Tuesday, April 28, 2009

ராஜன் பே..., சுரதா பே..., முனுசாமி பே..., மைக் பே...?!

"சாரு பெரிய கவிஞ்சரு"ன்னு மாசத்துக்கு ஒருத்தரையாவது எங்கிட்ட அறிமுகப்படுத்துவாங்க யாராவது. வாத்தியாருன்னா இப்படி, வாட்ச்மேன்னா இப்படி, அதே மாதிரி கவிஞ்சருன்னா இப்படி இருக்கணும்னு யாரு சொல்லி வச்சாங்களோ? நான் பார்த்த அநேக கவிஞ்சருங்க, நிக்க வச்சு 'அயர்ன்' பண்ணிய மாதிரியே இருப்பாங்க. பா.விஜய், நா.முத்துக்குமார், யுகபாரதின்னு நல்லா எழுதுறவங்கள்ளாம் நிகழ்காலத்துக்கு ஏத்த மாதிரி இருக்கும்போது, ஏ.தமிழா....ன்னு இனிஷியல் போட்டு எழுதுற ஆளுங்களோட அட்டகாசம் இருக்கே, ரொம்ப கொடுமை சார்.

அனலேந்தின்னு ஒருத்தர். இவரு இயற்பெயர் பிச்சாண்டியோ என்னவோ? (ரொம்ப பேரு பேர மாத்திக்கிறதுக்காகவே கவிதை எழுதுறாய்ங்களோ?) வாரா வாரம் அவரு கவிதை தபால்ல வந்திரும். ஒரு முறை பிரசுரித்தால் அதற்கு தண்டனையாக மறுநாளே பத்து கவிதை அனுப்புவாரு! 'ஏ தமிழா, நீ கை நீட்டினால் இலங்கை ஒரு சாண்...' அப்பிடின்னு எழுதியிருந்தாரு. நேர்ல வந்தா, "எங்கே அளந்து காட்டு"ன்னு கேட்கலாமான்னு கோவம் வரும். இந்த மாதிரி ஆளுங்களுக்கு மத்தியிலே நான் வியக்கிற நல்ல கவிஞர்களும் இருந்தாங்க. இருக்காங்க.

ராஜன் பே! (பயப்படாதீங்க. இந்த பே அவரோட இனிஷியல். என்ன சவுரியத்துக்காகவோ அதை து£க்கி பின்னாடி போட்டிருக்காரு. அவ்வளவுதான்) இவரு ஒரு உதவி இயக்குனரு. எனக்கு தெரிஞ்சு சரத்குமார் பீக்லே இருக்கும் போது அவருக்கு கதை சொல்ல கிளம்பி, இப்போ வெண்ணிலா கபடிக்குழு ஹீரோ வரைக்கும் வந்திட்டாரு. "கதையை கேட்டு கரகரன்னு அழுதிட்டான் மனுஷன்னுவாரு..." ஆனா, கால்ஷீட்டுதான் ஒருத்தருமே கொடுக்கலே. (எதுக்காக அழுதாய்ங்களோ?) "நான் காத்து மாதிரி. இந்த உலகமே அழிஞ்சாலும் நான் இருப்பேன். சலிக்காம கதை சொல்லிகிட்டே இருப்பேன்"னுவாரு. உலகமே அழிஞ்ச பிறகு யாருக்குய்யா கதை சொல்வேன்னு கேட்டு அவரு மனசை புண்படுத்துவானேன்?

இவரும் ஒருநாளு கவிஞ்சராயிட்டாரு. ஏதோ சைக்கிள் பஞ்சராயிட்டுன்னு சொல்ற மாதிரி சொல்றீயேன்னுதானே கேட்கிறீங்க? அந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தா தெரிஞ்சுருக்கும்டீ உங்களுக்கு. அமரர் ஆகிவிட்ட உவமைக்கவிஞர் சுரதாதான் இந்த புத்தகத்தை வெளியிட வந்திருந்தார்.

பெருங்கூட்டம். சாயங்கால நேரத்திலே இந்த மாதிரி நிகழ்ச்சி எங்கே நடக்கும்னே அலையுற சக புலவர் பெருமக்களும் இந்த நாட்டில் இருக்கதானே செய்யுறாங்க? இந்த கூட்டத்திலே முல்லை பாண்டியன்னு ஒருத்தரும் வந்திருந்தாரு. "கவிஞர் வந்திட்டாரா?"ன்னு அடிக்கடி கேட்டுக்கிட்டேயிருந்தாரு. ரொம்ப து£ரத்திலேயிருந்து பஸ் பிடிச்சு வந்திருந்தாரு. சுரதாவுக்கும் இவருக்கும் ஒரு பிசிராந்தையார் பிரண்ட்ஷிப் இருந்திருக்கும் போல. அதாவது இரண்டு பேரும் நேருக்கு நேர் சந்திக்காமலே பிரண்ட்ஷிப் வச்சிருந்தாங்க. இவருக்கு அவரு கடிதம் எழுதறதும், அவருக்கு இவரு கடிதம் எழுதுறதும், தபால் துறையே வியக்கிற அளவுக்கு இருந்திருக்கிறது. இம்புட்டு வெவரத்தையும் முல்லை பாண்டியனே சொன்னாரு.

கவிஞர் சுரதா வந்ததும், ஆளாளுக்கு பாய்ந்து சென்று அவரை வரவேற்றார்கள். இந்த கூட்டத்தில் இடித்து பிடித்துக்கொண்டு முன்னால் வந்த முல்லை பாண்டியன், சுரதாவின் கையை பிடித்துக் கொண்டு "நான்தான் முல்லை பாண்டியன்" என்றார் நெகிழ்ச்சியோடு. அதற்கு சுரதா சொன்ன பதில் இருக்கே, பயங்கரம். "இருந்திட்டு போ, அதுக்கென்னா இப்போ?"ன்னாரு கொஞ்சம் கூட இரக்கமில்லாமல்! அப்பவே தெரிஞ்சுருச்சு. இந்த விழா சூப்பரா இருக்கும்டான்னு.

வரவேற்புகள், பொன்னாடை போர்த்துதல்னு ஒரே ஃபார்மாலிட்டிஸ். ஒரு வழியாக முடிந்து புத்தகத்தை வெளியிட்டார் சுரதா. வாழ்த்தி பேசணுமே? கண்ணாடியை போட்டுக்கொண்டு முதல் பக்கத்தை பிரித்தார். புத்தகத்தின் தலைப்பை படிச்சுட்டு, எழுதுனவன் பேரு என்னய்யான்னு முணுமுணுத்துக் கொண்டே, "ஆங்... ராஜன் பே" என்றார். "என்னாய்யா ராஜன் பே? நான் கூடதான் சுரதா பே. அவன் கூடதான் முனுசாமி பே. ...தோ இது கூடதான் மைக் பே. ராஜன் பேயாம். சரி போ. என்ன எழுதியிருக்கே?" என்றவர், முதல் கவிதையை ரொம்ப கஷ்டப்பட்டு வாசித்தார்.

"அடேய்... வரிய மடக்கி மடக்கி போட்டு கவிதைன்னு சொல்றே? சொல்லிட்டு போ. பிரஸ்சுக்கு பணத்தை கொடுத்திட்டீயா"ன்னாரு. இதற்குள் வெட்கம் பிடுங்கி திங்க, ஒரமாக நின்றிருந்த ராஜன் பே, "கொடுத்தாச்சு" என்றார் அங்கிருந்தபடியே. "என்னாத்த கொடுத்தே? வீட்டுலே இருக்கிற வெத நெல்லை வித்து கொடுத்திருப்பே? ங்கொப்பனை கேட்டா தெரியும். நீயெல்லாம் கவிதை எழுதனுமா?" என்றார் ஒரேயடியாக! "சரி போ என்னை கூப்பிட்டுட்டே. நல்லாயிருக்குன்னு சொல்ல முடியலேன்னாலும் போம்போது ஆளுக்கொன்னு வாங்கிட்டு போங்கப்பா. பாவம் வெத நெல்லெல்லாம் வித்துட்டு புத்தகம் போட்டிருக்கான்"னு சொல்லிவிட்டு மேடையை விட்டு கீழிறங்கினார்.

நானும் ஒரு புத்தகம் வாங்கிட்டு வந்தேன். படிச்சு முடிச்சுட்டு சுரதா இருக்கிற திசை நோக்கி மானசீகமா வணங்கினேன். இன்னும் கொஞ்சநாள் நீங்க இருந்திருந்தா, கொசுக்கடி குறைஞ்சுருக்குமேய்யா....!

17 comments:

Temple Jersey said...

Kalakarringa..Please continue to share the experience.

Nattamai
USA

Cable சங்கர் said...

அருமை...

அன்புச்செல்வன் said...

...ண்ணா அந்த புத்தகம் இருந்த கொஞ்சம் எங்களுக்கும் அனுப்புங்க, நாங்களும் படிச்சுட்டு நீங்க இருக்கிற திசைய பார்த்து மானசீகமா வணங்குறோம்.

Very interesting..

Mani said...

சார் எப்படி இப்படியெல்லாம்?
பதிவுகள் ஒவ்வொன்றும் கலக்கல்...

Thiva said...

யாம் பெற்ற இன்பம்(?) பெறுக இவ வையகம்னு சாம்பிள் கவிதைங்க ஒன்னு ரெண்டு போட்டுடுவீங்களோன்னு பயந்துகிட்டே வாசித்தேன், நல்லவேளை ஒன்னும் இல்ல...

Sridhar said...

நீங்க கூட கவிதை எழுதபோறதா என்கிட்ட சொன்னிங்களே!!!!!!!!!

அதுல ரெண்டு வரி போட்டு இருக்கலாம். :)

butterfly Surya said...

Sridhar சார் சொன்ன மேட்டரை கவனிங்க தலைவரே..

இதுவும் கலக்கல் பதிவு தான்.

விஜயசாரதி said...

சுரதா இப்ப இருந்திருந்தா கொசுக்கடி கம்மியாத்தான் ஆகியிருக்குமுங்க...ஆனா அதுக்காக அவர் நெசமாவே அப்படித்தான் அந்த புத்தக வெளியீட்டு விழாவுல பேசினாருன்னா..ஐயாம் சாரி ப்ரதர்...ரெம்பப்பாவம் அந்த கவிஞர். வெத நெல்லெல்லாம் வித்து இப்படி புத்தகம் வெளியிட்டதுக்கு என்னெல்லாம் கேட்டுக்கறாரு பாருங்க...

Anonymous said...

விஜயசாரதி, நீங்க புலிகேசி படம் பார்கலயா ? அது புலவர்களுக்கே உரிய ஆணவம் நண்பரே !

Joe said...

கடந்த பதினெட்டு ஆண்டுகளாக கவிதை எழுத முயல்பவன் என்ற முறையில், கவிஞர்களை கேலி செய்யும் இந்த பதிவை வன்மையாக கண்டிக்கிறேன். ;-)

http://joeanand.blogspot.com/2009/04/blog-post_4554.html

அமர பாரதி said...

வெத நெல்ல வித்து பொஸ்தகம் போட்டுட்டு அதை வெளியிடறதுக்கு காசு கொடுத்து சுரதாவ கூப்ட்டுட்டு அவரும் நெல்ல வித்த காசுல காபியக் குடிச்சுட்டு இப்படி பேசினார்னா அவர்தான்யா பெர்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய கவுஞ்சரு.

anthanan said...

நண்பர்களே,

நான் வியக்கிற நல்ல கவிஞர்களும் இருந்தாங்க. இருக்காங்க... இந்த வரிகளை தயவு செய்து நன்றாக கவனிக்கவும். இலக்கில்லாமல் திரிகிற உதவி இயக்குனரையும், அவரது குடும்ப சூழலையும்தான் இந்த பதிவு விவரிக்கிறது. யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல. நண்பர் ஜோ... நல்ல கவிஞர் என்பது என் கருத்து.

அந்தணன்

Joe said...

அந்தணன்,
எனது முந்தைய பின்னூட்டம் நக்கலாக எழுதப்பட்டது. முதல் வரிக்கு பின் வந்த ;-)
ஐகானை நீங்கள் கவனிக்கவில்லையோ?

ஜோ ஒரு நல்ல கவிஞரா?!? உங்களுக்கு நகைச்சுவை உணர்வு ரொம்ப அதிகம்ணே!

eeramsudum.blogspot.com said...

anna meethi kathaiyai sollama vittuteengaley... unmaiyave nella vithathu.. srikanth pesunathu?

மறைமலை இலக்குவனார் said...

உங்களைப் புகழ்ந்து எனக்கொன்றும் ஆகப் போவதில்லை.உண்மையாகவே ஒரு தலைசிறந்த நகைச்சுவைக்கட்டுரையை ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் படிக்கிறேன்.
வாழ்க உங்கள் எழுத்தாற்றல்!
தொடர்ந்து நகைச்சுவைக்கட்டுரை எழுதுங்கள்.

dondu(#11168674346665545885) said...

//முதல் கவிதையை ரொம்ப கஷ்டப்பட்டு வாசித்தார்.
"அடேய்... வரிய மடக்கி மடக்கி போட்டு கவிதைன்னு சொல்றே?//

சுரதா என்றதும் பல ஆண்டுகளுக்கு முன்னால் இம்மாதிரி வரிகளை மடக்கி மடக்கி போட்டு கம்பாசிட்டர் துணையால் கவிதைகளை எழுதியவர்களை கிண்டல் செய்து சோ விகடனில் எழுத, இதே சுரதா தன்னைத்தான் சொல்லுகிறார்கள் என அப்பன் குதிருக்குள் இல்லை ரேஞ்சில் வெளி வந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Manah said...

...ண்ணா அந்த புத்தகம் இருந்த கொஞ்சம் எங்களுக்கும் அனுப்புங்க, நாங்களும் படிச்சுட்டு நீங்க இருக்கிற திசைய பார்த்து மானசீகமா வணங்குறோம்.