ஆட்டோவில் ஏறுனாங்க.

வண்டி போகும்போதே, அவரு பாக்கெட்டில் இருந்த நாலணா எட்டணா உட்பட எல்லா காசையும் ஏதேதோ காரணம் சொல்லி வாங்கிட்டாங்க. "எங்கேப்பா போறோம்"னு கவிஞர் கேட்க, "முக்கியமான அசைன்ட்மென்ட். நீங்கதான் பேசணும்"னு சொல்லியிருந்தாங்க. சுமார் ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு வண்டி ஆவடியை தாண்டியது. "அப்படியே ஓரமா உட்கார்ந்து கொஞ்சம் ஒண்ணுக்கு அடிக்கலாமா" என்றார்கள் நண்பர்கள். ஒருத்தர் போனால், பின்னாலேயே பின்பற்றுவது இந்த ஒரு விஷயத்தில் தானே? கவிஞரும் வண்டியை விட்டு இறங்கினார். அவர் உட்காரவும், நண்பர்கள் ஓடிவந்து வண்டியில் ஏறவும் சரியாக இருந்தது. அவ்வளவுதான்... வண்டியை கிளப்பிக் கொண்டு வந்தே விட்டார்கள்.

கையிலும் காசில்லை. கவிஞரின் கௌரவத்திற்கு யாரையும் கேட்கவும் முடியாது. நட நட என்று நடந்தார் ஆபிசுக்கு. கிட்டதட்ட ஐம்பது கிலோ மீட்டருக்கும் மேல். அவருக்கு காரணம் புரிந்துவிட்டது. இனி குடித்துவிட்டு ஆபிசுக்கு போகக் கூடாது. அந்த சம்பவத்திற்கு பிறகும் அவர் நிறைய குடிச்சார். ஆனால் அலுவலக நேரத்திலே இல்ல!

கிட்டதட்ட எழுவது வயசை தாண்டிட்டாரு கவிஞர். நாடி சோதிடம் பார்க்க வந்திருந்தாரு ஓரிடத்திற்கு. அங்கேதான் சந்திச்சேன் கவிஞரை, அதுவும் பல வருடங்களுக்கு பிறகு. நான் ஏன் அங்கே போனேன்? அது தனிக்கதை.

கவிஞருடன் அவரது மனைவியும், மகனும் வந்திருந்தாங்க. மகன் ஒரு படத்தில் கேமிராமேனாக வொர்க் பண்றாராம். தொழில் காண்டம், அப்புறம் என்னென்னவோ காண்டங்கள். (எல்லாத்துக்கும் தனி தனி பீஸ்) எல்லாத்தையும் தனி தனியாக பார்த்திட்டு இருந்தாரு கவிஞர். "ஒங்களுக்குதான் வயசாயிடுச்சுல்ல, இனிமே பார்த்து என்ன பண்ண போறீங்க? உங்க பையனுக்கு பாருங்களேன்"னாரு அங்கிருந்த நெல்லை வசந்தன். (நான் மதிக்கிற, நம்புகிற ஜோதிடர் இவரு)

"இல்ல சோதிடரே, நான் கடவுள் படத்திலே நடிச்சதுக்கு பிறகு நிறைய பேரு நடிக்க கூப்பிடுறாங்க. போலாமா, வேணமாங்கிறதுக்காக தொழில் காண்டம் பார்க்க வந்தேன்"னாரு கவிஞர். காண்டம் என்ன சொல்லிச்சோ தெரியலே, கவிஞர் வேறொரு படத்திலே நடிச்சிட்டு இருக்கறதா கேள்விப்பட்டேன்!

Tuesday, April 14, 2009

ஒரு நடிகை குளிக்கிறா...

நடிகர் பரத்துக்கு லைன் போட்டு தரச்சொன்னா ரிப்போர்ட்டர் பரத்திற்கு லைன் கொடுத்து, கேப்டனை 'லயன்' போல் கர்ஜிக்க வைத்த நெல்லை சுந்தர்ராஜனின் கதையை சொல்லியிருந்தேன். (கேப்டனுக்கு பிடித்த லஜ்ஜாவதியே) அவரோட சாதனை கதம்பத்தில் இன்னொரு ஹி..ஹி...!

அதற்கு முன்பு நெல்லை பற்றி ஒரு சிறு குறிப்பு. மிக பழமையான மக்கள் தொடர்பாளர் இவர். ஆணானப்பட்ட சரத்குமாரையே ஒரு காலத்தில் தனது பைக்கில் வைத்துக் கொண்டு வாய்ப்பு கேட்டு கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கியவர். இன்றைய தினம் மாருதி ஆம்னிக்கு மாறிவிட்டாலும், செய்வதெல்லாம் 'செக்கு சுத்தற' வேலைதான்! இவரது காருக்கு பின்னால் நெல்லை என்று ஆங்கிலத்தில் எழுதியிருக்கும். ஆனால் அதை வாசிக்க நீங்க ஏதாவது ஒரு யுனிவர்சிடியில் குறைந்தபட்சம் டாக்டர் பட்டமாவது வாங்கியிருக்கனும். நியூமராலஜிப்படி ஸ்பெல்லிங் கோர்த்து எழுதியிருப்பார். படித்தால் நெல்லை என்பதற்கு பதிலாக நல்லெல்ல்லீய்ய்ய்ய்ய் என்றுதான் வாசிக்க முடியும்! இப்பவும் இன்டர்நெட் இதழாளர்களை 'இன்டர்காம் ரிப்போர்ட்டர்' என்று அழைக்கக்கூடிய அப்பாவி மனிதர்!

இவரை பார்க்கும்போதெல்லாம் 'நெல்லை, தொல்லை' என்றுதான் நகைச்சுவையாக அழைப்பார் சரத்குமார். அப்படிப்பட்ட இவர், ஏவிஎம் சரவணன், கே.ஆர்ஜி, கேயார் போன்ற பெருமைமிகு தயாரிப்பாளர்களுக்கு வழிகாட்டிய கதைதான் இது.

தமிழ் திரையுலகம் சார்பாக எதற்கோ நிதி திரட்டிக் கொண்டிருந்தார்கள். இந்த நிதி திரட்டும் குழுவிற்கு தலைமை ஏற்றது திரையுலக தயாரிப்பாளர்களும், மிகப் பெரும் ஜாம்பவான்களுமாகிய ஏவிஎம் சரவணன், கே.ஆர்.ஜி உள்ளிட்ட பலர். திரைப்பட நட்திங்களின் வீடுகள் அடிக்கடி மாறக்கூடியது என்பதாலும், அநேகமாக எல்லாருடனும் தொடர்புடையவர் என்பதாலும், நெல்லை சுந்தர்ராஜனைதான் வழிகாட்டுவதற்காக அழைத்துச் சென்றார்கள். அப்படிதான் ஒருநாள் காலையில் கிளம்பியது டீம்.

"யோவ் நெல்லை, மொதல்ல தேவா வீட்டுக்கு போகலாம்யா" என்றார் கே.ஆர்.ஜி. "சரிண்ணே..." என்று காரில் ஏறி டிரைவர் சீட்டுக்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார் நெல்லை. இசையமைப்பாளர் தேவா வீட்டுக்கு போகிறோம் என்று எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்க, தேவயானி வீட்டுக்கு வழி சொல்லிக் கொண்டிருந்தார் நெல்லை. (தேவயானியை இவர் தேவா என்று செல்லமாக அழைப்பார் போலிருக்கிறது) தேவா வீட்டுக்கு சந்து பொந்தெல்லாம் சுற்றி போயிகிட்டு இருக்காரே என்ற சந்தேகம் இவங்களுக்கு இருந்தாலும், ஏதோ ஷாட் ரூட்லே போறாரு போலிருக்குன்னு அமைதியாக இருந்திட்டாங்க எல்லாரும். வண்டி போய் ஒரு பங்களாவுக்கு முன் நின்றது.

'நல்ல சம்பாத்தியம்யா தேவாவுக்கு. புதுசா வீடு வாங்கியிருக்காரு போலிருக்கு' என்று நினைத்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார்கள் எல்லாரும். உள்ளே நுழைந்தவுடன் எல்லாருக்கும் அதிர்ச்சி. ஏனென்றால் தேவயானி சிரித்துக் கொண்டிருப்பது போல பெரிய அளவு போட்டோ! தேவா கொஞ்சம் அப்பிடி இப்பிடிதான். அதுக்காக 'வச்சுகிட்டு' இருக்கிற பொண்ணு போட்டோவ தன்னோட வீட்லே மாட்டுற அளவுக்கு தைரியம் வந்திருச்சா என்று அதிர்ந்தே போனார்கள். ஒருவருக்கொருவர் காதில் கிசுகிசுத்துக் கொண்டார்கள். விறுவிறுவென்று சமையலறைக்குள்ளே நுழைந்த நெல்லை, விஷயத்தை சொல்ல அரக்க பரக்க வெளியே ஓடிவந்தார் தேவயானியின் அம்மா.

அட, "அம்மாவையுமா?" என்று அதிர்ந்தே போனார்கள் அத்தனை பேரும். ஆனாலும் தேவா வரட்டும் என்பது போலவே அந்தம்மாவிடம் எதுவும் பேசாமல் "நல்லாயிருக்கீங்களா" என்று மட்டும் கேட்டுவிட்டு அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். "குளிச்சிட்டு இருக்கா, வந்திருவா" என்று அந்தம்மா சொல்ல, தேவயானி வந்தா என்ன, வராட்டி என்ன? தேவாவை வரச்சொல்லும்மா என்று மனசுக்குள் முணுமுணுத்தவாறு எரிச்சலை வெளிக்காட்டிக் கொள்ளாமல் உட்கார்ந்திருந்தார்கள்.

மெல்ல நெல்லையை பக்கத்தில் அழைத்து, "யோவ் தேவா எங்கேய்யா?" என்றார்கள். "அதுவா, குளிச்சிட்டு இருக்குன்னு அவங்க அம்மா சொன்னாங்களே" என்றார் நெல்லை. "குளிக்கறது தேவயானி. நான் கேட்கிறது தேவா" என்று கேஆர்ஜி கோபம் காட்ட, அப்போதுதான் 'ஆஹா, மாட்டிட்டோம்டா' என்ற நிலைக்கு வந்தார் நெல்லை. "அண்ணே, நீங்க தேவான்னதும் நான் தேவயானின்னு நெனச்சுட்டேண்ணே. இது தேவா வீடு இல்ல, தேவயானி வீடு"ன்னு காதிலே கிசுகிசுத்தார்.

அதற்குள் தேவயானியே வந்து வணக்கம் போட, "இல்லம்மா அந்த நிதி...." ன்னு சமாளித்தார்கள் அத்தனைபேரும். "சார், நான்தான் நாற்பதாயிரம் கொடுத்திட்டேனே" என்று அதற்கும் தயாராக தேவயானி ஒரு பதிலை வைத்திருக்க, "இல்லைம்மா, ரவுண்டா ஐம்பதாயிரமா கொடுத்திருங்களேன்" என்று கேட்டு சமாளித்தார்கள். பிறகு அவர் கொடுத்த பத்தாயிரத்தை வாங்கிக் கொண்டு காரில் திரும்பினார்கள். காரிலேயே வைத்து நெல்லைக்கு கொடுத்த அர்ச்சனை இருக்கே, அது வெறும் அர்ச்சனை இல்லை, சர்ர்ரியான படையல்!

Sunday, April 12, 2009

கேப்டனுக்கு பிடித்த லஜ்ஜாவதியே....

பரத் வாயை திறந்தா வளவளன்னு கொட்றது ரெண்டே ரெண்டு! ஒன்ணு ஜொள்ளு, இன்னொன்னு கிள்ளு! அதுவும் ஒங்க வீட்டு கிள்ளு எங்க வீட்டு கிள்ளு இல்லே, ஊருக்கே வலிக்கிற 'மாட்டூசி' கிள்ளு! படத்திற்கோ, அல்லது ஃபங்ஷனுக்கோ போனா பரத் இல்லாத இடமா பார்த்து உட்கார்றது என்னோட வழக்கம்! ஏன்னா சைலண்டா ஜோக்கடிச்சுட்டு வேற பக்கம் பார்த்திட்டிருப்பாரு பரத். கெக்கக்கேன்னு ஓவரா சிரிச்சு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரோட சாபத்தை வாங்கிப்பேன் நான்.

போனவாரம் ஒரு ஃபங்ஷன். இசையமைப்பாளர் தேவா கலந்துகிட்ட விழா அது. தெரியாம போயி பரத் பக்கத்திலே உட்கார்ந்திட்டேன். பேச்சுக்கு பேச்சுக்கு காமென்ட். தேவா பேசும்போது, "நான் அந்த பொண்ணோட குரலை கேட்டுட்டு அசந்து போயிட்டேன். இந்த படத்திலே மட்டுமில்லே, என்னோட அடுத்தடுத்த படத்திலேயும் இந்த பொண்ணுக்கு பாடற வாய்ப்பை கொடுக்க போறேன்" என்றார். பரத் சும்மாயில்லாமல், "அந்த பொண்ணுக்கு இவரு வாய்ப்பு கொடுப்பாரு, இவருக்கு யாரு வாய்ப்பு கொடுப்பாங்களாம்?" என்றார் சிரிக்காமல். பரத் இப்படிதான்! "ஏய், நம்மளையே எல்லாம் வாட்ச் பண்றாங்க. பேசாம இரேன்" என்று அதட்டினாலும், அஞ்சு நிமிஷம்தான் அமைதியா இருக்க முடியும் அவரால். ஒரு மாலை தினசரியின் நிருபன்தான் இந்த பரத்!

எல்லாரையும் ஓட்டும் பரத், கொஞ்ச நாள் "ஆள விடுங்கடா சாமீய்ய்ய்ய்"னு ஓடுனாரு. எப்போ தெரியுமா? நட்சத்திர கலை விழாவுக்காக ஒட்டு மொத்த நடிகர் சங்கமும் ஃபாரினுக்கு கிளம்புச்சே, அப்போ!

விஜயகாந்த் நடிகர் சங்க தலைவரா இருந்தப்போ நடந்த சம்பவம் அது. சங்க நிதிக்காக வெளிநாட்டில் நட்சத்திர கலைவிழா நடத்துறதா முடிவு பண்ணிட்டாங்க. இதிலே சில நடிகர் நடிகைகள் வருவாங்களா, மாட்டாங்களா என்ற சந்தேகமும் எழுந்திச்சு. அதனால் எல்லா நடிகர்களுக்கும் போன் போட்டு அவரே நேரடியாக இன்வைட் பண்ணிட்டு இருந்தாரு. அட, விழாவுக்கு அழைக்கிறது ஒரு பெரிய விஷயமே இல்லை. நீங்க இந்த பாட்டுக்கு ஆடணும். இந்த காட்சிக்கு ஏத்த மாதிரி நடிக்கணும்னு ஏகப்பட்ட ஐடியாக்களை வேற அள்ளி விட்டுகிட்டு இருந்தாரு. அப்போதான் பிஆர்ஓ க்களில் ஒருவரான நெல்லை சுந்தர்ராஜனிடம் சொல்லி, "அண்ணே பரத்துக்கு போன் போட்டுக் கொடுங்க. பேசணும்"னு விஜயகாந்த் சொல்ல, அவரும் ஒரு நம்பரை போட்டு விஜயகாந்துக்கிட்டே கொடுத்திட்டாரு.

கொடுமை என்னன்னா விஜயகாந்த் கேட்டது நடிகர் பரத் நம்பரை. நெல்லை சுந்தர்ராஜன் போட்டுக் கொடுத்தது நம்ம நிருபன் பரத்தோட நம்பரை. எடுத்த எடுப்பிலேயே "என்னா பரத்? ஷ§ட்டிங்கிலே இருக்கீங்களா"ன்னாரு கேப்டன். அந்த நேரம் பார்த்து நம்ம ஆளு ஒரு ஷ¨ட்டிங்கிலே கதாநாயகிய பேட்டி எடுத்திட்டு இருந்தாரு. அட, கேப்டன் குரல் மாதிரி இருக்கு. கரெக்டா ஷ¨ட்டிங்கிலே இருக்கீங்களான்னு வேற கேட்கிறாரு. நடிகர் சங்க தலைவர்ங்கிற முறையிலே ஏதாவது கம்ப்ளைன்ட் பண்ணிட்டாளா இந்த நாதாரின்ன்னு நடிகையை முறைச்சுகிட்டே, "ஆமாம் சார். என்னா விஷயம், சொல்லுங்கன்னாரு". மைண்டுக்குள்ளே நாம ஒன்ணும் இந்த நாதாரிய தப்பா கேட்கலீயே. அப்புறம் என்னவா இருக்கும்னு ஓடிட்டு இருந்திச்சு பரத்துக்கு!

"பரத், நீங்க வர்றீங்கதானே"ன்னு கேப்டன் கேட்க, பேட்டிய முடிச்சுட்டு நடிகர் சங்கத்துக்கு வர சொல்றாரு போலிருக்கு. ஏதோ முக்கியமான பிரஸ் மீட்டா இருக்கும்னு நெனச்சுகிட்டு, "ம்... வர்றேனே" என்றார் பரத்!

நீங்க மைண்ட்லே என்ன பாட்டு வச்சுருக்கீங்கன்னு தெரியாது. ஆனா, எனக்கு புடிச்சது லஜ்ஜாவதியேதான்னாரு கேப்டன். ஆஃப் பாட்டிலை அப்படியே ராவா அடிச்சது மாதிரி குழம்பி போன பரத், குத்து மதிப்பா "எனக்கும் அதுதான் சார் புடிக்கும்னாரு"

"ரொம்ப ஃபாஸ்ட் ஸாங்... வீட்லே எம் பையன் பிரபாகரன் அந்த பாட்டை கேட்டா சும்மாயிருக்க மாட்டான். பயங்கரமா ஆடுவான்"னு அவரு சொல்ல, உங்க பையன்தானே? ஆடினாலே பயங்கரமாதான் இருக்கும்னு பரத் நினைத்துக்கொண்டே, "ஆமாம்... ஆமாம்"னாரு குத்து மதிப்பா. ஆனா, எங்கோ இடிக்குதேன்னு மனசு சொல்லிகிட்டே இருந்தாலும் பேச்சை விடலை ரெண்டு பேரும்.

"அப்படின்னா அதே பாட்டுக்கு நீங்க ஆடிடுங்க. ரிகர்சல் நாளையிலேர்ந்து இருக்கு. தினமும் ஒன் அவர் வந்தா கூட போதும். நீங்கதான் நல்லாவே ஆடுவீங்களே"ன்னு கேப்டன் சொன்னாரு. அப்போதான் புத்தியிலே புல்லட் ஓடுச்சு பரத்துக்கு. அட பாவி மக்கா, இப்படி லைனை மாத்திப் போட்டு கொல்றாய்ங்களேன்னு அதிர்ச்சியனவரு, சரி சார்னு ஒரு பதிலை சொல்லிட்டு நடிகர் பரத்தாகவே நினைத்துக் கொண்டு போனை வச்சிருக்கலாம்.

"சார், நீங்க நினைக்கிற நடிகர் பரத் நான் இல்லை. நான் ரிப்போர்ட்டர் பரத்" என்று சொல்ல, எதிர்முனையில் "யோவ்... நெல்லைய்ய்ய்ய்ய்ய்ய்"னு கேப்டன் கத்துனது பரத்துக்கு தெளிவா கேட்டுச்சாம். ரெண்டு நாள் கழிச்சு, "ஏன்யா, நீயாவது முதல்லேயே நான் இல்லேன்னு சொல்லக் கூடாதா? கேப்டன் ரவுண்டு கட்டிட்டாருய்யா"ன்னு புலம்புனாராம் நெல்லை!

எல்லாரையும் ஒட்டுற பரத்தை "யோவ், ஒன்னை கேப்டன் கூப்பிடுறாரு"ன்னு சொல்லி சொல்லியே விரட்டினாங்க சக நிருபர்கள். அப்போ பரத் வழிஞ்சதை பார்க்கணுமே!

Saturday, April 11, 2009

"நாக்கு தள்ளி, நண்டுவாக்கிளி போட்டுரும்"

தப்பே பண்ணாத ஒரு திரையுலக மார்கண்டேயன் சிவகுமார். தப்பை மட்டுமே சரியாக செய்யும் ஒரு திரையுலக மார்கண்டேயன் முரளி. ஆச்சர்யம் என்னன்னா, இரண்டு பேருமே பார்த்த காலத்திலேர்ந்து அப்படியே இருப்பதுதான். (யோகா, ஆன்மீகம்னு மெனக்கெடுறாரு சிவகுமார். முரளியை பொறுத்தவரை அப்படியெல்லாம் இல்லை. ஒரே ஜாலியோ ஜிம்கானாதான்! ஒருவேளை இதுவும் ஒரு 'டைப்பான' யோகாவோ?)

நாலு நாளைக்கு முன்னாடி இவர் நடித்த 'நீ உன்னை அறிந்தால்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார் முரளி. காபி டீக்கு பதிலாக காயகல்பத்தை கரைச்சு கரைச்சு குடிப்பாரு போலிருக்கு. அன்னைக்கு பார்த்தபோதும், என்னைக்கோ பார்த்த மாதிரியே இருந்தார். பேச்சிலே மட்டும், சுய விமர்சனம் தெரிஞ்சுது. ஓப்பனாகவே "இனி தப்பு பண்ண மாட்டேன்"னாரு மைக்கில்!

முல்லா கதைகள் மாதிரி முரளியின் கதைகளை தனி தொகுதியாக போட்டால், டீன் ஏஜ் எரியாவில் செம கலெக்ஷன் பார்க்கலாம். நாம் சொல்லப்போவது அதுவல்ல, வேற! ஸ்ரீகாந்திடம் கதை சொல்ல வந்தார் ஒரு உதவி இயக்குனர். துவாரபாலகன் மாதிரி து£ணுக்கு பக்கத்திலே நிக்கிறவன் (மன்னிக்கணும், நின்னவன்) நான்தானே? முதலில் எங்கிட்ட கதை சொன்னவர், "இங்கே தேவலாம் சார். கதை கேட்கன்னு ஒரு 'மெத்தர்டு' வச்சிருக்கீங்க. கேட்டுட்டு நல்லாயிருந்தா சாரு கேக்கிறாரு. ஆனா அங்க அப்படியில்லே. அவருதான் கேப்பாரு. ஆனா, அதுக்குள்ளே நமக்கு நாக்கு தள்ளி, நண்டுவாக்கிளி போட்டுரும்" என்றார். யாரந்த அவரு? வேறு யாருமல்ல, முரளி. இவரிடம் அந்த உதவி இயக்குனர் கதை சொன்ன கதைதான் இது!

கதை சொல்ல முன் அனுமதி வாங்கியிருந்தாரு நம்ப உதவி இயக்குனரு. "நேரா மஹாபலிபுரம் வந்திருங்க. ஷாட் பிரேக்குல கதை கேட்டுர்றேன்" என்று சொல்லியிருந்தார் முரளி. சொன்ன மாதிரியே இவரும் போயிட்டார். காலையில் இருந்து சாயங்காலம் வரைக்கும் என்னென்னவோ காரணத்தால கதை கேட்கிற விஷயம் தள்ளி தள்ளி¢ போயிட்டே இருந்திச்சு. பேக்கப் என்று டைரக்டர் சொன்ன பின்பு, நாளைக்கு வரச் சொல்லிருவாரோ என்று கவலையோடு நின்றிருந்தார் நம்ம ஆளு.

"வாங்க பாஸ், காரிலேயே கதைய கேட்டுடலாம்" என்று அவரையும் காரில் ஏற்றிக் கொண்டார் முரளி. கிளம்பும்போது மணி சுமார் ஆறு இருக்கும். அப்படியே மாலை கவிழ்ந்து இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. முரளி காரை எடுத்த எடுப்பிலேயே அடி வயிற்றில் சூலம் குத்துச்சு நம்மாளுக்கு. "மெதுவா போங்க"ன்னு சொல்லி, அவரு தப்பா எடுத்துகிட்டா? கதை கேட்காட்டியும் பரவால்ல. காரிலேர்ந்து இறக்கிவிட்டு பஸ்லே வான்னு சொல்லிட்டா என்ன பண்றது? பெருமாளே, பத்திரமா கொண்டு போயி சேருன்னு வேண்டிக்கிட்டு கதை சொல்ல ஆரம்பிச்சாரு.

"சார், வில்லேஜ்லேர்ந்து சிட்டிக்கு போயி காலேஜ்ல படிக்கிற ஒரு...." இப்படி ஆரம்பிக்கும்போதுதான் உ.இயக்குனருக்கு விதி வேற ஒருத்தன் ரூபத்திலே வந்திச்சு. பொய்ய்ய்ய்ய்ங்க்க்குன்னு முரளியோட காரை சைடு வாங்கிட்டு முன்னாலே போனான் ஒரு காரு காரன். போனவன் சும்மாயில்லாம லேசா ஹாரனை அடிச்சு இந்த காரை வெறுப்பேத்திட்டு போக, முரளிக்குள்ளே முனியாண்டி பூந்துட்டான். "ங்கோ... எங்கிட்டயா? இப்ப பாருடா" என்றபடி ஆக்சிலேட்டரை ஏறி அமுக்க ஆரம்பித்துவிட்டார். கதையை தொடருவதா? அல்லது இந்த சேசிங் முடிஞ்சதும் ஆரம்பிச்சுக்கலாமா என்ற குழப்பத்திலேயே முரளி முகத்தை இவர் பார்க்க, "ம்ம்மம்ம்... நீங்க சொல்லுங்க தலைவா"ன்னாரு முரளி.

"சார் வில்லேஜ்லேர்ந்து சிட்டிக்குப்ப்ப்ப்....." வார்த்தையை அதற்கு மேல் தொடர முடியாதவாறு சர்வநாடியும் ஒடுங்கிப் போய் உட்கார்ந்துவிட்டார் உ.இ. வண்டி இப்போது 110 கி.மீ வேகத்தில் போய் கொண்டிருந்தது. அது இன்னும் அதிகரிக்கக் கூடும் என்பது போலவே இருந்தது முரளியின் முனீஸ்வர மூஞ்சி. "டேய், எங்கிட்டயா? நானெல்லாம் ரேசுக்கு போறவண்டா" என்று தனக்குள் பேசிக்கொண்டே வண்டியை முறுக்கினார் முரளி.

முன்னால் போனவனுக்கு வண்டியிலே வேகமா போயி வெறுப்போத்துறதுதான் பால்குடி காலத்திலேர்ந்தே 'ஹாபி' போலிருக்கு. ஒவ்வொரு வண்டியையும் ஸ்டைலாக கட் பண்ணிக் கொண்டே பறந்தான். பின்னால் இன்னொரு வண்டி தன்னை விரட்டுகிறது என்றதும், இன்னும் உற்சாகமாகிவிட்டான். ஈசிஆர் ரோட்டில் ஒரு அறிவிக்கப்படாத ரேஸ் நடத்திக் கொண்டிருந்தார்கள் இருவரும்.

"டேய், பணக்கார பாவிங்களா? உங்க ஆட்டத்திலே என்னை ஏண்டா பொலி போடுறீங்க? நான் பாட்டுக்கு செவேனேன்னு ஊர்ல கெடந்திருப்பேன். இப்படி வந்து மாட்டிட்டனே. இனி கதைன்னு இவன் பக்கம் வரக்கூடாது. பெருமாளே, இவனுக்கு நல்ல புத்தி குடு"ன்னு வேண்டிகிட்டே ரோட்டை பார்த்துக் கொண்டிருந்தார் உதவி இயக்குனர். விடாமல் தொடர்ந்த இந்த சேசிங் திருவான்மியூர் நெருங்கும்போதுதான் முடிவுக்கு வந்தது. முன்னால் சென்ற காரை முந்திவிட்டார் முரளி.

எவன்கிட்ட காட்ற ஒன் வேலைய? என்று முணுமுணுத்தவாறே திருவான்மியூர் ஓரமா காரை நிறுத்தினார் முரளி. "தலைவா, இப்போ வீட்டுக்கு போனா கதை கேட்க நேரம் இருக்காது. அப்படியே திரும்பி போனா, ஈசிஆர்ல ஒரு ஹோட்டல் இருக்கு. அங்கே போயிரலாம்"னு சொல்லி வண்டிய திருப்பினார். மறுபடியும் ஒரு பதினைஞ்சு கிலோ மீட்டர் பின்னாலே போனாங்க இரண்டு பேரும்.

காரை பார்க்கிங் பண்ணிய முரளி, அங்கேயே ஒரு ரூமை புக் பண்ணினார். உ.இ க்கு ஒரே சந்தோஷம். ஆஹா, நமக்காக ஒரு ஹீரோ ரூம் போடுறாருன்னா, இவருதாண்டா நடிகர்களின் நாயகன். மனிதருள் மாணிக்கம். இன்னிக்கு கதைய சொல்லி அசத்திர வேண்டியதுதான் என்று ஆனந்த கூத்தாடினார். ரூமிற்குள்ளே போனதும் அப்படியே பொதுக்கென்று கட்டிலில் விழுந்த முரளி, "ஏதாவது சாப்பிட்டுட்டே பேசலாம்" என்றபடி, பெல்லை அழுத்தி பேரரரை அழைத்தார். "ஒங்களுக்கு பீர்?" என்று ஆஃபர் வைக்க, "இல்ல சார். கதைய சொல்லிடுறேனே?" என்றார் உ.இ. "சரி, எனக்கு மட்டும் ஒரு ஃபுல் எடுத்திட்டு வந்திருங்க" சைட் டிஷ்ஷையும் சேர்த்து சொல்லிட்டு பாத்ரூம் போயிட்டு திரும்பி வந்தார் முரளி.

"தலைவா, சொல்லுங்க"

"சார், வில்லேஜ்லேர்ந்து சிட்டிக்கு போயி காலேஜ்ல படிக்கிற ஒரு...." அதற்குள் பேரர் வந்து விட, சரக்கை அப்படியே கிளாசில் கவிழ்த்து ராவாக அடிக்க ஆரம்பித்தார் முரளி. ஐந்தே நிமிடத்தில் "சொழ்ழிகிழ்ழே இழ தழைய்வா...." என்றாகிவிட்டார்.
கதையை சொல்றதா? சொன்னாதான் புரியுமா? இல்ல இப்படியே கழண்டுகிறதா? பசி வயிற்றை கிள்ள, அங்கிருந்த சைட் டிஷ்களை பதம் பார்த்தார் உ.இ.

"இன்னைக்கு முடியாது. நாளைக்கு வந்திருங்க" என்பதை எப்படியோ உதவி இயக்குனருக்கு புரியும்படி சொன்னார் முரளி. அல்லது இவரே அப்படி புரிந்து கொண்டார். கிளம்பி பஸ் பிடித்து வீடு வந்து சேர்ந்தவர், மறுநாள் படப்பிடிப்பு எங்கே என்று விசாரித்துக் கொண்டு போய்விட்டார். ஆனால் இவரை போலவே முரளியை தேடிக் கொண்டிருந்தது மொத்த யூனிட்டும். அவர் இருக்கும் இடத்தை சொல்வது சரியாக இருக்குமா? எதற்கு வம்பு என்று மீண்டும் ஹோட்டலுக்கே வந்தார் உ.இ.

முதல் நாள் என்ன கண்டிஷனில் இருந்தாரோ, அதே கண்டிஷனில் இருந்தார் முரளி. இப்படியே நான்கு நாட்கள். இவர் படப்பிடிப்புக்கு போவதும், மீண்டும் ஹோட்டலுக்கு வருவதுமாக இருந்தார். ஒருகட்டத்தில் இது வேலைக்கு ஆவாது என்ற முடிவுக்கு வந்தததாக சொன்னார்.

முரளி இனிமே தப்பு பண்ண மாட்டேன்னு சொன்னது இது மாதிரி விஷயங்களுக்காக இருக்காது என்பது என் யூகம். ஏன்னா முரளியை பொறுத்தவரை இதெல்லாம் தப்பு இல்லை. அது வேற....

Thursday, April 9, 2009

ஆவி அமுதாவின் 'துப்ர'பாதம்!

பரிசுத்த ஆவியோ, பிறந்ததலிருந்தே ஷாம்பூ, சோப்புகளையே பார்க்காத பரி'சுத்தமில்லாத' ஆவியோ, எதுவாகவும் இருக்கட்டும்... ஆவிகள் என்றால் அலர்ஜி எனக்கு!

ஆவி அமுதாவில் தொடங்கி, விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் வரைக்கும் டி.வியில் பார்த்து பொறி கலங்கி போயிருந்தாலும், ஒரு சந்தர்ப்பத்தில் இவங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது எனக்கு. ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற அத்தியாவசிய சமாச்சாரங்களை கூட மேற்படி அமானுஷ்ய ஏரியாவிலே இருந்து வாங்கி வச்சிருப்பாங்களோங்கிற சந்தேகமெல்லாம் வரும் இவங்களை நினைச்சா.

எங்க ஊர்லே பெருமாள்னு ஒரு ஆசாரி இருந்தாரு. அவரு ஒரு முறை செகன்ட் ஷோ படம் பார்த்திட்டு வரும்போது, சுடுகாட்டுலே இருந்து ஆவி ஒன்னு இவரை மறிச்சிருச்சாம். கை ரெண்டையும் நீட்டி, "இதுல மாட்டியிருக்கிற விலங்கை உடைச்சு விடு"ன்னு கேட்டுச்சாம். (மாட்டி விட்டது எந்த போலீஸ் ஆவியோ?) அவரும், பதட்டப்படாம வீட்டுக்கு வந்து வெட்டிரும்பு, சுத்தியலை எடுத்திட்டு போயி விலங்கை உடைச்சுவிட்டாராம். அன்னையிலேர்ந்து இவரை 'பேயுக்கும் காப்படிச்ச பெருமாள் ஆசாரி'ன்னு பட்டப் பெயர் வச்சு கூப்பிட ஆரம்பிச்சாங்க! பேய்கள் பற்றிய சந்தேகங்கள், பொழிப்புரைகள், இலக்கணப் பிழைகள் போன்றவற்றை விளக்கும் நடமாடும் 'கோனார் பேய் உரை'யாகவே இருந்தார் பெருமாள் ஆசாரி. இவர் செத்த பின்னால் மேலே போய் வேலை கெடக்கும்னு நினைச்சாங்களோ என்னவோ, இவரு கூடவே சுத்தியலையும் வெட்டிரும்பையும் போட்டு புதைச்சிட்டாங்க.

சரி, விஷயத்துக்கு வருவோம். ஒரு முறை ஆவி அமுதாவை பேட்டியெடுக்க போயிருந்தேன். அப்போது இவரை ஒரு தனியார் தொலைக்காட்சியில் வாரா வாரம் காட்டிக் கொண்டிருந்தார்கள். இவர் டாக்டர் இல்லை. ஆனா ஆபரேஷன் செய்வார். இவர் கடவுள் இல்லை. ஆனா தீட்சை கொடுப்பார் என்ற ரேஞ்சில் போட்டு தாக்க, நாலு பேர் உட்கார கூட இடமில்லாத அவர் வீட்டில் நிமிடத்திற்கு நானு£று பேர் கூடினார்கள். அரசியல் பேரணிக்கு ஆள் தேவைப்பட்டால் அப்படியே வந்து லம்ப்பாக அள்ளிக் கொள்ளலாம் என்கிற அளவுக்கு வியாதியஸ்தர்கள், கவலையஸ்தர்கள், கண்ணீரஸ்தர்கள் கூடினார்கள் தினந்தோறும்.

குப்புசாமி ஐயா என்ற பரிசுத்தமான ஆவிதான் எனக்குள் வருகிறது. ஆறுமுகம் ஐயா என்ற மருத்துவருடைய ஆவிதான் எனக்குள் இறங்கி நோய் தீர்க்கிறது என்றார் அமுதா. உள்ளுக்குள்ளே டப்பாங்குத்து ஆடினாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் "நீங்க ஆவியை கூப்பிடுறதை நான் பார்க்கணுமே" என்றேன். பிரபல பத்திரிகையில் பேட்டி வரப்போவதால் ஆவி, 'ஆமாம் சாமி' போட்டது. ஒரு இருட்டறையில் அமர்ந்தார் ஆவி அமுதா. முன்னால் ஒரே ஒரு மெழுகுவர்த்தி. சரக்கென்று கண்களை மூடி சுவிட்ச் போட்ட மாதிரி, "ம்ம் ம்ம் சொல்லுங்கள்" என்றார் புலவர் கீரன் ரேஞ்சுக்கு. அற்புதமான து£ய தமிழ். கேள்வியை நான் கேட்க, பதிலை ஆவி சொல்லிக் கொண்டிருந்தது. ஐ மீன் அமுதாவுக்குள் இருந்த ஆவி. பார்த்ததை அப்படியே எழுதினேன். பத்திரிகையிலும் வந்தது.

ஏற்கனவே பேய் விழுந்தால் பிசகிப்போகிற அளவுக்கு கூட்டம். இதில் எங்கள் இதழும் வெளிவந்ததால் எக்கச்சக்க கூட்டம். ஃபீட் பேக் தெரிந்து கொள்ள நேரில் போயிருந்தேன். நான் வந்ததே தெரியாமல் கால்ஸ்(?) அட்டர்ன் பண்ணிக் கொண்டிருந்தார் அமுதா. பேட்டியில், "இதை ஒரு சேவையாக செய்கிறேன்" என்றவர், நேரில் கிட்டதட்ட வசூலே பண்ணிக் கொண்டிருந்தார். அவ்வளவு கூட்டத்தில் நான் வந்தது தெரியவில்லை அவருக்கு.

யாரோ ஒருவர் ஏதோ பிரச்சனையை சொல்லி "குழந்தையை வீட்டிலே வந்து பாருங்க" என்று கெஞ்சிக் கொண்டிருந்தார். அமுதாவின் அம்மாவோ, "இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஆவிக்கு லீவு. அதை எழுப்பி அழைச்சுட்டு வரணும்னா டபுள் சம்பளம் ஆவும், பரவால்லயா" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆஹா, தப்பு பண்ணிட்டமோ என்று நினைத்த நான், அதன்பின் தொடர்ந்து சில நாட்கள் அங்கே போய் நோட் பண்ண ஆரம்பித்தேன். "என் மேல் வள்ளலார் ஆவி வருது (?)" என்று ஒருமுறை சொன்னார் அமுதா. "நான் இதுவரைக்கும் அவரு எழுதின ஒரு பாட்டை கூட படிச்சதில்லே. ஆனா நான் தியானத்தில் இருக்கும்போது எந்த வரியை வேணும்னாலும் கேளுங்க. சொல்றேன்"னாரு. ஆனா, திடு திப்புன்னு ஒரு நாள் அவங்க வீட்டுக்கு சொல்லாம நுழைஞ்சப்போ அவர் டேபிளில் வள்ளலார் கவிதை தொகுப்பை பார்த்தேன். "நான் உப்பு போட்டு சாப்பிடறதே இல்லை" என்றார் பேட்டியில். ஆனால், இன்னொரு சந்தர்பத்தில் அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே மாட்டினார் என்னிடம். எதையும் வெளிகாட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து அவதானித்து மறுபடியும் ஒரு கட்டுரை எழுதினேன். இந்த முறை செம லாக்! புக் கடைக்கு வந்த அதிகாலையிலேயே 'துப்ர பாதம்' என் போனில். பேசியது, ஸாரி... ஏசியது அமுதாவேதான்!

கொஞ்ச நாளைக்கு கெட்ட கனவுகள் வந்தால் கூட, ஆவியோட வேலையாக இருக்குமோ என்று அஞ்சினேன். காலம் உருண்டது. ஒரு நாலைந்து மாதங்களுக்கு முன், பிஆர்ஓ சுரா போன் பண்ணினார். "அந்தணன், அமுதான்னு ஒரு டாக்டர். காட்டிலே இருக்கிற மூலிகையை ஆவியின் உதவியோட கண்டுபிடிச்சு தீராத நோயெல்லாம் தீர்க்கிறாங்க. ஒரு ஆர்ட்டிகள் போட முடியுமா? அடையாறுலதான் க்ளினிக். வர்றீங்களா"ன்னாரு. "சார், ஆவி அமுதாவா"ன்னேன் பளீர்னு. "ஆமா, ஆமாம்" என்றவரிடம், "சார் எனக்கும் அந்த பொண்ணுக்கும் ஆவாது. விடுங்க" என்றேன். காரணத்தை கேட்டவரிடம், மொத்த கதையையும் சொல்ல, "அது நடந்து ஆறேழு வருஷம் இருக்கும்லே, வாங்க மறந்திருக்கும்"னாரு.

இது பெரிய பங்களா. நான் முதலில் அவரை பார்த்த அந்த சிங்கள் பெட்ரூம் பிளாட் கண்ணில் நிழலாடிவிட்டு போனது. வரவேற்பறையில் காத்திருந்தேன். சிறிது நேரம் கழித்து வந்த அமுதா, நான் முன்பு பார்த்த ஏழை அமுதா அல்ல. பார்க்கவே செழிப்பாக இருந்த பணக்கார அமுதா. (ஆவிகள் வாழ்க) கொஞ்சம் உற்றுப் பார்த்தவர், "நீங்க அந்தணன்தானே?" என்றார். இனி வெளங்குன மாதிரிதான்னு நினைச்சுகிட்டே ஆமான்னேன். "நீங்க என்னை பற்றி தப்பு தப்பா எழுதினீங்க. அதே பத்திரிகையிலே என்னை பற்றி கொஞ்ச நாளிலேயே நல்லா போட்டாங்க தெரியுமா"ன்னாரு. நான் "இல்லீயே" என்று சொல்ல, அவர் "ஆமாம், வந்திச்சு" என்று சொல்ல, மறுபடியும் ஒரு வார்.

பதறிப்போன சுரா, லாவகமாக இடையே நுழைஞ்சு வெளியே அழைத்து வந்தார். பேட்டி ஆரம்பிக்கவேயில்லை. இப்போது அமுதா இன்னும் வளர்ந்திருக்கிறாராம். கேள்விப்பட்டேன்...!

Tuesday, April 7, 2009

ப்ரீத்திவர்மாவும் ஒரு எண்ணெய் குளியலும்...

முதுகை பார்த்தே 'முன்கதை சுருக்கம்' கண்டுபிடிக்கிற ஆளு நானு. ஆனாலும், எனக்கு முன்னாடி உட்கார்ந்திருந்த நடிகையை 'பின்னாடி' பார்த்திட்டு 'முன்னாடி' யாராக இருக்கும்னு யூகிக்கவே முடியலே! அந்த ஆதார சுருதி கொஞ்சம் சேதாரம் ஆகியிருந்ததுதான் இதற்கு காரணம்.

மெல்ல அமலன் பக்கம் திரும்பி 'முன்னாடி யாருங்க?' என்றேன். "லேட்டா வந்தா இப்படிதான், ப்ரீத்தி வர்மா"ன்னாரு அசுவாரஸ்யமாக! விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் நடித்த 'மின்சாரம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்தான் இந்த கூத்து. கொஞ்சம் லேட்டாக போனதால், இருட்டில் இருட்டையும் சேர்த்து தடவிக் கொண்டு அமர்ந்தேன். நான் போய் கொஞ்ச நேரம் கழித்துதான் சிறுத்தையே வந்தது. அது சீறுகிற நேரத்திற்குள் 'முன்னாடி' நோட்டம் விட்டதன் விளைவுதான் இந்த விசாரிப்பு.

இடையில் தன்னை விபச்சாரத்திற்கு தள்ள முயன்றதாக சொந்த(?) அம்மா மீதே போலீசில் புகார் கொடுத்து, பத்திரிகைகளின் பசிக்காகவே கொஞ்ச காலம் 'மெஸ்' நடத்தினாரே, அதே ப்ரீத்திவர்மாதான் இவர். திருமா நடித்த முதல்படமான 'அன்புத்தோழி'யில் சிறுத்தைக்கு ஜோடி இவர்தான்! அதனால்தான் இந்த சிறப்பு மரியாதை!

'ரிவைன்டிங்' பட்டனை மெல்ல சுழற்ற ஆரம்பித்தேன். ப்ரீத்தி நடித்த முதல் படம் (மாறனோ என்ன மண்ணாங்கட்டியோ?) ரிலீஸ் ஆகாத நேரம். குமுதத்திலிருந்து பெ.கணேஷ் போன் அடித்தார். "தலைவா... தீபாவளி வருது. ஸ்ரீகாந்துக்கு ஒரு நடிகை எண்ணெய் தேய்ச்சு விடுற மாதிரி (தலைக்குதான்) ஒரு மேட்டர் பண்றோம். கொஞ்சம் உங்க ஹீரோகிட்ட கேட்டு பிக்ஸ் பண்ணி கொடுங்களேன்" என்றார். ரோஜாக்கூட்டம் தொடங்கி, கிழக்கு கடற்கரை சாலை வரை ஸ்ரீக்கு பர்சனல் பிஆர்ஓ நான்தான். கி.க.சா நான் தயாரிச்ச சொந்த படம். 'நொந்த' படம்னு வேணும்னா திருத்தி வாசிக்க இந்த நல்லுலகுக்கு முழு உரிமை உண்டு. ஸ்ரீ யின் பிஆர்ஓங்கிற உரிமையில் என்னிடத்தில் கேட்டார் கணேஷ்.

"அதுக்கென்னா, முடிச்சுருவோம். ஆனா நடிகை யாருங்கிறதை நீங்களே ஃபிக்ஸ் பண்ணிக்கோங்க" என்றேன். அப்போது 'ஜுட்' படப்பிடிப்பு என்று நினைவு. சில மணி நேரத்திற்குள்ளாகவே "தலைவா, நடிகைகிட்டே பேசிட்டேன். வளர்ந்து வருகிற நடிகை"ன்னாரு மொட்டையாக. இந்த இடத்திலே அவருகிட்டே நான் கேட்ட வினா சென்சாருக்குரியது என்பதால், வேணாம்! "அவங்க வீட்டுக்கு போயி அவங்களையும் பிக்கப் பண்ணிட்டு போயிரலாமா?" என்றார். "ஆஹா, அதுக்கென்ன" என்றேன். சொன்ன மாதிரியே ஒரு வீட்டுக்கு அழைத்துப் போனார்.

போனபின்தான் "இவங்க எதிலேங்க நடிக்கிறாங்க?" என்றேன் கணேஷின் காதோடு காதாக! "நல்ல பொண்ணு தலைவா. கொஞ்சம் மேலே ஏத்தி விடுவோமேன்னுதான். பெரிய ஹீரோ காம்பினேஷன்ல ஸ்டில் வந்தா, அவங்களுக்கும் ஒரு லிஃப்ட்தானே"ன்னாரு. சரி போகட்டும் என்று ப்ரீத்தியின் காரிலேயே ஏறிக்கொண்டு ஷ¨ட்டிங் ஸ்பாட்டுக்கு போனோம். வழியிலேயே தனது 'ஸ்தல புராணத்தை' சொல்ல ஆரம்பிச்சுது ப்ரீத்தி. சொன்னதை கேட்டா அம்பானிக்கு பேத்தியா இருப்பாங்களோங்கிற சந்தேகம்தான் வரும். "வீட்டுலே நாலு கார் இருக்கு. எனக்கு எது பிடிக்கும்னு அப்பா காலையிலேயே கேட்டுப்பார். நான் எந்த காரை சொல்றேனோ, அதை விட்டுட்டு வேற காரைதான் எடுத்திட்டு போவாரு"ங்கிற ரேஞ்சில் ஒரே செல்ஃப் ஸ்டோரி! பொண்ணு நடிக்க வர்றதுக்கு முன்னாடியே பெரிய 'ரிச் கேர்ள்' ஆக இருக்கும் போலிருக்கும்னு நினைச்சுக்கிட்டேன்.

நினைத்த மாதிரியே எல்லாம் நடந்தது. ஷாட் பிரேக்கில் ஸ்ரீ க்கு எண்ணெய் தேய்ச்சு விட்டார் ப்ரீத்தி. 'பளிச் பளிச்' என்று பிளாஷ் மழை அடித்தார் அண்ணன் சித்ராமணி. "அசைன்மென்ட் ரொம்ப அற்புதமா வந்திருக்கு தலைவா"ன்னாரு கணேஷ். ஒரு மணி நேரம்தான் இந்த சந்தோஷம். கொஞ்ச நேரத்திலேயே போன் வந்தது ஸ்ரீகாந்தின் சித்தப்பா சுந்தரிடமிருந்து.

"சார், ஒரு பொண்ணை குமுதத்துக்காக கூட்டிட்டு வந்தீங்களே, அது ரிச் கேர்ள்ளாமே சார்"னாரு. அவர் என்ன கேட்க வர்றாருன்னே புரியாம, "ஆமா சார். அந்த பொண்ணு ரொம்ப ரிச் தான் போலிருக்கு. வீட்லே நாலு கார் இருக்காம். அதில்லாம ரெண்டு மூணு பங்களா கூட இருக்குன்னு சொல்லிச்சு சார்" என்றேன். எதிர்முனையில் விழுந்து விழுந்து சிரிச்சாரு சித்தப்பா! "அந்தணஞ்சாரு, என்னா போங்க. அந்த பொண்ணு சினிமாவிலே தினமும் 800 ரூவா சம்பளம் வாங்கிட்டு ரிச் கேர்ள்ளா நடிப்பாங்களே, அந்த கேட்டகிரியாமே?"ன்னாரு சிரிப்பை அடக்க முடியாமல்! "ஸ்ரீ கூட யாராவது ஒரு பெரிய நடிகை இந்த அசைன்ட்மென்ட்டை பண்ணினா நல்லாயிருக்கும்ல. முடிஞ்சா இந்த போட்டோவை 'டிராப்' பண்ண சொல்லுங்களேன்"னாரு.

"ந்தா வெயிட் பண்ணுங்க. கணேஷ்கிட்ட பேசிடுறேன்" என்றேன். "பாவம் தலைவா" என்று பரிதாபப்பட்டுக் கொண்டே ப்ரீத்தியின் போட்டோக்களை தியாகம் செய்தார் கணேஷ். மறுபடியும் அந்த அசைன்ட்மென்டுக்கு விந்தியா வந்தார். அந்த வார குமுதத்தில் விந்தியா உதவியோடு ஸ்ரீகாந்தின் எண்ணெய் குளியலும் வந்தது.

விழா நடந்து கொண்டிருந்தது. ப்ரீத்தி திரும்பி பார்ப்பதற்குள் நான் புறப்பட்டேன். 'ப்ரீத்திங்கிற மின்சாரம் இப்படி பேட்டரியாயிடுச்சே' என்ற கவலையோடு!

Monday, April 6, 2009

"டேய்... மாப்ளே, இவனை ஒரு போட்டோ எடு...."

சென்னையில் வலம் வரும் எந்த பஸ்சை பார்த்தாலும், சப்பாத்திக்கு மாவு பிசையுற மிஷின் மாதிரியே தோன்றும் எனக்கு. அதுவும் பீக் அவர்சில் பயணம் செய்பவர்களின் பாடு இன்னும் கொடுமை. பாக்கு இடிக்கிற உரலுக்குள் சிக்கி கொண்டது மாதிரியே பிதுங்கி போவார்கள். ஷேர் ஆட்டோக்களின் கருணைக்கும் தப்பி, இப்படி சிக்கிக் கொள்கிறவர்களை பற்றி எனக்கு அதிக கவலை உண்டு.

தொண்டைக்குள் சிக்கிக் கொண்டு பாடாய் படுத்துகிற மாத்திரை மாதிரியே இன்னும் சில பஸ்கள். மேம்பாலத்தின் நடுவிலோ, அல்லது சுரங்க பாலத்தின் மத்தியிலோ 'பொசுக்' என்று விழுந்துவிடும். இறங்கி தள்ள எவருக்கும் பொறுமை இருக்காது. கிடைக்கிற சந்தில் ஊர்ந்து, கடந்து, மறுபக்கத்தை அடைகிற இரு வீலர் உரிமையாளன் நான் என்பதில் எனக்கு எப்போதும் ஒரு பெருமித 'ஸ்மைல்' உண்டு.

சாலையில் நடக்கும் இத்தனை களேபரத்திற்கு நடுவில் செக்கிங் என்ற பெயரில் ஏறி, அதே இடத்திலேயே பஸ்சை நிறுத்தி 'கொலகார பாவிங்க' லிஸ்ட்டில் தன்னையும் இணைத்துக் கொள்வார்கள் செக்கர்கள். அப்படி ஒரு செக்கருக்கும், என் நண்பருக்கும் இடையே நடந்த சுவையான சம்பவம் இது.

நண்பர் நெல்லை பாரதி அப்போது ஒரு புலனாய்வு இதழில் நிருபராக இருந்தார். காலை பத்து மணிக்கு சுமாருக்கு இவர் வந்து கொண்டிருந்த பஸ்சில் ஏறினார் செக்கர் ஒருவர். நல்ல கோடை காலம். பஸ்சை ஜெமினி பாலம் அருகே ஓரம் கட்டிவிட்டார் டிரைவர். டிக்கெட், டிக்கெட்... என்று பரிசோதித்துக் கொண்டே வந்தார். அதற்குள் பலர் உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... என்று பெருமூச்சு விட்டார்கள். அடிக்கடி வாட்சை பார்த்துக் கொண்டார்கள் பலர். ஏனென்றால் அது அலுவலகம் போகிற நேரம்.

பாரதி சும்மாயில்லாமல், "பீக் அவர்ஸ்ல செக் பண்றீங்க. பரவால்ல. வண்டிய எதுக்கு நிறுத்தறீங்க? அது பாட்டுக்கு போகட்டுமே, நிறைய பேரு ஆபிசு போகணும்லே..." என்றார். செக்கருக்கு மூக்கு மேல் மிளகாய் பொறிந்தது. "யோவ்... முதல்ல உன் டிக்கெட்டை எடு" என்றார். அவ்வளவுதான், பாரதிக்குள் இருந்த அயோத்தி குப்பம் வீரமணி 'விசுக்' என்று எழுந்து கொள்ள, செக்கரை இரண்டு கைகளாலும் இறுக கட்டிக் கொண்டார். "டேய்... மாப்ளே, இவனை ஒரு போட்டோ எடு. முதல் பக்கத்திலே போட்டு தாளிச்சிடலாம்" என்றார். பக்கத்தில் இருந்த போட்டோகிராபர் அவசரம் அவசரமாக கேமிரா பையை ஓப்பன் செய்ய, அடடா... பத்திரிகைகாரனுககிட்ட மாட்டிகிட்டமே என்பதை உணர்ந்து பாரதியின் கைகளில் இருந்து பிடுங்கிக் கொண்டு பஸ்சில் இருந்து கீழே குதித்தார் செக்கர்.

பின்னாலேயே நெல்லை பாரதியும் குதிக்க, அயன் படத்தில் வருகிற மாதிரி பிரமாதமான சேசிங். கொஞ்ச து£ரம் விரட்டிக் கொண்டே ஓடிய நெல்லை பாரதி, பின்னால் திரும்பி செக்கர் வந்த ஜீப்பை பார்த்ததும் ஓட்டத்தை நிறுத்திவிட்டார். "எப்படியிருந்தாலும், இந்த ஜீப்பை எடுக்க நீ வந்துதானே ஆகணும் மாப்ளே, வா" என்பது அவரது கணக்கு. பஸ்சை போக சொல்லிவிட்டு இவரும் போட்டோகிராபரும் செக்கரின் ஜீப்பில் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். நேரம் கடந்து கொண்டிருந்தது. இவர்களும் போவதாக இல்லை. செக்கரும் வருதாக இல்லை. சுமார் இரண்டு மணி நேரம் கழித்து ஒருவர் மெல்ல இவர்கள் அருகில் வந்து, "சார்... செக்கரு தெரியாம பண்ணிட்டாராம். உங்களுக்கு பயந்து வள்ளுவர் கோட்டம் சந்துக்குள்ளே நிக்கிறார். நீங்க போயிட்டீங்கன்னா இந்த ஜீப்பை எடுத்திட்டு போயிடுவாராம்" என்றார். "எங்க நிக்கிறாரு, காட்டு?" என்று வந்தவரை இழுத்துக் கொண்டு கிளம்பினார்கள் நெல்லையும், போட்டோகிராபரும்.

சொன்ன மாதிரியே வள்ளுவர் கோட்டம் சந்துக்குள் பம்மிக் கொண்டு நின்றார் செக்கர். து£ரத்திலேயே அவரை பார்த்துவிட்ட நெல்லை, பின்புறமாக ஓடிப்போய் அவரை இறுக்கமாக கட்டிக் கொண்டார். "டேய் மாப்ளே, எட்றா போட்டோவ" என்றார். செக்கர் திமிர, நெல்லை இறுக்க, இறுதி வெற்றி போட்டோகிராபருக்கு.

மார்பளவு போட்டோ போதும் என்றாலும், பின்னால் நின்று இறுக்கிய பாரதியின் கைகளும் அந்த மார்பளவு போட்டோவில் மறைக்க முடியாமல் விழுந்திருந்தது. "போடுங்க அந்த கையோடவே" என்றார் எடிட்டர். எல்லாருக்கும் கையளவு மனசு. பாரதிக்கு மட்டும்தான் 'கையளவு' துணிச்சல்!

Sunday, April 5, 2009

எம்.பி தேர்தலில் நமீதா?

ரொம்ப நாள் கழித்து சாதிக் பேசினார். சார், நமீதா வருமான்னாரு மொட்டையாக! இஸ்திரி பெட்டியே காதுல நுழைஞ்ச மாதிரி, "சாதிக் சார்... என்னா கேக்கிறீங்க, புரியிலேயே"ன்னேன். "இல்ல சார். திருப்பதியிலே ஃபிரண்டு ஒருத்தரு ஹோட்டல் கட்டியிருக்காரு. நமீதா வந்து ரிப்பன் கட் பண்ணா நல்லாயிருக்குமேன்னு... யாரை புடிச்சா நமீதாட்ட பேசலாம்"ணாரு.

"நமீதாவோட பிஆர்ஓ நம்ப ஃபிரண்டுதான். பேசிடலாம். நிகழ்ச்சி என்னைக்கு?"

"நமீதா என்னைக்கு வர்றாங்களோ, அன்னைக்கு"ன்னாரு சாதிக் தீர்மானமாக! "அப்படின்னா விடுங்க, நண்பர்கிட்டே கேட்டுட்டு சொல்லிடறேன்"னு சொல்லிட்டு நண்பருக்கு போன் அடிச்சேன். "என் ஃபிரண்டோட ஃபிரண்டாம். திருப்பதியிலே ஓட்டல் திறக்கணுமாம். நமீதா எவ்ளோ கேப்பாங்க"ன்னேன். "அண்ணே, மேடத்திட்டே பேசிட்டு திரும்ப கூப்பிடட்டுமா" என்றவர், அடுத்த அரை மணி நேரத்தில் மறுபடியும் லைனுக்கு வந்தார்.

"ரெண்டு ரூவாண்ணே.... போறதுக்கு 'இன்னோவா' வேணும். அவங்களோட ஃபிரண்டு ஒருத்தரும் கூட போவாங்க. முதல் நாள் நைட்டே மேடம் திருப்பதிக்கு வந்திருவாங்க. ஆனா, எல்லாம் பீஸ் ஃபுல்லா இருக்கணும். ஏதாவது, தப்பா நடந்துகிட்டா மேடம் அடுத்த நிமிஷம் அங்கே இருக்க மாட்டாங்க. நீங்க சொல்றீங்கன்னுதான்...." இழுத்தார் நண்பர். "சேச்சே, எல்லாம் ஜெனியூனான ஆளுங்க. அட்வான்ஸ் எவ்வளவு? எப்போ பணத்தோட வரணும்?" மளமளவென்று அலைபேசியில் மேட்டரை முடித்துவிட்டு சாதிக்கிடம் விஷயத்தை பாஸ் பண்ணினேன்.

மறுநாள் மதியம் பணத்தோடு நமீதா வீட்டுக்கு போவதாக ஏற்பாடு. வள்ளுவர் கோட்டத்துக்கு எதிரிலேதான் மேடம் வீடு. நான் வாசலில் நிக்கிறேன் வந்திருங்கன்னாரு பிஆர்ஓ. நானும் சொன்ன நேரத்திலே டான்னு ஆஜராயிட்டேன்.

ச்சும்மா ஜிவ்வுனு படகு காரிலே வந்திறங்கினார் சாதிக். கூடவே நம்ப ஜே.கே.ரித்தீஷ்! முக்கால்வாசி முகத்தை மூடிக் கொண்டிருந்தது கூலிங் கிளாஸ். கண்ணை பறிக்கும் ஜிவு ஜிவு டி-ஷர்ட். அசத்தலாக இறங்கினார். பரஸ்பர அறிமுகத்திற்கு பிறகு, "சாதிக் சார், ரித்தீஷ்தான் நீங்க சொன்ன ஃபிரண்டுன்னு சொல்லவேயில்லீயே"ன்னேன். "இல்ல சார், ஹோட்டல் அவருதில்லே, அவரோட ஃபிரண்டுது"ன்னாரு.

அந்த நேரத்தில் ரித்தீஷ§க்கு என்ன நினைப்பு இருந்திருக்கும்? கானல் நீர் படம் வந்த நேரம் என்பதால் திரும்பிய இடத்திலெல்லாம் சின்ன எம்ஜிஆர் மாதிரி இவரது போஸ்டர்கள்தான் இருந்தன. அழைக்கிறார் அண்ணன் என்று இவர் கைகூப்பிய போஸ்டர்களில், ரசிகர்களை இமயமலைக்கோ, கார்கிலுக்கோ அழைக்கவில்லை ரித்தீஷ். தியேட்டருக்குள்ளே படம் பார்க்கதான் அழைத்திருந்தார். (போஸ்டருக்கு கீழே பிரியாணி இலவசம்னு எழுதியிருந்திச்சான்னு கவனிக்கலே) எழுத்துக்கூட்டி படிக்க தெரியாதவனாக இருந்தாலும் கூட, "யாருய்யா இந்தாளு" என்று ஆர்வமாகி படிக்க வைக்கிற முயற்சியாக இருந்தது அந்த விளம்பரங்கள்.

நமீதா தன்னை பார்த்ததும் 'ஓ, நைஸ்... உங்களை சந்திப்பேன்னு என் வாழ்நாளில் நினைக்கவே இல்லை. ஒரு ஆட்டோகிராப். ப்ளீஸ்'னு கேட்கப் போவதா நினைச்சிருப்பாரு போல... எல்லாருக்கும் முன்னே ஆர்வமுடன் நடை போட்டார்.

அவ்வளவு பெரிய நடிகையின் வீடாகவே இல்லை அது. ரிசப்ஷனே கோடவுன் மாதிரி இருந்தது. திரும்பிய இடமெல்லாம் தட்டு முட்டு சாமான்கள். பெஞ்சா, சோபாவா? என்று யூகிக்க முடியாத ஒரு இடத்தில் உட்கார்ந்தோம். முன்னதாக ஓடிவந்த நாய் ஒன்று எங்களை ஒரு கொஞ்ச நேரம் 'லுக்' விட்டது. அப்படியே கொஞ்சம் ஏற இறங்க பார்த்தது ரித்தீஷை! பிறகு என்ன நினைத்ததோ, நமீதாவின் ரூமிற்குள் போனது. திரும்ப வரவேயில்லை.

மேக்கப் இல்லாத நமீதா, மேக்கப் நமீதாவை விட அழகாக இருந்தார். ரித்தீஷை அறிமுகப்படுத்தும்போது, "இவர் வேகமாக வளர்ந்துகிட்டு வர்ற ஹீரோ. இப்போ கூட கானல்நீர்னு ஒரு படம் ரிலீஸ் ஆயிருக்கு"ன்னு பிஆர்ஓ சொல்ல, முகத்தில் எவ்வித ஆச்சர்யத்தையும் காட்டாத நமீதா, ஒப்புக்கு ஒரு 'ஹாய்' சொல்லிவிட்டு அங்கே கிடந்த பழைய ஸ்டூலில் அமர்ந்து கொண்டார். பலு£ன் வெடித்தாலாவது சத்தம் பெரிசா இருக்கும். இங்கே காற்று போனது மாதிரி புஸ்ஸ்ஸ்ஸ்....! என்ன நினைத்தாரோ, "நான் வெளியே நிக்கிறேன்" என்று எழுந்து போய்விட்டார் ரித்தீஷ்.

திருப்பதி நிகழ்ச்சி எவ்வித குளறுபடியும் இல்லாமல் நடந்தது. எல்லாரும் கண்ணியமாக நடந்துகிட்டதா பிஆர்ஓ விடம் சொன்னாராம் நமீதா.

பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பாக நிற்கிறார் ரித்தீஷ். நமீதாவை சந்திக்கிற அந்த நேரத்தில் அவர் புதுமுகம். இப்போது ஊர் உலகத்துக்கெல்லாம் தெரிந்த பொதுமுகம்! காலம் சுழல்வதை பார்த்தால், ரித்தீஷ§க்காக நமீதாவே பிரச்சாரம் செய்ய வந்தாலும் வரலாம்! யார் கண்டது?